மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விமான விபத்து (சிறுகதை) – பகுதி-2

இராமியா

Aug 27, 2022

siragu vimaana vibaththu

முன் காலத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு உயர் கல்வி கற்கவோ, வேலை வாய்ப்பு பெறவோ பெரும்பாலும் பார்ப்பனர்களால் மட்டுமே முடிந்தது. பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சீரிய முயற்சியினால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கும் அவ்வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதைக் கண்டு வயிற்றெரிச்சல்கொண்ட பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இது போன்ற வாய்ப்புகளில் ஊக்கம் பெற்று விடக்கூடாது என்று, அயல் நாட்டு வாழ்க்கையில் முதலில் நிம்மதி போய்விடும் என்றும், நம் பண்பாட்டை மறந்து விடுவோம் என்றும் பிரச்சாரம் செய்து பார்த்தனர். ஆனால் அவர்களுடைய பிரச்சாரத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்களுக்குக் கிடைத்த அயல் நாட்டு வாய்ப்புகளை விடாமல் பயன்படுத்திக் கொண்டனர்.

அயல் நாடுகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை பொருட்படுத்தத்தக்க அளவு உயர்ந்த பின், இந்தியாவில் கையாண்டு வரும் ஒடுக்குமுறை உத்திகளை அங்கும் நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். அதாவது தங்கள் ஆளுகைக்குக் கீழ் வரும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைச் சரியாக வேலை செய்ய விடாமல் இடையூறு செய்வது, திறமை அற்றவர்கள் என்று பொய்யாக முத்திரை குத்துவது, மேலதிகாரிகளிடம் கோள் மூட்டி விடுவது போன்ற உத்திகளைக் கையாண்டனர். இதனால் அயல் நாடுகளில் வாழும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்தியர்கள் பார்ப்பனர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. ஆங்காங்கே பல குழுக்களும் தோன்றி விட்டன. அப்படித் தோன்றிய குழுக்களில் ஒன்று தான் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் (Ambedkar King Study Circle). இந்தியாவில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துப் பல முனைகளில் வெற்றி கண்டவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். அமெரிக்காவில் இன ஒதுக்கலுக்கு எதிராக பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இருவருமே வன்முறையைக் கையில் எடுக்காமல் அமைதி வழியில் உறுதியாகப் போராடி மாபெரும் வெற்றியைக் கண்டவர்கள். இந்த மாபெரும் போராளிகளின் பெயரில் உள்ள இந்த அமைப்பின் மூலம் தங்களைச் சுற்றி உள்ள மக்களுக்கு நாடு, இனம், மொழி என எந்த வேறுபாடும் பாராமல் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியலைப் பரப்பும் பணியைச் செய்து கொண்டு இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சிறந்த போராளிகளை அழைத்து அங்கு உள்ள மக்களிடையே பேச வைக்கின்றனர். அந்த முறையில் சில நாட்களுக்கு முன்பு கலாவையும் மாலாவையும் அழைத்துப் பேச வைத்து இருக்கின்றனர்.

கலாவும் மாலாவும் மிகவும் இளையவர்களாக இருந்தாலும் உயர்ந்த அறிவுத் திறத்துடன் பேசுவதாக ஒரு கருத்து பரவி இருந்ததால் அவர்களுடைய பேச்சைக் கேட்பதற்குப் பெரும் கூட்டம் கூடி இருக்கிறது. மேலும் அவர்கள் பேசுவதாக மட்டும் இல்லாமல், கூட்டத்திற்கு வருபவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை அளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தால் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் மிகுந்த எண்ணிக்கையில் வந்து இருக்கிறார்கள். முதலில் கலா பேசி இருக்கிறாள்.

சாதியக் கொடுமைகளின் முதன்மையான பிரச்சினையே சாதி அடிப்படையில் தொழில் அமைவது தான். திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்கள் உயர் நிலை வேலைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மற்ற வகுப்பு மக்களோ எவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் அடுத்த நிலை வேலைகளைத் தான் பெற முடிகிறது. இவ்வாறு திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேர்வதால் மனித வளம் கொடூரமான அளவில் வீணாகிறது. அந்தி விட ஆபத்தானது திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர் நிலை வேளைகளில் ஆக்கிரமிப்பது தான். அவர்களுடைய திறமைக் குறைவினால் உயர் நிலை வேளைகளில் நிகழும் சிறு தவறும் அனைத்து நிலைகளிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகள் ஏற்படக் காரணமாகி விடுகிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, பொதுப் போட்டி முறையை முற்றிலும் ஒழித்து விட்டுத் தனியார்த் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் கீழ் நிலையில் இருந்து மேல் நிலை வரை அனைத்து நிலை வேலைகளையும் பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி மக்கள், மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் பிரித்துக் கொடுப்பது தான்.

கலா இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது ஒருவர் இடைமறித்து வினாக்களைத் தொடுக்கத் தொடங்கினார். தொடுக்கப்பட்ட வினாக்களுக்குக் கலாவும் மாலாவும் மாறி மாறி விடை அளித்தார்கள்.

“பொதுப் போட்டியை ஒழித்து விட்டால் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் நிர்வாகம் கெட்டுப்போய் விடுமே? நிர்வாகம் கெட்டுப்போனால் அனைத்தும் கெட்டுப்போகும் அல்லவா?”

“அப்படியா? சரி! அறிவும் திறமையும் ஏதோ ஒரு வகுப்பு மக்களுக்கு மட்டுமே உரியதா? அல்லது அனைத்து வகுப்பு மக்களுக்கும் உரியதா?”

“————-“

“இப்படி மவுனம் சாதித்தால் எப்படி? விடை கூறுங்கள்.“

“அனைத்து வகுப்பு மக்களுக்கும் உரியது தான்”

“அது மாற்ற முடியாத இயற்கை நியதி என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?”

“ம்”

“அப்படி என்றால் பொதுப்போட்டி முறையில் ஏன் அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந்து எடுக்கப்படுவது இல்லை?”

“திறமைசாலிகள் மற்றும் கடுமையாக உழைப்பவர்கள் தான் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். தேர்ந்து எடுக்கப்படாதவர்களுக்குத் திறமை இல்லை என்றும் அவர்கள் கடுமையாக உழைக்கவில்லை என்றும் புரிந்து கொள்ள வேண்டும்”

“முன்னுக்குப் பின் முரணாக ஏன் பேசுகிறீர்கள்? அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்கள் இருப்பதாகவும், அது மாற்ற முடியாத இயற்கை நியதி என்றும் ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா? அந்த இயற்கை நியதியின்படி அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலைகளிலும் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் அல்லவா?அப்படி நடக்கவில்லை என்றால் போட்டி முறையில் ஏதோ சூது பின்னிப் பிணைந்து உள்ளது என்று புரிந்து கொள்வதில் இருந்து உங்களை எது தடுக்கிறது?”

“————–“

“உங்கள் மவுனம் பொதுப்போட்டி முறையில் சூது பின்னிப் பிணைந்து உள்ளதை உங்களால் மறுக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது. அப்படிப்பட்ட சூது நிறைந்த முறையை ஒழித்துக் கட்டுவதில் என்ன தவறு?”

“நீங்கள் பேசுவது கற்பனை செய்யத் தான் நன்றாக இருக்கும் நடைமுறையாக்கி விட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.”

“அப்படியா? இந்தியாவில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடுமுறை நன்றாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதையும், மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களில் முறையாகச் செயல்படுத்தப்பட வில்லை என்பதையும் அறிவீர்கள் அல்லவா?”

“ஆம் அதற்காக நாங்கள் தமிழ் நாட்டு நண்பர்களைப் பல முறை கேலி செய்ததும் உண்டு:

“அப்படியா? மிக்க நன்றி. மற்ற மாநிலங்களை விட அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உள்ளதே? எப்படி? மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்களாக உள்ளனர். மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் பார்ப்பனர்களும் மற்ற உயர் சாதியினருமே மருத்துவர்களாக உள்ளனர். இன்று உலகம் எங்கிலும் இருந்தும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காகத் தமிழ் நாட்டிற்கு வருகின்றனர். உயர் சாதிக் கும்பலினரே மருத்துவர்களாக உள்ள வட மாநிலங்களை நோக்கி யாருமே போவது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது.

“———-“

“உயர் சாதியினரில் இருந்து மட்டுமே மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தேர்ந்து எடுப்பதால் அவர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களையும் தேர்ந்து எடுத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதும், இப்படிப்பட்ட திறமைக் குறைவானவர்கள் மருத்துவர்கள் ஆகிறார்கள் என்றும், அதனால் மருத்துவச் சிகிச்சையின் தரம் குறைகிறது என்றும் தெரிகிறது அல்லவா? ஆனால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுவதால், வட மாநிலங்களில் செய்வது போல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே உள்ள திறமைசாலிகளைப் புறம் தள்ளி விட முடிவது இல்லை. இதனால் தமிழ்நாட்டில் மருத்துவப் பணியின் திறன் மிகுந்த வட மாநிலங்களில் இருந்து மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காகத் தமிழ் நாட்டிற்கு மக்கள் வருகிறார்கள் என்று புரியவில்லையா? இந்தப் பட்டறிவு பொதுப்போட்டி மூலம் திறமைசாலிகளைத் தேர்ந்து எடுக்க முடிவது இல்லை என்றும், ஆகவே அது ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்றும் உணர்த்தவில்லையா?”

“நன்றாக இருக்கிறதே! அதற்காக நாங்கள் பொதுப்போட்டி முறையை ஒழிக்க உங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? இது உங்களுக்கே வேடிக்கையாகத் தோன்றவில்லையா?”

“நமக்கு நல்லது அல்லது கேட்டது எது வேண்டுமானாலும் நாம் உழைத்துத் தான் பெற வேண்டும் என்றும் தெரியும், பிறர் தந்து பெற முடியாது என்றும் தெரியும். நம் நலன்களுக்காக நாம் போராடுகிறோம். அதற்காக விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த முயல்கிறோம். மூன்று தலைமுறைக்கு முன் எங்கள் மக்கள் எழுதப் படிக்கவே தெரியாமல் இருந்தார்கள். ஆனால் இன்று நம்மில் பொறியாளர்கள், மருத்துவர்கள், நிர்வாக அதிகாரிகள் இன்னும் பல உயர் நிலைப் பணிகளில் இருக்கிறோம். அது மட்டும் அல்ல, பல முன்னேறிய வகுப்பு மக்களை விட நாங்கள் தான் திறமைசாலிகள் என்று பல இடங்களில் மெய்ப்பித்தும் இருக்கிறோம். இந்த உயர்வு எல்லாம் எங்கள் உழைப்பினால் கிடைத்ததே ஒழிய மற்றவர்கள் தந்து கிடைக்கவில்லை.”

கேள்வி கேட்டவர் மவுனமாக அமர்ந்து விட்டார். அப்பொழுது ஒரு இந்தியர் தன் கறுப்பின நண்பரின் காதில் ஏதோ கூற, அந்த நண்பர் எழுந்து “நீங்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறீர்களாமே? கிருத்துவ இஸ்லாம் மதங்களை எதிர்த்துப் பேச அச்சப்படுவீர்களாமே?” என்று கேட்டார்.

உடனே மாலா ”அது பொய், நாங்கள் அனைத்து மத மூட நம்பிக்கைகளையும் வெளிப்படையாகவே எதிர்க்கிறோம். எங்கள் மீது குறை சொல்லியே ஆக வேண்டும் என்று ஆசைப்படும் எங்கள் நாட்டு நண்பர்கள் இந்து மத எதிர்ப்பை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். சரி! அது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கு பெர்ட்ரண்ட் ரஸ்ஸலைத்(Bertrand Russel) தெரியுமா?”

“தெரியும்”

“அவர் ஏன் கிருத்துவ மதத்தை மட்டுமே எதிர்த்தார்? என்று உங்கள் இந்திய நண்பரைக் கேளுங்களேன்.”

“அவரை என்ன கேட்பது? எனக்கே தெரியும். அவர் வாழ்ந்த சமூகச் சூழலில் ஆதிக்கம் செலுத்தியது கிருத்துவ மதமே ஆகவே அவர் கிருத்துவ மதத்தை மட்டுமே எதிர்த்தார்.”

“உங்களுக்கு தஸ்லிமா நஸ்ரினைத் (Taslima Nasrin) தெரியுமா?”

“நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று புரிகிறது. அவர் ஏன் இஸ்லாம் மதத்தை மட்டுமே எதிர்த்தார் என்று தானே? அவர் இஸ்லாம் மதத்தினால் தான் பாதிக்கப்பட்டார். ஆகவே இஸ்லாம் மதத்தை மட்டும் எதிர்த்தார்.”

“அது போல நாங்கள் அதிகமாக – அதிகமாக என்பது சரியான சொல்லாக இருக்காது. கொடூரமாகப் – பாதிக்கப்படுவது இந்து மதத்தினால் தான். ஆகவே அதனை மற்ற மதங்களை விடக் கடுமையாக எதிர்க்க வேண்டிய உள்ளது.”

அந்தக் கறுப்பின நண்பர் சிரித்துக் கொண்டே அமர்ந்து விட்டார். அப்பொழுது ஒருவர் எழுந்து “ஈ.வே.ரா. பிள்ளையார் சிலையை உடைத்தார். அதை நீங்கள் வரவேற்கிறீர்கள். ஆனால் நாங்கள் ஈ.வே.ரா.சிலையையோ அம்பேத்கர் சிலையையோ உடைத்தால் மட்டும் ஏதோ மகா பாவம் செய்வது போல் கூக்குரல் இருக்கிறீர்களே ஏன்?” என்று கேட்டார்.

“பெரியார் தன் கைக்காசு செலவு செய்து பிள்ளையார் சிலையை வாங்குகிறார். பின் இந்தச் சிலையில் எந்த ஒரு அருளும் இல்லை, ஆற்றலும் இல்லை, வெங்காயமும் இல்லை, இதற்குள் மந்திர சக்தி இருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள். இது வெறும் கல் தான். இதை உடைப்பதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்படாது. இதோ பாருங்கள் உடைக்கிறேன் என்று கூறி விட்டு அனைவரும் அறிய அதை உடைக்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மற்றவர்கள் செய்து வைத்த சிலையை, ஏன் உடைக்கிறோம் என்ற காரணம் தெரியாமலேயே, யாருக்கும் தெரியாமல் உடைத்து விட்டுப் போகிறீர்கள். நீங்களும் உங்கள் கைக்காசு செலவு செய்து பெரியார் சிலையையோ அம்பேத்கர் சிலையையோ வாங்கி, அதை ஏன் உடைக்கிறோம் என்று காரணம் சொல்லி, அனைவரின் முன்னிலையிலும் உடையுங்களேன்.”

“அப்படிச் செய்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?”

“அதெப்படி சும்மா இருக்க முடியும்? ஏன் உடைக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லும் காரணம் சரியாக இல்லை என்றால், அது சரியில்லை என்று எடுத்துக் காட்டத்தான் செய்வோம்.”

“நான் அதைக் கேட்கவில்லை. அது உங்கள் மனதைப் புண்படுத்தாதா? சிலை உடைத்தது தவறு என்று சண்டைக்கு வர மாட்டீர்களா?”

“அது வெறும் கல் தான் என்று எங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் செலவு செய்து வாங்கிய சிலையை நீங்கள் உடைத்தால் அதற்கு நாங்கள் ஏன் சண்டைக்கு வரப் போகிறோம்?”

“அது வெறும் கல் என்று புரிந்தும், அவ்வப்போது அந்தக் கல்லுக்கு நீங்கள் ஏன் மாலை அணிவித்துப் பூசை செய்கிறீர்கள்? நாங்கள் கடவுளுக்கு மாலை அணிவித்துப் பூசை செய்தால் மட்டும் கேலி செய்கிறீர்கள். இது முரண்பாடாக இருக்கிறதே?”

“நாங்கள் பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்வது உண்மை தான். அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அல்ல.

அவர்கள் நமக்கு ஆற்றய பணிகளை நினைவு கொள்வதற்கும், அவர்கள் சொல்லி விட்டுச் சென்ற பாதையில் நடைபோடுவதற்கான மன உறுதியை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அந்தச் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதாலும், பூசை செய்வதாலும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு ஏதோ கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் திணித்தும் வளர்த்தும் மனித முயற்சிகளைச் சிதைக்கிறீர்கள். இது போல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு ஏதோ நடக்கும் என்ற நம்பிக்கைகளைத் திணிப்பதையும் வளர்ப்பதையும் தான் நாம் எதிர்க்கிறோம்.”

இவ்வாறு கலாவும் மாலாவும் விடை கூறிய பின் சிறிது நேரம் அமைதி நிலவியது. வேறு ஏதாவது வினாக்கள் உண்டா என்று கேட்டபோது அனைவரும் அமைதியாகவே இருந்தனர். அப்பொழுது ஒரு வெள்ளை இன அமெரிக்கர் எழுந்து, தான் கிருத்துவ மத நம்பிக்கை கொண்டவன் என்றும், ஆனால் இன ஒதுக்கலை ஏற்றுக் கொள்ளாதவன் என்றும் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் விடுதலை உணர்வையும், வன்முறை தவிர்த்த அறவழிப் போராட்ட முறையையும் ஆராதிப்பவன் என்றும் கூறினார். அன்று இரு இளம் பெண்களின் பேச்சைக் கேட்டு அம்பேத்கர் பற்றியும், பெரியார் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பு அளித்த அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து சில கரூப்பின அமெரிக்கர்களும் கலா மாலா இருவரையும் பாராட்டி, நன்றி கூறி அம்பேத்கரையும் பெரியாரையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார். பின் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து கலாவும் மாலாவும் இந்தியாவிற்குப் புறப்பட்டார்கள். அவர்களுடைய பயணம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புது தில்லிக்கும், அங்கிருந்து மதுரைக்கும் செல்லுமாறு திட்டமிடப்பட்டு இருந்தது. அவர்கள் புது தில்லிக்குப் போய்ச்சேர்ந்த பின் அங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானம் தான் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சங்கர பாண்டியின் நண்பர்கள் இவ்வளவு விவரங்களையும் கேட்டுவிட்டு, அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது விடுதியின் ஒலி பெருக்கியில் சங்கர பாண்டிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்து இருப்பதாக அறிவிப்பு வந்தது. மன வலி பொறுக்க முடியாத நிலையில் இருந்த சங்கர பாண்டி மெதுவாகச் சென்று தொலைப்பேசியைக் கையில் எடுத்தான். தொலைப்பேசியில் “சங்கர பாண்டி! நான் மாலா பேசுகிறேன்” என்ற குரலைக் கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்தான். அது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தாலும் அவனால் தொடர்ந்து பேச முடியாமல் தத்தளித்தான். வெகு விரைவில் தன் உணர்வு நிலைக்குத் திரும்பிய அவன் மேற்கொண்டு விவரத்தைக் கேட்டான். கலாவும் மாலாவும் புது டில்லி விமான நிலையத்திற்குச் சென்றபோது, ஒருவர் தன் தந்தை மதுரையில் இறந்து விட்டதாகச் செய்தி வந்து அவரும் அவருடைய மனைவியும் அவசரமாக மதுரை செல்ல விமான நிலையத்திற்கு வந்து இருந்தார்கள். ஆனால் விமானத்தில் இடம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட கலாவும் மாலாவும் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து அந்த இணையரின் பயணத்திற்கு வழி செய்து கொடுத்து இருக்கிறார்கள். அதனால் விமான விபத்தில் சிக்காமல் அவர்கள் தப்பித்து விட்டார்கள்.

மிக மிக ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி இருந்ததால் சங்கர பாண்டிக்கு இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்ட பிறகும், அந்த துயர மனநிலையில் இருந்து மீள ஓரிரு நிமிடங்கள் பிடித்தன. பின் முகத்தில் மகிழ்ச்சி பொங்க, தன் நண்பர்களைப் பார்த்து முழு விவரங்களையும் கூறினான். அவனுடைய நண்பர்களும் இனி கவலை இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார்கள்.

(இக்கதையில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உடைகளை உருவிச் சோதனை செய்த நிகழ்வு அதீத கற்பனையாகத் தோன்றலாம். ஆனால் 15.03.2012 அன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த உண்மையான நிகழ்வு தான் இக்கதையில் புனையப்பட்டு உள்ளது. ஐயம் கொள்பவர்கள் இணையத்தில் சரி பார்த்துக் கொள்வதற்காகவே அந்த அருவருப்பான செயலைச் செய்த ஆசிரியைகளின் பெயர்களே இக்கதையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.)


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விமான விபத்து (சிறுகதை) – பகுதி-2”

அதிகம் படித்தது