மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விளம்பரப் பலகை வில்லங்கங்கள்

ஆச்சாரி

Mar 1, 2014

பல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதமரே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமையைக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். இந்த அரசியல் ஒருபுறமிருக்க, திருமண வாழ்த்து விளம்பல், ரசிகர் மன்றப் புலம்பல், வீட்டுமனை விற்பனை அலம்பல் என்று மறுபுறமும் பதாகை அடித்தே நாம் கொண்டாடுகிறோம். வளர்ந்த நாடுகளே வியந்துபோகும் அளவிற்கு நாம் சுவரொட்டி மற்றும் பதாகை துறையில் முன்னணியில் உள்ளோம். ” இதெல்லாம் ஒரு பெருமையா” என்று நீங்கள் கேட்பது புரிந்தாலும் புரியவேண்டியவருக்குப் புரியவில்லையே.

அந்தப் பதாகை எல்லாம் நெகிழி வகை மக்காத குப்பையாக மாசுபடுத்தும் என்ற காரணத்தைக் கூட ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உருப்படியாக ஒரு செய்தியும் அந்தப் பதாகை நிச்சயமாகச் சொல்வதில்லை. அரசியல் என்றால் முக்கியப் புள்ளிகளின் படங்களும், கடைக்கோடி உறுப்பினர் பெயரும் இடம்பெறும், செய்தி என்று தேடிப்பார்த்தால் வாழ்த்துகிறோம் அல்லது வரவேற்கிறோம் அல்லது வணங்குகிறோம் என்ற ஒரே தொடர்கள்தான் சுற்றிச்சுற்றி தெரியும். இடையில் இலக்கணப் பிழைகள், இன்சியல் பிழைகள் எல்லாம் இருந்தால் பெருந்தன்மையாகப் பொறுத்துக் கொள்ளவேண்டும். அப்படியே சினிமாப் பதாகை என்றால் இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம் என்ற செய்திக்குப் பின்னும் முன்னும் செலவளித்த அத்தனை நபர்களின் படங்களும் இடம் பெற்றிருக்கும்.

இதெல்லாம் பிரச்சினையே இல்லை தான், ஆனால் அந்தப் பதாகையைக் குற்றுயிராக இருக்கும் தெருப் பெயர் பலகையை மொத்தமாக மறைத்தும், நல்ல சாலையைத் தோண்டி நாசப்படுத்தியும், சாலையோர நடைமேடையை ஆக்கிரமித்தும், சாலையோர நடைமேடைக் கல்லை உடைத்தும், பசுமையான மரக்கிளையை ஒடித்தும், முக்கிய வளைவுகளில் அதன் அடையாளைத்தையே மாற்றியும் கட்டப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என்ற பாகுபாடே இல்லாமல் மின்கம்பம் தோறும் ஒரு பதாகை கட்டி சாலையில் கவனத்தைக் கெடுக்கிறது. இரவில் விளக்கிட்ட பலகையோ, பகலில் சூரிய ஒளிபட்ட பலகையோ வெளிச்சத்தைப் பிரதிபலித்து வாகன ஓட்டிகளையும் வில்லங்கத்தில் தள்ளுகிறது.

ஏன் இந்த ஆடம்பரம்? கறுப்புப் பணத்தின் திருவிளையாடல் என்றாலும் அவரவர் இடங்களில் வைத்துக் கொள்வதில் சிக்கலில்லை ஆனால் பொதுவிடங்களில் பொதுச் சொத்தை அழித்து வைக்கும் போது கேள்விக்குள்ளாகிறது. இப்படிச் செலவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் என்றைக்காவது தொகுதியின் வரவு செலவு கணக்கைச் சின்னத் துண்டு பிரசுரத்திலாவது அறிவித்ததுண்டா? அல்லது சாலைப் பாதுகாப்பு, சுகாதாரம், மது ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு போல ஏதாவது விழிப்புணர்வுப் பதாகைதான் வைத்ததுண்டா? எத்தனையோ குடியிருப்புப் பகுதிகளில் சாலை பெயரே தெரியாமல் இருக்கும், அங்கெல்லாம் அப்பகுதியின் வரைபடப் பதாகையிட்டுப் புதியவருக்கு உதவலாம்; பேருந்து நிறுத்தத்தில் நைந்துபோன கூரையை அகற்றி கூரை அமைக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் துணிப் பதாகையாவது பயன்படுத்தலாமே. தோரணங்களால் பிறக்கும் பிரம்மாண்டம் தொல்லை கொடுக்கும், ஆனால் சேவையால் பிறக்கும் பிரம்மாண்டம் சேவிக்க வல்லது.

Often, teens click over here now are merely deleting silly lol’s or emoticons, but often our kids will delete messages they do not want us to see- especially if they are negative

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விளம்பரப் பலகை வில்லங்கங்கள்”

அதிகம் படித்தது