மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாய நிலங்களை விற்கமாட்டேன்.. விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டேன்..

சா.சின்னதுரை

Aug 29, 2015

நெல் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார் தமிழக பெண் விவசாயி அமலாராணி. அவருடன் ஒரு நேர்காணல்:

vivasaayam2உங்களைப்பற்றி
அமலராணி: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தான் எனது சொந்த ஊர். நான் ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி. எனது கணவர் திருமலை கணேசன், சொந்தமாக மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 15 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன்.

வசதியுள்ள குடும்பம். பிறகு ஏன் விவசாயம்?  
அமலாராணி: நான் இப்போதுதான் வசதி வாய்ப்புடன் இருக்கிறேன். அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் விட்டுச்சென்ற விவசாய நிலங்களை விற்கவும் மனமில்லை. தரிசாகவும் போட மனமில்லை.  அதுவும் போக எனக்கு விவசாயத்தில் அதிக ஆர்வமுண்டு. அதனாலேதான் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன். வசதி வாய்ப்புள்ளவர்கள் விவசாயம் செய்யக்கூடாதா என்ன?

vivasaayam1குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றது பற்றி?

அமலாராணி: கரும்பு, வாழை, தென்னை ஆகியவை பயிரிட்டிருந்தாலும், நெல் அதிகளவில் ஆண்டுதோறும் பயிரிடுவேன்.  மூன்றாண்டுகளுக்கு முன்பு, ‘திருந்திய நெல் சாகுபடி’ என்ற நவீன தொழில்நுட்ப முறை அறிமுகமாகியது. இம்முறையில் நெல் பயிரிட்டால், வழக்கமான முறையில் கிடைக்கும் மகசூலைக் காட்டிலும், அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் கூறினர். அதன்படி இரண்டாண்டுகளாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட்டேன். ஹெக்டேருக்கு 6100 கிலோதான் சராசரி மகசூல். ஆனால் எனக்கு ஹெக்டேருக்கு 18 ஆயிரத்து 143 கிலோ நெல் மகசூல் கிடைத்தது. உணவு உற்பத்தியில் இத்தகைய சாதனை நிகழ்த்தியதற்காக மத்திய அரசு, குடியரசுத்தலைவர் விருதுக்கு பரிந்துரை செய்தது. இதன்படி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கிருசிகர்மான் விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் பாராட்டும் சான்று வழங்கி கவுரவித்தார். இதை என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம் பற்றி?
அமலாராணி: நாட்டில் 2001 ஆம் ஆண்டில் திருந்திய நெல் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், வழக்கமான சாகுபடி முறையை விட செலவு குறைவு. வழக்கமான நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு நாற்று 8 சென்ட் நிலத்தில் பயிரிட வேண்டும். விதை நெல்லும் 40 கிலோ தேவைப்படும். ஆனால், திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்று 1 சென்ட் நிலத்தில் அமைத்தால் போதுமானது. இதில், 1 ஏக்கருக்கு 3 கிலோ விதை நெல் போதுமானது. திருந்திய நெல் சாகுபடி முறையில் 25% கூடுதல் மகசூல், ஏக்கருக்கு 750 கிலோ கூடுதல் எடை, நீர்ச்சிக்கனம், குறைந்த விதைச்செலவு, இடுபொருட்கள் பயன்பாடு குறைவு, நோய் மற்றும் பூச்சித்தாக்கம் குறைவு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. திருந்திய நெல் சாகுபடி முறையை முழுமையாக பின்பற்றினால் அதிக மகசூல் அள்ளி, நல்ல இலாபம் பெறலாம். ஒரு ஹெக்டேருக்கு  ரூ. 3000 மானியமும் வழங்கப்படுகிறது.

விளைநிலங்கள் விலைநிலங்களாக மாறிவருவதைப் பற்றி?
அமலாராணி: கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தற்பொழுது விளைநிலங்களாக இல்லை. பொன் விளையும் பூமியாக இருந்த தமிழக விவசாய நிலங்கள் இன்று நிலை மாறி தொழிற் கூடங்களாகவும், மனைகளாகவும் மாறி  வரும்  அபாய  சூழ்நிலையில், விவசாயிகளும்  தங்களது  வாரிசுகளை  மாற்றுத் துறைகளில்  ஈடுபடுத்தி விட்ட நிலையில் வேளாண் உற்பத்தி என்பது அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது எங்கேபோய் முடிவடையப் போகிறது என்பது தெரியவில்லை.

vivasaayam3தற்போதைய வேளாண் நிலைமை பற்றி ?
அமலாராணி: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று வள்ளுவரும், ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று மகாகவி பாரதியும் பாடிய நாட்டில் உழவுத் தொழில் என்பது அழிந்து வருவது வேதனையிலும் வேதனை. போதாக்குறைக்கு விவசாயம் என்பது லாபகரமில்லாத, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தொழிலாகிவிட்டது. அவ்வப்போது விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்குக் காப்பீடு என்று சில சலுகைகள் தரப்படுவதன்றி பெரிய அளவில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏதாவது செய்கிறதா என்றால் பதில் இல்லை என்பது தான். மாதிரிப் பண்ணைகள், இலவச மின்சாரம், மாற்று விதைகள், பல செயல்முறைப்பயிற்சிகள் என்று இருந்தாலும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு அடிப்படைப் பிரச்சனை, விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது தான். இதற்கு மாற்று வழி புதிய கருவிகளைப் பயன்படுத்தி வேளாண்மையை நவீனப்படுத்த வேண்டும். அதுவும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எதிர்கால லட்சியம்?
அமலாராணி: எந்த சூழ்நிலை வந்தாலும் எனது விவசாய நிலங்களை விற்கமாட்டேன். எவ்வளவு உயர்வு வந்தாலும் விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டேன்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாய நிலங்களை விற்கமாட்டேன்.. விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டேன்..”

அதிகம் படித்தது