மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயப் பாடல்கள்

பி. பிரதீபா

Nov 20, 2021

 siragu ulavu2

தமிழகம் விவாசயத் தொழில் சார்ந்த வேளாண்குடி மக்களை உள்ளடக்கிய மாநிலம் ஆகும். இம்மாநிலத்தில் கடைக்கோடியில் விளங்கினாலும் இராமநாதபுர மாவட்டமும் விவாசயத் தொழில் செய்யும் மாவட்டமாக விளங்குகின்றது. வானம் பார்த்த நிலையில், கண்மாய் நீர்ப்பாசனத்தில் விவாசயம் இப்பகுதிகளில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக திருவாடானைப் பகுதி இராமநாதபுர மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று குறிப்பிடும் அளவிற்கு நெல் விளைச்சல் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதிக்கு அருகில் உள்ள பாண்டுகுடி வட்டாரமும் நெல் விளையும் பல விளைநிலங்களைப் பெற்றுள்ளது. எனவே உழவுத் தொழில் நடைபெறும் காலங்களில் இப்பகுதிகளில் விளைச்சலுக்கான முயற்சிகளும், நாட்டுப்புற இலக்கியத்தை வளர்க்கும் நாட்டுப்புறப் பாடல் பாடும் முயற்சிகளும் இன்னமும் குறைவின்றி நடந்துவருகின்றன.

விவசாயப்பாடல்கள் நாட்டுப்புற மக்களால் விவசாய வேலைகள் செய்யும்போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் விளைச்சல் பெருகுவதற்காகவும் பாடப்படுகின்றன. விவசாயப் பாடல்களானது விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றிச் செல்லும் வரை பாடப்படும் தன்மை உடையனவாகும்.

விவசாயப்பாடல்களின் வகைகள்

விவசாயத்தின் ஒவ்வொரு பணியின்போதும் விவசாயப் பாடல்கள் பாடப்படுகின்றன. அவ்வகையில் அவை பல வகைப்படுகின்றன.

  • ஏற்றப்பாட்டு

  • ஏர்பாட்டு

  • நடவுப்பாட்டு

  • களையெடுப்புப்பாட்டு

  • கதிர்அறுப்புப்பாட்டு

  • நெல் தூற்றுவோர் பாட்டு

  • வண்டிக்காரன் பாட்டு

என பல வகைகளாக இப்பாடல்களை வகைப்படுத்தலாம்.

இவற்றுள் நடவுப்பாட்டு நாற்று நடுகின்றபோது நாட்டுப்புறப் பெண்களால் காலம் காலமாக பாடப்பட்டு வருகிறது. களையெடுப்பு பாடலானது நாற்று நட்ட பின்பு அதன் இடையிடையே தேவையில்லாமல் வளரக்கூடிய புல், பூண்டுகளை களையெடுக்கும் போது பாடப்படுகிறது. கதிர் அறுப்புப் பாடலானது பயிரானது வளர்ந்து முற்றி கதிராகும் பொழுது அதனைக் கதிர் அறுவாள் கொண்டு அறுவடை செய்வர். அவ்வாறு அவ்வேலையைச் செய்யும்பொழுது பாடப்படும் பாடல்களையே கதிர் அறுப்புப்பாடல்கள் என்பர். அறுவடை செய்த நெற்க்கதிர்களை கல்லில் அடித்து எடுக்கும் நெல்களை முறத்தில் இட்டு காற்றில் தூற்றுவர். அவ்வாறு தூற்றும் பொழுது நல்ல நெல்மணிகள் கிடைக்கும். அப்பொழுது பாடப்படும் பாடல்களையே நெல்தூற்றுவோர் பாடல் என்பர். வண்டிக்காரன் பாடல் என்பது வயலில் அறுவடை செய்த, நெல்மூட்டைகளை வீட்டிற்குக் கொண்டு செல்லும் பொழுது வண்டியில் வரும் பெண்களைப் பார்த்து வண்டிக்காரன் பாடும் வண்டிக்காரன் பாட்டு என்றழைக்கப்படுகின்றது. இவ்வாறு விவசாயத்தின் அனைத்து நிலைகளிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. ஏற்றப்பாட்டு என்பது ஏற்றம் இறைக்கும்போதும், ஏர்ப் பாட்டு என்பது ஏர் உழும்போதும் பாடப்படும் பாடல்கள் ஆகும்.

நாற்று நடும்பொழுது நாற்றுநடும் பெண்களில், ஒரு பெண்பாட மற்றவர்கள் சேர்ந்து குழுவாகப் பாடுவதாகவோ, ஒரு பெண் மட்டுமே தனியாகப் பாடுவதாகவோ, அல்லது எல்லாப் பெண்களும் சேர்ந்து பாடுவதாகவோ இப்பாடல்கள் அமைந்துள்ளன. நடவு செய்பவர்கள் உழைப்பின் களைப்பைப் போக்கிக் கொள்ளவும், மன மகிழ்ச்சிக்காகவும் இப்பாடல்கள் பாடப்பெறுகின்றன. இப்பாடல்கள் பல்வகைப் பாடுபொருள்களைக் கொண்டுள்ளன. நடவு வேலைகளைச் செய்பவர்கள் பெண்களே என்பதால் அவர்கள் பாடும் பாடல்களில் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்கின்றனர். நடவு பற்றி மட்டுமல்லாமல் ஏற்றம், ஏர் ஓட்டுதல், நீர் பாய்ச்சுதல், நிலத்தின் தன்மை, இயற்கை அழகு, மழை, வெயில் போன்ற வேளாண்மை சார்ந்த பிற நிகழ்வுகளையும், காதல், வீரம், வறுமை, பக்தி வழிபாடு, இல்லற வாழ்வு, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, சரியான கூலி கிடைக்காமை, மக்கள் பெருமை, அத்தை மகனைக் கிண்டல் செய்தல் போன்ற சுவையான நிகழ்ச்சிகளையும் பாடுபொருளாக்குகின்றனர்.

பாண்டுகுடி வட்டாரத்தில் விவசாயம் சார்ந்த பல பாடல்கள் களச் சேகரிப்பின்போது கிடைத்தன. அவற்றின் பொருள்நலம், இலக்கிய வளம் ஆகியனவற்றைப் பின்வரும் பகுதி ஆராய்கின்றது.

இப்பாடல்களைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு மரபு சார் நெல் விதைகள் பல பாண்டுகுடியில் பயிரிடப்பெற்று வருகின்றன என்ற தகவல் ஆய்வாளருக்குக் கிடைத்தது. அவ்வகையில்

  • வரப்புகொடஞ்சான்

  • சித்திரகாரு

  • சம்பா நெல்லு

  • சடச்சம்பா

  • வடயத்திகாரு

  • மணல்வாரி

  • சீரகச்சம்பா

போன்ற பல்வகை நெல்களை விதைத்து பாண்டுகுடி மக்கள் அறுவடை செய்துள்ளனர். இதில் வரப்புகொடஞ்சான் என்னும் நெல் சிகப்பு நிறமாகவும், நீண்ட வடிவுடனும் உள்ளது.. சித்திரக்காரு, சம்பா நெல் ஆகிய இரண்டும் உருண்டை வடிவில் இருக்கின்றன. வடயத்திகாரு என்னும் நெல் பெரியதாக உள்ளது. மணல்வாரி என்னும் நெல் கருப்பு நிறத்துடன் இருந்துள்ளது. இதனைக் கருப்பரிசி என்றும் கூறுகின்றனர். சீரகச்சம்மா என்னும் நெல், சீரகம் போன்று சிறிய வடிவுடைய நெல்லாக காணப்படுகிறது. இவ்வாறு பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டு வருகின்றனர் பாண்டுகுடி வட்டார மக்கள்.

விவசாயப் பாடல்(ஒன்று) நெல் விதைக்கும் போது பாடப்படும் பாடல்

தகுந்த நெல்லை விதை நெல்லாக எடுத்து அடிகோலும் நிகழ்ச்சி விதைப்பு எனப்படுகிறது. வெள்ளி நெல், பொன்னான நெல் அடிகோலப் பெறுகிறது. இதற்குத் தங்க அரளி, வெள்ளி அரளிப் பூக்கள் எடுத்துக் கடவுளர்கள் வணங்கப்படுகிறார்கள். கூந்தல் பனையால் மாரிக்குக் கோயில்கட்டி நெல் விதைக்கப்படுகிறது போன்ற செய்திகள் இதனுள் அமைந்துள்ளன.

விவசாயப் பாடல் இரண்டு (நடவுப் பாடல்-ஒன்று)

பாண்டுகுடி செல்வம் பொழிய அனைத்துக் கடவுளர்களையும் வேண்டும் நிலையில் இந்நடவுப் பாடல் பாடப்படுகிறது. அய்யனார் அருளால் மேகங்கள் திரள்கின்றன. அவை யானைகள் போல காட்சியளிக்கின்றன. யானைக்குட்டிகள் போல தாழ்வான மடை காட்சிதருகிறது. மேகங்கள் வந்து இறங்க சூரியர், காளி போன்ற தெய்வங்கள் உதவிட வேண்டும் என்ற பொருளுடையதாக ஆய்வுக்களத்தில் கிடைத்த முதலாம் எண் பாடல் அமைகின்றது.

விவசாயப் பாடல் -மூன்று (நடவுப் பாடல் – இரண்டு)

ஆய்வுக்களத்தில் கிடைத்த இரண்டாம் எண்ணுடைய நடவுப் பாடல் ஓர் ஆணும், பெண்ணும் பாடும் காதல் பாடலாக விளங்குகின்றது. பெண்ணானவள் நாற்று எடுத்து வைக்கிறாள். அவற்றை நார்முடியாகக் கட்டுகிறாள். நாவினைக் கொண்டு அவளைப் பாடச் சொன்னால் அவள் நாணம் கொண்டு பாடல் பாடமாட்டேன் என்கிறாள். மேலும் பாட மாட்டேன் என்று பல சொல்லிக் காதலனை ஏசுகிறாள். நாட்டுப்புறப்பெண் பாடாமல் நிற்பதற்குக் காரணம் அவளின் நாணம் என்று இப்பாடலின் கருத்து அமைகிறது.

விவசாயப் பாடல் நான்கு (நடவுப் பாடல்- மூன்று)

விவசாயம் நல்ல மழை இல்லா நிலையில் விளைச்சலை தராத நிலையில் அந்த வருத்தத்தை உள்வாங்கி ஆய்வுக்களத்தில் கிடைத்தமூன்றாம் எண்ணுடைய பாடல் பாடப்பெற்றுள்ளது. அழகு சம்பா நெல் நாற்றுகளை ஆற்றோரமாக நட்டுவைத்துக் காத்திருந்தால் மழை பொழியவில்லை.இதன் காரணமாக விவசாயப் பயிர்கள் காய்ந்து போயின. இந்த சோகத்தைப் பதிய வைப்பதாக நான்காம் பாடல் அமைகிறது.

விவசாயப் பாடல் ஐந்து (நடவுப் பாடல் – நான்கு)

நடவுப் பாடலாக ஆய்வாளருக்குக் கிடைத்த முதற்பாடலின் சாயல் அப்படியே இதனுள் அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்களிடம் ஒரே பாடல் பல வடிவங்களில் கிடைக்கும் என்ற அடிப்படையில் கிடைத்த பாடல் இதுவாகின்றது. இப்பாடலில் மேகங்கள் யானைகள் போல அமைந்துள்ளன. அவை இறங்கி வந்து மழை பொழியவேண்டும் என்று வரம் வேண்டப்பெறுகிறது.

விவசாயப் பாடல் ஆறு (கதிர் அறுப்புப் பாடல் – ஒன்று)

நெற்கதிர்கள் வளர்ந்து நிற்கும் நிலையில் அவற்றை அறுக்கும்போது பாடப்பெறும் பாடல்கள் கதிர் அறுப்புப் பாடல்கள் எனப்படுகின்றன. பாண்டுகுடி வட்டாரப் பகுதியில் கதிர் அறுப்புப் பாடல் கிடைத்தது. இதனை நான்காவதாக வரிசைப்படுத்திப் பின்னினைப்பில் இணைத்துள்ளார் ஆய்வாளர். அப்பாடல் கருக்கு அரிவாளின்சிறப்புகளைச் சொல்கிறது. அது உருக்கு அரிவாள் என்றும், கொல்லன் அதாவது கம்மாளர் அடித்த அரிவாள் என்றும் இப்பாடல் குறிப்பிடுகிறது. மேலும் அவ்வரிவாள் விடலைப் பருவம் எய்திய காளையின் கையில் சுழலும் அரிவாள் என்றும் பெருமைபட எடுத்துரைக்கப்பெறுகிறது.

விவசாயப் பாடல் – ஏழு (கதிர் அறுக்கும்போது பாடப்படும் பாடல்- இரண்டு)

நெல் நன்றாக விளைந்துள்ளது. குறிப்பாக சின்னச் சருகணி என்ற ஊருக்கு அருகில் உள்ள நிலம் சிறப்பாக விளைந்திருக்கிறது. இதனைச் சரியான நேரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து அறுக்கின்றனர். இதனைஅன்னக்கிளி இரண்டு அறுப்பதாக இப்பாடல் காட்டுகின்றது. அறுவடைக்கு மாரியம்மன் துணை செய்யவேண்டும் என்றும் காட்டுகிறது இப்பாடல்

விவசாயப் பாடல் எட்டு. (கதிர் அறுக்கும்போது பாடப்படும்பாடல்- மூன்று)

ஆற்றோரம் உள்ள வயல்பகுதியில் அழகு சம்பா நெல்லை விதைத்து, அதன்பின் நாற்று நட்டு, அந்நாற்று துளிர்விட்டுத் தழைக்கின்றது. நெல் பூக்க ஆரம்பித்தது. அதன்பின் தைமாதம் பிறக்க அந்நேரம் நெல் அறுவடைக்குத் தயாராகியது. அதனை அறுத்து விளைச்சலும் வீடு வந்து சேர்ந்தது என்று இப்பாடல் விளைச்சலை முன் வைத்துப் பாடப்பெற்றுள்ளது.

விவசாயப் பாடல் ஒன்பது. (நெல் அவிக்கும்போது பாடும் பாடல்- ஒன்று)

பாண்டுகுடி வட்டாரத்தில் நெல் அவிக்கும் நிலையில் பாடப்படும் பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது. இரு பெண்களுக்கு இடையில் அவர்களின் கணவர்களுக்கு இடையில் நடக்கும் போட்டிப்பாடலாக இது அமைகிறது. ஒருவனின் மனைவி நெல்லை அவித்து அரிசி ஆக்கும் நிலையில் அடிமடியில் கொஞ்சம் அரிசியை மறைத்துக் கட்டுகிறாள். இதனை மற்றொருவனின் மனைவி கேட்க, மறைத்தவள் ஏதே ஏதோ பேசுகிறார்கள். இதுபோன்று உளுந்துப் பயிரையும் மறைத்துக் கொண்டுபோகும் நிலையில் அதனையும் மற்றொருவன் மனைவி கண்டறிந்து கேட்பதாக இப்பாடலில் கருத்து இடம்பெற்றுள்ளது.

விவாசயப் பாடல் பத்து (வண்டிக்காரன் பாட்டு- ஒன்று)

நெல் முற்றிய நிலையில் அவற்றை வண்டிகளில் கட்டி விவசாயப் பெருமக்கள் வீடுகளுக்குக் கொண்டுசெல்கின்றனர். அவ்வாறு அவர்கள் கொண்டுசெல்லும் நிலையில் வைக்கோல் கட்டும் பெரிதாக ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆய்வுக்களத்தில் கிடைத்த வண்டிக்காரன் பாட்டில் தனுஷ்கோடி என்ற இடத்தில் நடந்த புகைவண்டி அழிவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் தனுஷ்கோடியையும் அழித்தது. தனுஷ்கோடிக்குச் சென்ற புகைவண்டி ஒன்றையும் பயணிகளுடன் அழித்தது. அச்சோகச் செய்தியை

அப்டி இன்னியேறம் ஏலேலோ ஏலோ போனவண்டி

அய்யா போன வண்டி

அங்கே எதிலபோயி ஏலேலோ ஏலோ தங்குதய்யா

அப்டி தங்குறது ஏலேலோ ஏலோ தனுசுக்கொடி

அய்யா தனுசுக்கொடி

என்று பதிவுசெய்கிறது இந்நாட்டுப்புறப்பாடல்.

இவ்வாறு பொருள் நலம் சிறப்பனவாக விவசாயப் பாடல்கள் அமைகின்றன. இவற்றின் இலக்கிய நலம் பற்றிய செய்திகள் இனி தொடருகின்றன.

விவசாயப் பாடல்கள் பாடப்படும் பொழுது கிராம மக்கள் குலவை இட்டே தொடங்குகிறார்கள். குலவை ஓசை என்பது மங்கலம் பெருகும் ஓசை என்பதாக மக்களால் நம்பப்படுகிற்து. அவ்வகையில் குலவை ஒலி எழுப்பியே விவசாயப் பாடல்கள் பாடப்படுகின்றன.

விவசாயப் பாடல் -ஒன்று (நெல் விதைக்கும்போது பாடப்படும் பாடல்-ஒன்று)

தன்ன னன்னே ஏலோலே ஏலோ னானே னன்னே

அப்டி னானே னன்னே

என்ற இசைக் கூறு உடையதாக ஆய்வுக் களத்தில் கிடைத்த முதற்பாடல் அமைகின்றது. ஏலே ஏலோ என்ற ஓசைக்குறிப்புகளும் இப்பாடலில் ஆங்காங்கே காணப்படுகிறது. அப்டி, அவ, போன்ற சொற்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இப்பாடலில் தங்க அரளி –வெள்ளி அரளி, செண்டு மாலை, கொளுந்து மாலை போன்ற இணைகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. இவை அடுக்கி வரும் முறையில் பாடலுக்கு அழகைத் தருகின்றன.

விவசாயப் பாடல்:இரண்டு (நாற்றுநடும் பாடல் -ஒன்று)

ஆய்வுக் களத்தில் கிடைத்த இரண்டாம் பாடல் நாற்றுநடும் பாடல் ஆகும். இப்பாடலில் தனிப்பட்ட ஓசைக்குறிப்பு இல்லை என்றாலும் குலவை ஒலியே ஓசை நிலையாகக் கொள்ளப்படுகிறது.

உவமை நலம்

ஆனைகள பாத்தா மேகங்க போலே

ஆனக்குட்டிகள பாத்தா தாலமடை போல

என்ற உவமைகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. யானைகள் மேகங்களைப் போல இருந்தன. யானைக்குட்டிகள் தாழ்ந்திருக்கும் மடையைப் போல உள்ளனவாம். இவ்வாறு இலக்கியத்தரமான உவமைகள் நாட்டுப்புற மக்களிடம் காணப்படுகின்றன.

துத்திப் பூ, ஆவாரம்பூ போல சூரிய பகவான்உள்ளான் என்று இன்னமும் உவமை காட்டுகின்றது இந்நாட்டுப்புறப்பாடல். துத்திப்பூ என்பதும் ஆவாரம்பூ என்பதும் பிரகாசமான மஞ்சள் நிறம் கொண்டவை. அவைபோன்ற ஒளியுடன் விளங்குபவர் சூரியன் என்று நாட்டுப்புற உவமைநலம் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

சொல்நலம்

சூரியன் நரல் எனப்படும் செத்தை படைத்தவர்.அவரே மயாவராய் பொருள் படைப்பவர் என்று சொல்நயம் கொண்டு இப்பாடல் அமைகின்றது.

இவ்வாறு இப்பாடல் சொல் நலம் உவமை நலம் கொண்டுஅமைகின்றது.

விவசாயப் பாடல்- மூன்று (நாற்று நடும் பாடல் – இரண்டு)

ஆய்வுக் களத்தில் கிடைத்த மூன்றாம் பாடல்

தன்னே னானே னானை னானே

தன்னை னானே னானை னானே

தன்னை னானே னானை னானே

தன்னே னானே னானே

தன்னே னானே னானே

னானே னானே தன்னனானே

என்ற இசைக்குறிப்பினை உடையதாக விளங்குகிறது. இப்பாடலில் மோனைத் தொடைநலம் சிறக்கிறது

நாத்தெடுத்து வைக்கிறேனே

நார்முடிய கட்டுறேனே

நாவிழுத்து பாடும்போது

நாணம் தடுக்குதய்யா

என்று இப்பாடலில் நாத்து, நார், நா, நாணம் என்று மோனைத் தொடைநலம் சிறக்கின்றது.

விவசாயப் பாடல்- நான்கு (நாற்று நடப்படும் பாடல் மூன்று)

விவசாயப்பாடலாக அமையும் நான்காம் பாடலில் சோகச் சுவை நிரம்பிக்காணப்படுகிறது. சோகம் தழுவிய இசைக்குறிப்பும் இதனுள் உள்ளது. இப்பாடலில் வருசம் புல்லா என்று ஆங்கிலச் சொல் “புல்” என்பது பயன்படுத்தப்பெற்றுள்ளது. நெல் வயல்கள் விளைந்திருக்க மழை பொய்த்துப்போகின்றது. இந்நிலையில் கருகமணியைக் கூட அடகு வைத்துவ விவசாயம் பார்த்தும் பயனில்லை. அதனைச் சொல்லி அழ ஆளுமில்லை என்று சோகச்சுவை கலந்து இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

விவசாயப் பாடல்- ஐந்து (நாற்று நடும் பாடல் நான்கு)

இந்திரரை நோக்கி எடுத்த வெளமுடிய

வெளமுடிய சோம்பாம

மழையாய் பொழிய வேண்டும்

உலூ லூ லூ லூ லூ !!!!

என்று இந்தப் பாடலில் குலவை ஒலி ஓசைநலமாகக் கொள்ளப் பெற்றுள்ளது. மேலும் இந்திரனை வணங்கும் நிலை இப்பாடல் வழி அறியவருகிறது. இப்பாடலில் இடம் பெறும் வெள முடி என்பது விலை முடி என்பதன் மரூஉ ஆகும். நாற்றுமுடிகள் விலைக்கும் வாங்கப்படும் நிலை கிராமத்தில் உண்டு என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

விவசாயப் பாடல்- ஆறு (கதிர்அறுக்கும்போது பாடப்படும் பாடல்- ஒன்று)

“ஏலேலோ ஏலோ” என்ற இசைக்குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளது. கருக்கருவா, உருக்கருவா என்று இப்பாடலில் எதுகை நலம் சிறக்கிறது. வெள்ளி நெல்லோ, வெடலைப் பையன் என்று மோனை நலமும் சிறக்கிறது.

விவசாயப் பாடல்- ஏழு (கதிர் அறுக்கும்போது பாடப்படும் பாடல் -இரண்டு)

தன்னீனம் னானினம் தன்னானே தான

தன்னீனம் னானினம் தன்னானே

தன்னீனம் னானினம் தன்னானே தான

தன்னீனம் னானனினம் தன்னானே

என்று இனிமையான ஓசைக்குறிப்பு உடையதாக இப்பாடல் அமைகின்றது. மேலும் சின்னச்சருகனி- சீரகச் சம்பா, அன்னக்கிளி- அழைச்சு போன்ற மேனை நலமும் சிறப்பதாக இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

விவசாயப் பாடல்.எட்டு (கதிர் அறுக்கும்போது பாடப்படும் பாடல் – மூன்று)

ஆய்வுக் களத்தில் கிடைத்த கதிர் அறுக்கும்போது பாடப்படும் மூன்றாம் பாடலில்

தங்கம தில்லாலே தில்லாலே தங்கம தில்லாலே

தங்கம தில்லாலே தில்லாலே தங்கம தில்லாலே

என்ற இசைக்குறிப்பு இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. மேலும் தில்லாலே என்ற சொல் அடிதோறும் பயின்று இசையையும், இயைபையும் தருகிறது.

விவசாயப் பாடல்-ஒன்பது (நெல் அவிக்கும்போது பாடப்படும்பாடல் – ஒன்று)

விவசாயப் பாடல் ஒன்பதில்

தன்னே னானே னானை னானே

தன்னை னானே னானை னானே

தன்னை னானே னானை னானே

தன்னே னானனே னானை

தன்னே னானே னானே

னானே னானே தன்னனானே!

என்ற ஓசை நலம் அமைந்துள்ளது.

அரிசி நெல்ல அவிக்கிறாளே

அடி மடியில கட்டுறாளே

என்னனுதான் கேட்கப்போனா

எந்தன் பொண்டாட்டி

உளுந்து நெல்ல வறுக்குறாளே

உள் மடியில் கட்டுறாளே

என்னனுதான் கேட்கப்போன

எந்தன் பொண்டாட்டி

என்ற பாடலடிகளில் அரிசி- அடி, என்ன-எந்தன், உளுந்து-உள், என்ன-எந்தன் ஆகிய மோனை நலக் கூறுகள் அமைந்துள்ளன.

விவசாயப் பாடல் பத்து (வண்டிக்காரன் பாட்டு 1)

வண்டிக்காரன் பாட்டாக விளங்கும் விவசாயப் பாடலில் சோகச்சுவை இழையோடுகிறது. இப்பாடலில் ஏலேலோ, ஏலேலோ என்ற ஓசைக்குறிப்பு பயன்படுத்தப்பெற்றுள்ளது.

அய்யா போன வண்டி

அங்கே எதிலபோயி ஏலேலோ ஏலோ தங்குதய்யா

அப்டி தங்குறது ஏலேலோ ஏலோ தனுசுக்கொடி

அய்யா தனுசுக்கொடி

என்று தனுக்கோடி அழிவை அழுகை ஓசையில் பதிவு செய்கிறது இப்பாடல்.

இவ்வாறு பொருள்நலமும், உவமை நலமும், தொடை நலமும், மெய்ப்பாட்டு நலமும் சிறந்து விளங்குவதாக விவசாயப் பாடல்கள் அமைகின்றன.

தொகுப்புரை

பாண்டுகுடி விவசாயம் சார்ந்த ஊராகும். இவ்வூரில் விவசாயம் சார்ந்த பல நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்பெற்று வருகின்றன. நிலம் நன்கு விளையவேண்டும் என்பது கருதியும் ஊர் நன்மை பெற வேண்டும் என்பது கருதியும் விவசாயப் பாடல்கள் பல பாடப்பெற்று வருகின்றன.

விதை நெல் இடும்போதும், நாற்று நடும்போதும், அறுவடையின்போதும், அறுவடை செய்தவற்றை வண்டிகளில் கொண்டு செல்லும்போதும், நெல் அவிக்கும்போதும் நாட்டுப்புறப்பாடல்களைப் பாண்டுகுடி மக்கள் பாடி வருகின்றனர்.

நெல் அவிக்கும்போது நெல்லைப் பதுக்கி எடுத்துச் செல்லும் நடைமுறையைக் கிண்டல் செய்தும், வண்டிக்காரன் பாட்டில் தனுஷ்கோடி இழப்பினைப் பற்றியும் நாட்டுப்புற மக்கள் பதிவுசெய்துள்ளனர்.

விவசாயப்பாடல்கள் வளமான உவமைகள் பல பயன்படுத்தப்பெற்றுள்ளன. தொடை நலம், பொருள் நலம், ஓசைநயம் சிறந்தனவாக விவசாயப் பாடல்கள் அமைந்துள்ளன.

சான்றாதாரங்கள்

1. தகவலாளி சின்னக்கண்ணு என்பவர் தந்த தகவல்

முடிவுகள்

பாண்டுகுடி கிராம மக்களின் நாட்டுப் புறப்பாடல்கள் என்ற தலைப்பிலான இவ்வாய்வின் வழியாகக் கண்டறியப்பெற்ற முடிவுகள் பின்வருமாறு.

இராமநாதபுர மாவட்டம்,திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள பாண்டுகுடி என்ற கிராமம் வயல்களும், கோயில்களும், குளங்களும் நிறைந்த பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழும் மக்கள் சமுதாய நல்லிணகத்துடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

பாண்டுகுடி ஐந்து முக்கிய தெருக்களை உடையதாகும். இவ்வைந்து தெருக்களிலும் ஐந்து இந்துக் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களைச் சார்ந்த பல குடியினர் இவ்வ10ரில் வாழ்ந்து வருகின்றனர்.

மஞ்சப் பத்து செட்டியார் இனமக்கள் இங்கு வணிகம் செய்து வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் இவ்வூரில் தம் இனம் சார்ந்த மக்களுக்கான கோயில்கள், திருமண மண்டபம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி வாழ்ந்துவருகின்றனர். தங்க வணிகமும் சிறப்புடன் இவ்வூரில் நடந்து வருகிறது.

இவர்கள் தவிர நாட்டார் எனப்படும் பல்வேறு குடிசார்ந்த பெருமக்களும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வேளாண் குடி சார்ந்த மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

வேளாண் குடி சார்ந்த மக்களிடம் நாட்டுப்புற இலக்கியங்கள் பல வழங்கி வருகின்றன. தாலாட்டுப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், விவசாயப் பாடல்கள் பலவும் இப்பகுதியில் வழங்கி வருகின்றன.

நாட்டுப்புற மக்களை அணுகி அவர்களிடத்தில் பாடச்சொல்லிக் கேட்கும்போது பல நாட்டுப்புற இலக்கிய வளங்கள் இருப்பதை உணரமுடிகின்றது.

தாலாட்டுப்பாடல்கள், கும்மிப்பாடல்கள், விவசாயப் பாடல்கள் ஆகிய வகைகளில் பத்து, பத்துப் பாடல்கள் ஆய்வாளருக்குக் கிடைத்தன. இன்னமும் பல பாடல்கள் கிடைக்கின்றன. அவை ஆய்வு எல்லை, காலம் கருதி சேகரிக்கப்படா நிலையில் உள்ளன.

பாண்டுகுடி சார்ந்த நாட்டுப்புறப் பாடல்களில் வைகை ஆறு, மதுரை, இராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருவாடானை,பாண்டுகுடி, சமயபுரம், திருவெற்றியூர் போன்ற வட்டாரம் சார்ந்த ஊர்ப்பெயர்கள் இடம் பெறுகின்றன. இதன் காரணமாக பாண்டுகுடி மக்களின் சொந்த மண் சார்ந்த பாடல்கள் அம்மண்ணில் வழங்கி வருவதை உணரமுடிகின்றது.

பெரும்பாலும் நாற்பது வயது கடந்தவர்களே பாண்டுகுடிப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்களாக உள்ளனர். இளைய தலைமுறையினரிடத்தில் இந்நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை ஆய்வாளர் களச் சேகரிப்பின்போது உணர்ந்தார்.

பாண்டுகுடிப் பகுதியில் கிடைத்த நாட்டுப்புறப் பாடல்கள் பொருள்நலமும், இசைவளமும், அணிநலமும்,தொடை அலங்காரமும் பெற்றனவாக உள்ளன.

தாலாட்டுப்பாடல்கள் ஆராரோ ஆரிராரோ என்ற இசைக்குறிப்பு உடையனவாக விளங்குகின்றன. தாய்மாமன், தந்தை பெருமைகளைக் குழந்தைகளிடம் சொல்லும் நிலையில் தாலாட்டுப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மூன்று முறை அடுக்கிப் பாடும்முறைமை தாலாட்டுப்பாடல்களில் காணப்படுகிறது. தாலாட்டுப் பாடல்களில் பத்தாம் பாடல் ஒரு பெண் தன் தாயை இழந்த நிலையில், சின்னம்மாவாக வந்தவரின் குழந்தையைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறாள். இப்பாடலில் பல முரண் தொடைகள் அமைந்துள்ளன. இம்முரண் தொடை வாழ்வில் ஏற்பட்டுள்ள முரணை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கும்மிப் பாடல்கள் மிக நீண்டனவாக பாண்டுகுடிப் பகுதியில் கிடைக்கின்றன. கரகப்பாடல், முளைப்பாரிப்பாடல், மதுக்குடப்பாடல் என்ற மூன்று வகைகளில் பெண்கள் பாடும் கும்மிப்பாடல்கள் இப்பகுதியில் கிடைக்கின்றன. கும்மிப்பாடல்களில் பத்து முறை அடுக்கிப் பாடும் நிலை காணப்படுகிறது. சில பாடல்கள் மதுக்குடத்தையும், முளைப்பாரியையும் இரண்டையும் முன்வைத்துப் பாடப்பெற்றுள்ளன. முளைப்பாரியை முன்வைத்துப் பாடப்பெற்றுள்ள பாடலில் முளைப்பாரி வளரும் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் பாடப்பெற்றிருப்பது சிறப்பானதாகும்.

விவசாயம் சார்ந்த குடிகள் அதிகம் வாழும் ஊர் பாண்டுகுடியாகும். இந்த ஊரைச் சுற்றி நெல்வயல்கள் காணப்படுகின்றன. மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்துள்ளன. இதனால் விவசாயத் தொழில் இங்கு சிறப்புடன் நடைபெற்றுவருகிறது. விவசாயம் சார்ந்த பாடல்களாக விதைப்புப் பாடல், நாற்று நடும் பாடல், அறுவடைப்பாடல், நெல் அவிக்கும் பாடல், வண்டிக்காரன் பாடல் போன்ற பாடல்கள் ஆய்வாளருக்கும் களஆய்வின்போது கிடைத்தன.

நெல் அவிக்கும் பாடலில் நெல்லைப் பதுக்கும் பெண்ணை இடித்துரைக்கும் நிலை காணப்படுகிறது. வண்டிக்காரன் பாடலில் வண்டி வந்து சேரவில்லை என்ற சோகம் காணப்படுகிறது. இச்சோகம் தனுஷ்கோடி என்னும் இடத்தில் புகைவண்டி புயலில் சிக்கிய நிலையை உள்வாங்கிப் பாடப்பெற்றுள்ளது.

இவ்வகையில் பாண்டுகுடி மக்கள் நாட்டுப்புற இலக்கியச் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடத்தில் இன்னமும் பல நாட்டுப்புறச் செல்வங்கள் அமைந்துள்ளன. அவற்றை எதிர்காலத்தில் ஆய்வாளர் தொகுத்து ஆவணமாக்க முயலவேண்டும்.


பி. பிரதீபா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயப் பாடல்கள்”

அதிகம் படித்தது