மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேலை

முனைவர். ந. அரவிந்த்

Dec 17, 2022

siragu velai1

நாம் வேலை செய்யும் இடம் வீட்டிலிருந்து அருகாமையில் இருந்தால் நடந்து அல்லது மிதி வண்டியில் செல்வோம். இது அவமானமல்ல. ஆரோக்கியம். இதனால் நம்முடைய உடலிற்குத் தேவையான உடற்பயிற்சி தானாகவே கிடைக்கிறது. மிதி வண்டி ஓட்டுதல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.

கி. பி. 2000 முதல் 2010 வரை கணினியில் வேலை என்பது தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தது. ஆனால் இன்று இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சிறிய மளிகை கடையில் கூட விலைப்பட்டியல் போடுவதற்கு கணினியை பயன்படுத்துகிறோம். உங்கள் முழு வேலை நேரமும் கணினியின் முன்பு உட்கார்ந்து வேலை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் உடலை பேணிகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

முதுகு தண்டு, கழுத்து, கைகள் மற்றும் கண்களுக்கு தேவையான பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மடிக்கணினியை பயன்படுத்துவோர் கணினி சுட்டியை (mouse pad) பயன்படுத்துங்கள். மடிக்கணினியில் உள்ள விரல் தொடு பகுதியை (touch pad) தொடர்ந்து பயன்படுத்தினால் கை விரல்களில் உள்ள நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

கணினியில் வேலை செய்வோர் சுமார் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடங்கள். அடிக்கடி குளிர்ந்த நீரினால் கண்களை கழுவுங்கள்.  என்னுடன் நியூசிலாந்து நாட்டில் இருந்து ஒருவர் வேலை பார்த்தார். அவர் அந்த நாட்டில் வேலை செய்பவர்களைப்பற்றி கூறினார். அதன்படி, ஒவ்வொரு அலுவலகத்திலும் கைகள் மற்றும் தோள்பட்டைகளை பிடித்துவிடும் சிகிச்சையாளர் (physiotherapist) ஒருவர் இருப்பார். அவர் வேலை செய்யும் நேரத்தில் கணினி முன் வேலை செய்பவர்களுக்கு கைகள் மற்றும் தோள்பட்டைகளை பிடித்துவிடுவார் என்று கூறினார். இது எல்லா நாட்டினருக்கும் சாத்தியம் இலலை. நம் ஆரோக்கியத்தை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் வரும்போது உடனே கழிக்க செல்ல வேண்டும். மலம் மற்றும் சிறுநீரை அடக்கக் கூடாது.

விவசாயம் செய்பவர்களுக்கு தனியாக உடற்பயிற்சி தேவையில்லை. செய்யும் வேலையிலேயே விவசாயிகளுக்கு தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும். உடலில் உள்ள வியர்வை தானாகவே வெளியேறும். கெட்ட கொழுப்புகள் உடலில் தங்காது. வெயிலில் வேலை செய்வதால் உடலிற்கு தேவையான உயிர்ச்சத்து (Vitamin D) தானாகவே கிடைத்துவிடும்.

அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் கூடுமானவரை குளிர் சாதன பெட்டிகளை பயன்படுத்தாதீர்கள். கதவு மற்றும் சன்னல்களை திறந்து வையுங்கள். இயற்கை காற்றினை சுவாசியுங்கள்.

எல்லாவற்றிலும் முக்கியமாக, உங்கள் மனதிற்கு பிடித்த வேலையை செய்யுங்கள். இன்று நிறைய பேர் வெளி நாடு மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் இள வயதில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி விவசாயம் செய்கின்றனர். இதனால் உடல் மற்றும் உள்ளத்திற்கு ஆரோக்கியம், மன நிறைவு அத்தனையும் கிடைக்கும். இம்முறை வரவேற்கத்தக்கது. இவர்கள் புத்திசாலிகள்.

நிறைய சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் நிறைய மன அழுத்தம் உள்ளது. அதனைவிட சற்று குறைவாக சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் அழுத்தம் குறைவாக உள்ளது என்றால் இரண்டாவது உள்ள வேலையை தேர்ந்தெடுங்கள்.  எக்காரணம் கொண்டும் வேலையை வீட்டிற்கு கொண்டு செல்லாதீர்கள். மனைவி அல்லது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான பொன்னான நேரத்தை அலுவலக வேலைக்காக செலவு செய்யாதிருங்கள்.

புதிய வேலைக்கு செல்பவர்கள் என்றால் அலுவலகத்தின் அருகே வீட்டினை தேர்ந்தெடுங்கள். நம் வீடு அலுவலகத்திற்கு அருகில் அல்லது குழந்தைகளின் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அல்லது இரண்டிற்கும் நடுவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் அது தேவையில்லாத அழுத்தத்தினைத் தரும். இரயில் போக்குவரத்து இருந்தால் அதனை பயன்படுத்துங்கள்.

ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறுவதற்கு முன்னர் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். உங்களுக்காக திரு. பிரவீன் அவர்களுடைய கட்டுரையை கீழே தந்துள்ளேன்.

தங்களுக்கு பிடித்த வேலையை விட்டு மாறுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள். பிடிக்காத வேலையை மட்டும்தான் எல்லோரும் விடுவார்கள். வேலை பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம்? வேலை மாறுவதை தவிர்க்க முடியுமா? கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டுமா? என்று பலமுறை யோசியுங்கள். தற்போது பார்க்கும் வேலையில் உங்களுக்கு வெறுப்பு ஏன் என பட்டியலிடுங்கள்.

அதற்கு உங்கள் முதலாளி அல்லது உயரதிகாரியின் அதீத கட்டுப்பாடு காரணமாக இருக்கலாம். சக்திக்கு அதிகமான உழைப்பை நீங்கள் தரவேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம். அதற்காக எல்லா நேரங்களிலும் உங்களுக்கு நெருக்கடி தந்து கொண்டே இருப்பார்கள். மோசமாக உங்களை நடத்துவார்கள். தன்னுடைய சுய நலனிற்காக பல வேலைகளை உங்கள் மீது சுமத்தலாம். பெண்களாக இருந்தால் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுகள் இருக்கலாம். அதனால் வேலையை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி ஏதேனும் பாலியல் தொல்லைகள் இருந்தால் சமரசம் செய்ய வேண்டாம். எதிர்த்து நில்லுங்கள். தன்னுடன் வேலை செய்பவர்களிடம் நன்கு பழகாமல் இடைவெளி ஏற்பட்டு, தனிமையாக உணர்ந்தால் வேலை செய்யுமிடம் வெறுப்புக்குரிய இடமாகிவிடும்.

உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்தமான துறையாக இருக்கலாம். ஆனால், வேலை செய்யும் நிறுவனத்தில் உங்களது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான பொறுப்புகளை உங்களுக்குத் தராவிட்டால் வேலை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். மனித வாழ்க்கையில் பணம் ஒரு இன்றியமையாதத் தேவை. மற்ற சூழல்கள் சரியாக இருந்தாலும், சம்பளத்தில் பிரச்னை இருந்தால், வேலையை யாரும் நேசிக்க மாட்டார்கள். அதேபோல், வேலைக்கு ஏற்ற குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் பிடித்த வேலை கூட பிடிக்காமல் போய்விடலாம்.

இவ்வளவு பிரச்சனைகளையும் எப்படி எதிர்கொள்வது? என சிந்தியுங்கள். வேலையை வெறுப்பதற்கான காரணங்களை மாற்றுவதற்கான வழிகள் இருக்கிறதா? என்பதை முதலில் அலச வேண்டும். வேலையை வெறுப்பதற்கான காரணங்களாக நீங்கள் நினைத்தவை சரியானதுதானா? என்று திரும்பவும் பரிசீலனை செய்ய வேண்டும்.

பணிச்சூழல் குறித்த உங்கள் எதிர்மறை எண்ணங்களை பொதுவில் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், பணிச் சூழல், நிறுவனம் பற்றிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது, மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

பணி தொடர்பான நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். பணி நெருக்கடி மோசமாக இருந்தாலும் சக ஊழியர்களிடம் இணக்கம், குறிப்பிட்ட பணியில் நீடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை சிந்தித்துப் பாருங்கள். அவற்றையெல்லாம் மீறி, வேலையை விட வேண்டுமா? என்று யோசியுங்கள்.

எங்கே போனாலும் இதே மாதிரியான பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அல்லது வேறு மாதிரியான புதிய பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரலாம். எனவே, பழைய வேலையை விடுவதற்கு முன்பு பல தடவை யோசியுங்கள். (நன்றி: திரு. பிரவீன்).

அனைத்தையும் பலமுறை யோசித்து ஆராய்ந்த பின்னர் நல்ல முடிவினை எடுங்கள். புதிய வேலை கிடைத்த பிறகுதான் பழைய வேலையை விட வேண்டும். புதிய வேலைக்கு சென்ற பின்னர், அங்கேயே இருந்திருக்கலாமோ? என்ற சிந்தனை வரக்கூடாது. வெளி நாட்டில் வேலை கிடைத்தால், பணி நியமன உத்தரவு (job appointment order/ contract agreement), நுழைவுச்சான்று (visa) மற்றும் விமான பயணச்சீட்டு அத்தனையும் கையில் கிடைத்த பிறகு இருக்கும் வேலையை விட்டு விலகுங்கள். அவசரம் வேண்டாம்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேலை”

அதிகம் படித்தது