மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாக்களித்தல் நம் சனநாயக கடமை !

சுசிலா

Mar 23, 2019

Siragu By-election-in-RK-Nagar

2019 – ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலும், தமிழகத்திற்கான 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் ஒருசேர அடுத்த இரு மாதங்களில் அதாவது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறயிருக்கின்றன. இது நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னானதொரு வாய்ப்பு. இதனை நாம் நல்லமுறையில், பயன்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போதைய இந்திய அரசியல் சூழலில், தமிழ்நாடு அரசியல் சூழலில், மக்கள் வாக்களிக்கும் இந்த தேர்தல் தருணம் மிகவும் முக்கியமானது. இதனை மக்கள் மிகவும் கவனமாக சிந்தித்து, செயல்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தங்கள் சந்ததியினர் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் கட்டத்தில் இருக்கிறார்கள். இதை உணர்ந்து மக்கள் யாரை வெற்றிபெற செய்ய வேண்டும், யாரை படுதோல்வியடைய வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். எந்தக்கட்சி வெற்றிபெறுகிறது என்பதைவிட, எந்தக்கட்சி வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். மத்தியில் பா.ச.க-வும், மாநிலத்தில் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும், அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் படுதோல்வியை காணவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

ஏன் பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது..?

பா.ச.க வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மட்டுமே அதிகளவில் நம் முன்னே இருக்கின்றன!

முதலில் மனிதகுலம் காப்பற்றப்பட வேண்டும். பசுமாட்டிற்கு கொடுக்கப்படும் மரியாதை மனிதனுக்கு இங்கு கொடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அவலநிலை. கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக சாதிரீதியாகவும், கடந்த சில நூற்றாண்டுகளாக மத ரீதியாகவும், நம்மை பிரித்தாளும் வேலையை செய்துமுடித்த ஆரியம், அடுத்தகட்ட நடவடிக்கையான, தங்களின் மனுதர்ம ஆட்சியை நிறுவுவதற்கு துடித்துக்கொண்டிருந்தது. அதனை கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்கு மேல் அதனை செய்தும் விட்டது. மீண்டும் ஒருமுறை ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால், முழுவதையும் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி!

அடுத்து பார்த்தோமானால், பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. பெண் குழந்தைகள் முதல் முதியவயது பெண்மணி வரை பாலியல் பலாத்காரங்கள், அதனையொட்டிய கொலைகள், வன்கொடுமைகள், வன்புணர்வுகள் என பெண்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. காசுமீரத்தில் நடந்த சிறுமி ஆசிபா வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்தது முதல், சமீபத்தில் நடந்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை, பெண்களுக்கெதிரான இத்தகைய வன்கொடுமைகள் உலகத்தில் வேறு எங்குமே நடந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக, இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, அதை பதிவு செய்து மிரட்டப்பட்டு, மேலும் மேலும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுயிருக்கிறார்கள். அதில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் செய்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். நியாயமான, நேர்மையான விசாரணை மூலம் தான் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து, அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், தற்போதைய அரசாங்கம் நேர்மையான விசாரணை நடத்துமா என்ற கேள்வி மக்களில் பெரும்பாலோர்களிடம் எழுந்திருக்கிறது.

அடுத்து, கல்வி… ஆர்.எஸ்.எஸ்-ன் அஜெண்டாவாகிய, புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில், குலகல்வித்திட்டம் கொண்டுவந்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்களின் கல்வியுரிமையை பறிக்க திட்டமிட்டிருக்கிறது. அதனுடைய நீட்சி தான் மருத்துவப்படிப்பிற்கான ‘நீட்’ தேர்வும், அதனைத் தொடர்ந்து, 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வும். அதோடு நிற்கவில்லை, 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை செய்தது பா.ச.க-வின் பிடியில் இருக்கும் தமிழக அரசு. அதற்கு பலமான எதிர்ப்பு வரவே, அதனை அமல்படுத்தவில்லை என்ற அறிவிப்பு இருநாட்களில் வந்தது. மேலும் பொறியியல் படிப்பிற்கும் சில புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறோம் என்று அதிலும் கைவைத்திருக்கிறது. ஏனென்றால், தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் அனைவரையுமே தங்களின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர்களையே நியமிக்கிறது. நம்முடைய கல்வி உரிமையை பறிப்பதற்கான முயற்சிதான் இந்த புதியகல்விக்கொள்கை என்ற ஏற்பாடு.

அடுத்து, படித்த பட்டதாரிகளுக்கு வேலையின்மை திண்டாட்டம். ஓட்டுநர்களாகவும், உணவகங்களில் என தங்களின் படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்பை பெறமுடியாமல் கிடைக்கும் வேலையை பார்க்கும் நிலையில் தான் இன்றைய பட்டதாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அவலநிலை ஒருபுறம் இருக்க, நாட்டின் பிரதமரே, வேலைக்கேட்டு அரசாங்கத்திடம் வராமல், பகோடா விற்று பிழைப்பு நடத்துங்கள் என்ற கூறிய கொடுமைகள் கூட இங்கே அரங்கேறி இருக்கின்றன.

கடும் பொருளாதார வீழ்ச்சி. உற்பத்தித்திறன் குறைந்திருக்கிறது. ஏற்றுமதி திறனும் படுபாதாளத்தில் வீழ்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி-யால், சிறு, குறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை விட்டுவிட்டு, வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். விவசாயிகள், மழை பொய்த்ததால், வேளாண்மை இன்றி தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கிறார்கள். அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யுமாறு பல போராட்டங்களை நடத்தியும், பா.ச.க மோடி ஆட்சியின் காதில் விழவே இல்லை. பணமதிப்பிழப்பு என்ற ஒரு நடவடிக்கை நாட்டு மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுவிட்டது. இதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுமளவிற்கு மக்களை வாட்டிவதைத்திருக்கிறது இந்த அரசு. பல உயிர்களை பலி வாங்கி, இறுதியில், கருப்புப்பணமும் வரவில்லை என்பதுதான் இத்திட்டத்தினால் விளைந்த கொடுமையிலும் கொடுமை!

இது மட்டுமல்லாமல், ஊழலிலும் திளைத்திருக்கிறது பா.ச.க மோடியின் அரசு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கியச்சான்று, மத்தியப்பிரதேசத்தின் வியாபம் ஊழல், பிரான்சில், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில், நடந்திருக்கும் ரபேல் ஊழல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்துவிடுவதில் குறியாக இருந்து ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தது, சாமியார்களை வளர்த்து, மக்களின் மனங்களில் மதபோதையை விதைத்தது என அடுக்கிக்கொண்டே போகலாம். மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது சனநாயகத்திற்கு வந்திருக்கும் ஆபத்துதான். நீதியரசர்களும், பொருளாதார வல்லுநர்களுக்கும் நமக்கு அறிவுறுத்தியிருப்பது இதை தான். பா.ச.க மக்களுக்கான அரசு இல்லை. அது பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சாமியார்களுக்குமான அரசு. இது மீண்டும் ஒருமுறை நீடித்தால், சனநாயகம் பறிபோய்விடும் ஆபத்து இருக்கிறது. அந்தளவிற்கு மக்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தி, பாதுகாக்க தவறிய இந்த அரசு, தற்போது தேர்தல் சமயத்தில் கையில் எடுத்திருப்பது என்னவென்றால், நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, நாங்கள் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை சந்திக்க எத்தனிக்கிறது. இந்த ஆட்சியால் எப்போதும் மக்களுக்கு நன்மை ஏற்படபோவதில்லை என்பது தான் தீர்க்கமான ஒன்று!

ஆதலால் மக்களே, நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிப்போம். வாக்களித்தல் நம் கடமை, நம் வாக்கு நம் சனநாயக உரிமை. அதற்காக விலைபோக மாட்டோம் என்ற தன்மானத்துடனும், உறுதியுடனும், நாளை நம் பிள்ளைகள் சனநாயக இந்தியாவில் கருத்துரிமை, பேச்சுரிமையுடன் கூடிய கல்வி, வேலைவாய்ய்பு, பிற மதத்தினர் பாதுகாப்பு, பெண்கள் சுதந்திரத்துடன் வாழ்தல் என அனைத்திற்குமே சவாலாக இருக்கும் இந்த பா.ச.க ஆட்சியை அகற்றி, ஒரு மதசார்பற்ற சனநாயக நாட்டில், நிம்மதியுடன் வாழ வைப்போம், அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்போம் என்ற முக்கியத்துவத்தை, உண்மையை உணர்ந்து, சரியான ஆட்சியை தேர்ந்தெடுப்போம்.. மக்களே!

பாசிச பா.ச.க ஆட்சியை அகற்றுவோம்! சனநாயகத்தை காப்போம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாக்களித்தல் நம் சனநாயக கடமை !”

அதிகம் படித்தது