மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விளிம்புநிலை வாழ்விலும், எழுத்துலகில் தடம் பதிக்கும் கட்டுமான தொழிலாளி

சு.நாகராஜன்

Oct 22, 2016

siragu-kattida-thozhilaali

மாவீரன் வாளை விடவும், மைத்தூரிகை கூர்மையானது என்பார்கள். எழுத்து அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆயுதம். எழுத்துப் பணியையே இடைவிடாது செய்து கொண்டு சாதிப்பவர்கள் ஒருபுறம் இருக்க, தனது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் எழுதிக் குவிப்பவர்களும் உண்டு. அதிலும் விளிம்பு நிலையில் நகரும் வாழ்விலும் கூட எழுத்துக்கு நேரம் ஒதுக்கி சாதிப்பவர்களும் குமரி மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

அந்த  வகையில் கட்டுமானப் பணி செய்து விளிம்பு நிலையில் வாழும் குமரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு 2015ம் ஆண்டு வெளியான சிறந்த கவிதை நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில விருது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 12 தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில், 21 படைப்பாளிகளுக்கு வரும் நவம்பர் 12ம் தேதி புதுக்கோட்டையில் வைத்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பரிசுகள் வழங்குகின்றது. இதில் சிறந்த கவிதை நூலாசிரியராக தேர்வு பெற்றிருக்கும் ராஜன் ஆத்தியப்பன் விளிம்பு நிலையில் வாழும் சாதாரண கட்டுமானத் தொழில் செய்பவர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்க, அவைகளுக்கு மத்தியில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கட்டுமானப் பணியில் வழக்கம் போல்  ஈடுபட்டு வருகின்றார்.

siragu-poet

ஒவ்வொரு ஆண்டும்  தமிழக அளவில் வெளியாகும்  சிறந்த படைப்புளை தேர்வு  செய்து அவற்றுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது வழங்கி வருகின்றது. அந்த வகையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தோடு இணைந்து நடப்பாண்டில் நடத்திய இலக்கிய போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், வல்லன்குமாரன்விளையைச் சேர்ந்த கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் எழுதிய ‘கருவிகளின் ஞாயிறு’ என்னும் கவிதைத் தொகுப்பு மாநில அளவில் சிறந்த கவிதை நூலுக்கான பின்னையூர் சண்முகம் நினைவு விருதுக்குத் தேர்வாகியுள்ளது. 42 வயதான ராஜன் ஆத்தியப்பன் கட்டுமானத் தொழிலாளராக உள்ளார். இது இவரது இரண்டாவது நூல்.

சிறகு இணைய இதழுக்காக அவர் மேலும் கூறியதாவது, “எனக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், அருமனை. அப்பா பலசரக்குக் கடை வைத்திருந்தார். மூன்று அண்ணன், ஒரு தங்கை என்று வீட்டில் நாங்கள் மொத்தமாக ஐந்து பிள்ளைகள். மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்றிருந்தபொழுது, நான் 5ம் வகுப்பு படிக்கும்பொழுது அப்பா இறந்து விட்டார். தொடர்ந்து வறுமையான சூழலுக்கு வந்துவிட்டோம். அம்மாவின் சொந்த ஊர் நாகர்கோவில். அதனால் அவர்களுடைய சொந்தங்கள் இருந்த நாகர்கோவிலுக்கே வந்துவிட்டோம்.

என் சகோதரர் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி விரும்பிப் படிப்பார். அதை நானும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீட்டில் அப்போது தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத குறையை காமிக்ஸ் புத்தகங்களே தீர்த்து வைத்தது. குடும்பச் சூழலின் காரணமாக 12ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. பொதுவெளியில் பாடத் திட்டத்தை தான், தொடர முடியவில்லையே தவிர வாசிப்பின் மீதான என் ஆர்வம் குறையவில்லை. நூலகங்களுக்குச் சென்று சிறுகதை, நாவல்களை வாசிக்கத் துவங்கினேன். கவிதை தொகுப்புகளையும் விடுவதில்லை.

தொடர்ந்து கட்டுமானப் பணிக்கு பலகை, கம்பி அடிக்கும் கட்டிட வேலைக்குச் சென்றேன். முறையாக தொழில் படித்து இப்போது அதில் கொத்தனாராக உள்ளேன். காலை 9 மணிக்கு வேலைக்குச் சென்றால், மாலை 6 மணி வரை வேலை இருக்கும். உடல் வலிக்காமலும், சட்டையில் அழுக்கு படியாமலும் வீடு திரும்பும் வேலை நமக்கு கைகூடவில்லை. பல நேரங்களில் மேல் சட்டையே இல்லாமல் தான் பணி செய்கின்றோம். மாலையில் உடல் வலிக்கும்பொழுதுதான் வேலை முடிவு நேரத்தை நினைவூட்டுகின்றது. அதன் பின்பு கிடைக்கும் நேரமெல்லாம் நான் எழுதிக் கொண்டிருப்பவனும் அல்ல. பல காலங்களில் வருடக் கணக்கில் எழுதாமலும் இருந்திருக்கின்றேன்.

அப்போதெல்லாம் என்னை  ஊக்கப்படுத்தி, எழுத உந்தித்தள்ளியது எழுத்தாளர் லெட்சுமி மணிவண்ணன் உள்ளிட்ட எனது நட்பு வட்டம் தான். அதன் பட்டியல் மிகப்பெரியது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் “கடைசியில் வருபவன்” என்ற முதல் கவிதைத் தொகுப்பு என்னை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது. தொடர்ந்து வந்த “கருவிகளின் ஞாயிறு” கவிதைத் தொகுப்பு விருது வாங்கி தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. எனது இந்த முயற்சிகளுக்கு என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரும் மிகுந்த ஒத்துழைப்புத் தருகின்றனர்.” என்றார் அவர்.

இவர்களும் இப்படித் தான்!

siragu-ilakkiyam3

கன்னியாகுமரி  மாவட்டம் கோதை கிராமத்தைச்  சேர்ந்தவர் கோதை சிவக்கண்ணன். வீடுகளுக்கு சுமை ஆட்டோவில் சமையல் எரிவாயுவை கொண்டு சென்று விநியோகம் செய்பவராக எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணி செய்கின்றார். உலகம்மா என்னும் புனைப் பெயரில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசின் நூலகங்களிலும் இருக்கின்றது. விளிம்பு நிலையில் வாழும் இவரும் தன் உடல் உழைப்புக்கு மத்தியிலே இதை செய்து கொண்டிருக்கின்றார்.

இதே போல் சிறுகதைகள் எழுதிக் குவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண கோபால் முழு நேர மின்னியல் வல்லுநர் (Electrician). நாகர்கோவில் அலெக்ஸ் சந்திரா பிரஸ் ரோட்டில் பழைய புத்தகக் கடை வைத்திருக்கும் சுரேஷ் என்பவர் “தமிழ்வானம்” என்னும் இலக்கிய அமைப்பை நடத்தி வருவதோடு, கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

குமரி  மாவட்டம் ஏராளமான படைப்பாளிகளை தன்னகத்தே கொண்டபகுதி. தமிழ் எழுத்துலகில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சுந்தரராமசாமியை தந்த மண் இது. பொன்னீலன், நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், நீல பத்மநாபன் என இங்கே சாகித்ய அகாடமி விருது பெற்றோரும் அதிகம். அந்த வகையில் சாதனை படைக்கும் எழுத்துக்களை இந்த விளிம்பு நிலை தொழில் செய்வோரும் படைக்கட்டும்!….

This can make it difficult www.celltrackingapps.com for parents to pinpoint the exact areas of concern or potential dangers

சு.நாகராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விளிம்புநிலை வாழ்விலும், எழுத்துலகில் தடம் பதிக்கும் கட்டுமான தொழிலாளி”

அதிகம் படித்தது