செப்டம்பர் 15, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

377 பற்றி ஒரு பார்வை !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 8, 2018

siragu 377 oru paarvai3

இந்திய உச்சநீதி மன்றத்தின் ஒரு முக்கியத் தீர்ப்பு செப்டம்பர் 6, 2018 வெளியானது. 158 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டம் பிரிட்டிஷ் கால ஆட்சியின் மூலம் கொண்டு வரப்பட்டச் சட்டம். ஓரினச் சேர்க்கைக்கு இந்தியாவில் இனி சட்டப் பூர்வமான அங்கீகாரம் உண்டு என்ற இந்த தீர்ப்பு, இந்தியா போன்ற மிக பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாட்டில் வரலாற்றுத் தீர்ப்பாகும். இயற்கைக்கு மாறாக உறவு எனும் விதியின் கீழ் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இன்று இந்த தீர்ப்பின் மூலம் இனி ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் இணைந்து வாழலாம் .

“consensual sex between adults in a private space, which is not harmful to women or children, cannot be denied as it is a matter of individual choice. section 377 results in discrimination and is violative of constitutional principles,”said the SC.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சரத் 377 ஓரினச் சேர்க்கையை தடை செய்வதாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதியரசர் R .F நரிமன், A M கான்வில்கர், D Yசந்திராசுட், இந்து மல்ஹோத்ரா என்ற ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை தந்துள்ளது பாராட்டத்தக்கது.

சமூகம் என்ன நினைக்கும் என்று தனிமனித உரிமையில் தேவையில்லாத கூறு. அவர்கள் ஒரே பாலினத்தவரோடு சேர்த்து வாழ விரும்பினால் அவர்கள் வாழலாம். “Social Morality cannot violate the rights of even one single individual, என்று தலைமை நீதிபதி மிஸ்ராவும், நீதியரசர் கான்வில்கர் இருவரும் கூறியுள்ளனர்.

நீதியரசர் மல்ஹோத்ரா இந்தச் சமூகம் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளது சிந்திக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் ஓரினச் சேர்க்கையாளர்களால் எதிர்பாலினத்தினரோடு சேர்ந்து வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ஏராளாமான வெளி வராத சோகங்கள் உண்டு. அவர்களை கட்டாயத்தின் பெயரில் எதிர்பாலினத்தினரோடு வாழ வைத்திடும் போது மிகப் பெரிய மன உளைச்சலையும் அவர்கள் சந்திக்கின்றார்கள்.

siragu 377 oru paarvai4

தனி மனித உரிமை (Right to Privacy ) என்பது உயிர் உரிமையில் வரும் (Right to life); அந்த உரிமை முழுதும் LGBT என அழைக்கப்படும் மக்களுக்கு உண்டு என்று மிகத் தெளிவாக இதனை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இந்திய உச்ச நீதி மன்றம் அங்கீகரித்துள்ளது.

2001 இல் Naaz Foundation என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், டெல்லி உயர் நீதி மன்றத்தை அணுகி சரத் 377 இல் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரியது, பின் தொடர் போராட்டங்கள் மூலம் 2018 இல் இந்த தீர்ப்பை பெற்றிருக்கின்றோம்.

சட்டம் வந்து விட்டது, இனி அவர்கள் வாழ்வு மிளிர்ந்துவிடும் என நாம் இருக்க முடியாது. சமூகத்தோடு தொடர்ந்து உரையாடுவதன் மூலமாக தான் அவர்களுக்கான ஒரு தன்மானமான வாழக்கையை உறுதி செய்ய முடியும். பரிதாப பார்வைகள் அற்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ளும் பக்குவம், எந்த அருவருப்பும், தயக்கமும் இன்றி சமூகத்தில் ஏற்பட வேண்டும். அதை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும்.

அதே போன்று திரைப்படங்களில் ஓரினச் சேர்க்கையாளர்களை நகைச்சுவை பாத்திரங்களாக சித்தரிப்பதை கைவிடவேண்டும். அவர்களின் வலிகளை பதிவு செய்ய முடியாவிட்டாலும், அவர்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தாமல் இருப்பதே ஒரு நேர்மறை சிந்தனையை சமூகத்தில் உருவாக்கும். அதே போன்று அவர்களை வில்லன்களாகவும், வில்லிகளாகவும், மன நோயாளிகள் போலவும், கொலையாளிகள் போலவும் காண்பிக்கும் போக்கை கைவிடவேண்டியது காலத்தின் கட்டாயம்.

திருவாளர் சுப்ரமணிய சுவாமி வழக்கம் போல இந்த ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் நோய் பரவும் என்று அவரின் திருவாய் மலர்ந்திருக்கின்றார். இதை இந்து மத அய்யப்பன் கதைக்கும் முதலில் அவர்கள் பொருத்திப் பார்க்க வேண்டும், தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிட்டு 60 ஆண்டுகள் பிறந்த கதையை நாரதன், க்ரிஷணனுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

siragu 377 oru paarvai1

சரி அறிவியல் பூர்வமாக இதற்கு என்ன சாத்தியக் கூறுகள்? மருத்துவ ரீதியாக அவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றியும், உறவின் போது ஆணுறை அணிந்தும், தங்கள் உடல் உறவு இணையர்களை பலராக வைத்துக் கொள்ளாமலும், முறையான இடைவெளிவிட்டு மருத்துவ பரிசோதனையும் செய்யும் பட்சத்தில் மிக ஆரோக்கியமான வாழ்வை ஓரினச் சேர்க்கையாளர்கள் இணையர்களாக இருந்து வாழ முடியும். இது இயற்கைக்கு எதிரானது என்பது போன்ற கருத்தே தேவை இல்லாதது. பல விலங்குகளில் இந்த ஓரினச் சேர்க்கை உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதைத் தவிர குழந்தைகளைப் பற்றி ஆற்றாமையோடு பேசும் கூட்டம் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர். திருமணம் குழந்தைகளுக்காக மட்டுமே, அடுத்த தலைமுறையை தங்கள் குருதியில் உருவாக்க மட்டுமே திருமணம் என நினைக்கின்றவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் வாழ்வதின் பேரின்பம் புரியாது. அதே நேரத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வாழ ஓரினச் சேர்க்கையாளர்களால் முடியும் என்ற எண்ணத்தையும் ஏற்க மறுப்பவர்கள். இவர்களுக்காவே இந்த தீர்ப்பைச் சொன்ன நீதியரசர்களில் ஒருவர் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்பை வழங்க இயலாது. அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்தச் சட்டமிருந்தாலும் அதனை நீக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என மிகச் சரியாக பதிவு செய்திருப்பார்.

ஓரினச் சேர்க்கையாளர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கான உலகமாகவும் இதை மாற்றிக் காட்டுவோம்.!!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “377 பற்றி ஒரு பார்வை !!”

அதிகம் படித்தது