மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் பகுதி 2 – கூகுள் வரைபடங்கள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 5, 2022

siragu google map2

கூகுள் வழித்தடங்களை 2018ஆம் ஆண்டு முதல் 154.4 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், 2022 இல் அதன் எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கிறது. ஒருவேளை அந்த வரைபடத்தைப் பயன்படுத்துகின்றபோது விபத்துகள் ஏற்பட்டால்? அப்படியான ஒரு வழக்கு 2021ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் சந்தித்தது. லாரன் ரோசன்பேர்க் ( Lauren Rosenberg) என்பவர் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தியபோது ஒரு வாகனத்தில் அடிபட்டார், அதனால் கூகுளிடம் $100,000 இழப்பீடு வழங்குமாறு வழக்குத் தொடுத்தார். நடைபாதை இல்லாத காரணத்தால் வாகன நெரிசல் சாலையில் நடக்கலானார், அதனால் மகிழுந்தால் விபத்துக்குள்ளானார், அதற்குக் கூகுளின் வரைபடமே காரணம் என்றார்.

இழப்பீட்டுடன் கூகுள் தவறிழைத்துவிட்டது என்ற தண்டனைக்குரிய இழப்பீட்டையும் நீதிமன்றத்தைக் கேட்டிருந்தார். கூகுளுடன் தன்னை விபத்துக்குள்ளாக்கிய மகிழுந்து ஓட்டுநரையும் எதிர்த்து வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். கூகுள் தன்னை வாகன நெரிசல் இருக்கும் பாதையைக் காட்டியதால்தான் விபத்து ஏற்பட்டது என்பதே அவரின் வாதம். அமெரிக்காவின் யூட்டா மாநில நீதிமன்றம் கூகுளுக்கு ஆதரவாக வழக்கைத் தள்ளுபடிச் செய்ய முடிவெடுத்தது. இதில் சாலையைக் கவனமாகக் கடக்காமல் விபத்து ஏற்படும் சூழ்நிலைகளைக் கூகுள் கணக்கில் கொள்ள வாய்ப்பில்லை எனவே அதனால் ஏற்படும் விபத்தின்போது அது கூகுளின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது என்றது நீதிமன்றம்.

சாலையைக் கடக்கும்போது ரோசன்பேர்க்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றது நீதிமன்றம். ஆனால் கூகுள் ஒரு வழித்தடத்தைக் கூகுள் வரைபடம் காட்டும்போது அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றிக் கூறி கவனத்துடன் பயன்படுத்தக் கூகுள் எச்சரித்திருக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அது கூகுள் மீது தேவையற்ற சுமையைக் கூட்டும் என்றது.

ரோசன்பேர்க் கூகுளுக்குக் கடமை உண்டு என்பதை நிரூபிக்கக் கூகுளின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். சாலையைக் கடக்கும்போது கடப்பவர்தான் வாகனங்களுக்கு வழிவிட்டு கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்றது நீதிமன்றம். இதில் வாதியின் கடமைத் தவறல்தான் உள்ளதே தவிரப் பிரதிவாதிக்கு எந்த கடமை தவறலும் இல்லை என்றது நீதிமன்றம்.

பப்ளிக்காக தகவல்களைப் பரிமாறும்போது ரோசன்பேர்க் தனக்காக மட்டும் கூகுள் அந்த வழித்தடத்தைக் காட்டியது என வாதாட முடியாது. அனைத்து மக்களுக்கும் வழங்கும் சேவையில்
அத்தனை விபத்து சூழல்களையும் ஒரு நிறுவனம் கணக்கிட முடியாது.

கூகுளுக்கு எதிரான மற்றொரு வழக்கில், Harris v. Google வரைபடங்கள் தனிமனித பிரைவேசிக்கு எதிரானது என்ற வாதம் வைக்கப்பட்டபோது நீதிமன்றம் நிராகரித்தது. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனினும் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கைத் தொடுத்ததை விட gps provider க்கு எதிராக ரோசன்பேர்க் வழக்கு தொடர்ந்திருந்தால் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்திருக்கலாம் என வல்லுநர்கள் கருதினார்கள்.

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 2 – கூகுள் வரைபடங்கள்”

அதிகம் படித்தது