மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேளாண்விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டவடிவம் ஏன் தேவை?

பேராசிரியர் பு.அன்பழகன்

Jan 23, 2021

Siragu Farmers struggle2

வேளாண் விவசாயிகளின் டில்லியை முற்றுகையிடும் போராட்டம் கடும் குளிர் மற்றும் மழையிலும் தொய்வின்றி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது. அரசு இதுவரை பத்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பலதரப்பு மக்களின் ஆதரவுடன் பெரும் போராட்டமாக தற்போது இது உருவெடுத்திருக்கிறது. 1980களில் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் டில்லி போட்கிளப் மைதானத்தில் நடத்திய போராட்டம் அன்றைய அரசின் அடக்கு முறையினால் தோல்வியினைத் தழுவியது. தற்போது முதன் முறையாக இந்தியா முழுவதும் உள்ள 500 விவசாய சங்கங்களும், பலதரப்பட்ட விவசாயிகளும்ஒன்று திரண்டு டெல்லி சலோ எனற போராட்டம் கடந்த 24 செப்டம்பர் 2020 முதல் நடைபெற்று வருகிறது.  இப்போராட்டம் விவசாயிகளுக்கு வாழ்வா? சாவா? போராட்டம். இது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா என பரந்த அளவில் விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டமுமாகும். இப்போராட்டம் வேளாண்பயிர்செய்யும் விவசாயிகளுக்கானது மட்டுமல்ல, வேளாண் கூலித் தொழிலாளர்கள், வேளாண்பொருட்களை சந்தைப்படுத்துபவர்கள், வேளாண்சார் தொழிற்சாலைகள், வோளண்பொருட்களை நுகர்கின்றவர்கள், வேளாண்பொருட்களை மதிப்புகூட்டு பொருளாக மாற்றுபவர்கள், வேளாண்பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் என அனைவருக்குமானது. வேளாண் விவசாயிகளின் மிகமுக்கியமான கோரிக்கைகள் மூன்றுதான் 1. முறைப்படுத்தப்படாத தனியார் மண்டிகளை அரசு மண்டிகளுடன் போட்டியிட அனுமதிக்காதீர்கள் 2. குறைந்தபட்ச ஆதாரவிலையினை சட்டப் பூர்வமாக்குதல் 3. பெருநிறுவனங்கள் (கார்பரேட்ஸ்) வேளாண்பொருட்களை வாங்கவோ வியாபாரம் செய்யவோ  அனுமதிக்கக் கூடாது.

இந்திய சுதந்திரம் அடைந்தபோது வேளாண்மை சரிபாதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இநதியப் பிரிவினையின் விளைவால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த மக்களால் அதிக அளவு இந்திய மக்கள் தொகை அதிகரித்தது, பருவகால மழையின்மையினால் பொய்த்துப்போன வேளாண் தொழில், நல்ல வளமான கோதுமை, நெல் உற்பத்தி செய்யக்கூடிய நிலங்கள் பாகிஸ்தான் பகுதிகளுக்கு சென்றது போன்ற காரணங்களால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் வேளாண்மைக்கான முன்னுரிமையை துவக்ககாலங்களில் வழங்கியது. பின்பு தொழில் துறைக்கான முக்கியத்துவம் அதிக அளவில் இடம் பெறத் துவங்கியது, இதனைத் தொடர்ந்து 1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தால் சேவைத்துறை பெருமளவு இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. இன்று வேளாண்மைத் துறை அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வேளாண் துறை தற்போது 44 விழுக்காடு வேலைவாய்பினை அளிக்கக்கூடியதாக இருந்தாலும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு 14 விழுக்காடு மட்டுமே அதன் பங்களிப்பினை தருகிறது. பெருமளவு விவசாயிகள் வேளாண்மை செய்வது லாபகரமானது இல்லை என்று கருதி வெளியேறி வேளாண்சாரா தொழில்களை நோக்கி பயணிக்கின்றனர்.  வேளாண்மையில் ஈடுபடுவர்களை இன்று பொருளாதாரரீதியாக தாழ்ந்த நிலையில் உள்ளவர்களாகக் கருதுகின்ற நிலை உள்ளது. இன்றைய இளைய சமுதாயமும் வேளாண்மையில் ஈடுபட முன்வருவதில்லை காரணம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இத்துறை பின்தங்கிய ஒன்றாக சமூகத்தில் இனம் காணப்படுகிறது. திட்டமிடுதலிலும் வேளாண் துறைக்கான முக்கியத்துவம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் வேளாண்மை ஆராய்ச்சி, நீர்ப்பாசன வளார்ச்சி, சந்தைப்படுத்துதல் போன்ற தளங்களில் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றமும் எட்டவில்லை.  இந்தியா வேளாண்மை நாடு என்பதை நாம் அறிவோம். ஆனால் அதற்கான திட்டங்கள் கடந்த காலங்களில் பெருமளவில் புறந்தள்ளப்பட்டு வருகின்றன.  குறிப்பாக பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபின் வேளாண்மைக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. பெருநிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து மேலோங்கி இருப்பதால் வேளாண்சாரா தொழில்களுக்கு முன்னுரிமை காணப்படுகிறது.  இதே போக்கில்தான் அண்மையில் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையினை வணிக நோக்கத்துடன் கொண்டுசெல்ல துடிக்கிறது. இதில் குறிப்பாக குறைந்தபட்ச ஆதாரவிலையினையும் அரசுசார் மண்டிகளையும் (ஏபிஎம்சி) எதிர்காலத்தில் ஒழித்துக்கட்டுவதால் கொள்ளை லாபத்தை பெறமுடியும் என்று கருதுகிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது ஒரு உத்தேசமான விலையாகும், அரசினால் விவசாயிகளுக்கு ஆதாயம் தரும் வகையில் இவ்விலை நிர்ணயிக்கப்படும், இதனை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான செலவு மற்றும் விலைக்கான வேளாண்மைக் குழு அறிவிக்கிறது. இவ்விலை சட்டப்பூர்வமானது அல்ல. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் நீட்சியாக வேளாண் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 1966-67ஆம் ஆண்டு முதலில் கோதுமைக்காக அறிவிக்கப்பட்டது. தற்போது 23 வேளாண்பொருட்களுக்கான (7 தானியங்கள், 5 பருப்பு வகைகள், 7 எண்ணெய் வித்துக்கள், 4 வாணிப பயிர்கள்) குறைந்தபட்ச ஆதாரவிலையினை அறிவிக்கிறது. ஆனால் அதிக அளவில் நெல் மற்றும் கோதுமை பொருட்கள் மட்டுமே இதனால் பயன் பெறுகின்றன. ஆண்டுக்கு சம்பா (ஏப்ரல் முதல் அக்டோபர்) குறுவை (நவம்பர் முதல் மே) காலங்களில் இவ்விலைகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில்  (2010 முதல் 2021) குறைந்தபட்ச நெல்லுக்கான ஆதாரவிலையின் வளர்ச்சி வீதம் 2.9 விழுக்காடும் கோதுமைக்கானது 2.6 விழுக்காடும் மட்டுமே அதிகரித்துள்ளன.  கோதுமை, நெல் 65 விழுக்காடு அளவிற்கு இப்பொருட்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஏபிஎம்சி என்கிற மண்டிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. எஞ்சியவை தனியார் வியாபரிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு இருந்தும் நெல்லைப் பொருத்த அளவில் இவ்விவசாயிகள் 26.5 விழுக்காடும்  கோதுமையைப் பொருத்தவரையில் 39.5 விழுக்காடும் குறைந்தபட்ச ஆதாரவிலையினை இவ் விவசாயிகள் பெறகின்றனர். இதன் பொருள் பெரு விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலையினால் அதிக பயனடைகின்றனர் என்பதாகும்.

Siragu Farmers struggle3

வேளாண் அறிவியளார் திரு.எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரையினை ஏற்று வேளாண் பொருட்களின் செலவுடன் கூடுதலாக 50 விழுக்காடு விலையினை நிர்ணயம் செய்து வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையினை அரசு அண்மைக்காலமாக அறிவித்து வருகிறது. செலவு மற்றும் விலை தொடர்பான வேளாண் குழுவானது விவசாயிகளால் செலவிடப்படும் அனைத்துவகையான உள்ளீடுகளான விதை, உரம், பூச்சிக்கொள்ளி, தொழிலாளர்கள் கூலி, எரிபொருள், நீர்ப்பாசனம் போன்றவைகளுக்காக ரொக்கமாக செலவிடுதலுடன் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொந்த உடலுழைப்பினையும் செலவுவகையில் (A2+FL) கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்கப்படுகிறது. ஆனால் நிலம் மற்றும் நிலையான மூலதனத்திற்கான வாடகை வட்டியினை (C2) கணக்கிடுவது இல்லை. எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதாரவிலையானது 50 விழுக்காடு குறைவாகவே உள்ளது என சுட்டுகின்றன சில ஆய்வுக்கட்டுரைகள்.  அதாவது சொந்த உடலுழைப்பிற்கான செலவுகளை கணக்கில் கொண்டுள்ளது என்றாலும், நிலம் மற்றும் மூலதனத்திற்கான வாடகை, வட்டி போன்றவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.சாமிநாதன் குழுவானது A2 மற்றும்  C2 வையும் கணக்கில் கொண்டுதான் குறைந்தபட்ச ஆதாரவிலையினை நிர்ணயிக்க பரிந்துரைத்துள்ளது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலையில் A2+FLமட்டுமே உள்ளது. குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது விவசாயிகளின் நலனை பாதுகாப்பதும் அவர்களின் வருமானத்தை முறைப்படுத்துவதும் ஆகும். இவ்விலையில் 50-60 விழுக்காடு தொழிலாளர்களின் பங்கு இருக்கிறது.  வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையினால் இதுவரை குறைவான விவசாயிகளே இந்திய அளவில் பயன்பெற்றுள்ளனர் (பெருமளவில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்). அதுவும் குறிப்பிட்ட சில விளைபொருட்களான நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சோளம், சோயா போன்றவைகள் மட்டுமே இவற்றினால் பயன் அடைந்துள்ளன. பல வேளாண் உற்பத்தி பொருட்கள் இதன் கீழ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் உள்ளது.  இதற்கு தேவையான சட்டங்களை தாங்களாகவே இயற்றிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஏபிஎம்சி என்கிற அரசுசார் மண்டிகளை ஏற்றுக்கொள்ளாத கேரளா மாநிலம் தங்களின் விவசாய பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதுபோல் பஞ்சாப் மாநிலத்தில் இச்சந்தைகளை முறைப்படுத்தும் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் அரசு  மண்டிகள் முறையினை ஏற்கவில்லை. இதனால் இம்மாநிலத்தில் நெல்லுக்கான விலை சாராசரியாக ரூ.800 குவிண்டாலுக்கு பெறுகின்றனர் இது அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதாரவிலையான ரூ1868ஐவிடக் குறைவானதாகும். சோளத்திற்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2140 ஆகும். ஆனால் விவசாயிகள் ரூ1200 முதல் ரூ.1600 மட்டுமே பெறுகின்றனர். பருத்திக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.5400 ஆகும். ஆனால் விவசாயிகள் ரூ.3000 முதல் ரூ.4000 வரையே விற்க முடிகிறது.   கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.1925, ஆனால் விவசாயிகள் ரூ.1500 முதல் ரூ.1600 வரையே விற்ககூடிய நிலை உள்ளது. தற்போதைய நிலையே இவ்வாறு இருக்க இச்சட்டங்கள் மூலம் எவ்வாறு விவசாயிகள் தங்களின் உற்பத்திபொருட்களுக்கு எதிர்காலத்தில் இந்த ஆதாரவிலையை பெறமுடியும். குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவந்தாலும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில் சிக்கலும் உள்ளது. காரணம் வேளாண்மை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும் மத்திய அரசு தற்போது மூன்று சட்டங்களை இயற்றி அதன் வல்லமையை காட்டியுள்ளது. இவ்விலை தொடர்பாக எதிர்காலத்தில் மத்திய அரசு உறுதி செய்யுமா அல்லது மாநில அரசு உறுதி செய்யுமா என்ற நிலையும் உள்ளது.

அதே சமயம் இக்குறைந்தபட்ச ஆதாரவிலையில் மத்திய மாநில அரசுகளின் உணவு கழகங்களுக்கு நேரடியாக விவசாயிகளிடம் வேளாண்விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. மாநிலங்களில் மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்வதை மாநில அரசுகள் தடைசெய்வதில்லை. அரசு உணவு பகிர்மானத்திற்காக இந்திய உணவுக் கழகம் மூலமாகக் கொள்முதல் செய்யும் கோதுமை மற்றும் நெல் (அரிசி) ஏழைமக்கள் பயன்பெரும் வகையில் பொதுமக்களுக்கு மலிவு விலை அல்லது இலவசமாக அளிக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு நேரடியாகவே வேளாண்விளைபொருட்களை (நெல், கோதுமை) கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நெல்லை நேரடியாக மாநில அரசுகள் தங்களின் பொது விநியோக திட்டத்திற்காக கொள்முதல் செய்து வருகின்றன. இந்திய உணவுக் கழகமானது 32.6 விழுக்காடு பஞ்சாபிலும் 18.97 விழுக்காடு ஹரியானா மாநிலத்திலிருந்தும் கோதுமையை கொள்முதல் செய்கிறது. இதுபோன்றே நெல் 65.2 விழுக்காடு மற்றும் 18 விழுக்காடு  முறையே கொள்முதல் 2020-21ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இவ்வாறு அரசின் நேரடிக் கொள்முதலால் விவசாயிகள் அதிக பயன் பெறமுடியும். இதுவே தனியார் மண்டிகள் வசம் இக்கொள்முதல் நடைபெற்றால் துவக்கத்தில் அரசு உறுதியளிக்கும் விலையினை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு தருவார்கள். காலப்போக்கில் தரம், தேவை போன்ற அளவுகோலைப் பயன்படுத்தி கொள்முதல் விலையினை குறைக்கத் தொடங்குவார்கள், இதனால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்திக்க நேரிடும்.

குறைந்தபட்ச ஆதாரவிலை நீக்கப்படாது, அது தொடர்ந்து நீடிக்கும் என்று ஒருபுறம் அரசு திரும்ப திரும்ப உறுதி அளித்தாலும், இது ஏபிஎம்சி என்கிற மண்டி அமைப்பினைத் தவிர்த்து இதனை நிறைவேற்றுவது கடினம்.  அரசுசார் மண்டிகளுக்கு வெளியே தனியார் மண்டிகள் செயல்படத் தொடங்கும் போது இந்த ஏபிஎம்சி மண்டிகள் செயலிழந்து போகும் இதனால் குறைந்தபட்ச ஆதாரவிலையும் வலுவிழந்துபோகும். மேலும் ஏபிஎம்சி என்ற மண்டிகளின் வழியாக மாநில அரசுகளுக்கு வரி அல்லது கட்டணங்கள் வழியாக வரும் வருவாயும் முற்றிலுமாக நின்றுபோகும். இதனைக் கொண்டு கிராமப்புறக் கட்டமைப்பை வலுப்படுத்திய நிலை தடைபடும். தனியார் மண்டிகள் இக்கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தற்போதைய வேளாண்சட்டம் வழிவகுத்துள்ளதால், இம்மண்டிகள் அதிக லாபத்தினை பெறும். கேரளா மாநிலத்தில் ஏபிஎம்சி மண்டிகள் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இம் மாநிலத்தில் மாநில அரசே விவசாயிகளின் வேளாண் பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்குகிற நிலை அங்கு உள்ளது. எனவே அம் மாநில விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

அரசின் நேரடி கொள்முதல் குறையும் போது விவசாயிகள் மட்டுமல்ல ஏழைகளின் உணவு பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். அண்மையில் வெளியிடப்பட்ட உலக பசி குறியீட்டெண் பட்டியலில் இந்தியா 117 நாடுகளில் 102 இடத்தில் உள்ளது.  ஏழைகளுக்கான உணவுபாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். உணவு பணவீக்கம் கடந்தகாலங்களில் தெடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால்ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கின்றனர். இக்கால கட்டங்களில் பொதுவிநியோக துறையின் மூலம் உணவு பாதுகாப்பு அளித்து வருகிற நிலையில் அரசின் நேரடிக் கொள்முதல் குறைக்கப்படும்போது இதற்கான வேளாண்பொருட்களை தனியார் மண்டிகளிடம் அதிக விலைகொடுத்து வாங்கக் கூடிய நிலை ஏற்படும்.  இதனைக் காரணம்காட்டி இவ்பொது விநியோகத் துறையின் மூலம் ஏதேனும்  அளவுகோலின் அடிப்படையில் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது உணவுப் பொருட்களுக்கு பதில் பணமாக அளிக்கவே அரசு முன்வரும் இதனால் இது பொதுவிநியோகத் துறையை மூடக்கூடிய அபாயமும், ஏழைகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

உலக வர்தக அமைப்பின் புள்ளிவிவரப்படி 99.43 விழுக்காடு விவசாயிகள் குறைவான வருமானம் அல்லது குறைந்த அளவு ஆதாரங்களை உடையவர்களாக உள்ளனர். 0.57 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே வசதியான விவசாயிகளாக உள்ளனர் என்கிறது. இந்தியாவில் 6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலையினை வேளாண் விளைபொருட்களுக்கு பெறுகின்றனர். மீதமான 94 விழுக்காடு விவசாயிகளில் பெருமளவு இதனைப் பற்றிய புரிதல்கூட இல்லை. அரசும் இவ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலைகிடைக்க வழிவகையும் செய்யவில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்றாக உள்ளது.  அதாவது அரசு (மத்திய, மாநில) நேரடி கொள்முதல் செய்தால் மட்டுமே இந்த குறைந்தபட்ச ஆதாரவிலை விவசாயிகளுக்கு கிடைக்கும் மாறாக அரசு நேரடிக் கொள்முதல் செய்யப்படாத இடங்களில் இந்த ஆதாரவிலையினைவிடக் குறைவான விலைக்கே பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர் என்பது உண்மை. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை (இந்திய அளவில் இதனை ஏபிஎம்சி என்கிறோம்) அரசின் கட்டுப்பாட்டில் நடத்துகிறது இதில் விற்கப்படும் வேளாண் பொருட்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக தமிழக அரசு தனது உணவு பகிர்மானக் கழகங்களுக்கு நேரடி கொள்முதல் செய்யும் போது குறைந்தபட்ச ஆதாரவிலையினை  கொடுத்து கொள்முதல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பெருமளவு காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமே அரசு அறுவடை காலங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்கிறது. பிற பகுதிகளில் இந்த நிலையங்கள் இல்லை.  எனவே பெருமளவு விவசாயிகள் தற்போதும் இவ் அரசு அறிவிக்கிற குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு வெளியே உள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவேதான் தற்போதைய விவசாயிகளின் போராட்டம் இந்த குறைந்தபட்ச ஆதாரவிலையினை சட்டமாக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையினை முன்வைக்கிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலையினை விவசாயிகள் சட்டப்பூர்மானதாக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயமும் சமூக நீதியும் உள்ளது. காரணம் இந்தியாவில் 89 விழுக்காகாடு விவசாயக் குடும்பங்கள் கடனாளிகளாக உள்ளனர் என்று விவசாயிகள் குழு 2008 தெரிவிக்கிறது. 86 விழுக்காடு விவசாயிகள் இரண்டு ஏக்கருக்கு கீழ் வைத்துள்ளனர் இவர்களின் வாழ்வாதரமே இந்த நிலத்தை சார்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் விதை, உரம், பூச்சிக் கொள்ளி போன்ற உள்ளீட்டுப் பொருட்களின் விலை. அதிகரிக்கின்ற டீசல் விலை, தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் கூலி உயர்வு, வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு (அறுவை இயந்திரங்கள், பூச்சிக்கொள்ளி தெளிப்பான்கள், டிராக்டர்) அதிகரிப்பு போன்றவைகளால் வேளாண்மை செய்யும் செலவுகள் மிகவும்  அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனவே அரசானது வேளாண்மைகான உள்ளீடுகளின் விலைகளை முறைப்படுத்த வேண்டும். முறைப்படுத்தப்பட்ட வேளாண் கடன்களை விரிவுபடுத்தவேண்டும். தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையில் அனைத்து வகையான செலவுகளையும் தன் உடல் உழைப்பிற்கானதை பணமதிப்பில் கணக்கிட்டு நிர்ணயிக்கப்படவேண்டும்.  அதாவது A2,C2,FL போன்றவைகளை உள்ளடக்கிய கணக்கீடாக இருக்கவேண்டும். விவசாயிகள் தாங்கள் வேளாண்மைக்காக செலவிடுவதை திரும்பப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.   குறைந்தபட்ச ஆதாரவிலை அனைத்து வேளாண்விளைபொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் இந்தியா முழுமைக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருநாடு, ஒரு சந்தை என்ற நிலையினை நினைவில் கொண்டால் நாடு முழுவதும் வேளாண் பொருட்களுக்கு ஒரேவிலை விவசாயிகளுக்குத் தேவை அதனை சட்டப்பூர்வமாகவும் அளிக்க வேண்டும்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேளாண்விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டவடிவம் ஏன் தேவை?”

அதிகம் படித்தது