மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வள்ளுவரோடு ஓர் உரையாடல் (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 13, 2021

siragu thirukkural1

 

வள்ளுவரிடம் சொல்ல

சில விடயங்கள் உண்டு எனக்கு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றாய்

உன் பிறப்பிற்கும் புராணக் கதை

உண்டு,உன் பிறப்பும் உயர் வர்ணத்தில்

அடங்குமாம்

தெரியுமா வள்ளுவ?

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்

என எச்சரித்தாய்

மென்பொருளில் மெய்ப்பொருள் கூட

உருவாக்கப்படுகிறது அறிவாயா

வள்ளுவ?

இன்னா செய்தாரை ஒறுத்தல்

என்றாய்

நாணமே அற்று

எலும்புகளையும் ஊசிமுனையால்

குத்தும் நினைவுகள் தந்து

திரிவோர்க்காக

எதற்கு மெனக்கெட வேண்டும் ?

ஆதி பகவன் உன் தந்தையா?

தாயா?

கற்பனை கடவுளா? சமண

மதத்தின் முதல்வரா?

உன் முதல் குறட்பா

தொடக்கிய

விவாதம் இன்றும் ஓய்ந்த பாடில்லையப்பா;

விவாதங்கள் அறிவின்

திறவுகோல் என்பதால் தானோ

உன் குறட்பாக்களுக்கு உரை

எழுதாமல் போனாய்?

ஆனால் பதவுரை

தெளிவுரை

எழுதியோர் நீ மனுவிடம்

எழுத்துக்களைக்

கடன் வாங்கி எழுதினாயாம்

உரை எழுதி வைத்து விட்டனர்;

ஒன்றே முக்கால் அடிக்குப்

பொருள் எழுதுவதற்குள்

இத்தனை பொய்களோ ?

எனச் சிந்திக்கிறாயோ ?

எனக்கு உன்னிடம் கேட்க

ஒரு கேள்வி உண்டு

ஈராயிரம் ஆண்டுகளுக்கு

முன்னிருந்த சமூகத்தின்

ஓட்டைகளை உன் குறட்பாக்கள்

படிப்பதின்

மூலம் அடைத்து விடலாம் என

எப்படி நம்பினாய்?

குறட்பாக்களை மனப்பாடம்

செய்யும் தோரணைகளுக்கு

இங்கே குறைவே இல்லை

ஓட்டைகள் இன்னும் பெரிதாகித் தான்

இருக்கின்றன!!

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய் வருத்தக் கூலி தரும்

என்றாய்

அதனால் நா வருத்தி

குரல் வருத்தி

உன் குறட்பாக்கள்

மனப்பாடத்தை

நாங்களும் கைவிடுவதில்லை

என்றாவது மக்கள் அதன்

பொருளும் மண்டையில்

ஏற்றிக்கொள்வார்கள்

என நம்புகிறோம்;

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வள்ளுவரோடு ஓர் உரையாடல் (கவிதை)”

அதிகம் படித்தது