மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாருங்கள் நடிக்கக் கற்றுக்கொள்வோம்

சித்திர சேனன்

Nov 15, 2014

nadikka katrukkolvom1நடிப்பு- பொருள்:

உடல்,மனம்,குரல் இம்மூன்றின் ஒருங்கிணைப்பால் உடலில் உண்டாகும் வினையே நடிப்பு ஆகும். ஐந்தறிவு முதல் ஆறறிவு ஜீவராசிகள் மண்ணில் தோன்றிய காலத்திலிருந்தே இந்த நடிப்பு உணர்வு இருந்து வந்திருக்கிறது. நவநாகரீக வளர்ச்சி பெற்றதும் இதுதான் நடிப்பு என மனித இனம் பாகுபடுத்திப் பார்த்துக் கொண்டது.

மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் என்ற நூலில் மனித உடலில் தோன்றும் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின் வருமாறு விளக்குகிறது.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாகு என்ப”

உள்ளத்து உணர்ச்சிகளை உற்று நோக்கியும், உணர்ந்து பார்த்தும், கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும், மனநுட்பமும் வியக்கச் செய்கின்றன. மேற்கண்ட எட்டு வகை மெய்ப்பாடுகளைக் கொண்டே சங்ககால கூத்தர், பாணர், விறலியர் என்ற வகையைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் வாழ்வியலை வகுத்துக் கொண்டனர்.

nadikka katrukkolvom3உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்ற மகாகவி சேக்ஸ்பியரின் உன்னத மொழிக்கு உயிரூட்டும் வகையில் தற்போதைய காலகட்டத்தில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் தரையில் நடித்தது போதும், எப்படியாவது திரையில் நடித்து விட வேண்டும் என்ற பேரார்வம் எழுந்து உள்ளது. காரணம் இந்தியாவில், ஏன் உலகில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் புகழும், பணமும் மற்ற துறையினருக்குக் கிடைப்பதில்லை. எனவேதான் சினிமா நடிகனாக வேண்டும் என்பது இன்று பலருடைய கனவாக இருக்கிறது.

ஒருவர் நடிகனாகி விட வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமா?, அதற்கான அடிப்படை தகுதிகளைப் பெற வேண்டாமா?, இதற்கென்ன தகுதி வேண்டும்? என நீங்கள் நினைப்பது தெரிகிறது. நடிகனாக முதலில் நால்வகைக் குணங்களை விட்டு விட வேண்டும். அவை வெட்கம், மானம், சூடு, சுரணை என்பன.

இது நடிகனாவதற்கு மட்டும் அல்ல,சமூகத்தில் வெவ்வேறு துறைகளில் வெற்றியாளராக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருமே இந்த நான்கு வகை குணத்தை இழக்க வேண்டும். அப்பொழுது தான் துணிச்சல்,தைரியம்,வீரம் என நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் குணங்கள் நம்மிடம் வரும்.

சரி,இனி நடிகனாக முக்கியத் தகுதிகள் என்னவென்று பார்ப்போம்:

1. முகபாவனை

2. உடல்மொழி

3. குரல் மாறுபாடு

4. கற்பனை வளம்

5. ஞாபக சக்தி

6. ஆரோக்கியமான உடல்

7. கலங்காத மனம்

8. படைப்பாற்றல் திறன்

9. எதையும் உள்வாங்கும் திறன்

என்ற ஒன்பது வகையான தகுதி உள்ளவர்களே உலகில் தலைசிறந்த நடிகராக வலம் வருகின்றனர் என்பதில் ஐயமில்லை. மேற்கண்ட ஒன்பது தலைப்புகளில் முதல் மூன்று தலைப்பில் சில பயிற்சிகளை உங்களுக்கு இந்தப் பகுதியில் விளக்குகிறேன்.

முக பாவனை:

nadikka katrukkolvom4ஒரு நடிகன் தனது அத்தனை உணர்வுகளையும் வெளிக்காட்டுமிடம் முகம். நூற்றுக்கு 97 சதவீதம் திரைப் புகைப்பட கருவியைக் கொண்டு இயக்குனர் அதிகம் திரையில் காட்டும் ஒரு பகுதி எதுவென்றால் அது முகமே. இந்த முகத்தில் பல பாவனைகளைக் காட்டுவதற்கு எந்த மாதிரி பயிற்சி செய்யலாம் என்றால்,

  • முதலில் நமது பல், தாடை, உள்நாக்கு, அன்னம் என உள்ளே இருக்கும் பகுதிகளை நாக்கால் துலாவ வேண்டும். உமிழ்நீர் வந்தால் விழுங்கி விட வேண்டும்.
  • கண்ணாடி முன் நின்று, அழுகை, சிரிப்பு, கோபம், சாந்தம், வெட்கம், கருணை போன்ற உணர்வுகளை நீங்களே செய்து பார்த்து பயிற்சி பெற வேண்டும்.
  • உங்கள் முகம் முழுக்க ஈக்கள் அமர்ந்திருந்தால் நீங்கள் அவைகளை கை கொண்டு விரட்டாமல் முகத்தை அசைத்து எவ்வாறு விரட்டுவீர்களோ அவ்வாறு விரட்டுவது போல் முகபாவனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள தசைகள் கடினத் தன்மை இழந்து நன்கு விரிந்து கொடுக்கும். அவ்வாறு இருந்தால் பாவனை செய்ய வசதியாக இருக்கும்.

உடல் மொழி (Body Language):

nadikka katrukkolvom5ஒரு நடிகனுக்கு நல்ல உடல் மொழி (Body Language) மிக அவசியம். தனது வித்தியாசமான உடல்மொழியால் உலகையே தன்வயப்படுத்திய ஒப்பற்ற ஒரே கலைஞன் சார்லி சாப்ளின். சரி உடல் மொழியை எவ்வாறு நாம் மேம்படுத்துவது?. ஒன்றுமில்லை சாதாரணமாக நாம் ஒருவரிடம் பேசும் போது,நாம் பேசுகின்ற கருத்துக்குத் தகுந்தவாறு நமது உடலில் முகம்,கை-யானது அந்தக் கருத்தை விளக்கும் வகையில் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக,உலக அழகி பட்டம் பெற்ற பெண்ணானவள் மகிழ்வின் உச்சமாக தனது இரு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆச்சரிய பாவனை காட்டுவாள். ஒருவரிடமும் நாம் “எப்படி இருக்க,நல்லா இருக்கியா”என்று நலம் விசாரிக்கும் போது,நமது கை என்ன செய்கிறது பாருங்கள். அதனால் உடல்மொழி என்பது நமது உணர்வுகளுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும் தன்மை உடையது. இந்த உடல்மொழியை கற்றுக்கொள்ள சில பயிற்சிகள் உங்களுக்காக…

நீங்கள் மழையில் நனைந்தால் என்ன மாதிரி செயல்பாடுகளை செய்வீர்களோ அதை ஒரு அறையில் செய்து பாருங்கள். அதே போல்

  • முதன் முறையாக கம்பி மேல் நடக்கிறீர்கள்
  • பெரும் சுமையை தூக்கி நடக்கிறீர்கள்
  • தேனீக்கள் உங்களை கொட்டும் போது என்ன செய்வீர்கள்.
  • உடலில் எலும்பில்லாதவன் எப்படி நடப்பான்
  • உங்கள் உடலில் ஒரு எறும்பு எல்லா பகுதியிலும் ஊர்கிறது. அது எந்தப் பகுதியில் ஊர்கிறதோ அந்த பகுதியை அசைத்து பாவனை செய்ய வேண்டும்.

இதே போல் ஆசிரியர்,அரசியல்வாதி,மனநோயாளி,பிச்சைக்காரர் என ஒவ்வொரு நபர்களின் உடல்மொழி எவ்வாறு இருக்கும் என நீங்களே சுயமாக நடித்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

3. குரல் மாறுபாடு (Voice Modulation):

nadikka katrukkolvom6ஒரு நடிகனுக்குக் குரல் வளம் என்பது மிக மிக அவசியமானதாகும். குரல் என்பது ஒரு நடிகன் ஏற்கும் பாத்திரம்,அவன் காட்டும் உணர்ச்சிக்குத் தகுந்தாற்போல் மாறுபடும்.

நம்மையே எடுத்துக் கொள்வோம் மகிழ்வாய் ஒருவரிடம் பேசும் போதும் நம் குரல் அடித்தொண்டையில் இருக்கும். பல நாட்கள் பார்க்காத நண்பனை பார்த்துப் பேசும் போது நம் குரல் நடு தொண்டையிலிருந்து வார்த்தை ஒலிக்கும்,நமது எதிராளியிடம் சண்டை போடும் போது நம் குரல் உச்சத்தில் மூக்கிலிருந்து ஒலிக்கும். இதுபோல் தான் ஒரு திரையில் ஒரு நடிகனுக்கு ஏற்கும் பாத்திரத்தில் வெளிப்படும் உணர்வுக்குத் தகுந்தாற்போல் அவர்கள் குரல் ஒலிக்கும். இந்தக் குரலை நாம் கீழ்கண்ட சில பயிற்சி மூலம் மேம்படுத்தலாம்.

அ,இ,உ,ஏ,ஓ இந்த ஐந்து வகையான ஒலிகளை பூஜ்யம் ஒலியிலிருந்து அதிக ஒலிவரை கத்தி பயிற்சி செய்ய வேண்டும். ‘அ’என்ற எழுத்தை முதலில் அ…என மெதுவாக அடித்தொண்டையிலிருந்து ஒலி எழுப்பி பின் உச்ச நிலையில் கத்த வேண்டும். இந்த முறையில் 5 எழுத்துக்களையும் கத்தி பயிற்சி எடுக்க வேண்டும்.

நாப்பிறழ் பயிற்சி:

  • கொக்கு குட்ட கொக்கு கொக்கு இட்ட முட்ட குட்ட முட்ட
  • ஊர் பூவரச மரமெல்லாம் எம் பூவரச மரம்
  • கரடிக் குடலெடுத்து கழுவிக் கவிழ்த்து
  • யார் தச்ச சட்ட எங்க தாத்தா தச்ச சட்ட

- என மேலே உள்ள இந்த வசனங்களை,நம்மால் எவ்வளவு வேகமாகக் கூற முடியுமோ அவ்வளவு வேகமாக கூறி பயிற்சி எடுக்க வேண்டும். இதில் ஆரம்ப பயிற்சியின் போது திக்கும் திணறும். சிறிது கால பயிற்சிக்குப் பின் தெளிவாக இந்த வார்த்தையை உச்சரிப்பீர்கள். இது ஒரு வசனத்தை தெளிவாகப் பேசி நடிக்க இப்பயிற்சி உதவும்.

அனைத்து மொழிகளையும் கலந்து பேச வேண்டும். இதற்கு ஜிப்ரிஷ்மொழி என்று நடிப்பு உலகில் கூறுவர். குண்டக்க மண்டக்க பேசுவதே ஜிப்ரிஷ்ஆகும். இந்த மொழியை கூச்சமில்லாமல் பேசுபவரின் நாவும்,குரலும் நன்கு வளம் பெறும்.

nadikka katrukkolvom9எனவே மேற்கண்ட ஒன்பது தலைப்புகளில் முகபாவனை, குரல் மாறுபாடு, உடல்மொழி என்ற மூன்று தலைப்புகளில் நூறில் ஐந்து சதவீதத்தை மட்டும் இந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன். இதில் இன்னும் 95 சதவீத பயிற்சிகள் உள்ளன. மேலும் மீதம் உள்ள ஏழு தலைப்புகளிலும் பல்விதமான பயிற்சிகள் உள்ளன. மேற்கூறிய பயிற்சிகள் யாவும் முதன் முதலில் நடிக்க வரும் நடிகருக்குப் பெரும் பயனுள்ளதாக இவை இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நடிப்பை சுதந்திர காலகட்டத்தில் வெள்ளையனுக்கு எதிரான ஆயுதமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். ஆனால் இன்று அந்தக் கலையை பணம் சம்பாதிக்கவும், புகழ் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தும் கலையாக காலப்போக்கில் மாற்றப்பட்டு விட்டது. இங்கே படித்து உயர்ந்தவர்களை விட நடித்து உயர்ந்தவர்கள் நம் நாட்டில் அதிகம் என்பதாலோ என்னவோ நடிப்புத்துறையை விரும்பாதவர் எவருமிலர். ஆதலால் சக்தி வாய்ந்த இந்த நடிப்புக்கலையானது மக்களை நல்வழிப்படுத்தினால் இதை நாடிச் செல்வதில் தவறேதுமில்லை.

குறிப்பு:

குறைந்த கட்டணத்தில் நடிப்புப் பயிற்சி எடுக்க விரும்புவோர்கள் கீழ்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

அலைபேசி எண்: 9003508381


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாருங்கள் நடிக்கக் கற்றுக்கொள்வோம்”

அதிகம் படித்தது