மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விஞ்ஞானச்சிறுகதை (?) தாகம்

மாதவன்

Oct 4, 2014

thaagam1அவன் தனது டோக்கனை நாற்பதாவது முறையாக பார்த்துக்கொண்டான். 413.

வரிசை மிக மெதுவாக நகர்ந்தது. அவனுக்குப்பின்னால் ஏதோ நெருடியது. திரும்பினான். பின்னாலிருந்தவர் வைத்திருந்த ஒரு நோஞ்சான் குழந்தைதான் இவனைத் தொட்டு விளையாடியது.

இவனால் அதை ரசிக்கவோ சிரிப்பதுபோல பாசாங்கு செய்யவோ முடியவில்லை. கொஞ்சம் முன்னால் நகர்ந்துகொண்டான்.

வெயிலின் வெப்பம் கடுமையாக இருந்தது. பூமி இன்று சூரியனை நோக்கி முப்பது மீட்டர்கள் நெருங்கியதாக தெருவெங்கும் ஒளிரும் மின்திரையில் அறிவித்ததை நினைத்துக்கொண்டான்.

வரிசையில் நின்றிருந்த யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. உமிழ்நீர் சேமிப்புக்கொள்கையை எல்லோரும் கேள்விகளின்றி கடைப்பிடித்தார்கள். முன்னாலிருந்தவர் இவனைவிட சற்று உயரமாக இருந்தார். எப்படியும் மூன்றடி இரண்டங்குலம் உயரமாவது இருக்கும்.

அவனுக்கு தாத்தா ஞாபகம் வந்தது. தாத்தா அடிக்கடி சொல்வார். அந்தக்காலத்துல மனுஷங்க ஆறடிக்குமேலல்லாம் உயரமா இருப்பார்கள் என்று.

தாத்தா அரசாங்கத்தின் வரலாற்றுத்துறையில் வேலைபார்த்தவர். அங்கிருந்த நூலகத்தில் நிறைய ஒலி ஒளிப்புத்தகங்கள் இருந்ததாகவும், அதில் தான் பார்த்த பண்டைக்கால உயிரினங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தன என்பதைப் பற்றியெல்லாம் இவன் சிறுவனாயிருந்தபோது சொல்லியிருக்கிறார்.

இப்போதெல்லாம் அதிகபட்சம் நான்கு அடி உயரம்தான். அதற்குமேல் வளரமுடியாதபடி மனிதர்களின் மரபனுக்கள் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன.

சிலசமயங்களில் ஜீன்களின் பிரதியெடுத்தலில் பிழையேற்பட்டு, அதிக உயரம் வளரக்கூடிய சாத்தியங்களோடு பிறக்கும் குழந்தைகளை, சமூகநலன் பிரிவினர் கொண்டுசென்று கொன்றுவிடுகிறார்கள்.

போனவருடம் அப்படித்தான் இவன் பக்கத்துவீட்டுகாரனின் இரண்டாவது குழந்தை கொல்லப்பட்டது. கடைசிமுறையாக அரசாங்கத்திற்கு மனுப்போட்டிருக்கிறான்.

அரசாங்கம் இதுவிஷயத்தில் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. உணவுப்பற்றாக்குறைதான் காரணம். உணவின் உற்பத்திக்கும் சேமிப்பிற்கும் தகுந்தபடி பிறப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து மக்கள் கணக்குப்பிரிவிற்கு மனுப்போட்டால், குறைந்தபட்சம் ஐந்து அல்லது பத்துஆண்டுகளுக்குள் அனுமதிகிடைக்க வாய்ப்புண்டு.

உடலின் சத்துக்குறைவால் மனித இனம் காமவுணர்வை முக்கால்பங்கு இழந்துவிட்டது.
இப்போதெல்லாம் மனுக்களே அதிகம் வருவதில்லை என்று அரசாங்கம் மகிழ்ச்சியாக அறிக்கைவிடுகின்றது.
உணவுப்பொருள் மிச்சமென்பதால்.

இவனுக்கு முன்னால் நின்றிருந்தவர்களில் சிலர் பொத்துபொத்தென்று சுருண்டு தரையில் விழுந்தார்கள். அநேகமாக அவர்கள் செத்திருப்பார்கள் என்று அங்கிருந்த எல்லோருக்குமே தெரியும்.

இப்போது வரிசை கொஞ்சம் வேகமாக நகர்ந்தது.
இன்னும் சிலநிமிடங்களில் அரசு ஊர்திவந்து அந்தப்பிணங்களை அள்ளிச்சென்று எரித்துவிடும். ஓரிருவர்மட்டும் அந்தத்திசையை சலனமின்றி பார்த்தார்கள். மற்றபடி வரிசை வேகமாகநகர்ந்த மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் வழிந்தது.

மனிதர்கள் இப்படி அங்குமிங்கும் கொத்துகொத்தாக இறந்துவிழுவது சகஜம். அவர்கள் முழுவதும் இறப்பதில்லை. கண்கூடத்திறக்கமுடியாத அளவிற்குக் களைப்பும் சோர்வும் கலந்த ஆழ்மயக்கம். சிகிச்சை செய்தால் ஒருமாதமோ இரண்டுமாதமோ உயிர்வாழக்கூடும்.

அதற்கெல்லாம் அரசிற்கு நேரமோ வசதியோ கிடையாது. சின்னதாக ஏதும் வியாதிபோல தென்பட்டாலே சமூகநலப்பிரிவுதான். மரணம்தான்.

உயிர்வாழ்வதற்கான அரசாங்கத்தின் அனுமதியே நாற்பதாண்டுகள்தான். இதில் வியாதிவெக்கையென்று சொல்லி உயிரைவிடுவானேன் என்று பலபேர் வெளியில் சொல்வதில்லை.

என்ன செய்ய, இயற்கை வளங்களெல்லாம் தீர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயிற்று. சரித்திரக்கால மனிதர்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லி மரங்களையெல்லாம் வெட்டித்தீர்த்தார்கள்.

பசுமைபற்றிய கணக்கெடுப்புகள் காலங்கடந்துவிட, ஒற்றை மரம்கூட மிஞ்சவில்லை. பூமி வெப்பமாகி அண்டார்ட்டிக்கா உருகிவழிந்து, எரிமலைகள் வெடித்து, நகரங்களில் முக்கால்வாசி நீரில் மூழ்கிப்போயிற்று.

கொஞ்நஞ்சம் மனிதர்கள்தவிர மற்ற அனைத்து உயிர்களும் உணவாதாரமின்றி, நோயுற்று அழிந்துபோயிற்று.

மிச்சமிருந்த மனிதக்கூட்டம் விழித்துக்கொண்டு ஒருங்கிணைந்து சில சட்டதிட்டங்களோடு உயிர்வாழத்தொடங்கியது.
எஞ்சியிருந்த உணவுப்பொருட்களுக்காக மனிதர்கள் அடித்துக்கொண்டுசாக, விஞ்ஞானிகளின் கடுமையான ஆராய்ச்சிகளின் பயனாக உயரம் குறைந்துபோனது மனிதர்களுக்கு. உடல் உருவம் குறைய உணவும் குறையுமல்லவா?

செயற்கை ஆக்ஸிஜனின் தயவில் கொஞ்சம்போல சுவாசிக்க முடிந்தது. பூமி தன் சுழற்சியை நிறுத்திக்கொண்டு சூரியனை நோக்கி நேர்பாதையில் பயணிக்கத்துவங்க, எப்போதும் பகல் மட்டுமிருந்தது.

உருவத்தை சிறிதாக்கும் ஆராய்ச்சியில் நான்கடிக்குக்கீழ் குறைக்கமுடியவில்லை. இறந்துபோனார்கள் அல்லது ஊனமுற்றார்கள்.

கடல்நீரை உப்புவிலக்கித்தனியாகப் பிரித்து, அதை குடிநீராக பயன்படுத்தமுடியாதென்பதை உணர்ந்த விஞ்ஞானிகள், அந்த நீரில் சில வேதிப்பொருட்கள் கலந்து அதிகநாட்கள் சேமித்துவைத்து, அதில் உருவான சிலவகைப் புழுக்களிலிருந்து கிடைத்த புரோட்டின்களை உணவுமாத்திரைகளாக மாற்றினார்கள்.

அவனுக்கு தாங்கமுடியாத தாகம்வாட்டி கண்களை இருட்டியது. முன்னால் நின்றிருந்தவரின் தோளைப்பிடித்து சமாளித்துக்கொண்டான். அவர் திரும்பி இவனை ஒரு வெற்றுப்பார்வை பார்த்து, இவன் கைகளை தட்டிவிட்டார்.

இவனது கைபேசியில் குறுஞ்செய்தி வந்தது வீட்டிலிருந்து. மனைவிதான் அனுப்பியிருந்தாள். ரேஷன் வாங்கியாயிற்றா? சீக்கிரம் வாருங்கள். குழந்தை தவிக்கிறது. என்னாலும் முடியவில்லை. அதை மூடிவைத்தான்.

கைபேசியில் பேசியதெல்லாம் பழங்காலம். இப்போதெல்லாம் மனிதர்கள் யாரும் பேசுவதில்லை. சைகைகள்கூட கிடையாது. அருகிலுள்ளவர்களுக்கு கைபேசியின் தொடுதிரையில் எழுதிக்காட்டுவதும், தொலைவிலுள்ளவர்களுக்கு குறுஞ்செய்திகளும்தான். ஹ்யூமன் எனர்ஜி சேவிங் கொள்கை.

நல்லவேளையாக சோலார் புண்ணியத்தில் ஓரளவு மின்சாரம் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. எத்தனைகாலத்திற்கோ தெரியாது.
அரசாங்க ஊர்தி சத்தமின்றி வந்து நின்றது. முன்பெல்லாம் ஊர்திகள் மிகப்பெரிதாக இருந்திருகிறதென்பதை மியூசியத்தில் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான்.

மியூசியத்தில் நிறைய அதிசயங்கள். அழிந்துபோன பறவைகள் விலங்குகள் சிலவற்றின் மாடல்களும், கார்கள் பேருந்துகள் புகைவண்டிகள் போன்றவற்றின் அட்டைமாடல்களும் பார்க்க அற்புதமான அனுபவம்.

இப்போது அரசாங்கம் மட்டும் பிணங்களை அப்புறப்படுத்துவதற்காக ஒன்றிரண்டு மிகச்சிறிய ஊர்திகளைப் பயன்படுத்துகின்றது. யாரும் எங்கும் பயணப்படாத நகரத்தில் ஊர்திகளுக்கு தேவையென்ன?

ஆயிற்று முன்னால் இன்னும் ஒரு இருபதுபேர்தான். கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருந்தது. ஸ்டாக் தீர்ந்துவிட்டால் இன்னும் பதினைந்துநாட்கள் காத்திருக்கவேண்டும்.

ஏற்கனவே சென்றமுறை தாமதமாக வந்து காரியம் கெட்டது. மனைவி தன்  தொடுதிரையில் “ஒரு ரேஷன் வாங்கக்கூடத்துப்பில்லை. நீ என்ன மனிதன். உன்னை நம்பி வந்தேன்பார். அது இதுவென்று எழுதி ஏசினாள்”.

அதென்ன மாயமோ அவள் ரேஷனுக்கு வந்தால் எல்லாம் கிடைக்கிறது. ஏதோ கொஞ்சம் சிக்கனம்பிடித்து வைத்திருந்ததால் முந்தையநாள்வரை ஒருவாறு சமாளித்தாயிற்று. இன்று கிடைக்காவிட்டால் சந்தேகமின்றி குடும்பத்தோடு நேராக பரலோகம்தான்.

முன்னால் வாழ்ந்த மனித இனத்தின்மீது எல்லையற்ற அசூசை ஏற்பட்டது அவனுக்கு. அவர்கள் செய்த அட்டூழியங்களால்தானே இத்தனை அவஸ்தைகளும். அவர்களை நினைத்தாலே கோபத்தில் காரி உமிழத்தோன்றியது. ஆனால் முடியவேமுடியாது. ஒவ்வொரு துளி உமிழ்நீரும் தன் உயிர்வாழ்வின் அவசியமென்று அவனுக்குத்தெரியும்.

thaagam5அவனும் அவனைப்போன்ற மொத்த மனிதர்களின் ஒரேநம்பிக்கையும் கனவும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் இருக்கும் புதிய கிரகம் ‘தாகம்’ தான். அங்கு மனித இனம் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக செய்திகள் வருகின்றன. பார்க்கலாம். அதுவரை தாக்குப்பிடிக்கவேண்டும்.

அவன் முறை வந்தது. இவன் உரிமை அட்டையை மின்னிந்திரத்தில் சொருகி சரிபார்த்து ரேஷன் பொருள் இவன் பையில் விட்டெறியப்பட்டது.

கூட்டம் விலக்கிவந்து வெற்றிக்களிப்போடு வெளியில்  எடுத்துப்பார்த்தான். சற்றே பழுப்பு நிறத்திலிருந்தது. பதினைந்து நாட்களுக்கு இதை வைத்துத்தான் ஒப்பேற்றவேண்டும்.

சரியாக ஒருலிட்டர் அளவுள்ள அந்த திரவத்தைத்தான் ஒருகாலத்தில் ‘தண்ணீர்’ என்று அழைத்தார்களாம். யார் செய்த புண்ணியமோ. ஒரு அதிசயம்போல எங்கோ ஒரு ஊற்றில் கொஞ்சம் தண்ணீர் சுரக்கிறதாம் !
தாகத்தோடு அவனுக்கு வீட்டு ஞாபகம் வந்தது.


மாதவன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விஞ்ஞானச்சிறுகதை (?) தாகம்”

அதிகம் படித்தது