சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாடு பூட்டி கல் செக்கு!

சா.சின்னதுரை

Jul 30, 2016

Siragu-ka-lchekku2

செக்கு மேட்டின் கிர்ர்.. கிர்ர்.. சத்தத்தை ரசித்தபடி பலகையில் அமர்ந்து மாடுகளை ஓட்டுகிறார் ஒரு பெரியவர். கல் செக்கில் பொறுமையாக வித்துகளை கிளறி எண்ணெய் ஆட்டுகிறார் சீனிவாசன். செக்கில் வழியும் எண்ணெயின் வாசனை காற்றில் பரவி அந்தப் பகுதி முழுவதையும் மணக்கச் செய்கிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய வழக்கொழிந்து போன மாடுகள் மூலம் கல் செக்கு இயக்கப்பட்ட பாரம்பரிய எண்ணெய் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் ஒரு நேர்க்காணல்.

மாடு பூட்டி செக்கு இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பதன் நோக்கம்?

சீனிவாசன்: என்னுடைய தாத்தா, பெரியப்பா எல்லோரும் மாடுகள் ஓட்டி கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்று தொழில் நடத்தி வந்தவர்கள். காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள், பாக்கெட் எண்ணெய் வரத்தால் கல் செக்கு எண்ணெய்க்கு மவுசு குறைந்துபோனது. 1980க்குப் பின்னர் கல் செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழிந்து எடுப்பது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. இப்போது சில இடங்களில் டிராக்டர், மின்சார இயந்திரங்களை கொண்டு கல் செக்கு இயக்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என பல பாதிப்புகளால் அவதிப்படும் மக்கள் தற்போது இயற்கை உணவு முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய விழிப்புணர்வு காரணமாக இயற்கை உணவுப்பொருட்களுக்கு மீண்டும் மவுசு உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மீண்டும் மாடுகள் பூட்டி கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி பண்ண முடிவெடுத்தேன். 85 வயதான எனது பெரியப்பா முத்தையா கல் செக்கு இயக்குவதில் நல்ல அனுபவம் உள்ளவர். அவரும் ஒப்புக்கொண்டார்.

Siragu-ka-lchekku3

கல் செக்கு எப்படி இயங்குகிறது?

சீனிவாசன்: ஒரே கல்லில் குடைக்காளான் வடிவில் செதுக்கி, கல்லின் நடுவில் ஆட்டு உரல் போன்று குழியைக் கொண்டிருக்கும். அக்குழியின் நடுவில் சுற்றிச்சுழல வாகை மரத்தில் இருந்து செய்யப்பட்ட உலக்கை பொருத்தப்படும். கொக்கி எனப்படும் மரத்தாலான ஒரு கம்பு அதை தாங்கி நிற்கும். அதன் கீழ்பகுதி நீண்ட கம்பாலான பலகையால் செக்கின் அடிவாரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பலகையில் அமர்ந்துதான் மாடுகளை பொருத்தி செக்கை இயக்குவோம். கல் செக்கு, உலக்கை எல்லாம் என் தாத்தா காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. திறந்தவெளியில் செக்கு மேடு அமைத்து, இரு காளை மாடுகளை பழக்கப்படுத்தினேன். செக்கின் குழியில் நாட்டு எள்ளை போட்டு அத்துடன் பனங்கருப்பட்டி சேர்த்து மாடுகளை இயக்கினால் எள்ளில் இருந்து நல்லெண்ணெய் உருவாகும்.

இயந்திர செக்கு எண்ணெய்க்கும் கல் செக்கு எண்ணெய்க்கும் என்ன வேறுபாடு?

சீனிவாசன்: இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து போய்விடும். அதனால்தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்வதற்காக பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்கிறார்கள். கல் செக்கை மாடுகள் மூலம் மெதுவாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துக்கள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் எள்ளுடன் சேர்த்து அரைக்கப்படும் கருப்பட்டி அதனை சமன்செய்துவிடும்.

Siragu-kal-chekku1

கல் செக்கு எண்ணெயின் நன்மைகள்?

சீனிவாசன்: கல் செக்கிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெயை வடிகட்டமாட்டோம். பித்தளையால் ஆன பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் காயவைத்தால் தானாகவே தெளிந்துவிடும். இதனால் அந்த எண்ணெய்களில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும். இயந்திர தயாரிப்பில் எண்ணெய்வித்து பொருட்களில் உள்ள சத்துக்களையும் வடிகட்டி விடுவார்கள். பாக்கெட்டுகளில் வரும் எண்ணெய் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். காரணம் ஒவ்வொரு கம்பெனிகளும் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள். அதனால்தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாங்குகின்றன.

கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாகவே இருக்கும். ஆனால், நல்ல வாசனையுடனும் ஒரு வருட காலத்துக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும். இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும். கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. ஒரு நாளுக்கு 28 லிட்டர் வரை மட்டுமே உற்பத்தி பண்ணமுடியும். 14 லிட்டர் எண்ணெயை அரைக்க நான்கு மணி நேரம் ஆகும். நல்லெண்ணெய் மட்டுமின்றி கடலெண்ணெய், தேங்காய் எண்ணெயும் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகிறது.

இன்று நாம் அனைத்து சமையல் பயன்பாட்டுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். செக்கில் ஆட்டப்படும் எண்ணெயை வடிகட்டும்போது, கசடுகள் மட்டும்தான் நீக்கப்படும். ஆனால் இந்த ‘ரீஃபைனிங்’ முறையில் கசடுகளுடன் சேர்ந்து சத்துக்களும் வடிகட்டப்படுகிறது. சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்தும்போது வெப்பம் தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறிவிடும். தற்போது புதிது புதிதான நோய்களுக்கு இது மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது.

எள்ளில் இருந்து எடுப்பதால் எள் எண்ணெய் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நாம் நல்லெண்ணெய் என்கிறோம். காரணம் அதிலிருக்கும் எல்லையில்லா நன்மையைக் கண்டு நல்லெண்ணெய் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். கல் செக்கு நல்லெண்ணெயில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், நார்சத்துக்கள் ஆகியவற்றுடன் தெரியாத பல சத்துக்களும் இவற்றில் இயற்கையாகவே கலந்திருக்கின்றன. இவை இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதுடன் இதயத்திற்கு உறுதி அளிக்க கூடியது. நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். கல் செக்கு எண்ணையை பயன்படுத்தும்போது சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும்.

உங்கள் கோரிக்கைகள்?

சீனிவாசன்: இது ஒரு குடிசைத்தொழில் என்பதால் அரசு மானியம் வழங்கினால் கல் செக்கு தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். நம் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை அரசு முன்வந்து ஊக்குவிக்க வேண்டும்’’ என்கிறார் சீனிவாசன்.

சீனிவாசன்: 94432 84469


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாடு பூட்டி கல் செக்கு!”

அதிகம் படித்தது