மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2020 இந்திய வேளாண் சட்டங்களும், அதன் வெளிப்பாடுகளும் – (பாகம் – 2)

பேராசிரியர் பு.அன்பழகன்

Nov 14, 2020

 siragu farmers1

குறைந்தபட்ச ஆதார விலை

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு அரசானது ஆதராமாக குறைந்தபட்ச விலையை தீர்மானித்து அறிவிப்பதை குறிப்பதாகும். இதன்படி தற்போது குறைந்தபட்ச ஆதார விலை என்பது உற்பத்தி செலவுகளுடன் விவசாயிகள் பணம்பெறாமல் உழைப்பதற்குமான செலவுகளை பணத்தின் வழியாக கணக்கிட்டு இவ்விரண்டின் செலவில் 50 விழுக்காடு சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இதனை வேளாண் செலவு மற்றும் விலை குழு பருவகாலங்களில் ஆண்டு தோறும் அறிவித்து வருகிறது. ஆனால் இவ்விலையானது சட்டப்பூர்வமானது அல்ல. இவ்விலைக்கு கீழ் வேளாண் பொருட்களை வாங்கும் வணிபர்களுக்கு தண்டம் விதிப்பது அல்லது குற்றம் செய்தவராகவோ கருதப்படுவதில்லை. இந்தியாவில் இக்குறைந்தபட்ச விலை 1966-67ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் கோதுமைக்கு இவ்விலை அறிவிக்கப்பட்டது தற்போது 23 வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை அறிவிக்கப்படுகிறது. அவை 7 வகையான உணவுதானியங்கள் (நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பார்லி), 5 வகையான பருப்பு வகைகள் (உளுந்து, பாசிப்பயறு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மைசூர் பருப்பு), 7 வகையான எண்ணெய் வித்துக்கள் (மணிலா, சோயா, எள், சூரியகாந்தி, நைஜர், கடுகு, குங்குமப்பூ), 4 வாணிப பயிர்கள் (பருத்தி, கரும்பு, சணல், கொப்பரைத் தேங்காய்). இத்தனை வகையான வேளாண் பொருட்களுக்கு ஆதார விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும் நெல் மற்றும் கோதுமை மட்டுமே இவ்விலையினை அதிக அளவில் பெற்று வருகின்றன. 1970-71ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.51ஆக இருந்தது. தற்போது (2020-21) ரூ.1868 என்றும் கோதுமைக்கு ரூ.76 என்று இருந்தது. தற்போது ரூ.1975ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இக்குறைந்தபட்ச ஆதார விலைக்கு தங்களின் விளைபொருட்களை விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார், கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஏபிஎம்சி என்கிற மண்டி அமைப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் இம் மாநில விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையினை விட குறைவாக விற்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். பீகாரில் சோளத்தினை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000 கீழ் விற்கின்றனர் ஆனால் இதன் குறைந்தபட்ச ஆதார விலையானது ரூ.1850ஆகும். குறைந்தபட்ச ஆதரா விலை என்பது பொருட்களுக்கு பொருள் மாறுபட்டு அறிவிக்கப்படுகிறது (வரைபடம் பார்க).

 siragu velaan2

ஆதராம்: Agmarknet.PIB.

அரசு, அறுவடைகாலங்களில் நேரடியான கொள்முதல் மையங்களைத் திறந்து அதன் வழியாக வேளாண்பொருட்களை குறைந்தபட்ச ஆதரவிலையில் கொள்முதல் செய்து அரசின் தானியக் கிடங்குகளில் இருப்பாக வைத்துக்கொள்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 கொண்டு வந்த பிறகு இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்குப் பொதுவிநியோக முறை வழியாக முன்னுரிமை வீடுகளுக்கு மானிய விலையில் 3கிலோ அரிசியும், 2கிலோ கோதுமையும் வழங்குகிறது. இதனால் கிராமப்புறங்களில் 75 விழுக்காடு மக்களும், நகர்புறங்களில் 50 விழுக்காடு மக்களும் பயனடைகின்றனர்.

இந்தியாவில் உற்பத்தியாகிற நெல்லில் 43.26 விழுக்காடும், கோதுமையில் 36.24 விழுக்காடும், பருத்தியில் 29.51 விழுக்காடும் அரசு கொள்முதல் செய்கிறது. அண்மையில் கான் அமைப்பு ஆய்வின்படி இந்திய அளவில் 36 விழுக்காடு விவசாயிகள் ஏபிஎம்சி மண்டிகள் வழியாகவும், 25.6 விழுக்காடு விவசாயிகள் தனியார் வியாபாரிகள் வழியாகவும், 8.1 விழுக்காடு விவசாயிகள் மாநில கூட்டுறவுக்கு வேளாண் கழகத்தின் வழியாகவும் விற்பனை செய்ய உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கண்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் கருத்துக்களை வெளியிட்டுள்ள இந்த அமைப்பு 35.3 விழுக்காடு விவசாயிகள் இச்சட்டத்திற்கு ஆதரவாகவும், 52.2 விழுக்காடு விவசாயிகள் எதிர்ப்பும், 12.5 விழுக்காடு விவசாயிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமலும் உள்ளனர். வடமேற்கு மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக 77 விழுக்காடு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது (CaonConnection Insights,www.ruraldata.in). விவசாயிகள் தற்போது கொண்டுவந்துள்ள வேளாண்மைச் சந்தைபடுத்துதல் சட்டங்களில் ஒப்பந்த விவசாயத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எந்த குறிப்பும் இடம் பெறவில்லை என்பதும், ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே விற்கப்படும் விளைபொருட்களுக்கு இவ்விலை பற்றிய் உத்திரவாதம் ஏதும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏபிஎம்சி –மண்டிகள்

siragu farmers3

ஏபிஎம்சி என்கிற மண்டியில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கிற வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய முக்கிய இடமாகும். இதில் பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வேளாண் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வாணிப போட்டி ஏற்பட்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும், இம்மண்டிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மாநிலத்துக்கு மாநிலம் இதன் செயல்பாட்டில் சில மாற்றங்கள் காணப்படுகிறது. ஏபிஎம்சி மண்டிகளை தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்று அழைக்கப்படுகிறது. இம் மண்டிகளில் வேளாண் விவசாயிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. வேளாண் உற்பத்தியினை குறைந்த கட்டணத்தில் உலரவைக்கவும், அவற்றை கிடங்குகளில் பாதுகாத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்வதற்கும், அவ்வாறு கிடங்கில் வைத்திருக்கும் காலங்களில் அவற்றின் மீது முன்பணம் பெறவும், விலைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்றால் தங்களின் பொருட்களை விலக்கிக் கொள்ளவும் என பல செயல்பாடுகளை வேளாண் விவசாயிகளுக்கு இம்மண்டிகள் அளிக்கிறது. அதேசமயம் இம்மண்டிகளில் குறைகளும் காணப்படுகிறது. இக்குறைகளை களைவதற்கு மாநில அரசுகள் பல்வேறு காலகட்டங்களில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சுமார் 7000 ஏபிஎம்சி என்கிற மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இம்மண்டிகள் வழியாக அரசு நாட்டில் வேளாண் உற்பத்தியில் சந்தைக்கு வரும் உணவு விளைபொருட்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே கொள்முதல் செய்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 85 விழுக்காடு வேளாண் உற்பத்தி கொள்முதல் செய்யப்படுகிறது ஹரியானா மாநிலத்தில் அங்கு உற்பத்தியாகும் உணவு விளைபொருட்களில் 75 விழுக்காடு கொள்முதல் செய்யப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் மட்டுமே ஒட்டுமொத்த மத்தியஅரசு கொள்முதலில் 45 விழுக்காட்டை பங்கெடுத்துக்கொள்கிறது. நெல்லைப் பொருத்தமட்டில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஆந்தரப்பிரதேசம், தெலுங்கான, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் கோதுமையை பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்தும் மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது (GOI2019).

ஏபிஎம்சி மண்டியில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் மேலும் கொள்முதலுக்கான மாநிலங்களுக்கு கட்டணங்களைச் செலுத்த வேண்டும். தற்போது கொண்டு வந்துள்ள சட்டமானது இம்மண்டிகளுக்கு வெளியே சந்தைசெய்ய வழிவகை செய்துள்ளதால் இக்கட்டணம் செலுத்த வேண்டி அவசிமில்லை என்கிறது. இவ்வாறு கட்டணத்திலிருந்து விலக்கு அளிகப்படும்போது வேளாண்வாணிப நிறுவனங்கள் அதிக லாபம் பெறமுடியும் எடுத்துக்காட்டாக கோதுமைக்கு ரூ.165ம் நெல்லுக்கு ரூ.155ம் கட்டணம் செலுத்தாதன் வழியாக வேளாண்வாணிப நிறுவனங்களுக்கு மிச்சமாகிறது இதில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு கட்டண சலுகை வழியாக எஞ்சியுள்ள பணத்தில் அதன் குறைந்தபட்ச ஆதார விலைக்கு அதிகமாக ரூ.65, ரூ.55ம் முறையே வேளாண்பொருட்களுக்கு அதிகம் அளிப்பதாகக்கொண்டால் விவசாயிகள் அதிக விலைபெறுவார்கள் வேளாண்வாணிப நிறுவனமும் நெல்லுக்கு ரூ.100, கோதுமைக்கு ரூ.100 என லாபம் பெற இயலும்.இது வேளாண் விவசாயிகளை அதிக ஈர்ப்புக்கு உட்படுத்தி ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே பயணிக்க தொடங்குவர் இதனால் நாளடைவில் ஏபிஎம்சி மண்டிகள் நலிவடைந்து அவற்றை மூடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே அதிக அளவிளான தனியார் மண்டிகள் அதிக அளவில் உருவாகும்.

அரசு அறிவித்தப்படி எபிஎம்சி மண்டிகள் தொடர்ந்து இயங்கும் என்று கொண்டாலும் இதன் வழியாகக் கொள்முதல் செய்வதை தேவையான அளவிற்கு அரசு வரையரை செய்துகொள்ளும் எனவே அனைத்து விவசாயிகளும் தங்களின் பொருட்களை ஏபிஎம்சி மண்டிகளில் விற்கமுடியாமல் போகலாம். காலப்போக்கில் பெரும் வேளாண்வாணிப நிறுவனங்கள் வேளாண் பொருட்களை வாங்க பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும் என்பதால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் அதிக இன்னலுக்கு ஆளாக நேரிடும். நாளடைவில் வேளாண் செய்வது மிகப்பெரிய சவாலாக இவ்விவசாயிகளுக்கு ஏற்பட்டு சிலர் பெரும் வேளாண்வாணிப நிறுவனங்களுக்கு அடிமைகளாகவும் சிலர் வேளாண்மையில் இருந்து வெளியேறவும் சிலர் தங்களின் நிலங்களை பெரும் வேளாண்வாணிப நிறுவனங்களுக்கோ அல்லது பெரு விவசாயிகளுக்கோ விற்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகள் பெருமளவில் எதிர்காலங்களில் நகரங்களுக்கு புலம்பெயரவும், வேளாண் கூலித் தொழிலாளர்களாக மாறவும் செய்யலாம். ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே மண்டிகள் அதிக அளவில் உருவெடுக்கும்போது, ஏபிஎம்சி மண்டிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பி இருப்பவர்கள் அதிக அளவில் வேலை இழப்பினை சந்திக்க வேண்டி வரும். ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே உள்ள பெரும் வேளாண்வாணிப நிறுவனங்கள் அதன் தொடர்புடை கொள்முதல் செய்தல், உணவு பதப்படுத்துதல் ஆகிய நிலைகளில் பெரும் இயந்திரங்கள் பயன்படுத்த முற்படுவார்கள் இதனால் அதிக வேலைவாய்ப்பு உருவாகாது. மொத்தத்தில் வேலை இழப்பும், வேலை உருவாகாத நிலையும் உண்டாகும்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிக அளவிலான விவசாயிகள் மத்தியில் இவ்வேளாண்மைச் சட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல இவ்விரண்டு மாநிலங்கள் அதிக அளவில் ஏபிஎம்சி மண்டிகள் மூலம் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்பனை செய்து பயன் பெற்று வருகின்றனர். தற்போதைய சட்டங்கள்; நடைமுறைக்கு வரும்போது குறைந்தபட்ச ஆதார விலை பறிபோகும், பெரும் வேளாண்வாணிப நிறுவனங்கள் விவசாயிகளை சுரண்டும், சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வேளாண்மையில் இருந்து வெளியேறலாம் என்பதாகும். கான் அமைப்பின் ஆய்வின்படி 38.6 விழுக்காடு விவசாயிகள் ஏபிஎம்சி மண்டிகள் வேளாண்மை சட்டங்களால் முடிவுக்கு வந்து விடும் என்றும் 28.4 விழுக்காடு விவசாயிகள் இம்மண்டிகள் முடிவுக்கு வராது என்றும் 33 விழுக்காடு விவசாயிகள் இதுகுறித்து கருத்து ஏதும் கூறவில்லை என்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்படி விவசாயிகள் தவிற்று பெரும் வேளாண்வாணிப நிறுவனங்கள் அறுவடைகாலங்களில் வேளாண்பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை சேமித்துவைத்து சந்தையில் விலை அதிகரிக்கும் போது விற்று அதிக லாபம் ஈட்ட முடியும். மேலும் அயல் நாட்டு நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீட்டின் வழியாக தங்களின் வியாபாரங்களை பெருக்கிக் கொள்ளும் இதனால் உள்நாட்டு வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மாநில அரசுகள் எதிர்ப்பதற்கான காரணங்கள்

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. வேளாண்மை மாநில அரசுகளின் ஆளுமையின் கீழ் செயல்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் இத்துறையினை மத்திய அரசு தன் ஆளுகைக்கு கொண்டுவர முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை. தற்போதைய வேளாண் சட்டங்கள் மாநில அரசின் கையிலிருந்து வேளாண்மையினை ஒரு நாடு ஒரு வேளாண்சந்தை என்ற அடிப்படையில் தன்னுடை அதிகாரத்தை பரவல்படுத்த நினைக்கிறதோ என்று தோன்றுகிறது. இதனால் கூட்டாச்சித் தத்துவம் நீர்த்துபோகச் செய்யும். மைய அரசின் கட்டுப்பாடு, தனியார்மயமாக்கல் என்ற இரு இயல்புகளின் அடிப்படையில் இச்சட்டங்கள் காணப்படுகிறது, இப்படிப்பட்ட நிலையில் மாநில அதிகாரங்கள் செயலற்றதாகவிடும்.

மாநில அரசிகளின் வருமானம் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொருள் மற்றும் சேவை வரியினால் இழந்து நிற்கிறவேலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட வேளாண் சட்டத்தினால் மாநில அரசின் வருமானம் குறைவதற்கான வாய்ப்புகள்உள்ளது. இச்சட்டங்களின்படி மாநில அரசு ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே நடைபெறும் வணிகத்திற்கு இக்கட்டணங்கள் இல்லை என்பதால் அரசுக்கு தொடந்து ஏபிஎம்சி மண்டிகள் வழியாக வந்துகொண்டிருந்த வருவாய் நின்றுவிடும். இக்கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் தற்போது வேறுபட்டு காணப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 8.5 விழுக்காடு (3 விழுக்காடு சந்தைக் கட்டணம், 3 விழுக்காடு கிராமப்புற வளர்ச்சிக் கட்டணம், 2.5 விழுக்காடு முகவர் கட்டணம்) கட்டணம் ஏபிஎம்சி மண்டிகள் வழியாக ரூ.3500 கோடி ஆண்டுக்கு வருமானமாகக் கிடைக்கிறது. ஹரியானா மாநிலத்தில் 7.5 விழுக்காடு (2.5 விழுக்காடு சந்தைக் கட்டணம், 2.5 விழுக்காடு கிராமப்புற வளர்ச்சிக் கட்டணம், 2.5 விழுக்காடு முகவர் கட்டணம்) கட்டணம் ஏபிஎம்சி மண்டிகள் வழியாக ரூ.1500 கோடி ஆண்டுக்கு வருமானமாக கிடைக்கிறது. ஏபிஎம்சி மண்டிக்கு வெளியே வேளாண் சந்தைகள் வலுபெரும்போது இவ்வருவாயினை மாநில அரசுகள் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் வெளி மண்டிகளில் கையாளக்கூடிய வேளாண் பொருட்களின் புள்ளிவிவரங்கள் பெறுவதற்கான நிலையும் இதில் காணப்படவில்லை. மாநில அரசுகளின் பொதுவிநியோகத்திற்கு மத்திய தொகுப்பினை அதிக அளவில் நம்பி இருக்கவேண்டிய நிலையும் காணப்படும். பெரும் வேளாண்வாணிப நிறுவனங்கள் மாநில அரசுடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளாதது மாநில உரிமைகள் இழப்பதற்கு வழிகோளுகிறது.

இச்சட்டங்களுக்கு பரவலான எதிர்ப்பு நாடெங்கும் காணப்பட்டாலும்,பஞசாப், ஹரியானா மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளை உருவாகியுள்ளது. ஆனால் தொழில் துறை மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இச்சட்டங்கள் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். இம்மாநிலங்கள் அதிக அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் உருவாகவும் ஏற்கனவே 100 விழுக்காடு அந்நிய நாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் வேளாண்சார் தொழில்கள் இம்மாநிலங்களில் அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இவற்றினால் வட்டார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்புகள் உள்ளது. தற்போது உள்ள நிலையில் அரசிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச ஆதார விலையினை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்படவேண்டும். ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே உள்ள மண்டிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்து அவற்றை (விளைபொருட்களின் விலை உட்பட) முறைப்படுத்தவேண்டும், மாநில அரசுகளின் உணர்வினை மதித்து வேளாண் சந்தையினை மாநில கட்டுப்பாட்டில் தொடரச்செய்தல், பெரும் வேளாண் வாணிபத்தினால் நுகர்வுப்பொருட்களுக்கான விலை உயரும் இதனை கட்டுப்படுத்துதல், பெரும் வேளாண்வாணிப நிறுவனத்தின் பொருட்களுக்கு விலையினை நிர்ணயித்தல் போன்றவைகளாகும். வேளாண் சந்தைகள் அதிக அளவில் உருவாக்கப்படும்போது விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ள வேளாண்பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு மாற்றாக நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டநடைமுறையினால் ஏற்பட உள்ள பல்வேறு வகையான இழப்புகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். பெரும்பான்மையாக உள்ள சிறு. குறு விவசாயிகள், சிறு வேளாண் வியாபாரிகள் போன்றோரின் குரல்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதே தற்போதைய வேண்டுகோள்.

——————————-

இக்கட்டுரையின் ஆசிரியர், திரு.ந.பாலசுந்தரம் அவர்களுக்கு இக்கட்டுரை வடிவம் பெற உதவியதற்கு தனது நன்றியினை பதிவுசெய்துள்ளார்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2020 இந்திய வேளாண் சட்டங்களும், அதன் வெளிப்பாடுகளும் – (பாகம் – 2)”

அதிகம் படித்தது