மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

438 நாட்கள் கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 2

தேமொழி

Nov 28, 2015

438 days1கடலில் வீசி எறிந்துவிட்டதால், தூண்டிலோ தூண்டில் இரையோ இல்லாமல், மீன்பிடிப்பதற்கு ஆல்வரெங்கா ஒரு துணிச்சலான முறையைக் கையாண்டார். சுறாக்கள் வருகின்றனவா என்பதில் எச்சரிக்கையுடன் ஒரு கண் வைத்துக்கொண்டே, படகின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்து, இருகைகளையும் தோள்வரை நீரில் கவனமாக நீட்டினார். தனது மார்பு படகின் பக்கவாட்டில் அழுந்தியிருக்க, கைகளை அசைக்காமல் சிறிது இடைவெளிவிட்டுக் காத்திருந்தார். ஏதேனும் ஒரு மீன் அவரது இருகரங்களுக்கு இடையே அகப்பட்டால், விரைவாக அமுக்கி, அதன் செதில்கள் மீது நகத்தால் அழுந்தப் பிடித்துக் கொள்வார். பல மீன்கள் தப்பிவிட்டன, ஆனாலும் ஆல்வரெங்கா விரைவில் இவ்வாறு மீன் பிடிப்பதில் திறமைசாலியாகிவிட்டார், மீனைப்பிடித்து அது கடிக்கும்முன் படகினுள் வீசலானார்.

கோர்டபா மீன் வெட்டும் கத்தியினால் திறமையாக மீனைச் சுத்தம் செய்து வெட்டி, விரலளவு சிறு துண்டங்களாக்கி வெய்யிலில் காயவைத்தார். இருவரும் மீன்களையே மாற்றி மாற்றித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்வரெங்கா பச்சைமீனையும் காய்ந்த மீனையும் சேர்த்தே விழுங்கத் தொடங்கினார். வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவருக்குச் சுவையே தெரியாமல் மரத்துப்போய்விட்டது, அதனால் சுவை பற்றி அவர் கவலைப்படவில்லை. மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களால் ஆமைகளைப் பிடிக்க முடிந்தது. சிலசமயம் தானே பறந்து வந்து படகில் விழும் பறக்கும் மீன்களும், அவர்களுக்குக் கிடைத்தன.

சிலநாட்களுக்குள் ஆல்வரெங்கா தனது சிறுநீரைக் குடிக்கப் பழகிக் கொண்டார், கோர்டபாவையும் அவ்வாறு செய்யச் சொல்லி ஊக்கமூட்டினார். மிகவும் உப்பாக இருந்தாலும் குமட்டவில்லை. சிறுநீர்கழித்து அதைக்குடித்து மீண்டும் மீண்டும் அவ்வாறே தொடர்ந்து செய்ததால் உடலுக்குத் தேவையான நீர் சிறிது கிடைத்தது. சொல்லப்போனால் உண்மையில் அவர்கள் நீரற்ற வறட்சியால் சாகாமல் இருக்க உதவியது. ஆல்வரெங்கா கடல்நீரைக் குடிப்பதால் உள்ள அபாயத்தை நன்கு தெரிந்தவர். எனவே மிகவும் தாகமாக இருந்தாலும் தங்களைச் சூழ்ந்துள்ள கடல் நீரிலிருந்து ஒரு கோப்பை நீரைக் கூட அவர்கள் குடிப்பதைத் தவிர்த்தார்கள்.

மிகவும் பசியாக இருந்தபொழுது தனது நகங்களையே சிறுசிறு துண்டுகளாகக் கடித்து சாப்பிடவும் தொடங்கினார். ஜெல்லிமீன்கள் கிடைத்தால் அவற்றை அப்படியே அள்ளி முழுதாக விழுங்கினார். முதலில் தொண்டையின் முன்பகுதியை எரித்தாலும் பின்னர் பழகிப் போனது, அவ்வளவு மோசமாக இல்லை.

438 days7சுமார் 14 நாட்கள் கடலில் தவித்த பிறகு, ஆல்வரெங்கா பனிக்கட்டிப் பெட்டியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது ஸ்ப்ளாட், ஸ்ப்ளாட், ஸ்ப்ளாட் என்ற ஓசை கேட்டது. சந்தேகமில்லாமல் அது பெட்டியின் மீது தாளகதியில் விழும் மழைத்துளிகளின் ஓசைதான். ‘பின்யாட்டா’, (கோர்டபாவின் செல்லப்பெயர்)’பின்யாட்டா’, ‘பின்யாட்டா’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு ஆல்வரெங்கா பெட்டியிலிருந்து வெளியே பாய்ந்தார். அவரது உதவியாளர் கோர்டபாவும் உறக்கம் நீங்கி அவருடன் சேர்ந்து கொண்டார். கடந்த ஒருவாரமாக ஆல்வரெங்கா திட்டமிட்டிருந்தபடி நீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த இருவரும் படகின் தளத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடினார்கள். கோர்டபா ஐந்து கேலன் கொள்ளும் சாம்பல் வண்ண வாளி ஒன்றைத் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்து வானத்தை நோக்கிப் பிடித்து நீர் சேகரிக்கத் தொடங்கினார்.

கருமேகங்கள் அவர்கள் தலைமீது உயரே குவிந்தது, பலநாட்களாகச் சிறுநீரையும், ஆமையின் இரத்தத்தையும் குடித்து, தாகத்தால் இறந்துவிடும் நிலைக்குச் சென்ற அந்த இருவர் மீதும் கடைசியாக மழை கொட்டத் தொடங்கியது. வாயைத் திறந்து விழும் மழைத்துளிகளைக் குடிக்கத் துவங்கினர், உடைகளைக் களைந்து அருமையாகக் கொட்டும் மழையில், நல்லநீரில் குளித்தார்கள். ஒருமணி நேரத்திற்குள் வாளியில் ஒரு அங்குலம் நீர் நிரம்பியது. இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நீரைக் குடித்துக் கொண்டிருந்தார்கள். முதலில் கிடைத்த நீரை தாராளமாகக் குடித்தாலும், பிறகு எச்சரிக்கையாகத் தேவையான அளவு மட்டுமே குடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

438 days10கடலில் பலவாரங்கள் கடந்த பிறகு, ஆல்வரெங்காவும் கோர்டபாவும் திறமையான குப்பைப்பொறுக்கிகளாகத் தேறிவிட்டனர். கடலில் தங்களைக் கடந்து மிதந்து செல்லும் பலவகை பிளாஸ்டிக் குப்பைகளை வேறுபடுத்தி பிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு காலியான தண்ணீர் பாட்டில்களையும் எடுத்து சேகரித்துக் கொண்டனர். நிரம்பியிருந்த பச்சைநிறக் குப்பை மூட்டை ஒன்று அவர்கள் வழியே மிதந்து வந்த பொழுது அதனைப்பற்றி, படகின் தளத்தில் இழுத்துப் போட்டு அந்த மூட்டையின் பிளாஸ்டிக் உரையைக் கிழித்தார்கள். அதனுள் ஒரு பையில் மென்று துப்பிய சூயிங்கம் ஒரு கற்றை கிடைத்தது. வாதம் பருப்பு அளவுக்கு ஆளுக்கொரு துண்டாக அதனைப் பிய்த்து மென்று உணவை அசைபோடும் உணர்வை அனுபவிக்கக் கிடைத்த செல்வமாகக் கருதி பெருவிருந்தாகக் கொண்டாடினார்கள். சமையல் எண்ணெய்யில் ஊறியிருந்த அடுக்கின் கீழே பெரும் புதையலாக, அரை முட்டைக்கோசு, கொஞ்சம் கேரட்டு, ஒரு லிட்டர் ஊசிப்போன நாற்றமடிக்கும் புளித்த பால் ஆகியவை கிடைத்தன. இருந்தும் அதைக் குடித்தார்கள். அதுதான் முதன்முதலாகப் பல நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் கிடைத்த உணவு. ஊறிப்போன கேரட்டுகளை கிடைத்தற்கரிய செல்வமாகப் போற்றினார்கள்.

ஆமையைப் பிடித்து உணவாக உண்டவர்களுக்கு, பலநாட்களுக்குத் தேவையான உணவு சேமிப்பில் கிடைத்தவுடன், அந்தப் பெரிய கடலில் கொஞ்சம் ஆறுதலும் மனஅமைதியும் கிடைத்தது. தங்களது அன்னையரைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். அவர்களிடம் மோசமாக நடந்து கொண்டதற்கு வருந்தினார்கள். மிகவும் மோசமான மகன்களாக தங்கள் அம்மாவிடம் நடந்து கொண்டதற்காக கடவுளிடம் மன்னிப்பு கோரினார்கள். அவர்களைக் கட்டித்தழுவி முத்தமிட முடியுமா என்று கற்பனை செய்தார்கள். கடினமாக உழைத்து தங்கள் அம்மாக்கள் இனி வேலையே செய்யத் தேவையிருக்காத அளவிற்கு அவர்களைக் காப்பாற்றப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது.

438 days9கடலில் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆல்வரெங்கா பறவைகளையும், ஆமைகளையும் பிடிக்கவும், சாப்பிடவும் பழகிக் கொண்ட பொழுது, கோர்டபாவிற்கோ உடல்நலமும் மனநலமும் மோசமடையத் தொடங்கியது. அவர்கள் இருவரும் ஒரே படகில் இருந்த பொழுதும் அவர்கள் பயணம் வேறுதிசையில் இருந்தது. கோர்டபா கடற்பறவையின் இறைச்சியைச் சாப்பிட்டபிறகு உடல்நலமில்லாது போனது, அதனால் இனி சாப்பிடப்போவதில்லை என்ற விபரீத முடிவை எடுத்து எந்த உணவையும் சாப்பிட மறுத்தார். அவர் தனது இரு கைகளினால் தண்ணீர் பாட்டிலை இறுகப் பிடித்திருந்தாலும் அதனை வாய்க்கருகில் கொண்டுபோகும் ஆர்வமோ சக்தியோ அவருக்கு இல்லை. பறவை இறைச்சியின் சிறு துண்டங்களையும் சிலசமயம் ஆமை துண்டங்களையும் ஆல்வரெங்கா அவருக்கு உண்ணக் கொடுத்தார். கோர்டபா வாயை இறுக மூடிக் கொண்டார். அவரது மனத்துயரம் அவரது உடல் செயல்பாட்டை நிறுத்தத் தொடங்கியது.

இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். கோர்டபா உயிர் பிழைத்தால் எல் சல்வடோர் சென்று ஆல்வரெங்காவின் பெற்றோரைச் சந்திப்பது என்றும், ஆல்வரெங்கா உயிர்பிழைத்தால் மெக்சிகோவில் உள்ள ‘சியாபாஸ்’ (Chiapas) நகருக்குச் சென்று, கிறிஸ்துவ போதகரான பாதிரியார் ஒருவரை மறுமணம் செய்து கொண்டவரும், தெய்வபக்தி நிறைந்தவருமான கோர்டபாவின் அம்மாவைச் சந்திப்பது என்றும் முடிவு செய்து கொண்டார்கள். கோர்டபா தனது அம்மாவிடம் உயிர் பிரிவதற்கு முன்னர் விடை பெற முடியாமல் போனதற்கு வருந்தியதாகவும், இனி அவருக்காக ‘டமாலீஸ்’ (tamales) சமைக்கத் தேவையிருக்காது என்றும், கோர்டபாஇறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டு அவர் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று ஆறுதல் அடையும்படியும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

“நான் சாகப் போகிறேன், நான் சாகப் போகிறேன், என் முடிவு நெருங்கிவிட்டது” என்று ஒருநாள் காலை கோர்டபா கூறினார்.

“சாவதைப்பற்றி நினைக்காதே, இருவரும் கொஞ்ச நேரம் தூங்குவோம்” என்று ஆல்வரெங்கா அவர் அருகில் சென்று படுத்தபடி கூறினார்.

“எனக்குச் சோர்வாக இருக்கிறது, குடிக்கத் தண்ணீர் வேண்டும்,” என்று கோர்டபா முனகினார். அவருக்கு மூச்சுத்திணற ஆரம்பித்தது. ஆல்வரெங்கா ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் வாயில் ஊற்றினார், ஆனால் கோர்டபாவினால் விழுங்க முடியவில்லை, மாறாக, அவருக்கு சிறு சிறு வலிப்பு வந்து உடல் குலுங்கியது. அவர் உடல் துடித்து முறுக்கேற கோர்டபா வேதனையுடன் அரற்றினார். உடனே அதிர்ச்சி அடைந்த ஆல்வரெங்கா, “என்னைத் தனியே விட்டுப் போகாதே, வாழ்வதற்காகப் போராடு, நான் இங்கே தனியே என்ன செய்வது?” என்று அவர் முகத்தருகில் குனிந்து அலறினார்.

கொஞ்ச நேரத்தில் விழிகள் திறந்தவாறு இருக்க கோர்டபா இறந்து போனார். தோழன் இறந்துவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் “இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று கோர்டபாவிடம் கேட்டார் ஆல்வரெங்கா. கோர்டபாவிடம் இருந்து பதிலில்லை.

கோர்டபாவின் உடலை அலை அடித்துச் சென்றுவிடாமல், தண்ணீர் படாமல் இருக்க நிமிர்த்தி வைத்துவிட்டு ஆல்வரெங்கா பலமணிநேரம் அழுதார்.

மறுநாள் காலை படகின் முனையில் சாய்ந்து இருந்த கோர்டபாவின் உடலை வெறித்துப் பார்த்து, “இப்பொழுது எப்படி இருக்கிறது? நன்றாகத் தூங்கினாயா? என்றார்.

“நான் நன்றாகத் தூங்கினேன், நீ நன்றாகத் தூங்கினாயா? காலை உணவு சாப்பிட்டாயா?” என்று தன் கேள்விக்கு இறந்துவிட்ட கோர்டபா பதிலளிப்பது போலத் தானே உறக்க பதிலளித்துக் கொண்டார். இருந்த தனது ஒரே தோழனும் இறந்துவிட்டதை எதிர்கொள்ள முடியாமல் அவர் இன்னும் இறக்கவில்லை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆல்வரெங்காவிற்கு சுலபமாக இருந்தது.

438 days11கோர்டபா இறந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, நிலவொளி அற்ற இரவில் ஆல்வரெங்கா இறந்த உடலுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, திடீரென கனவில் இருந்து விழித்தது போல தான் ஒரு உயிரற்ற உடலுடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். கோர்டபாவின் கால்களைக் கழுவிவிட்டார். தனக்கு உதவும் என்று அவருடைய சட்டையையும், காற்சட்டையும் உருவி எடுத்து, மண்டையோடும் குறுக்காக எலும்புகளும் வரைந்திருந்த சிவப்பு நிற சட்டையைத் தான் அணிந்து கொண்டு, கோர்டபாவின் உடலைக் கடலில் போட்டார். கோர்டபாவின் உடலைச் சறுக்கி நீரில் தள்ளிய பொழுது ஆல்வரெங்காவும் மயங்கி படகில் சரிந்தார்.

சில நிமிடங்கள் கழித்து உணர்வு வந்த பொழுது ஆல்வரெங்காவிற்கு அச்சமாக இருந்தது. பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாது நான் தனியே என்ன செய்வேன் என்ற கவலை அவருக்கு எழுந்தது. ஏன் எனக்குப் பதிலாக கோர்டபா இறந்தார். அவரை மீன் பிடிக்க அழைத்து வந்தது என் தவறு என்று கோர்டபாவின் சாவிற்கு தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டார்.

ஆனால் அவருக்கு வாழ வேண்டும் என்ற எண்ணமும், தற்கொலை செய்து கொள்வதற்கு அச்சமும் (தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்று அவரது அம்மா உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்) இருந்ததால், வாழ வழி தேடி ஏதேனும் கப்பல் அந்த வழியே வருகிறதா எனக் கடற்பரப்பை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினார். சூரிய உதயமும், சூரியன் மறைவும் உதவியாக இருந்தது, தொடுவானம் ஓவியம் போல மாறி சூரிய ஒளியும் தாங்கக் கூடியதாக இருந்தது. ஆல்வரெங்காவின் பார்வை கூர்மையடைந்து தொடுவானத்தில் தோன்றும் ஒரு சிறிய புள்ளியையும் கப்பல் என அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது நெருங்கி நெருங்கி பெரும் ஓசையுடன் வரும் பொழுது, அது வழக்கமாக பசிபிக்கடலைக் கடக்கும் ஒரு சரக்குக் கப்பல் என்பது தெரிய வரும்.

கடலை சுலபமாகக் கடந்து செல்லும் அந்தக் கப்பல்களின் தளத்தில் மனிதர்களும் தென்பட மாட்டார்கள், மனித நடமாட்டமும் இருக்காது, கவைக்குதவாத கப்பல்களாக அவைக் கடந்து போகும். ஒவ்வொருமுறை தென்படும் கப்பலும் ஆல்வரெங்காவிற்கு புத்துணர்ச்சி அளித்து, அவரை உற்சாகத்தில் துள்ள வைத்தது. மணிக்கணக்காகக் கையசைப்பதும், குதிப்பதும், கவனத்தைக்கவர முயற்சிப்பதுமாக இருப்பார். ஒவ்வொன்றாக சுமார் 20 சரக்குக் கப்பல்கள் இவ்வாறு இவரைக் கடந்து தொடுவானத்தில் சென்று மறைந்திருக்கின்றன. இருந்தும் வெறியேற்றும், சீண்டிப்பார்க்கும் இந்தப் போராட்டம் அவருக்கு உற்சாகத்தையே தந்தது. புயல்கள் அவரது சிறிய படகை அலைக்கழித்தன, நிலத்தைவிட்டு கடலில் வெகு தொலைவிற்கு சென்ற பிறகு புயலின் அளவு சிறியதாகவும், அதன் தாக்கம் குறைவாகவும் தாங்கிக் கொள்ளும்படியும் இருந்தது.

438 days3ஆல்வரெங்கா தனது கற்பனையைக் கட்டவிழ்த்து ஓடவிட்டு, பைத்தியம் பிடிக்காதவாறு தன் மனநலத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டார். உண்மைக்குப் புறம்பானவற்றை நம்பும் வகையில் மனதை மாற்றிக் கொண்டார். வாழ்விலேயே சிறந்த உணவைத் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், சிறந்த உடலுறவு இன்பத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டார். தனது தனிமையையே ஒரு மாய உலகில் வாழ்வதாக நினைத்துக்கொள்ளும் கலையில் திறமைசாலியானார். காலை வேளைகளில் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொண்டார். தான் பூமியில் உலவுவதாக நினைத்துக் கொண்டு தனது படகிலேயே குறுக்கும் நெடுக்குமாக நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் முடங்கிப்போய் சாவை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, இவ்வாறாகக் கற்பனை செய்வதால் தான் உருப்படியாக ஏதோ செய்வதாக தன்னையே நம்ப வைத்துக் கொண்டார். தான் கற்பனையில் உருவாக்கிய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இருப்பதாகப் பாவித்து, எதார்த்த உலகின் கொடுமையான உண்மை நிலையில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

அவர் சிறுவனாக இருந்தபொழுது அவரது தாத்தா நிலவின் சுழற்சியை வைத்து எவ்வாறு காலத்தைக் கணக்கிடுவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். தனிமையில், பறந்து விரிந்த கடலில் இருந்தாலும் எத்தனை மாதங்களாக இப்படி கடலில் தத்தளிக்கிறோம் என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார். முன்னர் பார்த்திராத இடத்தை நோக்கிக் கடந்த 15 நிலாவின் சுழற்சி காலமாகக் கடலோடு போகிறோம் என்பது அவருக்குத் தெரிந்தது. பயணத்தின் முடிவில் அடுத்து அவர் போய்ச் சேரப்போகும் இடம் சொர்க்கம் என்று உறுதியாக நம்பினார்.

(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “438 நாட்கள் கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 2”

அதிகம் படித்தது