மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2020 இந்திய வேளாண் சட்டங்களும், அதன் வெளிப்பாடுகளும்

பேராசிரியர் பு.அன்பழகன்

Nov 7, 2020

siragu tholilaalargal2

இந்தியா உணவுதானியம், பால், பருத்தி, சணல், வாழை, மாம்பழம், முந்திரி, மசாலாப் பொருட்களின் உற்பத்தி, அதிக அளவிலான தொழிலாளர்கள் வேளாண்மையில் பங்கேற்பு போன்ற நிலைகளில் உலகளவில் முதன்மையில் உள்ளது. இந்தியாவின் மொத்தப் பயிரிடும் நபர்களின் எண்ணிக்கை 2015-16ஆம் ஆண்டு வேளாண்மைக் கணக்கெடுப்பின்படி 146.45 மில்லியன் ஆவார்கள். இவர்கள் 157.82 மில்லியன் ஹெகடேர் பரப்பளவில் பயிர் செய்கின்றனர். அரசின் பல்வேறு திட்டங்களாலும், நடவடிக்கைகளாலும் 1950-51ஆம் ஆண்டு இந்தியாவின் உணவு உற்பத்தி 50.8 மில்லியன் டன்னாக இருந்து,பின்பு 235 மில்லியன் டன் அதிகரித்து 2015-16இல் 285 மில்லின் டன்னாக புதிய உச்சத்தை தொட்டது.

இதே காலகட்டங்களில் தலா உணவுதானிய உற்பத்தி கையிருப்பானது 144.1 கிலோ கிராமிலிருந்து 180.3 கிலோ கிராமாக அதிகரித்துள்ளது. நிகர பயிரிடும் பரப்பானது 118.75 மில்லியன் ஹெக்டேராக 1950-51இல் இருந்தது 140.13 மில்லியன் ஹெக்டேராக 2014-15ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. மொத்த பயிரிடும் பரப்பானது இதே ஆண்டுகளில் 131.89 மில்லியன் ஹெக்டேராக 198.36 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது போன்ற போக்குகள் காணப்பட்டாலும் அதிக வேலைவாய்பினை (2017-18ஆம் ஆண்டில் 44 விழுக்காடு) அளிக்கக்கூடிய வேளாண்மைத்துறையானது 14 விழுக்காடு மட்டுமே ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்கிறது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும்.

வேளாண்மை செய்பவர்களை நில பரப்பில் சாகுபடி செய்யும் ஏக்கர் அளவினைப் பொருத்து பிரிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு குறைவான அளவில் சாகுபடி செய்பவர்களை குறு விவசாயிகள் எனவும், 1-2 ஏக்கர் சாகுபடியாளர்களை சிறு விவசாயிகள் எனவும், 2-4 ஏக்கர் சாகுபடியாளர்களை அரை-நடுத்தர விவசாயிகள் எனவும், 4-10 ஏக்கர் சாகுபடியாளர்களை நடுத்தர விவசாயிகள் எனவும், 10 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்பவர்களை பெரு விவசாயிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதில் 2015-16ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி குறு விவசாயிகள் மொத்த விவசாயிகளில் 68.45 விழுக்காடாக இருக்கின்றனர் (1970-71ஆம் ஆண்டு 50.98 விழுக்காடு) இவர்கள் மொத்த சாகுபடி பரப்பில் 25.66 விழுக்காடு அளவு பெற்றுள்ளனர். 0.57 விழுக்காடு உடைய பெரு விவசாயிகள் சாகுபடி பரப்பில் 9.68 விழுக்காட்டினைப் பெற்றுள்ளனர் (1970-71ஆம் ஆண்டு இது 3.9 விழுக்காடு மற்றும் 30.87 விழுக்காடு என்று முறையே காணப்பட்டது). மெத்த விவசாயிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பங்கானது 86 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. கான் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் (செப்டம்பர் 2020) வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் 72.3 விழுக்காடு விவசாயிகள் 5 ஏக்கருக்கு குறைவாக வைத்துள்ளனர், 27.7 விழுக்காடு விவசாயிகள் 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ளனர் என்கிறது. குறிப்பாக, இந்தியாவின் வடமேற்கு பகுதி மாநிலங்களில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் 46.4 விழுக்காடு என்றும் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் 85.6 விழுக்காடு 5 ஏக்கருக்கு கீழ்உள்ள விவசாயிகள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இந்தியாவில் சாராசரி வேளாண் சாகுபடி அளவானது 2.28 ஹெக்டேராக 1970-71இல் இருந்தது 2015-16ஆம் ஆண்டு 1.08 ஹெக்டேராக குறைந்தது. அனைத்து வகையான விவசாயிகளிடமும் இவ்வீழ்ச்சி அறியப்படுகிறது. குறிப்பாக, குறு விவசாயிகளின சாகுபடி பரப்பு 0.40 ஹெக்டேராக 0.38 ஹெக்டேராக இவ்வாண்டுகளில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் வேளாண்மையிலிருந்து பெறும் சாராசரி ஆண்டு வருமானமானது குறுவிவசாயிகள் ரூ.22142ம், சிறுவிவசாயிகள் ரூ.16366ம், நடுத்தர விவசாயிகள் ரூ.11346ம், பெரு விவசாயிகள் ரூ.34941ம் பெருகின்றனர். இது பிற தொழில்களில் ஈட்டுகிற ஆண்டு வருமானத்தைவிடக் குறைவானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையினால் 47 விழுக்காடு விவசாயிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். வேளாண்மை மூலம் குறைவான வருமானம், உள்ளீட்டுச்செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பது, இயற்கை சீற்றங்கள், வேளாண் உற்பத்திக்கு போதுமான விலையின்மை போன்ற காரணங்களினால் வேளாண் தொழிலிருந்து சுமார் 64 மில்லியன் பேர்கள் 2004-05 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கிடையே விடுபட்டு வேளாண்சாரா தொழிலினை நோக்கி சென்றுள்ளனர். 1980-81 மற்றும் 2010-11ஆம் ஆண்டுகளுக்கிடையே 91 மில்லியன் நிலமற்ற விவசாயிகளாக உருவெடுத்துள்ளனர். மொத்த வேளாண்மையில் ஈடுபடுவோரில் 1951ஆம் ஆண்டு 28 விழுக்காடாக இருந்த வேளாண் கூலிகள் 2011ஆம் ஆண்டு 54.6 விழுக்காடாக அதிகரித்துள்ளனர்.

siragu 2020 india velaan1

இந்த நிலையில்தான் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (இந்தியா தன்னிறைவு அடைதல்) என்பதை இந்தியப் பிரதமர் அன்மையில் அறிவித்தார். இதன் முக்கிய அங்கமாக வேளாண்மையில் சுயசார்பு எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி வேளாண் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நல்ல விலைகிடைக்கச் செய்தல், தானியக்கி கிடங்குகளை தனியார் துறைமூலம் வலுப்படுத்துதல், வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற சீர்திருத்தங்களை முன்வைத்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசானது மூன்று முக்கிய வேளாண் சீர்திருத்த மசோதாக்களை ஜூன் 2020இல் கொண்டுவந்து, அவற்றை செப்டம்பர் 2020இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுச் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. அச்சட்டங்கள்,

1. வேளாண்மை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வாணிபச் சட்டம்

2. வேளாண் விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்தச் சட்டம்.

3. அத்தியாவசியப் பொருட்கள திருத்தச்சட்டம்

இச்சட்டங்கள் மூன்று முக்கியக் கூறுகளை உள்ளடக்கியவை: அவை வேளாண் உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல், சேமித்து வைத்தல்.

இச்சட்டம் தொடர்பான அரசின் நிலைப்பாடு யாது என்பதை பார்க்கலாம்.

வேளாண்மை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வாணிபச் சட்டம்:

இந்தியாவில் வேளாண் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சிறு, குறு விவசாயிகளாவார்கள். இவர்களிடம் வேளாண்மையில் முதலீடு, புதிய முறையிலான சாகுபடி செய்தல், புதிய விதைகளைப் பயன்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்றவைகள் நடைமுறையில் இல்லை. இந்த நிலையினைப் போக்க வேளாண் சட்டம் 2020 ஒப்பந்தச் சாகுபடி முறையினைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெரிய வேளாண்வாணிப நிறுவனங்களுடன் விவசாயிகள் பயிர்செய்வதற்கு முன்பு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு ஒப்புக்கொள்ளப்ட்ட விலைக்கு வேளாண் பொருட்களை அவர்களிடம் விற்று பயன் பெறமுடியும். மேலும் இதில் இடைத்தரகர்கள் பங்கு முற்றிலுமாக ஒழிக்கப்படும், வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதலினால் ஏற்படும் இடர்களைத் தவிர்கவும், நேரடியான விற்பனைக்கும் வழிவகை செய்கிறது. இதுபோன்ற முறை இந்திய விவசாயத்தில் புதிதல்ல, ஏற்கனவே கரும்பு, பார்லி போன்ற பயிர்களில் இதுபோன்ற ஒப்பந்த சாகுபடி முறை என்பது பரவலாகக் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம் முறையினால் இடைத்தரகர்களை ஒழிக்கவும் விவசாயிகளுக்கு பரந்த நிலையிலான வாய்புகளை உருவாக்கித்தரவும் முடியும்.

வேளாண் விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்தச் சட்டம்:

இந்தியாவில் வேளாண் சந்தைகள் முகவர்கள், வணிகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) என்கிற முறைப்படுத்தப்பட்ட மண்டிகளில் இவர்களின் ஆதிக்கத்தினால் வேளாண் பொருட்களுக்கான சரியான விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பினைச் சந்திக்கின்றனர். மண்டிகளில் உரிமம் பெற்ற வணிகர்களே வேளாண் பொருட்களை வாங்க முடியும். இதில் வணிகர்களிடையே மறைமுகமான புரிந்துணர்வினால் குறைவான விலைக்கு வேளாண் பொருட்களை வாங்கி அதிக லாபம் பெறுகின்றனர். அரசின் முக்கிய குறிக்கோளாக விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்குதல் இருப்பதால் இதனை அடைய வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வது ஒருவழியாகக் கருதப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை ஏபிஎம்சி மண்டிகள் தவிர்த்து வெளி மண்டிகளிலும்; விற்பனை செய்ய வழிவகை செய்கிறது. தாங்கள் விரும்பும் விலை கிடைக்கும் சந்தைகளில் இந்தியாவில் எங்கும் விற்க தடையற்ற நிலையினை உருவாக்கித் தருகிறது. எபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே விற்கப்படும் போது, அங்கு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படாததால், வணிகர்கள் அதிக விலைகொடுத்து வேளாண் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் புதிய வேளாண்வாணிப நிறுவனங்கள் உருவாகவும், போட்டிகளை உண்டாக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்பு உண்டு. மத்திய வேளாண்துறை அமைச்சர் இச்சட்டத்தினால் விவசாயிகள் சந்தைகளை நோக்கி சென்றது போக வணிகர்கள் நேரடியாக விவசாயிகளிடம் சென்று அவர்களின் பொருட்களை அறுவடை செய்யக்கூடிய பகுதியிலேயே கொள்முதல் செய்யக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளர்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம்

இந்தியாவில் உற்பத்தியாகும் தோட்டப்பயிர்களில் 15 விழுக்காடு மட்டுமே குளிர்கிடங்குகளில் பாதுகாக்கப்படுகிறது. அதிக அளவிலான உணவுதானியங்கள், பருப்பு வகைகள் போதுமான கிடங்கு வசதி இல்லாததால் காற்று, மழை, பூச்சிகளாலும் 30 விழுக்காடு உற்பத்திப் பொருட்கள் வீணாகிறது. இதனால் மக்களுக்கு தேவையான உணவு-பருப்பு வகைகள் பற்றாக்குறை ஏற்படுகிறது, விலையும் அதிகரிக்கிறது. எனவே தனியார் கிடங்குகளை ஊக்குவிக்கவும், வேளாண் பொருட்கள் உற்பத்தி காலங்களில் கொள்முதல் செய்து கிடங்குகளில் சேமித்து வைக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. உணவு பொருட்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகள் மற்றும் காலங்களில் உணவு தானிய கிடங்கிலிருந்து எடுத்து இவற்றைச் சரிசெய்ய இயலும். மேலும் கடந்தகாலங்களில் வேளாண் விவசாயிகள் மட்டுமே வேளாண் பொருட்களை கையிருப்பாக வைத்திருக்க முடியும் என்று இருந்ததை தளர்வு செய்து எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வெங்காயம், உள்ளிட்டவற்றை இருப்பு வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் வேளாண்வாணிப நிறுவனங்களும் கையிருப்பாக வைத்துகொள்ள வழிவகை செய்திருக்கிறது. உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல், சேமித்து வைத்தல், தேவையான இடங்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புதல், போன்ற செயல்பாடுகளுக்கு அரசு அனுமதிக்கிறது. அசாதாரண சூழலில் மட்டுமே இதில் அரசு தலையிடும் என்கிறது. இச்சட்டத்தினால் வேளாண்மைத் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மலர் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, தோட்டப்பயிர்கள், காய்கறிகள், விதை மேம்பாடு, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிக அந்நிய நேரடி முதலீட்டைப் பெற முடியும். இதன் வழியாக இந்தியாவின் வேளாண்மை சந்தை உலகளவில் விரிவடையும். இந்தியாவில் சேமிப்புக்கிடங்குகள் பெருகுவதால் வீனாகும் வேளாண் பொருட்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மேற்கண்ட சட்டங்கள் வழியாக வேளாண் சந்தையில் அதிக போட்டியினை உருவாக்கி இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாத்து விவசாயிகளுக்கு நல்ல விலையினை பெறுவதற்கான வழிவகைகளை இச்சட்டங்கள்; செய்துள்ளதாக அரசு குறிப்பிடுகிறது. இச்சட்டங்களால் வேளாண்மைக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் வழிகாணப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு எதிராக விவசாய சங்கங்களும் சில மாநில அரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு போராடுகின்ற போக்கு தற்போது காணப்படுகிறது.

விவசாயிகள் எதிர்பதற்கான காரணங்கள்:

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களால் வேளாண் துறையில் தனியார் துறை கோலோச்சுகிற வாய்ப்புகள் அதிகம். பெரிய வேளாண்வாணிப நிறுவனங்கள், வேளாண் பொருட்களைப் பதப்படுத்துதல், சேமித்து வைத்தல், பகிர்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போனற செயல்பாடுகளை உள்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் அதன் எல்லையினை விரிவுபடுததும். இதனால் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கும். இச்சட்டத்தினால் வேளாண் பொருட்களை விவசாயிகள் இந்தியாவின் எப்பகுதிக்கும், உள்ளூர் மண்டிகளைத்தாண்டி எங்கும் விற்பனை செய்ய வழிவகுத்துள்ளதாக அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தியாவில் 2 ஏக்கருக்கு கீழ் இருக்கும் சிறு, குறு விவசாயிகள்,வேளாண் பொருட்களின் உற்பத்தி அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் இந்த நிலையில் குறிப்பிட்ட எல்லையைக் கடந்து பொருட்களை விற்பனை செய்வதினால் போக்குவரத்து செலவு மற்றும் பல்வேறு இடர்கள் குறுக்கிடும் என்பதால் இதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது.

ஒப்பந்த முறையிலான சாகுபடிமுறையில் வேளாண்வாணிப நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படும் போது அதனை தீர்த்துவைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் பெரும் வேளாண் வாணிப நிறுவனங்களுக்கு ஆதரவான நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றை தீர்க்க கீழ்மை நீதிமன்றத்திலிருந்து தொடங்கி தீர்வினைப் பெறமுடியும் என்கிறது. இச்சச்சரவு தொடர்பாக பாதகமான தீர்ப்பு வரும்போது ரூ.25000 முதல் ரூ.10 லட்சம் வரை தண்டம் செலுத்த வேண்டி இருக்கும் எனவே அனைத்து வகையான விவசாயிகளும் இவற்றை அணுக அச்சமடையலாம், நீதிமன்ற செலவுகள் அதிகம் ஆகலாம் என்பதால் இவ்வழியினை தவிற்க வேண்டி வரும். மேலும் இந்த ஒப்பந்தத்தை மறுவடிவமைக்கவும் அல்லது விலக்கிக்கொள்ளவும் வழிவகையுள்ளதால் விவசாயிகள் இந்த முறையினால் பெரும் பாதிப்படைவார்கள் என்பதும் பெரும் வேளாண்வாணிப நிறுவனங்களுக்கு இது சாதகமான நிலையினை ஏற்படுத்தித் தரும் என்பதும் தெளிவாகிறது.

உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பார்லியை பயன்படுத்தி சாராய உற்பத்தி செய்யும் நிறுவனம், குறைந்த பட்ச ஆதார விலையைவிட ரூ.400 குவிண்டாலுக்கு கொடுத்து விவசாயிகளிடம் பார்லியை வாங்கிவந்தது, இந்த நிலையில் இவ்வதிக விலையினை நம்பி விவசாயிகள் பலர் பார்லியை பயிர் செய்யத் தொடங்கினர் இதன் விளைவு அதிக அளவில் பார்லி உற்பத்தியானது. இதனால் தேவைக்கு அதிகமான உற்பத்தியினால் விலை குறைந்தது, சாராய நிறுவனம் தரமான பார்லியை மட்டுமே வாங்கியது, இதனால் பல விவசாயிகள் வந்த விலைக்கு விற்று பெரும் இழப்பினை சந்தித்தனர். சில மாநிலங்களில் கரும்பு சாகுபடி செய்தலில் ஒப்பந்த முறை நடைமுறைபடுத்துகிறது. இதற்கு சர்க்கரை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் அனைத்து உதவிகள் செய்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கரும்பு வெட்டுவதற்கான ஆணையைத் தருவதில்லை இதனால் கரும்பின் எடை குறைந்துவிடுகிற நிலை ஏற்படுகிறது, மேலும் கரும்பிற்கான பணத்தினைக் கொடுக்காமல் இதன் நிலுவைத்தொகை பல ஆண்டுகளாக இழுத்தடிக்கிற நிலையினைக் காண முடிகிறது. ஒப்பந்த வேளாண் முறையில் விவசாயிகளுக்கும் பெரும் வேளாண்வாணிப நிறுவனங்களுக்கும் நேரடியான தொடர்பு இருக்காது. காரணம் இந்த நிறுவனங்கள் அதன் பணியாளர்கள் மூலமாகவே விவசாயிகளை அனுகுவார்கள். இந்த நிலையினால் விவசாயிகள் தங்களின் குறைபாடுகளை அல்லது கோரிக்கைகளை நேரடியாக முன்வைக்க முடியாது.

- தொடரும்


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2020 இந்திய வேளாண் சட்டங்களும், அதன் வெளிப்பாடுகளும்”

அதிகம் படித்தது