மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை 30ஆவது ஆண்டுவிழா

இளங்கோவன்.ச

May 20, 2017

Siragu Peravai Vizhan Flyer

வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பதாகும். ஆண்டுதோறும் அதன் ஆண்டு விழாவினை, வடஅமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர், திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம்ஆண்டுக்கான விழாவினை, எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியா போலிசு செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சங்கப் பேரவையுமிணைந்து நடத்துகின்றன.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவும், தமிழ்இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப் பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபாகும். அந்த மரபுக்கொப்ப, இந்த ஆண்டுக்கான விழாவானது நாடகக்கலையின் தலைமையாசிரியரான சங்கரதாசு சுவாமிகளின் நூற்றைம்பதாவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல், ‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபினைக் மீட்டெடுப்போம்!!’ என்கிற முகப்பு மொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றனயென்பது குறிப்பிடத்தக்கது.

மிசிசிப்பி, மின்னசோட்டா ஆற்றங்கரைகளையண்டிய பகுதியில் அழகுற அமைந்திருக்கும் எழில்மிகு அரங்கம்தான் மினியா பொலிசு மாநாட்டு அரங்கம். இந்த அரங்கத்தில்தான் அமெரிக்கத் தமிழர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜூன் முப்பதாம்நாள், ’விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியாக விருந்தினர்களுக்கான வரவேற்பும், தொடர்ந்து இளையோர் தமிழிசை நிகழ்ச்சியும் இரவு விருந்தும் இடம்பெறும்.

ஜூலை ஒன்றாம் தேதியன்று மாநாட்டு அரங்கில் காலை ஒன்பது மணிக்கு, தமிழ் மரபிசையான தவில் நாகசுரத்துடன் திருக்குறள் மறையோதல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண, குத்துவிளக்கேற்றல் ஆகியவற்றோடு முறையாக முதல்நாள் நிகழ்ச்சிகள் துவங்கும். அதைத்தொடர்ந்து, பேரவைத்தலைவர், மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தலைவர், விழா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வரவேற்றுப்பேசுவர்.

முதல்நாளின் முக்கிய நிகழ்ச்சிகளாக,  கவிஞர் சுகிர்தராணி அவர்களின் நெறியாள் கையில் ‘தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ!’ எனும் தலைப்பில் கவியரங்கம், மாணவர்கள் பங்கேற்கும் தமிழ்த்தேனீ, குறள்தேனீ போட்டிகள், சிகாகோ தமிழ்ச்சங்கம் வழங்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் சாரங்கதாரன் நாடகம், தமிழ் முனைவோர் மாநாடு, ஆண்டுவிழா மலர் வெளியீடு, இயக்குநர் மிஷ்கின் கலந்துரையாடல், வந்திருப்போரின் மக்களின் மனத்தைக் கொள்ளையடிக்கக் கூடியவகையில் பண்ணிசைப் பாடகர் ஜெய்மூர்த்தி வழங்கும் மரபுக்கலை மக்களிசை நிகழ்ச்சி, தமிழ்ச்சங்கங்கள் வழங்கும் தமிழ் மரபுக்கலை நிகழ்ச்சிகள், சமூக ஆர்வலர் கார்த்திகேய சேனாபதி சிறப்புரை முதலானவற்றோடு, தமிழறிஞர் நா.வானமாமலை அவர்கள் தொகுத்தளித்த ’மருதநாயகம்’ மாபெரும் மரபு நாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறும்.

மரபுக்கலைகளில் முக்கியமானவையாகக் கருதும் தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப்பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன்குறத்தி, கைச்சிலம்பம், சக்கையாட்டம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன், வில்லுப்பாட்டு போன்றவற்றைச் சார்ந்தவையாக, விழாவில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறும்.

இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள், ஜூன் இரண்டாம் தேதி காலை ஒன்பது மணிக்கு, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ் மரபிசையான தவில் நாகசுரம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கும். தொடர்ந்து தமிழ்ச்சங்கங்களின் தமிழ் மரபு சார்ந்த நாடக நாட்டியம், கலை நிகழ்ச்சிகளோடு, இயக்குநர், இலக்கியவாதி, களப்பணியாளர் எனப் பன்முகத்தன்மையோடு விளங்கும் பாகுபலி புகழ் நடிப்புக்கலைஞர் ரோகிணி அவர்களின் தலைமையில் கருத்துக்களம் நிகழ்ச்சி, இலக்கிய விநாடிவினா, குறும்படப்போட்டி, பண்ணிசை ஆய்வாளர் நல்லசிவம் நிகழ்ச்சி, தமிழர் நிலம் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் சிறப்புரை, ஒலிம்பிக் விருதாளர் மாரியப்பன் தங்கவேலு சிறப்புரை, எழுத்தாளர் சுகுமாரன் சிந்தனையுரை, சமூகசேவகர் வெ.பொன்ராஜ் சிறப்புரை முதலானவற்றோடு ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா, சூப்பர் சிங்கர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி முதலானோரோடு அக்னி குழுவினர் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறும்.

முதன்மைப் பேரரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இதர அரங்குகளில் இணையமர்வு நிகழ்ச்சிகளாக, இயக்குநர் மிஸ்கின், பேரா. சுவர்ணவேலுடன் திரைப்படம் குறும்படம் குறித்தான பயிற்சிப்பட்டறை, தமிழ்த் தொழில்முனைவோர் கருத்தரங்கம், மருத்துவத் தொடர்கல்விக் கருத்தரங்கம், திருமண ஒருங்கிணைப்பு, தமிழ்க்கல்வி ஒருங்கிணைப்பு, பேலியோ உணவுப்பழக்கக் கருத்தரங்கம், திருமூலரின் பிராணாயாமம் குறித்தான கருத்தரங்க மும்பயிற்சிப் பட்டறையும், ஆயுர்வேத சித்தமருத்துவக் கருத்தரங்கம், நல்லசிவம் வழங்கும் பண்ணிசைப் பயிற்சிப்பட்டறை, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்று கூடல், வலைஞர் கூட்டம், குடியேற்றச் சட்டமாற்றங்கள் குறித்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம், விருந்தினர்களான தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு, சமூகசேவகர் பொன்ராஜ், சமூக ஆர்வலர் கார்த்திகேய சேனாபதி ஆகியோருடன் கலந்துரையாடல், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது பெறும் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்டஇன்னும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

வாய்மொழி இலக்கியம், நாட்டுப்புற வழக்குகள், மரபுகள் குறித்தான விரித்துரை, சிலம்பம், பறையிசை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டு நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெறும். திருவிழாவில், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகளும், தெரிவு செய்யப்பட்ட ஆன்றோருக்கு வழங்கப்படும்.

ஜூலை மூன்றாம் நாள், திரைப்பட ஆளுமையும் இலக்கிய ஆளுமையுமான ரோகிணி, எழுத்தாளர் சுகுமாரன், வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, கவிஞர் சுகிர்தராணி, கலையாளுநர் மிஷ்கின் முதலானோர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டம் இடம்பெறும். அமெரிக்கத் தமிழ் விழா குறித்த கூடுதல் தகவலை உடனுக்குடன் பேரவையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்: https://fetnaconvention.org

-பழமைபேசி, மக்கள்தொடர்புக்குழு, அமெரிக்கத்தமிழ்விழா 2017.


இளங்கோவன்.ச

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை 30ஆவது ஆண்டுவிழா”

அதிகம் படித்தது