மார்ச் 6, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் வேளாண்மையும்

பேரா.அன்பழகன்

Feb 6, 2021

siragu 2021 budjet3

இந்தியாவில் ஒவ்வெரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கையினை மத்திய அரசு சமர்ப்பித்து வருகிறது. மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிலர்மலா சீதாராமன் அவர்களால் 01.02.2021 அன்று நாடாளுமன்றத்தில் 2021-2022 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பு என்பது கோவிட்-19 பெருந்தொற்றினால் பொருளாதாரம் பல நிலைகளில் சரிவினை எதிர்கொண்டுள்ள நேரத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது என்து குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1980களின் இறுதியில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்ட சிக்கல்களை சரிசெய்யும் விதமாக 1991ஆம் ஆண்டு பொருளாதார வல்லுநரும் முன்னால் பிரதமருமான திரு. மன்மோகன்சிங் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நாட்டின் பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. அதன் விளைவு இந்தியப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியினை 1990இன் இறுதியிலும் 2000-களிலும் எட்டியது. 2008ல் ஏற்பட்ட உலக நிதிசிக்லால் திரு ப.சிதம்பரம் அவர்கள் 2008-2009ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். வேலைவாய்ப்பு பெருகுவதற்கும்,பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும்,கிராமப்புற கட்டமைப்பினை வலுப்படுத்தவும் முன்னுரிமை அளித்து உலக நிதிசிக்கலால் இந்தியா மீது ஏற்பட இருந்த தாக்கத்தினைக் குறைத்தார். மேற்கண்ட இவ்விரண்டு நிதிநிலை அறிக்கைகளைவிட உலக பொருளாதாரம் கோவிட்-19 என்னும் பெரும்தொற்றினால் கடந்த ஓர் ஆண்டுகளாக உலகநாடுகள் அனைத்துமே பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த வேலையில் தற்போது 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75-ஆண்டினைப் போற்றுகிற வேலையிலும் 8வது மக்கள் தொகை கணகெடுப்பும் நடைபெற உள்ள நிலையிலும் இந்த நிதிநிலை அறிக்கை பெரும் எதிர்பார்ப்புடன் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுரையில் நிதிஅமைச்சர் அவர்கள்

“இயற்றலும் ஈட்டடுலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது மிகவும் பெருமை மிக்க ஒன்றாகும்.

நிதிநிலை

2021-2022ஆம் ஆண்டின் மொத்த செலவு ரூ.34.83 லட்சம் கோடியாகும் (2020-2021ஆம் ஆண்டு ரூ.34.50 லட்சம் கோடி) நிதி பற்றாக்குறை 6.8 விழுக்காடாகும் இது கடந்த ஆண்டைவிட 2.7 விழுக்காட்டு புள்ளிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இச்செலவானது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.6 விழுக்காடாகும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கங்கள் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல்,சுகாதார பணிகளை வலுப்படுத்துதல்,வேலைவாய்ப்பினை உருவாக்குதல்,வேளாண்துறையினை மேம்படுத்துவது போன்றவைகள் ஆகும்.

siragu 2021 budjet

ஆதாரம்: இந்திய அரசு,“2021-2022 நிதிநிலை அறிக்கை,”நிதி அமைச்சகம்,புதுதில்லி.

துறைவாரியாக பார்க்கும்போது போக்குவரத்துத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கடுத்து கிராமப்புற மேம்பாடு,வேளாண்மை,கல்வி,சுகாதாரம்,தொழிதுறை போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிடும் போது கிராமப்புற மேம்பாட்டிற்கானது தற்போது ரூ.-0.21 லட்சம் கோடி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது (0.68 விழுக்காடு புள்ளி குறைந்துள்ளது). சுகாதாரத்துறைக்கு ரூ.-0.07 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது (0.25 விழுக்காடு புள்ளி குறைந்துள்ளது). மானியத்திற்கு அதிகஅளவாக ரூ.-2.6 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தகவல் தொடர்பு துறைக்கு கூடுதலாக ரூ.0.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (0.59 விழுக்காடு புள்ளி அதிகரிப்பு),போக்குவரத்து ரூ.0.14 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு (0.36 விழுக்காடு புள்ளி அதிகரிப்பு),கல்விக்கு கூடுதலாக ரூ.0.08 லட்சம் கோடி ஒதுக்கீடு (0.21 விழுக்காடு புள்ளி அதிகரிப்பு) செய்யப்பட்டுள்ளது.

மொத்த திட்ட செலவுமதிப்பீடு 3483236 கோடியில்; வேளாண்மைக்கு ரூ.148301 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது பங்கு அளவில் 4.25 விழுக்காடு ஆகும் (கடந்த ஆண்டைவிட சுமார் 3000கோடி அதிகரிப்பு). கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ.194633 கோடி ஒதுக்கீடு (கடந்த ஆண்டைவிட குறைப்பட்டுள்ளது). உரமானியம் ரூ.79530 கோடி (கடந்த ஆண்டைவிட குறைப்பு). போக்குவரத்து துறை 7 விழுக்காடு பங்கினையும்,கிராமப்புற வளர்ச்சி 5.6 விழுக்காடு பங்கினையும்,கல்விக்கு 2.67 விழுக்காடு பங்கினையும். சுகாதாரத்திற்கு 2.15 விழுக்காடு; பங்கினையும் மொத்த செலவீனத்தில் பங்கீடு பெற்றுள்ளது..

siragu 2021 budjet2

கோவிட்-19 என்னும் பெருந்தொற்றால் மத்திய அரசானது முழு அடைப்பினை நாடுமுழுவதும் கடந்த மார்ச் 2020இல் அறிவித்தது. இதனால் பெரும் வேலைஇழப்பும்,உற்பத்தி நிறுத்தம்,வருமான இழப்பு,போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இச்சமயத்தில் பிரதமமந்திரியின் கரிப் கல்யாண் யோஜனா மூலம் ரூ.2.76 லட்ச்சம் கோடி ஒதுக்கப்பட்டு இதன் வழியாக 800 மில்லியன் மக்கள் பயன்பெற்றனர். 80 மில்லியன் மக்களுக்கு எரிவாயு இலவசமாக வழங்கப்பட்டது. 400 மில்லியன் வேளாண் விவசாயிகளுக்;கும்,பெண்களுக்கும்,வயதானவர்களுக்கும்,ஏழைகளுக்கும் நேரடியான பணம் வழங்கப்பட்டது. அரசு இவ்வாறு பல்வேறு முயற்சிகளைக் கடந்த 10 மாதங்களாக எடுத்தன் விளைவு தற்போது இந்தியா பொருளாதாரத்தில் ஏ வடிவ மீட்சியினை அடைந்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் 10லிருந்து 11விழுக்காடு வளர்ச்சினை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா சுயசார்பினை எட்டுவதற்கான வழிவகையினை தற்போது அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

வரவு-செலவு திட்டத்தின் 6 முக்கிய முன்னெடுப்புகள்

  1. சுகாதாரம் – சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி ஒதுககீடு. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதற்கு ரூ.35000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆத்மனிர்பர் ஸ்வஸ்திய பாரத் யோஜனா (நோய் தீர்க்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) ரூ.64180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்றோ ஊட்டச்சத்து,சுத்தமான குடிநீர்,தூய்மை இந்தியா போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  2. உள்கட்டமைப்பு – இதனை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் 13 துறைகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எரிவாயு விநியோகம் செய்ய குழாய்வழி இணைப்பு,ரயில் போக்குவரத்து,சாலைப் போக்குவரத்து,விரைவு சாலைகள்,கிராமப்புற கட்டமைப்பு,மின்சாரம்,நீர்வழிப் போக்குவரத்து,துறைமுகம் பொன்றவைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  3. இயைந்த வளர்ச்சி – வேளாண் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்தல்,வேளாண் கடனை அதிகரித்தல்,கிரமாப்புற கட்டமைப்பிற்கான நிதி அதிகரிப்பு,பசுமை திட்ட செயல்பாடு,நுண்ணீர் பாசனம்,வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல்,மீன்பிடி தொழிலை மேம்படுத்துதல்,புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
  4. மனித மூலதனத்தினை வலுவடைய செய்தல் – பள்ளிக்கல்வி,உயர்கல்வி,திறனை மேம்படுத்த பயிற்;சி அளித்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  5. ஆராய்ச்சி மற்றும் வளாச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் – தேசிய ஆராய்ச்சி அமைப்பினை மேம்படுத்துவது,தேசிய மொழி பெயர்பு இயக்கம்,வானவியல் ஆய்வுகள்,கடல்சார் ஆராய்ச்சி போன்றவைகளுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.
  6. குறைந்தபட்ச அரசு மற்றும் உச்ச அளவான ஆளுகை –மருத்துவம்,நீதிதுறை,சமரச வழிமுறைகளுக்கான ஏற்பாடுகள்,டிஜிட்டல் கணக்கெடுப்பு போன்றவைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையும் கிராமப்புற மேம்பாடும்

இந்தியாவில் கிராமப்புறங்களில் சுமார் 70 விழுக்காடு மக்கள் வசிக்கின்றனர் ஆனால் இந்திப் பொருளாதாரத்திற்கு இதன் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. வேளாண்மையைப் பொருத்த அளவில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த தொழிலாளர்களில் 54.6 விழுக்காட்டினர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். 2018-19ஆம் ஆண்டு இந்திய தொழிலாளர் இடைவெளியிலான கணக்கெடுப்பின்படி மொத்த தொழிலாளர்களில் வேளாண்மையில் 44 விழுக்காட்டினர் ஈடுபடுகின்றனர் என்கிறது. இது சுமார் 10விழுக்காட்டு புள்ளிகள் இவ்விரு ஆண்டுகளில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2019-2020 ஆண்டில் மொத்த மதிப்பு கூட்டலின் அடிப்படையில் வேளாண்மையின் பங்களிப்பு 17.8 விழுக்காடு ஆகும் இதுவே மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில் 14 விழுக்காடு பங்களிப்பாக உள்ளது. ஏறக்குறைய பாதியளவு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ள வேளாண்மை மிகவும் குறைவான அளவிற்கே இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பினை செய்கிறது. திட்டகாலங்களில் வேளாண்மைக்கான அரசின் கவனம் குறைந்தது,இயற்கை சீற்றம்,சுற்றுப்புற சூழல் பாதிப்பு போன்றவைகளால் வேளாண்மைத்துறை தொடர்ந்து வீழ்ச்சியினை சந்தித்து வருகிறது. மேலும் வேளாண்மை சாத்தியமானதாக இல்லை என்ற நிலையினால் பெருமளவு விவசாயிகள் வேளாண்சாரா தொழில்களுக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே வேளாண்மைக்கான முக்கியத்துவம் வரும் காலங்களில் அளிக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போதைய நிதிநிலை அறிக்கை வேளாண் வளர்சிக்கான சில முன்னெடுப்புகளை செய்துள்ளது.

கிராமப் பகுதியில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராம அபாடி மற்றும் மேப்பிலி பற்றிய ஆய்வு (Survey of Village Abadi and Mapping with Improvised Technology in Village Area-  SVAMITA Scheme) 24 ஏப்ரல் 2020 பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களின் நிதி நிலமையினை நிலைநிறுத்துதல்,நில அளவை துள்ளியமாக அளவிடுதல்,கிராமப்புற கட்டமைப்பினை நிலைநிறுத்துதல். சொத்து தொடர்பான சச்சரவுகளை சட்டப்பூர்வமாக அனுகி குறைத்தல். இதற்காக 1241 கிராமங்களுக்கு இத்திட்டத்தினை 2021-22ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது இதற்கு 1.80 லட்சம் நில உடமையாளர்களுக்கு அட்டை வழங்கப்பட உள்ளது. கிராமப்புற கட்டமைப்பினை மேம்படுத்த ரூ.30000 கோடியிலிருந்து ரூ.40000 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நண்ணீர் பாசன நிதியின் வைப்பாக ரூ.5000 கோடி தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் உருவாக்கப்பட்டது தற்போது மேலும் ரூ.5000 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளது. இதன் வளர்ச்சிக்கு ரூ.10000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையும் அதைச் சார்ந்த உற்பத்திக்கு மதிப்பு கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்து அதற்கான ஏற்றுமதியினை “பசுமை செயல்பாட்டு திட்டம்”வழியாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது தற்போது இதில் தக்காளி,வெங்காயம்,உருளைக்கிழங்கு பொன்றவைகளையும் கொண்டுவரப்பட்டுள்ளது இதனால் மொத்த அழுகக்கூடிய வேளாண் விளைபொருட்கள் 22ஆக உயர்ந்துள்ளது. தேசிய ஆன்லைன் விளைபொருள் விற்பனை சந்தையில் (E-NAM) மொத்தம் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் இதனால் ரூ.1.14 லட்ச்ம் கோடி மதிப்புள்ள பொருட்கள் இந்த சந்தை வழியாக பயன்பெறுகிறது. இதில் மேலும் 1000 மேற்பட்ட மண்டிகளை இந்த சந்தையின் கீழ் இணைக்கப்பட உள்ளது. அரசு விவசாயிகளின் நலத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும் எனவே குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு தரப்படுகிறது என்றும்,இந்த விலை இனியும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இதனை சார்ந்த ஏபிஎம்சி மண்டிகளை மேம்படுத்த ரூ.1லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து ரூ.1.72 லட்ச்சம் கோடி மதிப்பிலான விளைபொருட்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டு கோதுமைக்கான கொள்முதல் மூலம் 43.36 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 7.79 லட்சம் பயனாளிகள் அதிகமாகும். இந்த கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் ரூ.75060 கோடி கொடுக்கப்பட்டுள்ளது இது அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ.12000 கோடி அதிகமாகும். இதேபோல் நெல் கொள்முதல் மூலம் 154 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் இது அதற்கு முந்தைய ஆண்டை விட 25 லட்சம் பயனாளிகள் அதிகரித்துள்ளனர். இதற்கான கொள்முதலுக்கு ரூ.172752 கோடி கொடுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட ரூ.30800 கோடி அதிகமாகும். பருத்தி கொள்முதல் மூலம் 18.26 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் இது கடந்த ஆண்டை விட 3 லட்சம் பயனாளிகள் குறைவு. இதற்கான கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையின் அடைப்படையில் ரூ.25974 கோடி கொடுக்கப்பட்டது ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டைவிட சுமார் ரூ.2500 கோடி குறைவாகும். சனல்,பருப்பு வகைகள்,எண்ணெய்வித்துக்கள் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் அளவு குறைந்துள்ளது.

பருத்தி பொருட்களின் மீதான சுங்கவரியினை 0 லிருந்து 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது,கச்சாபட்டு,பட்டு நூலிழைகளுக்கு சுங்கவரி 10 லிருந்து 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவற்;றால் உள்ளுர் உற்பத்தி பெருகும் விவசாயிகள் அதிக பயன்பெறுவார்கள். ஏத்தனால் எரிசாராயத்தின் மீதான கடைநிலை சலுகைகளை திரும்பப்பெறுவதால் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் இதற்கான தேவைகள் சந்தையில் அதிகரிக்க வாய்புள்ளது. சோளத் தவிடு,அhசி தவிடு,புண்ணாக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவுப்பொருட்களுக்கு 15 விழுக்காடு சீராக விதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் கால்நடை வளர்ச்சி மேம்படும்.

வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி

வேளாண்மையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பு முக்கியன நோக்கமாகும் இவற்றை மேம்படுத்துவதற்கு வேளாண் கட்டமைப்புகளின் உடனடி தேவையைக் கணக்கில் கொண்டு இவற்றை வலுப்படுத்த வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (வரி) (Agricultural Infrastructure and Development Cess – AIDC) இந்த நிதிநிலை அறிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது இது உடனடியான பிப்ரவரி 2, 2021 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக அரசு டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.4ம் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ2.50ம் செஸ் விதிக்கப்படுகிறது. இதனால் இவ் எரிபொருட்களுக்கான அடிப்படை கலால் வரி (தற்போது ரூ.1.4 மற்றும் ரூ.1.8 லிட்டருக்கு டீசல் மற்றும் பெட்ரோலுக்கு முறையே வரி விதிக்கப்படுகிறது) மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரியினை (தற்போது ரூ11,ரூ.8 டீசல் மற்றும் பெட்ரோலுக்கு முறையே வரி விதிக்கப்படுகிறது) குறைத்து நுகர்வோர்களுக்கு சுமை ஏற்படுத்தாமல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர இந்த செஸ் தங்கம்,வெள்ளி,ஆல்கஹால்,கச்சா பனை எண்ணெய்,கச்சா சோயா பீன்ஸ்,சூரியகாந்தி எண்ணெய்,ஆப்ஸ்,நிலக்கரி பழுப்பு நிலக்கரி,சில வகை உரங்கள்,பட்டாணி,காபூல் கொண்டக்கடலை,கொண்டக்கடலை,பருத்தி ஆகியவற்றிற்கும் இந்த செஸ் விதிக்கப்படும். இந்த செஸ் மூலம் பெறப்படும் வருமானத்தை வேளாண் கட்டமைப்பின் மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்கிறது நிதிநிலை அறிக்கை.

பிரதம மந்திரியின் விவசாயிகளின் நலனை போற்றும் மேம்பாட்டு நிதி

பிரதம மந்திரி கிசான் சமமன் நிதி என்கிற பிரதம மந்திரி விவசாயிகளின் நலனை போற்றும் மேம்பாட்டு நிதிக்கு ரூ.65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டும் இதே அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6000 நிதி அளிக்கப்படுகிறது. இது சமமாக ரூ.2000 வீதம் நான்கு காலாண்டுகளுக்கு நேரடியக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 40 கோடி விவசாயிகள் இதனால் பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தினால் விசாயபணிகள் துவக்கப்படும் போது ஏற்படும் உள்ளீட்டுச் செலவுகளை எதிர்கொள்ள இது பெருமளவு உதவும். வேளாண் காப்பீட்டு திட்ட நிதி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இதன் வழியாக குளிர்பதன கிடங்குகளை உருவாக்குதல்,அறுவடைக்கு பிந்தைய நிலையில் அதற்கான மேளாண்மை கட்டமைப்பை அமைத்தல் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் காப்பீடு திட்டத்திற்கு ரூ.16000கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டுகளில் ரூ.15307 கோடியும்,அதற்கு முன்பு ரூ.15695 கோடியாகவும் இருந்தது.

பிரதமர் அன்னாததா ராய் பாதுபகாப்பு பிரச்சாரம் (Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan  – PM AASHA) திட்டமானது விவசாய மேம்பாட்டினை உறுதி செய்கிறது இதனால் விவசாயிகள் உரிய விலையில் தங்கள் பொருட்களை விற்பனை செய்;வும்,உற்பத்தி திறனை மேம்படுத்தவும்,உற்பத்தி செலவினை குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டடுள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானம அதிகரிக்கும். பிரதம மந்திரியின் கிராமப்புற சாலைகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ15000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டு ரூ.13706 கோடியாக இருந்தது. அதற்கு முன்பு ரூ.19500 கோடியாகும். கடந்த ஆண்டு 1.19 லட்சம் கிமீ புதிய சாலைகள் இணைப்பும் 58000 கிமீ மேம்படுதத்தப்பட்ட சாலைகள் இணைப்புகளும் நடந்தேரியுள்ளளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.73000 கோடி ஆகும் இது கடந்த ஆண்டைவிட அதிக அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.111500 கோடியும் அதற்கு முன்பு ரூ.61500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வேளாண்மைக்கான கடன் ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தவிர ரயில் கட்டமைப்பை மேம்படுத்துவது (ரூ.1.1 லட்சம் கோடி),சாலை போக்குவரத்து,நீர்வழிப் போக்குவரத்து,துறைமுக மேம்பாடு போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றால் வேளாண்மைத் துறை மேலும் வளர்ச்சி அடையும் ஆனால் இது உடனடியான வேளாண்மை வளர்சசிக்கான தேவைகளை பூர்த்தி செய்யாது. ஜலஜீவன் இயக்கத்திற்கு ரூ.50011 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு இது ரூ.11000 கோடியாகவும் அதற்கு முன்பு ரூ.11500 கோடியாகவும் இருந்தது.

தொடரும் வேளாண் துறையின் சிக்கல்கள்

பெருந்தொற்றினால் வேலைஆட்கள் கிடைக்காமை,போக்குவரத்து தடை,தொழில் உற்பத்தி நிறுத்தம்,வேளாண் விளைபொருட்களுக்கான தேவை குறைந்தது,உற்பத்தி செலவு அதிகரிப்பு,ஏற்றுமதி பாதிப்பு,போன்றவைகளால் பெருமளவு வேளாண் துறை பாதிக்கப்பட்டது. தற்போதும் அது முழு அளவில் மீண்டு வரவில்லை. வேளாண் சீர்திருத்தம் என்ற போர்வையில் மூன்று சட்டங்கள் தற்போது கொண்டுவரபட்டுள்ளது இதனால் சிறு,குறு விவசாயிகள் அதிக அளவில் பாதிப்படைவார்கள். இச்சட்டங்களினால் பெருநிறுவனங்கள் லாபமடையும் ஆனால் விவசாயிகளுக்கு போதுமான விலைபாதுகாப்பு வழங்கப்படவில்லை. தற்போது அளிக்கப்படும் 1.5 மடங்கு வேளாண்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்பது சரியானதாக இல்லை காரணம் A2+ FL + 50% என்ற அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படுகிறது. திரு.எம்.எஸ் சாமிநாதன் பரிந்துறையான C2 + 50% நடைமுறைபடுத்தவில்லை இதனால் வேளாண் பொருட்களுக்கு இக்குழுவின் பரிந்துறையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படவேண்டும். மேலும் இவ் ஆதரா விலையினால் பஞ்சாப். ஹரியானா,உத்திரப் பிரதேசம் (மேற்கு பகுதி) போன்ற மாநிங்களில் பெருமளவு விவசயிகள் பயனபெற்றுவருகின்றனர்.

வேளாண் வியாபாரிகள் பஞ்சாப்,ஹரியானா தவிற்று பிற மாநிலங்களில் கோதுமை,நெல் ஆகியவற்றை குறைந்த விலையில் கொள்முதல் செய்து அவற்றை மேற்கண்ட மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்று நல்ல லாபம் பெறுகின்றனர் எனவே இவ் ஆதாரவிலை இந்தியாவின் அனைத்து மாநில விவசாயிகளும் பயன்பெற வழிவகைசெய்ய வேண்டும். பெருமளவு வேளாண் தோட்டப்பயிர்கள் குறிப்பிட்ட காலங்களில் அதிக விளைச்சளைத் தருகிறது அப்போது சந்தையின் மிகவும் குறைந்த விலைக்கு விற்பதாலும் அவற்றை சேமித்து வைக்க முடியாததாலும் பெரும் இழப்பினை வேளாண் விவசாயிகள் சந்திக்ககிற நிலை வருகிறது எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டல் பொருட்களாக தயாரிக்கும் திட்டத்தினை வகுத்தல் வேண்டும.; இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் இதனால் அயல் நாட்டு வர்தகத்தைப் பெருக்க முடியும் விவசாயிகளின் பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். பொதுவாக இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையைப் பெருக்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது ஆனால் சிறு,குறு விவசாயிகளின் நலன் பற்றி இடம்பெறவில்லை. விவசாய இடுபொருட்களுக்கான விலையினை முறைபடுத்த எந்த முன்னெடும் செய்யவில்லை,விவசாய பொருட்களின் விலை உத்திரவாதம் பற்றி தெளிவான நிலை இல்லை. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்திக்கான செலவுகளை திரும்பப்பெறுவதை உறுதிபடுத்த வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கை பொதுவாக வேளாண்மைக்கு நல்லது செய்வது போன்ற போக்கு காணப்பட்டாலும் அது உடனடியான விசாயிகளுக்கும் வேளாண் வளாச்சிக்கும் பயன் ஏற்படுவதற்கான வாய்பில்லை. இந்த போக்கினை நினைத்தால் தமிழ் திரைப்பட பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது அது,

“காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”; என்பதுதான்.

 


பேரா.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் வேளாண்மையும்”

அதிகம் படித்தது