மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வள்ளுவர் கண்ட அறவாழ்க்கை

சு. தொண்டியம்மாள்

Jan 22, 2022

siragu thiruvalluvar1

வாழ்க்கை பல்வேறு அனுபவங்களைத் தருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறோம். சில அனுபவங்களைப் பெற நாள் கணக்கு அதிகமாகிறது. சில அனுபவங்களைப் பெற வருடக் கணக்காகிறது. சில அனுபவங்களைப் பெற இயலாமலேயே போய்விடுகிறது.

இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் பெற்ற அனுபவங்களை என்ன செய்கிறோம். எனக்குக் கிடைத்த அனுபவம் அவருக்கும் கிடைக்கலாம். நான் எப்படி அனுபவம் வழியாக ஒரு பாடத்தை பெறுகிறோனோ அவரும் அப்பாடத்தைப் பெறலாம். அல்லது என்னுடைய பாடம் அவருக்கு வழிகாட்டியாக அமையலாம். என்னுடைய அனுபவத்தை நான் எந்த வகையிலாவது பிறருக்குச் சொல்ல வேண்டும். எழுதி பதிவு செய்து வைக்கவேண்டும். இல்லையென்றால் என் அனுபவம்,அவரின் அனுபவம் எதுவும் பாடமாக ஆகாமல் பெற்றதையே பெற வேண்டும். செய்ததையே செய்யவேண்டும். அனுபவித்ததையே மீண்டும் புதிதாக அனுபவிக்க வேண்டும்.

வள்ளுவர் அற வாழ்வு வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கை தூய்மையான வாழ்க்கை. அந்தத் தூய்மையான வாழ்க்கையில் பெற்ற தூய அனுபவங்களை, அவர் திருக்குறள்களாக பதிவு செய்து நமக்கும் பயன்படுமாறு வைத்துள்ளார்.

அவர் பெற்ற நல்ல அனுபவங்கள் நமக்கு வழி தருகின்றன. அவர் பெற்ற துன்ப அனுபவங்கள்,  தீய அனுபவங்கள் நாம் விலக்குவதற்கு வாய்ப்பினைத் தருகின்றன. ஒவ்வொரு அனுபவத்தையும் அவர் ஒவ்வொரு குறளாக்கித் தந்துள்ளார். ஒவ்வொரு குறளும் திருக்குறள். ஒவ்வொரு திருக்குறளும் அனுபவத்தின் வெளிப்பாடு.

ஆயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று அனுபவக் குறள்கள் அவரின் வாழ்க்கையில் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் நலமானவை. அவருக்கும் நலமானவை. திருக்குறளைப் படிப்பவருக்கும் நலமானவை. எல்லோருக்கும் நலமானவை.

வள்ளுவர் வாழ்ந்த வாழ்க்கையின் வெற்றிகளே அவரின் அனுபவங்களாக விளங்குகின்றன. அவர் சந்தித்த பல அனுபவங்கள் அவை தந்த பாடங்கள் போன்றன இன்னும் சில இருந்திருக்கலாம். அவற்றை அவர் பதிவு செய்ய இயலாமல் காலம் அவரைத் தனக்குள் சேர்த்திருக்கலாம்.

ஏனென்றால் திருக்குறள்களின் அதிகார  எண்ணிக்கை முழுமை பெறாமல் குறைந்து போய் நிற்கின்றது. அது நானுறு, ஐநூறு  என்று முழுமை பெற்றிருந்தால் வள்ளுவர் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் பதிவுசெய்து விட்டார் என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் அவரின் 133, 1330 என்ற எண்ணிக்கை அவர் முழுமையான நிறைவினை அடைவதற்கு முன்பே அவர் காலம் முடிந்துவிட்டதை உணர்த்துகின்றன.

இவ்வகையில் திருக்குறள் என்பது அனுபவப் பாடம். அவர் அனுதினமும் அனுபவித்த பாடம். . அனுபவித்தவர்களுக்கும் திருக்குறள் பாடம். அனுபவிக்கிறவர்களுக்கும் திருக்குறள் பாடம். அனுபவிக்கப் போகிறவர்களுக்கும் அது பாடம்.

வள்ளுவர் தந்திருக்கும் அனைத்து அனுபவங்களையும் எத்தனை முறை முயற்சி செய்தாலும் ஒருவர் தன் வாழ்வில்  பெறமுடியாது. ஒருவர் தன் வாழ்வில் பெற முடியாத அனுபவ வாசகங்களை வள்ளுவர் தேர்ந்து மக்களுக்குத் தந்துள்ளார்.

வள்ளுவர் தன் வாழ்வில் அறத்தின் வழியில் பல அனுபவங்களைப் பெற்றுள்ளார். அவர் அறத்தின்பால் மிகுந்த நம்பிக்கை கொண்டு நடந்திருக்கிறார்.  அவர் அறத்தின் வலிமையை உணர்ந்தவர். அறம் செய விரும்பு என்ற ஔவைப் பாட்டியின் ஒற்றை அடிக்கு  அவர் அத்தனை திருக்குறள்களையும் எழுதியுள்ளார்.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற திருக்குறள் முப்பால் பகுப்பிற்கு அடிப்படைக் கட்டுமானமாக செயல்படுவது அறமே ஆகும். அறமே அனைத்தும். நல்ல தலைவன் என்பவன் அறவழியில் நடப்பான். நல்ல தலைவியும் அப்படியே. நல்ல மன்னன், நல்லமைச்சன், நல்லாசிரியன், சான்றோர் அத்தனைபேரும் அறத்தின் வழிப்பட்டவர்களே.

வள்ளுவர் படைத்த அத்தனை குறள்களிலும் அறத்தை வலியுறுத்துகிறார். அறத்தை வலியுறுத்தவே அறன் வலியுறுத்தல் என்ற தனி அதிகாரத்தை வள்ளுவர் படைக்கிறார்.

வள்ளுவர் கடவுளை வணங்க கடவுள் வாழ்த்து என்பதை வைத்தார்.  பின்பு, இயற்கை வளமான மழையை வாழ்த்த வான்சிறப்பு வைத்தார்.  பின்பு, முன்னோர் தம் பெருமையைப் போற்ற  நீத்தார் பெருமை அதிகாரத்தை வைத்தார். அதன் பின் அறம் செய்யவேண்டும், அறத்துடன் வாழவேண்டும் என்பதற்காக அறத்தை வலியுறுத்த ஓர் அதிகாரத்தை வைத்தார்.

அதுவே அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் ஆகும். இந்த அதிகாரம் வள்ளவரின் அற வாழ்விற்கு அடையாளமாக அமைகின்றது.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

அறம் என்பது எல்லாருக்கும் சிறப்பினைத் தரும். அறத்தைச் செய்பவனும் சிறப்பு பெறுகிறான். அறத்தைப் பெறுபவனும் சிறப்பு பெறுகிறான். அறமும் சிறப்பு பெறுகிறது. அறத்தால் விளைந்த பொருள்களும் சிறப்பு பெறுகின்றன. அறம் நிலைத்த வாழ்க்கையைப் பெறுகிறது. அதுவே சிறப்பு.

அறம் என்பது செல்வத்தையும் தரும். ஒருவன் தனக்கு வரும் பொருளை எல்லாம் அறத்திற்கே கொடுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனின் செல்வம் கரையுமா என்றால் கரைந்து போகாது என்கிறார் வள்ளுவர். அறம் செய்ய செய்ய அறமும் வளரும். அறத்தைச் செய்வதற்கான பொருள் வருவாயும் அதிகரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நிலையில்லாத இந்த உலகத்தில் நிலையான புகழைத் தருவது அறம். ஓரிடத்தில் நிற்காத செல்லவத்தை நிற்க வைப்பது அறம்.   பெருக வைப்பது அறம்.

எனவே அறங்களைச் செய்வது போன்ற ஆக்கமான செயல் வேறெதுவும் உலகத்தில் இல்லை. அறத்தைச் செய்யத் தொடங்குவது கடினம். அதனை ஒவ்வொரு நாளும் செய்வது என்பது இன்னும் கடினம். அதனைத் தொடர்வது என்பது இன்னும் இன்னும் கடினம்.

அறவாழ்க்கை என்பது தூய்மையான வாழ்க்கை. சிறப்பான வாழ்க்கை. செல்வம் மிகுந்த வாழ்க்கை. ஆக்கம் மிகுந்த வாழ்க்கை. உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத நல்ல வாழ்க்கை அறவாழ்க்கை.

அறம் என்பது வேறு. தருமம் என்பது வேறு. தருமம் என்பது பலன் கருதாமல் தாழ்ந்த ஒருவருக்கு உயர்ந்த ஒருவன் செய்யும் கொடை. ஆனால் அறம் என்பது தர்மத்தைவிடவேறானது. அறம் என்பது கடமை. நியாயம். சத்தியம். நேர்மை இவற்றைக் கொண்டு அவரவர் கடமையைச் செய்வது.

     அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை

     மறத்தலின் ஊங்கில்லை கேடு (32)

அறமே சிறந்தது. அதுவே சிறப்பான ஆக்கத்தைத் தருவது. அதனை மறவாமல் எந்நாளும் செய்யவேண்டும். அறத்தைச் செய்யாமல் மறந்து நடந்தால் அது கேட்டைத் தரும். மிகப்பெரும் கேட்டைத்தரும்.

ஒருவர் தினமும் அலுவலம் செல்கிறார். அவ்வாறு அலுவலகம் செல்லும் அவர் தன் கடமையில் துளியும் மாறாமல் கடமையை ஆற்றுகிறார். அவர் எவ்வளவு நாட்கள் அவ்வாறு கடமையை ஆற்றவேண்டும் என்றால் அவரின் பணிநிறைவு நாள் வரை அப்பணியை அறத்தோடு செய்யவேண்டும்.

ஒரு நாள் மாறிவிட்டால் அவரின் அறம் மாறிவிடும். நாள்தோறும் பத்துமணிக்கு வந்துவிடும்  ஒருவர் ஒரு நாள் வரவில்லை என்றாலும் அறத்தில் மாறுபாடு வந்துவிடும். உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் நேரம் வைத்திருப்பதைப் போல் கடமையாற்றுவதற்கும் நேரம் உண்டு. நேரம் தவறாமையும் உண்டு.  நேரத்தோடு வருதல் என்பதும் அறம். வந்தபின் எந்தவித ஏற்றம் இறக்கம் இன்றி தன் பணியைச் செய்வதும் அறம். தன் பணியில் காலந்தவறாமையும் அறம். தன் பணியில் வெற்றியும் அறம். எனவே அறத்தைப் போல்  ஒருவருக்கும் நாளும் நல்ல பணிகளைச் செய்ய வழிவகுப்பது வேறு இல்லை.

இதில் எதில் தவறினாலும் இழுக்கு வந்துவிடும். கேடு வந்துவிடும். கேடு என்ற தீமையை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே அறத்தோடு வாழ்ந்து பார்த்தால் வாழ்க்கையின் வெற்றி தெரியும்.

வாழ்க்கைக் கடமையைச் சரிவர செய்தால் மட்டும் போதுமா? வேறு அறங்கள் செய்ய வேண்டாமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

அறம் செய்வதற்கு எல்லையே இல்லை. நாள் இல்லை . பொழுது இல்லை. எப்போதும் செய்யலாம். எங்கும் செய்யலாம்.

அறவினைகள் அதாவது அறத்தின் அடிப்படையிலான செயல்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யலாம். அதற்காக நேரம் காலம் பார்த்துச் செய்யாமல் இருக்கக் கூடாது. நன்றே செய். இன்றே செய் என்பதுதான் சரி.

     ஒல்லும் வகையான்  அறவினை ஓவாதே

     செல்லும் வாயெல்லாம் செயல் (33)

அறத்தைச் செய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதில் நமக்கான வழிகளை நாம் தேர்ந்து கொள்ளவேண்டும். அறவினைகளை ஓய்வில்லாமல் செய்யவேண்டும்.

வேலை என்பது வயிற்றுப் பிழைப்புக்கானது. அதனை நன்கு செய்தால் அறக்கடமை ஆகின்றது. இந்தப் பணி மட்டும் இல்லாமல் அதனையும் தாண்டியும் சமுதாயத்திற்கு அறங்கள் பல செய்ய முன்வரவேண்டும்.

உழைக்கும் உழைப்பை, பெற்ற செல்வத்தை, பொன்னான நேரத்தை அறம் செய்வதற்காகத் தரவேண்டும்.

நடந்து போய்க் கொண்டு இருக்கிறோம். வழியில் கண்ணாடித் துண்டு கிடக்கிறது. எடுத்துப் போட்டுவிட்டு நடப்பது நல்லது. கண்ணாடித் துண்டைத் தாண்டியும் சிலர் போய்விடுவார்கள். அந்தத் துண்டு அடுத்தவரின் காலைப் பதம் பார்க்கக் காத்திருக்கும். இதுவும் அறச் செயல்.

தெருவில் நடக்கிறோம். சிறு விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கியவரைத் தூக்கி விட்டு அவரின் வாகனத்தை ஒழுங்கு படுத்தி வைக்கிறோம். இதனை யாராவது சொல்லியா செய்ய வேண்டும். அறத்தை எந்த வழியில் வேண்டுமானாலும் செய்யலாம்.

அறப்பணி என்பது அரிய பணி. அதற்கே நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

கண்தெரியவாதவர்க்குச் சாலை கடக்க உதவலாம். அதன் பின் அவர் செல்லமுடியுமா என்று பார்த்துவிட்டு இல்லையென்றால் அவர் செல்லும் இடம் வரை சென்று சேர்த்துவிடலாம்.

வறியவருக்கு ஒன்று தரலாம். குடிநீர் நிலைகளைப் பாதுகாக்கலாம். மொட்டை மாடியில் பறவைகளுக்கு நீர் வைக்கலாம். நோயுற்றோருக்கு தக்க ஆலோசனை வழங்கி அவரை உயிர்ப்பிக்கலாம். இவற்றை எல்லாம் விட்டு விட்டு ஒதுங்கி ஓரம் போவதில் என்ன நியாயம் இருக்கிறது.

அறத்தை நாம் செல்லும் வழியெல்லாம் செய்யலாம். அவ்வளவு தேவை இந்த உலகிற்கு அறத்தின் தேவை. உதவிசெய்வதே அறம்.

     மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

     ஆகுல நீர பிற. (34)

மனிதனை மனிதனாக்கும் குறள் இதுவே. மனிதர்க்கான மிக முக்கியமான குறள் இதுவே. மனித மனம் மென்மையானது. அது அதன் விருப்பப்படியே செயல்படும். மனதில் பல்வேறு அழுக்குகள் வந்து சேர்ந்துவிடலாம். அந்த அழுக்குகளை அகற்றி மனதை நல்ல மனதாக வைத்திருக்கவேண்டும்.

மனம் ஒரு குரங்கு என்பார்கள். மனம் ஒரு மாயப் பிசாசு என்பார்கள். ஆனால் அந்த மனத்தைக் கட்டுப்படுத்தும் அறிவு மனிதனுக்குள் இருக்கிறது. மனதில் தூய்மை சேர தூய்மை வாழ வழி செய்யவேண்டும். தீமைகளை அகற்ற வேண்டும். பழைய கழிதலும் புதியன புகுதலும் ஆன இந்தத் திருநாளில் பழமையாக நம்முள் கிடக்கும் தீமைகள் அகற்றி நன்மைகளை நிலை பெறச் செய்வோம்.

என் மனது தூய்மையானது என்று யாரிடமாவது சான்றிதழ் பெற முடியுமா? முடியவே முடியாது. நம் மனமே நமக்குச் சான்று தரவேண்டும். அதற்குப் பெயர்தான் மனசாட்சி. அதாவது மனச்சான்று. நம் மனமே நம்மைப் போற்றும் அளவிற்கு நடந்து  கொள்ளவேண்டும்.

மற்ற அறங்களை விட மனத் தூய்மை என்ற அறமே சிறப்பானது. வீட்டைத் தினம் கூட்டிப் பெருக்கிச் சுத்தம்செய்கிறோம். அப்படியும் ஒருநாளைக்கு பத்துகிலோ குப்பை வருகிறது. மனமும் அப்படித்தான். தினம் தினம் அதனைத் தூய்மைப் படுத்த வேண்டும். இதனால்தான் அகத்தாய்வு என்று மனதைச் சுத்தப்படுத்தும் பயிற்சிகள் இப்போது வந்துவிட்டன.

மனதில் என்ன என்ன அழுக்குகள் சேரலாம். இதற்கு அடுத்த குறளில் பதில் உரைக்கிறார் வள்ளுவர்.

     அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம். (35)

வள்ளுவர் ஆராய்ச்சி அறிஞராக விளங்குகிறார். மனதில் தேங்கும் குப்பைகளை ஆராய்ந்து எது எது நீக்க வேண்டிய குப்பைகள் என்று  உரைக்கிறார்.

     அழுக்காறு – அதாவது பொறாமை

           ஒருவரின் மனம் மற்றவர்கள் மகிழ்வாக இருந்தால்

         ஒருவரின் மனம் மற்றவர்கள் செல்வத்தோடு இருந்தால்

           மனம் மற்றவர்கள் புகழோடு இருந்தால்

அதனைப் பொறுத்துக் கொள்ளமாட்டமல் பொறாமைப் படுகிறது. அந்தப் பொறாமை இயலாமை ஆகி மனதைத் துன்புறுத்துகிறது. மனதிலிருந்து நீக்க வேண்டிய முக்கியமான தீமை பொறாமை. அதனால்தான் அதனை அழுக்கு ஆறு என்றார். பொறாமை என்ற அழுக்கு ஆறுபோல சிறிதாக உருவாகும். அதன்பின் இடைவிடாமல் ஒடிப் பெருகி அழித்துவிடும். இத்தகைய பொறாமையை வள்ளுவர் அழுக்காறு என்றார்.

     அவா- அதாவது ஆசை

மனம் எதற்காவது ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கும். மிதிவண்டியில் போகிறவர் இரண்டு சக்கர வாகனத்தின் மீது போக ஆசை கொள்கிறார். இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர் நான்கு சக்கர வாகன ஆசை கொள்கிறார். நான்கு சக்கரத்தில் போகிறவர் விமானப் பயணத்தையே நேசிக்கிறார். விமானத்தில் பறப்பவர் நடந்து போக நேரம் கிடைக்காதா என்று ஆசைப்படுகிறார். ஆசைக்கோர் அளவில்லை. அகிலமே கட்டி ஆண்டாலும் ஆசை அடங்காது. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை அப்பப்பா எத்தனை ஆசைகள். அத்தனை ஆசைகளையும் சுமந்து கொண்டு பெருமூச்சு விடுகிறது மனது.  இந்த அழுக்கையும் அண்டவிடாமல் செய்ய வேண்டும்.

     வெகுளி –சினம்- கோபம்

பொறாமையின் காரணமாக, ஆசையின் காரணமாக மனிதன் கோபம் கொள்கிறான். தனக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்று ஏக்கம் கொள்கிறான். இந்த ஏக்கத்தால் எல்லோர் மீதும் கோபம் வருகிறது. கோபத்தால் மனிதன் மனிதப் பண்பினை இழக்கிறான். எனவே கோபம் என்பது அறத்திற்கு எதிரானது. அழுக்காறு என்பது அறத்திற்கு எதிரானது. ஆசைகள் என்பது அறத்திற்கு எதிரானது.

     இன்னா சொல்

கடுமையான விரும்பப்படாத சொற்கள்.   அழுக்காறு , ஆசை, வெகுளி ஆகிய இந்த தீய பண்புகள் எப்படி வெளிப்படும். மனதிற்கு இவை ஆழமாக உள்ளன. இவற்றை இருப்பது தெரியாமல் மனிதன் நடமாடுகிறான். ஓடுகிறான். பணி செய்கிறான். எப்போது அது வெளியே வரும். எப்படி வரும். எந்த வடிவில் வரும். மனதில் உள்ள இந்தத் தீய பண்புகள் தீய சொற்களாக வெளிப்படும். இன்னா சொற்களாக வெளிப்படும்.

ஒருமனிதன் அழுக்காறு காரணமாக தன்னை இழக்கிறான். அவாவின் காரணமாக தன்னை இழக்கிறான். கோபம் காரணமாக தன் அறிவை இழக்கிறான். இவை எல்லாம் அவனைத் தீய இன்னாச் சொற்கள் சொல்வபவனாக மாற்றிவிடுகிறது. எவ்வளவு தீய சொற்கள். இன்னா சொற்கள் ஒரு மனிதனின் வாயில் இருந்து வருகின்றனவோ அந்த அளவிற்கு அவன் மனதில்அழுக்குகள் நிரம்பிக் கிடக்கின்றன என்று கொள்ளலாம்.

     அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை (36)

அறம் செய்வதற்கும் வயது உண்டு. தக்க வயதில் ஓடியாடி விளையாடும் வயதில் அறங்களைச் செய்துவிடவேண்டும். அதன் பின் அந்த அறத்தைக் காப்பாற்றி வளர்ப்பதில் சிந்தனை செல்ல வேண்டும். வாழ்வின் நிறைவுக்காலத்தில் அந்த அறங்களே நமக்கு வழி காட்டி நிற்கும்.

குறிப்பாக நாளை செய்யலாம், நாளை மறுநாள் செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் அறங்களைச் செய்யவேண்டும். பொறாமயைத் தவிர்ப்பதற்கு நாள் பார்க்க வேண்டுமா? ஆசையை அகற்றுவதற்கு நாள் பார்க்கவேண்டுமா? கோபத்தை அகற்றுவதற்கு நாள் பார்க்கவேண்டுமா? இன்னாச் சொல் சொல்லாமல் இருப்பதற்கு நாள் பார்க்கவேண்டுமா? இன்றைக்கே இப்போது செய்தால் போதும். இன்று முதல் இப்போது முதல் நல்ல மனிதனாக நாம் மாறிவிடலாம்.

                பிறர் மதிக்கும் மனிதனாக நாம் உயரலாம்.

அந்த காலத்தில் பல்லக்கு இருந்தது. பெரிய செல்வந்தர்கள்,மன்னர்கள் பல்லக்கில் ஏறி அமர்வார்கள். அவர்களைப் பல்லக்குச் சுமப்பவர்கள் சுமந்து செல்வார்கள். பல்லக்கில் இருப்பவர் உயரமானவர். செல்வத்தால்,அன்பால்,பண்பால். சொல்லால் உயர்வானவர். ஆனால் பல்லக்கின் கீழ் இருப்பவர்கள் மேல் இருப்பவரைக் காட்டிலும் நற்பண்புகளால். செல்வச் செழிப்பால் குறைவானவர்கள். இந்நிலைதான் அறத்தால் வாழ்பவர்களுக்கும் அறமின்றி வாழ்பவர்களுக்குமான நிலை.

இருப்பினும் பல்லக்கில் போகிறவன் உயர்வானவன், பல்லக்கு சுமப்பவன் தாழ்ந்தவன் என்பதை ஏற்க முடியாது என்கிறார் வள்ளுவர். மேலும் பல்லக்கு ஏறியவர், பல்லக்கைச் சுமப்பவர்கள் என்ற பாகுபாடு அறத்தால் விளைந்து அல்ல. அவரவர் முயற்சியால் நடைபெறுவது.

     ‘‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

     பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” (37)

வள்ளவரின் இக்குறள் சொல்லும் பொருளில் சற்று தெளிவு பெறவேண்டும். முன்பிறப்பில் செய்த அறத்தால் ஒருவன் உயர்வான வாழ்க்கை பெறுவான், செய்யாதவன் தாழ்வான வாழ்க்கை பெறுவான் என்பதில் நம்பிக்கை இல்லை. இருவரும் அறம் பற்றி வாழ்ந்தால் எவ்வித உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை..

இப்படி உயர்வு தாழ்வு கருதாமல் கடமைசெய்பவன் அறம் செய்பவனாகிறான். செய்யாதவன் அறத்தை மறந்தவன் ஆகிறான்.

அறம் செய்பவனுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்டால் அடுத்த பிறவி அவனுக்கு இல்லை என்கிறார் வள்ளுவர்.

     ‘‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

     வாழ்நாள் வழியடைக்கும் கல்” (38)

அறம் செய்தால் அந்நாள் வாழ்நாள்.அறம் செய்யாவிட்டால் அந்நாள் வீழ்நாள். அறம் செய்து வாழ்ந்தால் அப்படி வாழ்பவனுக்கு இனிப் பிறவி என்பதே இல்லை என்று வள்ளுவர் அறத்தின் வலிமையை எடுத்துரைக்கிறார்.

     அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

    புறத்த புகழும் இல் (39)

அறம்  செய்து அதன் வழியாகக் கிடைக்கும் மன நிம்மதியே இன்பமாகும். அறவழியில் செய்யாதன எல்லாம்  நிலைத்த புகழைத் தருவன அல்ல.

ஒருவரின் மனம் தூய்மையாக அமைந்து மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை இன்பமான வாழ்க்கையாகும். மனத் தூய்மை இல்லாமல் வாழ்வது துன்பமான வாழ்க்கையே ஆகும்.

   செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

   உயற்பால தோரும் பழி (40)

ஒருவனின் வாழ்க்கை அறத்தை ஒட்டியே அமையவேண்டும். அறம் பிறழாமல் வாழவேண்டும். மனத்தூய்மையோடு வாழ வேண்டும்.

 அப்படி இல்லாமல் மனத்தூய்மையற்று வாழ்வதால் பழியே வந்து சேரும். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதனை அறத்தோடு வாழ்ந்து பார்க்கவேண்டும்.அறமின்றி வாழ்ந்து விட்டால் அந்த வாழ்க்கையை அழித்து மாற்றி வாழ முடியாது.

இளையவர்களுக்கு இதனை நிச்சயமாக வலியுறுத்த வேண்டும். அறத்தின் மீது இளையவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும. நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது பல திருப்புமுனைகளை உடையது. ஒவ்வொரு திருப்பமும் நிறைய பாடங்களை இழப்புகளைத் தரும். இந்த இழப்புகளில் இருந்து விலகி, அல்லது அவற்றைத் தாண்டி நல்வாழ்க்கை வாழ வேண்டுமானால் அறமே அதற்கு வழி.

 அறவழி நடப்போம். அறத்தை வலியுறுத்துவோம். அறத்தால் வாழ்வோம்.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வள்ளுவர் கண்ட அறவாழ்க்கை”

அதிகம் படித்தது