மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாணயம் இல்லாத நாணயம்

ஆச்சாரி

Mar 1, 2014

கடைத் தெருவில் காய்கறி வாங்கும் போது  பொருளின் மதிப்பிற்கு மேல் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ அதிகம் வைத்து விற்றால் அதற்காக அரை மணி நேரம் வாதாடும் நாம், வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்தும் பணத்தின் மதிப்பு நம் கண்ணுக்குத் தெரியாமல் யாரால் எவ்வாறு பல மடங்கு குறைக்கப்படுகிறது? என்றோ, நம் உழைப்பு நாளுக்கு நாள் எவ்வாறு மலிவாக்கப்படுகிறது? என்பது பற்றியோ சிந்திப்பதில்லை. நம்மில் சிலர் அரசு பணத்தை வெளியிடும் போது, அதற்கு ஈடாக தங்கத்தை வைத்துக் கொண்டு வெளியிடுவதாக நினைக்கலாம். அதாவது  பொருளாதாரம் சார்ந்து பார்த்தால் அதை வலிமையான பணம் என்று கூறுவர். ஆனால் உண்மையில் பெரும்பான்மையான பணம் வெளியிடுவது கடனின் அடிப்படையில் தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நேர்மையற்ற அரசாங்கத்தின் கையில் இந்த கடன் அடிப்படையிலான பணம்  என்னும் ஆயுதம் கிடைத்தால் என்ன  நடக்கும் என்பதைத் தான் இந்தியா கடந்த சில வருடங்களாக பார்த்து கொண்டுள்ளது. பணவீக்கம் என்ற பெயரில் இந்தத் தலைமுறையினரின் வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கவும், வரைமுறையற்ற கடன் என்ற பெயரில் வருங்கால  சந்ததியினரை அடிமை சமூகமாக மாற்றவும் கூடிய சாத்தியக் கூறுகளை நாம் இப்போது காண்கிறோம்.

வரவு எட்டணா! செலவு பத்தணா!

ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலங்களில் உள்ளது போல் தான், நாட்டிற்கும் வரவு மற்றும் செலவு உண்டு. நாட்டிற்கு வரவாக வரி, பொது சொத்துகளிலிருந்து (இயற்கை வளம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) வருமானம் எனப் பல  வகைகளில் வருமானம் வருகிறது. அரசு ஊழியர்கள் சம்பளம், அடிப்படை கட்டுமான வளர்ச்சி, வளர்ச்சி திட்டங்கள்,  மானியங்கள், ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி, இலவசத் திட்டங்கள் எனப் பல வகையிலான செலவீனங்கள் உள்ளன. வரவு மற்றும் செலவைத் திட்டமிட ஒவ்வொரு அரசாங்கமும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். வரவை விட செலவு அதிகமாகும் போது கடன் வாங்க வேண்டியுள்ளது. நம்முடைய வீட்டு வரவுசெலவு என்றால் நாம் வாங்கும் கடனை நாம் திரும்ப செலுத்தியாக வேண்டும் என்று ஒரு முறைக்கு பல முறை யோசித்து செலவு செய்வோம். ஆனால் அரசில் இருப்பவர்களுக்கோ, எவ்வளவு கடன் வாங்கினாலும் ஆட்சியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கி  குவிக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் வரவு செலவு கணக்கு பற்றி பார்ப்போம். பொதுவாக கடன் வாங்க “விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்” என்று சொல்வார்கள். அது போல நாட்டின் பொருளாதார வளத்திற்கு ஏற்றவாறு   கடன் வாங்க வேண்டும். எனவே அரசின் நிதி பற்றாக்குறை அந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பில் (GDP) எத்தனை சதம் உள்ளது என்று பார்த்தால் அது வாங்கிய கடன் எவ்வளவு என்று புரிய வரும். கடந்த ஆறு ஐந்து வருடங்களில் அரசின் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் சுமார் ஆறு சதவித அளவில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நம்பி பற்றாக்குறையை அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசாங்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தால் அதற்கு ஏற்றவாறு செலவீனங்களை குறைப்பது இல்லை. அது மிக பெரிய கடன் சுமைக்கு இட்டு செல்கிறது. அது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரமும் வரி வருவாயும் அதிகரிக்கும் போது, அந்த அதிக வருமானத்தைக் கொண்டு  கடனை அடைக்காமல், புதிய கடனின் அளவை மட்டுமே அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

இந்த கடனின் அளவை அறிந்து கொள்ள மற்றொரு அளவீட்டை பார்ப்போம். கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை விட எத்தனை சதவீதம் அதிகம்  செலவு செய்திருக்கிறார்கள் என்று மேலே உள்ள வரைபடம் விளக்குகிறது. அதாவது 2010ம் ஆண்டு வருமானம் 100 ரூபாய் என்றால் செலவு 173 ரூபாய் செய்துள்ளது அரசு. 2008 ம் ஆண்டு வாக்கில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இல்லாமலேயே இந்த செலவீனங்கள் என்றால் நாடு எங்கு செல்கிறது  என்று  நினைத்துப் பாருங்கள்.

அன்னிய செலாவணி சமச்சீரற்ற நிலை:

அரசாங்கத்தின் வரவு செலவு மற்றும் பற்றாக்குறையைப் பார்த்தோம். அடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நிலையைப் பார்ப்போம். ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான பொருளை இறக்குமதியும், பிற நாடுகளுக்கு தேவையான பொருளை ஏற்றுமதியும் செய்கிறது. இந்த வரவு செலவிலும் ஒரு சம நிலை வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை அங்கும் ஒரு சமமற்ற நிலை நிலவுகிறது.  கீழே உள்ள வரை படம், இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி பற்றாக்குறையை மொத்த உற்பத்தித் திறனுடன் ஒப்பிட்டு காட்டுகிறது.

இதற்கு பெட்ரோல் விலையேற்றம், மக்களுக்கு இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை இழப்பு (தங்க இறக்குமதி), ஏற்றுமதி வளர்ச்சி குறைவு போன்றவை முக்கிய காரணம். இந்த பற்றாக்குறை பணத்தை பெரும்பான்மையாக டாலரில் ஈடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுண்டு:

அரசங்கம் தன் வரவுசெலவு பற்றாக்குறையை தீர்க்க கடன் வாங்குகிறது. சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் மற்றும் வேறு பல பொருளாதார சாதனங்கள் கொண்டு கடன் வாங்குகிறது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள்  மற்றும் பல முதலீட்டு நிறுவனங்கள் இந்த கடனை வாங்குகின்றன. இந்த கடன் பத்திரங்கள் சந்தையில் பிற பொருளாதார சாதனங்கள் போல் விற்கப்படும். இந்த கடன் பத்திரத்திற்கு அரசு வட்டி செலுத்த வேண்டும்.

 பல லட்சம் கோடி கடனை அரசாங்கம் பொது சந்தையில் வாங்கும் போது அங்கு முதலீடு செய்பவர்களின் மொத்த பணமும் அரசாங்கத்துக்கு போக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி முதலீட்டிற்கு தயாராக  உள்ள பணத்தின் அளவு மிகக் குறைவாகவும், முதலீட்டை ஈர்க்கும் கடனின்  அளவு மிக அதிகமாகவும் ஆகும் போது தேவை – அளிப்பு (Demand – Supply) இடையே ஒரு சமச்சீரற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் விளைவாக அரசங்கம் வாங்கும் கடனுக்கு வட்டி அதிக அளவு செலுத்த வேண்டி இருக்கும். ஒவ்வொரு வருடமும் அரசு தனது கடனுக்கான வட்டிக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தால், வரும் காலத்தில் வரவுசெலவு திட்டத்தின் போது அரசுக்கு செலவிட கிடைக்கும் பணத்தின் அளவு பெருமளவு குறையும். அது மட்டுமின்றி அரசாங்கமே தன்னுடைய கடனுக்காக சந்தையில் இருக்கும் பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டால், தனது தேவைக்கு கடன் வாங்கும் பிற தனியார் துறை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்களின் வட்டி விகிதம் கட்டுபடியாகாத அளவிலோ அல்லது கடனே கிடைக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. எனவே அரசு தனது கடனுக்கான ஆதாரத்திற்கு வேறு ஆதாரத்தை பார்க்க வேண்டியுள்ளது. அங்குதான் பிரச்சனையின் பரிமாணம் மிக பெரிய அளவில் அதிகரிக்கிறது.

-இரண்டாம் பாகம் அடுத்த இதழில்

Working on a theme by sharing an experience will result in growing consciousness of reader-based prose contributing writers, when such partnerships are formed voluntarily, can provide insights that http://order-essay-online.net the solitary writer may not possess

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாணயம் இல்லாத நாணயம்”

அதிகம் படித்தது