மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம்

தேமொழி

Aug 4, 2018

Siragu stcutoid1

ஸ்குடாய்ட் (Scutoid) வடிவம் இயற்கையில் எங்கும் காணும் ஒரு வடிவம். ஒரு நீண்ட ஐந்து பக்கங்கள் கொண்ட பட்டக வடிவத்தின் ஒரு முனையில் மட்டும் வெட்டப்பட்டு, அப்பகுதியில் மட்டும் ஆறு பக்கங்கள் கொண்ட தோற்றத்தில் அமைந்த வடிவம் ஸ்குடாய்ட். இவ்வடிவத்தின் நீண்ட முனையில் இருக்கும் சமதளப் பகுதிகளின் ஒரு புறம் அறுகோண வடிவையும், அதன் எதிர்ப்புறம் ஐங்கோண வடிவையும் கொண்டிருக்கும். இத்தகைய வடிவ அமைப்பால் ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பட்டகத்தின் பகுதியையும், ஐந்து பக்கங்கள் கொண்ட மற்றொரு பட்டகத்தின் பகுதியையும் அருகருகே இடைவெளி இன்றி வளைவான தளங்களிலும் மாற்றி மாற்றி வரிசையாகவும் நெருக்கமாகவும் இணைக்க முடியும். நம் உடலில் உள்ள திசுக்களில் உள்ள உயிரணுக்கள் இந்த வடிவம் கொண்டவையே. இத்தகைய பல பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் கொண்ட அமைப்பு, உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இடைவெளி இன்றி அமைந்திட உதவுகிறது. இத்தகைய மேம்பட்ட அமைப்பு உடலின் சக்தியை குறைவாகச் செலவழிக்க உதவுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முப்பரிமாண தோற்றத்தில் காணும்பொழுது, வளைவுகள் கொண்ட உடலுறுப்புகளிலும் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டவகையில் இந்த ஸ்குடாய்ட் வடிவம் கொண்ட உயிரணுக்கள் அமைந்துள்ளன. தோலின் மேற்புறம் ‘எபித்தீலியல்’ உயிரணுக்களின் (epithelial cells) தோற்றமும் ஸ்குடாய்ட் வடிவமே. இவ்வாறு இயற்கையில் பரவலாக எங்கும் காணக்கிடைக்கும் இந்த வடிவத்திற்கு, வடிவியலில் இதுவரை பெயர் இல்லாதிருந்ததால், பெயர் சூட்ட எண்ணிய அறிவியலாளர்கள் வண்டுகள் சிலவற்றின் மேற்புறம் கவசம் போல அமைந்த ‘ஸ்கூட்டெல்லம்’ (scutellum) என்ற அமைப்பின் தோற்றத்தை ஒத்திருக்கும் இந்த வடிவத்திற்கு ஸ்குடாய்ட் வடிவம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

ஸ்குடாய்ட் வடிவம் உயிரியல் ஆய்வாளர்கள் உலகிற்குத் தந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு. ஸ்குடாய்ட் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த ஆய்வுக்கட்டுரை, சமீபத்திய ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ (Nature Communications, Published: 27 July 2018) இதழில் வெளியானது. இவ்வாறே ‘ஹெமிஹெலிக்ஸ்’ (hemihelix) என்றொரு வடிவமும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. வட்டம், நாற்கரம், முக்கோணம், கூம்பு, கோளம் என்ற வகையில் கணிதத்தில் வடிவியலில் படித்திருந்த அனைவருக்கும் இனி ஸ்குடாய்ட் வடிவத்தின் கனவளவு கொள்ளளவு, பரப்பளவு என்றெலாம் கணக்கிட சூத்திரங்களும் படிக்க வேண்டியிருக்கும்.

Contents and Image Courtesy:

Scutoids are a geometrical solution to three-dimensional packing of epithelia, Pedro Gómez-Gálvez et. al., Nature Communicationsvolume 9, Article number: 2960 (2018), Published: 27 July 2018

https://www.nature.com/articles/s41467-018-05376-1#rightslink


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம்”

அதிகம் படித்தது