மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விமான விபத்து (சிறுகதை)

இராமியா

Aug 20, 2022

siragu vimaana vibaththu

1995 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒரு நாள் இலண்டன் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சித் திட்டத் துறையில் (Development Planning Unit) பொருளாதாரமும் அரசியல் கோட்பாட்டியலும் பட்ட மேற்படிப்பு (M.Sc in Economics and Political Science) வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த இருபத்தைந்து மாணவர்களும் வியப்பில் மூழ்கி இருந்தனர். கடந்த ஆறு மாதங்களில் எப்பொழுதுமே ஒரு வகுப்பு கூடத் தவறாமல் அரை மணி நேரம் முன்னதாகவே வந்து, முதல் வரிசையில் அமர்ந்து, மிக்க ஆர்வத்துடன் பாடம் கேட்கும் சங்கர பாண்டி அன்று வகுப்புக்கு வராதது உடன் படிக்கும் மாணவர்களை மட்டும் அல்லாமல், வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆசிரியர்கள் ஒருவர் விடாமல் “சங்கர பாண்டிக்கு என்ன ஆயிற்று?” என்று விசாரித்தனர். அன்றைய வகுப்புகள் முடிந்த பின் இராபர்ட் சுதா (Robert Chutha) என்ற கென்ய நாட்டு மாணவனும், அலிசன் திர்க்கல் (Allyson Thirkell) என்ற இங்கிலாந்து மாணவியும், ஜி பும் ஹாங் (Gi Bum Hong) என்ற தென் கொரிய மாணவனும், கன்சாலோ ரியாஸ் (Gonzolo Rios) என்ற பெரு நாட்டு மாணவனும் சங்கர பாண்டியை நேரில் பார்த்து விசாரிப்பது என்று முடிவு செய்தனர். சங்கர பாண்டி கல்லூரியில் இருந்து 300 மீட்டர் தொலைவிலேயே இருந்த இந்திய இளம் ஆடவர்கள் கிருத்துவர் சங்கம் (Indian YMCA = Indian Young Christian Association) நடத்திக் கொண்டு இருக்கும் விடுதியில் தங்கி இருந்தான். எட்டு நிமிடங்களில் நடந்து போய் விடலாம். நான்கு நண்பர்களும் அங்கு சென்று அவன் தங்கி இருக்கும் அறைக்கதவைத் தட்டினார்கள். சிறிது நேரத்தில் சங்கர பாண்டி கதவைத் திறந்தான். அவனைக் கண்டதும் நால்வருடைய முகங்களும் அதிர்ச்சியில் கருத்துப் போயின. அவனுடைய முகம் அழுது அழுது வீங்கியும் சிவந்தும் போய் இருந்தது. அவனுடைய நெருங்கிய உறவினர் யாராவது இறந்து போய் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். சங்கர பாண்டி முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்து அனைவரையும் வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த விடுதியில் தங்கி இருக்கும் ஆணோ பெண்ணோ தங்கள் எதிர்பாலின நண்பர்களைத் தங்கள் அறைக்குள் அழைத்துப் பேசக்கூடாது என்றும், வரவேற்பு அறையில் சந்தித்துத் தான் பேச வேண்டும் என்றும் ஒரு விதியை விடுதியின் பொதுச் செயலாளர் முத்தையா கண்டிப்புடன் செயல்படுத்திக் கொண்டு இருந்தார். இந்தியாவில் இருந்து தங்கள் பெண்களை நம்பிக்கையுடன் வெளி நாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கு இந்த விதி முதன்மையானது என்பது அவருடைய நிலைப்பாடு.

வரவேற்பு அறைக்கு வந்ததும் நண்பர்கள் பதற்றத்துடன் என்ன நடந்தது என்று விசாரித்தனர். தனக்கு நண்பர், தத்துவ வழிக்காட்டி, ஆசானாக விளங்கும் இரு பெண்கள் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினான். சிறிது நேர அழுகைக்குப் பின் கன்சாலோ ரியாஸ் சங்கர பாண்டிக்கு மிக அருகில் சென்று அவன் முதுகைத் தடவிக் கொண்டே “எந்த ஒரு துன்பம் என்றாலும் அதைத் தாங்கிக் கொண்டு தானே ஆக வேண்டும்? மனதைத் திடப்படுத்திக் கொள்” என்று அன்புடன் கூற, மற்ற நண்பர்களும் அதையே கூறினார்கள். சிறிது நேர அமைதிக்குப் பின் நால்வரும் “அந்த இரு பெண்கள் யார்? அவர்கள் எப்படி விமான விபத்தில் சிக்கினார்கள்?” என்று முழு விவரங்களைக் கூறுமாறு கேட்டார்கள். சங்கர பாண்டியும் கூறத் தொடங்கினான்.

நான் சிறு வயதில் ஒழுங்காகப் படிக்க மாட்டேன். மனம் போன போக்கில் திரிந்தும் விடலைப் பருவக் கோளாறினால் பெண்களைக் கேலி செய்து கொண்டும் இருந்தேன். நான் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தபோது கலா மாலா என்ற இரு பெண்கள் என் வகுப்பில் இருந்தனர். அவர்கள் இருவரும் மதுரை (கிழக்கு) தொடர் வண்டி நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். மிகவும் நன்றாகப் படிப்பார்கள். உலக நடப்புகளைப் புரிந்து கொள்வதிலும் அபாரமான திறமைசாலிகள். அது மட்டும் அல்ல, பள்ளி நேரம் போக மிகுதி நேரங்களில் தங்கள் உடன் படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். எங்கள் மொழியில் கழுதைக்குத் தெரியுமா கற்பூர மணம் என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் அவர்களுடைய பெருமை அறியாமல் நான் அவர்களைச் சீண்டி வந்தேன். அதே நேரத்தில் நான் சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக என் தந்தை கோபத்தில் என்னை மிகவும் பலமாக அடித்து விட்டார். அவர் ஒரு காவல் துறை அதிகாரி. அவர் அடியை என்னால் தாங்க முடியவில்லை. இச்செய்தி எங்கள் பள்ளியில் பரவி அனைவரும் என்னைக் கேலி செய்தார்கள். ஆனால் கலாவும் மாலாவும் ஆறுதல் கூறி எனக்குத் தனியாகப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அன்று முதல் என் குறும்புத்தனம் முடிவுக்கு வந்தது. நான் நன்றாகப் படிக்கத் தொடங்கினேன். எனக்கு ஒரு செய்தி நன்றாகப் புரிந்தது. அதாவது படிப்பதும் படிக்காமல் கெட்டுப் போவதும் அவரவர்கள் கைகளில் தான் இருக்கிறது, பிறர் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்று. படிக்காத நான் நன்றாகப் படித்து ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்கத் தொடங்கி விட்டேன். அந்த இரு பெண்களையும் நான் நண்பர்களாக, தத்துவ வழிகாட்டிகளாக, ஆசான்களாக மனதார ஏற்றுக் கொண்டு விட்டேன்.

எங்கள் இந்தியச் சமூகத்தில் ஒரு மிகப் பெரிய நோய் உண்டு. அதுதான் சாதி என்பது. பார்ப்பனர்கள் என்பவர்கள் மிக உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்வார்கள். எங்களைப் போன்ற சிலர் – சிலர் அல்ல பலர் சூத்திரர்கள் இடைநிலைச் சாதியினர் இருக்கிறார்கள். கலாவும் மாலாவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு எல்லாம் தொழில்கள் அது போலவே அமையும். அதாவது பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளைப் பெறுவார்கள். எங்களைப் போன்றோர் இடைநிலை வேலைகளைப் பெறுவோம். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்கு எதிராக நடந்த நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக இடைநிலைச் சாதியினரிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரிலும் சிலர் உயர் நிலை வேலைகளைப் பெற முடிந்து இருக்கிறது. இதைக் கண்டு பொறாத பார்ப்பனர்கள் அதற்கு எதிராகப் பலவிதமான சதிச் செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கலாவும் மாலாவும் பள்ளியிலேயே மிகவும் அறிவுத் திறன் கொண்ட மாணவிகள் என்று பெயர் எடுத்து இருப்பது பார்ப்பனர்களுக்கு எரிச்சலாக இருந்தது. அவ்விருவரும் மற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து நன்றாகப் படிக்க வைப்பது அவர்களுக்கு மேலும் எரிச்சலாக இருந்தது. பதின்மப் பருவத்தில் தோன்றும் ஆசைகளில் அவ்விருவரையும் மயக்கி, படிப்பில் கவனம் செலுத்த விடாமல் தடுக்க, அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடையவே, பார்ப்பனர்கள் எரிச்சலின் உச்சநிலையையே அடைந்து விட்டனர்.

எப்படியாவது அந்த இரு பெண்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார்கள் போலும். ஒவ்வொரு மாணவனுக்கும் பள்ளி இறுதித் தேர்வு வாழ்வின் முதன்மையான படிக்கல். அதில் பெறும் வெற்றி தோல்வி, அதில் பெறும் மதிப்பெண் தான் ஒருவனுடைய கல்விப் பயணத்தின் திசையை முடிவு செய்யும். அந்தத் தேர்வு வந்தது.

தேர்வு அறைக்குள் நுழையும் முன் ஒவ்வொரு மாணவ மாணவியையும் அவர்கள் தங்களுடன் ஏதாவது துண்டுச் சீட்டு வைத்துக் கொண்டு உள்ளார்களா என்று சோதித்துப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதில் பெண்களைச் சோதித்துப் பார்க்கும் பணிக்கு பிரீத்தி சர்மா (Preethi Sharma)ரேஷ்மா சேமையா (Reshma Semaiya) என்ற இரு பார்ப்பன ஆசிரியைகள் வேறு பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்டுப் பணி அமர்த்தப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் பரிசோதித்து இருக்கைகளில் அமர அனுமதித்தார்கள். கலா மலா இருவரை மட்டும் மிகக் கடுமையாகச் சோதித்தார்கள். அதாவது அவர்கள் இருவரையும் அனைவர் முன்னிலையில் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வைத்து அதன் பின் அனுமதித்தார்கள்.

இதைச் சங்கர பாண்டி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “இது என்ன அயோக்கியத்தனம்?” ஒரு பெண் அதுவும் ஆசிரியையாக இருப்பவர் இத்தகைய கீழ்த் தரமான குற்றங்களையும் இழைக்க முடியுமா?” என்று அலிசன் திர்க்கல் தன்னை மறந்து கத்தி விட்டாள். அவர்களில் சற்று முரடன் என்று பெயர் பெற்ற இராபர்ட் சுதாவின் கண்களில் நீர் வழிந்து கொண்டு இருந்தது. மற்ற இரு நண்பர்களும் கருத்து கூற முடியாத அளவில் அதிர்ச்சி அடைந்து இருந்தார்கள். சங்கர பாண்டி தொடர்ந்தான்.

நானும் சில நண்பர்களும் ஆட்சேபம் தெரிவித்தோம். ஆனால் எங்களைப் புறம் தள்ளி விட்டு அந்த ஆசிரியைகள் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்தனர். அவமானத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போன கலாவும் மாலாவும் தேர்வு எழுதாமலேயே வீட்டிற்குச் சென்று விட்டனர். தேர்வு முடிந்த உடன் நானும் சில நண்பர்களும் சென்று விட்டனர். தேர்வு முடிந்த உடன் நானும் சில நண்பர்களும் நேராக என் தந்தையைப் பார்த்து விவரத்தைக் கூறி அந்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டோம். முழு விவரத்தைக் கேட்ட அவர், அந்த ஆசிரியைகள் பார்ப்பனர்கள் என்று தெரிந்து கொண்ட உடன் நடவடிக்கை எடுக்கத் தயங்கினார். எங்களுக்குத் அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. அன்றிலிருந்து நான் தந்தை சொல் கேளாத முரடன் ஆகி விட்டேன். என் தந்தை என்னைப் பொறியியல் படிக்கச் சொன்னார். நான் பொருளாதாரம் படித்தேன். பட்டப் படிப்பு முடிந்த பின் பட்டமேற்படிப்பு படிக்கச் சொன்னார். நான் படிக்க மறுத்து விட்டேன்.

அவமானத்தில் குன்றிப் போன கலாவும் மாலாவும் சில காலம் கழித்து அதிர்ச்சியில் இருந்து மீண்டார்கள். இனி முழு நேரமும் மக்களுக்குத் தத்துவப் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு எடுத்து அதன்படியே அம்பேத்கர் பெரியார் தத்துவப் பள்ளி என்ற பெயரில் ஒரு பயிற்சிக் கூடத்தை நடத்தி வந்தார்கள். நான் பட்டப் படிப்பை முடித்த உடன் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டேன். என் தந்தை வேலைக்குப் போக வேண்டும் என்று சொன்னதையும் நான் கேட்கவில்லை. வேலைக்குப் போகா விட்டால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று என் தந்தை கேட்ட பொது இனி நான் பொதுச் சேவையில் காலம் கழிக்கப் போவதாகவும் திருமணம் செய்து கொள்ளும் உத்தேசம் இல்லை எனவும் சொல்லி விட்டேன். இவ்வாறு இருக்கும் நிலையில் தான் என் தந்தை இலண்டன் பல்கலைக் கழகத்தில் இந்தப் படிப்பு படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். கலா மாலாவை ஓராண்டு பார்க்காமல் இருந்தால் என்னுடைய பொது வாழ்வு ஈடுபாட்டில் பிடிமானம் தளரும் என்று அவர் நினைப்பதாக என் தாயார் மூலம் நான் அறிந்து கொண்டேன். நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இதைக் கேள்விப்பட்ட கலாவும் மாலாவும் நான் இலண்டன் பல்கலைக் கழகப் படிப்பை ஏற்பது நல்லது என்று அறிவுறுத்தினார்கள். தங்கள் பயிற்சிக் கூடத்தில் இலண்டன் பல்கலைக் கழகப் பட்டதாரி ஒருவர் இருந்தால் அது பயிற்சிக் கூடத்தின் மதிப்பை உயர்த்தும் என்றும், அதில் இணைந்து கற்கப் பலர் முன் வருவார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். உடனே ஒப்புக் கொண்டு இப்பொழுது இங்கு வந்து படித்துக் கொண்டு இருக்கிறேன் என்று தன் பேச்சை முடித்தான்.

நண்பர்கள் நடுவில் ஓர்இறுக்கமான அமைதி நிலவியது. அமைதியை உடைத்துக் கொண்டு “வாருங்கள் நாம் தேநீர் அருந்தலாம்” என்று கூறி, சங்கர பாண்டி தன் நண்பர்களை உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றான். தேநீர் அருந்திக் கொண்டு இருக்கும் போது கலாவும் மாலாவும் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதைப் பற்றி ஜி பும் ஹாங் விசாரித்தான். சங்கர பாண்டி அதைப் பற்றி விரிவாகக் கூறினான்.

-    தொடரும்


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விமான விபத்து (சிறுகதை)”

அதிகம் படித்தது