மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வைரம் மின்னும்(சிறுவர் சிறுகதை)

மா.பிரபாகரன்

Mar 26, 2016

kottu thaththuvam1பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. ஒரு நாள் அந்த மாணவர்களின் வகுப்பாசிரியர் வகுப்பறைக்கு வந்தார். அவர் அந்த வகுப்பின் அனைத்து  மாணவர்களுக்கும் ஆளுக்கொரு காகிதப் பொட்டலம் தந்தார். அதைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். மாணவர்கள் பிரித்துப் பார்த்தபோது அதில் ஓரு கரித்துண்டு இருந்தது. ஆசிரியர் இதை வைத்து  என்ன செய்ய போகிறார்? பாடம் நடத்தபோகிறாரா?, செய்முறை பயிற்சி வகுப்புகள் ஏதும் எடுக்கப் போகிறாரா? இப்படி கேள்விகள் மனத்தில் எழ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “இதைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்”-என்று மட்டும் சொன்னவர் அத்துடன் அதை மறந்து போனார்.

மறுநாள், மறுநாளைக்கு மறுநாள், அதற்கு அடுத்த நாள் என்று நான்கைந்து நாட்கள் கடந்து போனது. தான் மாணவர்களிடம் ஆளுக்கொரு காகிதப்பொட்டலம் ஒன்றை அளித்த நினைவே இல்லாதது போல் இருந்தார். ஒருநாள் வகுப்பறைக்கு வந்தவர் ஏதோ யோசனை வந்தவர் போல் “மாணவர்களே! நான் உங்களிடம் கொடுத்த கரித்துண்டுகள் எங்கே” – என்று கேட்டார். ஒரு மாணவன் எழுந்து “கரித்துண்டுகளை எப்படி சார் பாடப் புத்தகங்களோடு சேர்த்து வைக்க முடியும்! நாங்கள் அதை அன்றைக்கே தூக்கிப்போட்டு விட்டோம்”- என்றான்.  இருந்தாலும் ஆசிரியர் சொல்லைத் தட்டாத ஒன்றிரெண்டு மாணவர்கள் அதை எப்படியோ  பத்திரப்படுத்தி  வைத்திருந்தார்கள். “நீங்களும் இதை வெளியில் தூக்கி போட்டுவிட்டு வாருங்கள்!”- என்றார் ஆசிரியர். அவர்களும் அவ்வாறே செய்துவிட்டு வந்து அமர்ந்தனர்.

இப்போது ஆசிரியர் தன் கைப்பையிலிருந்து சிறு வைரக்கல் ஒன்றை எடுத்து தனது மேசையின் மீது வைத்தார். அவர் அதை தனது நண்பர் ஒருவரிடமிருந்து இரவல் வாங்கியிருந்தார். வகுப்பறை சன்னல்கள் வழியாக உள்ளே வந்த சூரிய வெளிச்சம் அந்தக் கல்லின் மீது பட்டு வைரம் மின்னியது. “உங்கள் அத்தனை பேருக்கும் நான்  வைரக்கல் ஒன்னை தருவதாக வைத்துக் கொள்வோம்! அதை இப்படித்தான் கரித்துண்டைத் தூக்கிப் போட்டமாதிரி தூக்கிப் போட்டுருவீங்களா”-கேட்டார் ஆசிரியர். இன்னொரு மாணவன் எழுந்து“ அதெப்படி சார் ஆளுக்கொரு வைரக்கல் தரமுடியும்?” -என்று கேள்வி எழுப்பினான். “கொடுப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்! அப்ப இப்படித்தான் தூக்கிப்போடுவீர்களா” -கேட்டார் ஆசிரியர். “தூக்கிப்போட மாட்டோம் சார்! வைரம் விலைமதிப்பில்லாத பொருள் என்பது எங்களுக்குத் தெரியாதா! அதை பத்திரமாக பொக்கிசம் மாதிரி பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்!”-என்றான் அந்தமாணவன்.

ஆசிரியர் மெலிதாகப் புன்னகைத்தார். “அவர் வைரமும் கரியும் ஒன்றுதான் தெரியுமா உங்களுக்கு”-என்றவர் நன்றாகப் படிக்கும் மாணவன் கோகுலைப் பார்த்தார். அவர் பார்வையின் பொருளை புரிந்து கொண்டவன் போல் அவன் எழுந்து சொல்ல ஆரம்பித்தான். “கரியும் வைரமும் அடிப்படையில் கார்பன் அணுக்களால் ஆனவை! பூமியின் ஆழத்தில் புதையுண்ட கரி அதாவது கிராபைட் தாது அதிக அழுத்தத்தாலும் அதிக வெப்பத்தாலும் வைரமாக மாறுகிறது! இவ்வாறு கரி வைரமாக உருமாற பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்! கார்பன் அணுக்களால் ஆனாலும் அணுக்கள் அடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் கரி எளிதில் உடையக்கூடியதாகவும் வெப்பத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை உடைந்ததாகவும் இருக்கிறது! ஆனால் கார்பன் அணுக்களின் மாறுபட்ட பிணைப்பால் படிம (கிரைஸ்டல்) வடிவத்தைப் பெறும் வைரம் உலகில் கிடைக்கும் பொருள்களில் மிகவும் கடினமான, எளிதில் வெப்பத்தைக் கடத்தாத ஒரு பொருளாக இருக்கிறது! ஒரு வைரத்தை ஊடுருவும் ஒளியானது அதன் படிம (கிரைஸ்டல்) அமைப்பினால் பன்முனைப் பிரதிபலிப்பை அடைகிறது! இதனால் உண்டாகும் ஒளிச்சிதறல் வைரத்தை ஜொலிக்கச் செய்கிறது!”- என்றான் அவன்.

“நன்றாக சொன்னாய் கோகுல்! உட்கார்!”- என்ற ஆசிரியர் தொடர்ந்து பேசினார். “மாணவர்களே! நீங்கள் கரித்துண்டுகளைப் போன்றவர்கள்! உங்களைச் சுற்றி இருக்ககிற உலகம் தினமும் உங்களுக்கு நிறைய விடயங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்! அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு! அப்படி கொடுக்கப்படுற எல்லா விடயங்களையும் உள் வாங்கிக்கிட்டே இருந்தீர்கள் என்றால் கரித்துண்டு மாதிரி நீங்க சுலபமாக உடைந்து போய் விடுவீர்கள்! ஆனால் நல்ல கல்வி உங்களுக்குச் சிறந்த அறிவாற்றலைக் கொடுக்கும்! கலங்காத அறிவு ஆன்ம பலத்தைக் கொடுக்கும்! ஆன்ம பலம் எது நல்லது எது கெட்டது என்பதைப் பிரித்தறியும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும்! வெப்பத்தையும் அழுத்தத்தையும் ஏற்றுக்கொண்டு உருமாறிய வைரம் எப்படி ஜொலிக்குதோ அது மாதிரி நல்ல கல்வி கற்ற உங்களால் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியும்! எப்படி, நீங்க வைரமாக மாறப் போகிறீர்களா? இல்லை கரியாவே இருக்கப் போறிங்களா?- என்று கேட்டார். மாணவர்கள் மத்தியில் ஒரு கணம் நிசப்தம் நிலவியது. “சரி! பாடத்துக்குப் போகலாம்! -என்றவர் அடுத்தபடியாக பாடம் நடத்தத் துவங்கிவிட்டார்.

கரியும் வைரமும் அடிப்படையில் கார்பன் அணுக்களால் ஆனவை என்பது அநேகமாக அனைத்து மாணவர்களும் அறிந்தது தான்,  சின்ன விடயம்தான், இருந்தாலும் அதைக் காட்சிப்படுத்த அவர் முயற்சி செய்தவிதம் கொஞ்சம் விந்தையாக இருந்தாலும் அந்த வகுப்பு மாணவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது. கோகுலைப் போன்று நன்றாகப் படிக்கும் மாணவர்கள் பலர் வரவிருக்கும் பொதுத் தேர்விற்கு இன்னும் நம்மை நன்றாகத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று மனத்தில் உறுதி பூண்டனர்.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வைரம் மின்னும்(சிறுவர் சிறுகதை)”

அதிகம் படித்தது