மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானவில் ஏன் கரைகிறது? (சிறுகதை)

மா.பிரபாகரன்

Jul 21, 2018

Siragu vaanavil1

வானவில் ஒரு நாள் தரைக்கு இறங்கிவந்தது. அது ஒரு நதிக்கரையோரம் நடந்துசென்றது. அந்த நதிக்கரையை ஒட்டி இருந்த வனப்பகுதியில் நிறைய பறவைகள் இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நிறமில்லாமல் அழகின்றி இருந்தன. பறவைகள் நிறமில்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? வானவில் ஆச்சரியம் அடைந்தது. அது நடந்துசென்று கொண்டிருந்தபோது அதனிடம் கிளி ஒன்று வந்தது. கீச்…கீச்… என்ற அதன் குரலை வைத்துதான் அது கிளி என்றே அடையாளம் கண்டுகொண்டது வானவில்.

“நீ ரொம்ப அழகா இருக்க! எனக்குக் கொஞ்சம் நிறம் கொடேன்!”–கேட்டதுகிளி.

“சரி தர்றேன்! உனக்கு என்ன நிறம் வேணும்?”– இது வானவில்.

“பச்சையும் சிகப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” – கிளி சொன்னது. மெத்தென்ற பஞ்சு போன்ற உடலுக்குப் பச்சை நிறத்தையும், கூரிய நாசிக்குக் கோவைப்பழம் போல் சிவந்த வண்ணத்தையும் தந்தது வானவில்: அதைப் பெற்றுக்கொண்ட கிளி அழகாக மாறியது. அது வானவில்லுக்கு நன்றி சொல்லிவிட்டு போனது.

சிறிது தூரத்தில் புறா ஒன்று எதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்ட.து.

“என்ன நிறம் வேணும்?”–கேட்டது வானவில்.

“நான் மாடத்தில் வசிப்பவள்! அதுனால பாக்குறதுக்கு அழகுராணி மாதிரி இருக்கனும்!”– என்றது புறா. புறா கேட்டுக் கொண்டபடி தனது வண்ணங்களைக் குழைத்தெடுத்துத் தந்தது வானவில். சாம்பல் வண்ண உடல், மினுமினுக்கும் தங்கநிறச் சிறகுகள், வெண்சங்குக் கழுத்து, ஆரஞ்சுவண்ண அலகு என்று மிகவும் அழகியப் பறவையாக உருவெடுத்தது புறா. அது வானவில்லுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனது.

வானவில் தொடர்ந்து நடந்து சென்றது. அப்போது மயில் ஒன்றுஎதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்குநிறம் தருமாறு கேட்டது.

“நான் தோகை விரித்தாடும்போது பார்க்க அழகா இருக்கனும்!”–என்றது மயில். “அதுக்கு அடர்த்தியான நிறம்தான் நல்லா இருக்கும்!”–என்ற வானவில், மயில் விரும்பியபடி தனது நிறத்தைக் கலந்து தந்தது. தோகைகளுக்கு அடர் பச்சைநிறம், தோகைகளின் நடுவே அமைந்த கண்களுக்கு அடர் நீலநிறம், உடல் மற்றும் கொண்டை இவைகளுக்கு நீல வண்ணத்தையும் பெற்றுக் கொண்டு நிறம் மாறியது மயில். அது ஒரு முறை தனது தோகைகளை விரித்து வானவில்லிடம் காட்டியது.

“இப்ப உன்னைப் பார்க்குறதுக்கு உண்மையிலேயே கோடி கண்கள் வேண்டும்! ரொம்ப அழகா இருக்க!”– என்றது வானவில். மயில் நன்றி சொல்லிவிட்டுப் போனது.

சிறிதுதூரத்தில் கழுகு ஒன்றுஎதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்டது.

“நான் வேட்டையாடும் பறவை! பாறை இடுக்குல வசிக்குறேன்! மற்ற உயிரினங்கள் என்னைச் சட்டுனு அடையாளம் கண்டடு பிடிக்காத மாதிரி நிறம் வேணும்!”–என்றது கழுகு.

“அப்படீன்னா உனக்கு பழுப்புவண்ணம்தான் சரியா இருக்கும்!”–என்றது வானவில். பழுப்பு வண்ணத்தை வானவில்லிடம் இருந்து பெற்றுக் கொண்டு கிறீச்சிட்டபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றது கழுகு.

இப்படி ஒவ்வொரு பறவைக்கும் அவைகளுக்குப் பிடித்தமான நிறத்தைக் கொடுத்துக் கொண்டுவந்தது வானவில். இதனால் அது தனது முக்கால்வாசி நிறத்தை இழந்திருந்தது. அது தொடர்ந்து நடந்து சென்றது. அப்போது எங்கிருந்தோ குயில் ஒன்று அதனிடம் வந்தது. அது வானவில்லிடம் நிறம் கேட்டது.

“என்கிட்ட இப்பக் கொஞ்சம் கறுப்புநிறமும் நீலநிறமும் மட்டும்தான் இருக்கு! இந்த நதிநீர் பரப்புமேல சூரியஒளி படும்போது வேற ஒரு வானவில் வரும்! அப்படி வரும்போது நீ அதுகிட்ட உனக்குப் பிடித்தமான நிறத்தைக் கேட்டு வாங்கிக்கிறியா?”– கேட்டது வானவில்.

“எனக்கு கறுப்பும் நீலமும் தான் பிடிக்கும்!”– என்ற குயில் அந்த நிறங்களை வானவில்லிடம் இருந்து பெற்றுக் கொண்டது.

“இன்னைல இருந்து உன்னை எல்லோரும் கருங்குயில்னும் நீலக்குயில்னும் அழைப்பாங்க!”– என்றது வானவில். அதற்கு நன்றி சொல்லிவிட்டு பறந்துபோனது குயில்.

என்ன குழந்தைகளே! ஒவ்வொரு மழைநாள் பொழுதிலும் கீழ் திசைவானில் வானவில் வருகிறதுதானே? அப்படிவரும் வானவில் சிறிதுநேரத்தில் கரைந்துபோகிறதல்லவா? அதற்குக் காரணம் இதுதான். வானவில்லின் கண்கவர் வண்ணங்களால் கவரப்பட்ட பறவைகளும் மற்ற உயிரினங்களும் தங்களுக்குப் பிடித்தமான நிறத்தை வானவில்லிடம் கேட்டுவாங்கிக் கொள்கின்றன. வானவில்லும் தன்னுடைய நிறங்களைப் பெருந்தன்மையுடன் கொடுத்துவிடுகிறது. இதனால்தான் அது சிறிதுநேரத்தில் கரைந்து மறைந்துபோகிறது.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானவில் ஏன் கரைகிறது? (சிறுகதை)”

அதிகம் படித்தது