மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாணயம் இல்லாத நாணயம் – பகுதி 2

ஆச்சாரி

Mar 8, 2014

நமக்கு கடன் வாங்க மற்றும் பிற பொருளாதார பரிவர்த்தனைகள் செய்ய வங்கியாளர்கள் இருப்பது போல் அரசாங்கத்துக்கும், நாட்டிற்கும்   ஒரு வங்கி உள்ளது. அது தான் இந்திய ரிசர்வ் வங்கி. அது நாட்டின் பணப்புழக்கம், பண வீக்கம், வட்டிவிகிதம், வங்கித்துறை மற்றும் நாணய மாற்று விகிதம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. இந்த நிறுவனத்துக்கு உள்ள மிகப்பெரிய அதிகாரம், பணத்தை தானே அச்சடிக்கலாம். இது போல அரசாங்கம் கட்டுக்கடங்கா கடன் பிரச்சனையை ஏற்படுத்தும் போது மத்திய ரிசர்வ் வங்கி தன் செயல்பாட்டை தொடங்க ஆரம்பிக்கும். திறந்த சந்தை பரிவர்த்தனை (Open Market Operation) மூலம் சந்தையில் உள்ள அரசாங்க கடன் பத்திரங்களை வாங்க ஆரம்பிக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Quantitative Easing என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் கடனை காப்பீட்டு நிறுவனங்கள் வாங்கும் போது மக்கள் காப்பீடு செய்வதற்கு மாதா மாதம் கொடுக்கும் பணத்திலிருந்து வாங்குவார்கள். மற்ற பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு வாங்கும். மிகப்பெரிய கடனை வாங்கும் அளவு பணம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா? கடனை வாங்க  பணத்தை பெற ரிசர்வ் வங்கி  கடினப்படவில்லை. தாங்களே அச்சிட்டு கொள்ளலாம். அது தற்போதைய கம்ப்யூட்டர் யுகத்தில் அச்சிட தாளுக்குக் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. கணிணி மென் பொருளில் ஒரு சில இடுகைகள் போட்டால் மட்டும் போதும்! பணம் தயாராகி விடும்.

கடந்த ஐந்தாண்டுகளில் ரிசர்வ் வங்கி இது போல் உற்பத்தி செய்த பணத்தை பார்ப்போம். மேலே உள்ள வரை படத்தைப்  பார்த்தால் அரசின் கடனில் எந்த அளவு பணத்தை புதிதாக அச்சிடுவதன் மூலம் பெற்றுள்ளது என்று தெரியும். சராசரியாக அரசு தனது செலவில் சுமார்  25 சதவீதத்தை புதிதாக அச்சடிப்பதன் மூலம் பெற்றுள்ளது. பணத்தை  உருவாக்குவது அவ்வளவு எளிதாக இருக்கிறதே. ரிசர்வ் வங்கி பேசாமல் பணத்தை அதிக அளவு அச்சடித்து அனைவருக்கும் மாதா மாதம் கொடுத்தால் வறுமையே இருக்காதே என்று நினைக்க தோன்றும். (எல்லோர் கையிலும் பணம் இருக்கும், கடையில் பொருள் இருக்க வேண்டுமல்லவா) உண்மையில் பார்த்தால் தற்போது பணமும் சந்தையில் ஒரு வித விலைபொருள் தான். எப்போது எல்லாம் பெரிய அளவில் புதிய பணம் சந்தையில் புழங்க விடப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் சந்தையில் உள்ள பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. இது பணத்தின் மதிப்பை குறைத்து பணவீக்கத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றிப் பார்ப்போம்.

எங்கே போகும் பாதை?

பெரிய அளவிலான பற்றாக்குறை பட்ஜெட்டினால் பல தீமைகள் உள்ளன.

1. ஒவ்வொரு ஆண்டும் அரசின் கடன் அதிகரித்து கொண்டே வரும் போது அந்த கடனுக்கு வட்டியாக தர வேண்டிய பணத்தின் மதிப்பும் அதிகரித்து கொண்டே வரும். வரும் ஆண்டுகளில் புதிய பட்ஜெட் போடும் போது அரசு தனது வருவாயில் பெரும் பகுதியை வட்டிக்கே செலவிட வேண்டி வரும். அதன் விளைவாக அடிப்படை கட்டுமானத்திற்கான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, அடிப்படைத் தேவைகளுக்கான மானியம் போன்றவற்றிற்கு செலவிடப்படக் கூடிய பணத்தின் மதிப்பு குறைந்து நாட்டின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது நமது சந்ததியினர் நமது கடனைச்  சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

2. ஏற்றுமதி – இறக்குமதியில் பற்றாக்குறை ஏற்படும் போது அதை டாலர் மற்றும் பிற அன்னிய செலாவணிகள் கொண்டு தான் சரிகட்ட முடியும். இந்த சமநிலை மிக மோசமாகப்  போகும் போதும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி வீதத்தில் தளர்ச்சி ஏற்படும் போதும் நாட்டின் நாணயத்தின் மேலிருக்கும் நம்பிக்கை குறைகிறது. அது ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. ரிசர்வ் வங்கி அந்தத் தாக்கத்தை குறுகிய காலத்துக்கு தடுக்க முடியும் என்றாலும் நீண்ட காலத்தில் அது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகிறது. அப்போது போடப்படும் கடுமையான நிபந்தனைகளால் உள்நாட்டு தொழில் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசும் காலத்தின் கட்டாயமாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டி வரலாம்.

3. மேலை நாடுகளை போலில்லாமல் இந்தியாவிற்கு  வறுமை ஒழிப்பு, மிகுந்த மானிய சுமை போன்ற பல சவால்கள் உள்ளன. ஆனால் அதே போல் வருமானத்திற்கான வழிகளும் பல உள்ளன. நிலக்கரி, பெட்ரொல் போன்ற இயற்கை வளங்கள் மற்றும் தொலைதொடர்பு  ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை நியாயமான முறையில் ஏலத்தில் விட்டாலே அதிக வருவாய் ஈட்டமுடியும். ஆனால் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனங்களின் ஏகபோக உரிமையால் பல்லாயிரம் கோடி பணத்தை அரசு இழக்கிறது. அது மட்டுமன்றி நியாயமற்ற வரி விலக்கு மற்றும் பிற ஊழல்களால் ஏற்படும் வருவாய் இழப்பு கணக்கிலடங்கா. ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் நடைமுறைப்படுத்தும் மலிவான தேவையற்ற இலவசத் திட்டங்கள் இந்த பற்றாக்குறையை மேலும் அதிகமாக்குகின்றன. ஆனால் ஊழலையும், லஞ்சத்தையும் கட்டுப்படுத்தாமல் அரசு பட்ஜெட் பற்றாக்குறையை காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களையும், அடிப்படை மானியங்களையும், கல்வி மற்றும் சுகாரத்துக்கு செலவிடும் பணத்தையும் குறைத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்க செய்வது தொடர்கதையாக வருகிறது.

4. அரசு புதிதாக உற்பத்தி செய்யும் பணம் ஒழுங்காக நாட்டின் உற்பத்தி  பெருக்கத்திற்கு உதவினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். அரசு செலவிடும் பணத்தில் பெரும்பான்மையான பகுதி உற்பத்தியைப் பெருக்கும் வகையில் செலவிடப்படுவதில்லை. அதன் விளைவு சந்தையில் குறைவான பொருளும் அதிக அளவு பணமும் இருக்கிறது. அது நாட்டில் பணவீக்கத்தை அதிகப்படுத்துகிறது. அதனால் பணத்தின் மதிப்பு குறைகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டில் உள்ள பணப்புழக்கத்தையும், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியையும் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.

ஆதாரம்- Equitymaster.com

ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அடிப்படையற்ற இந்த வீக்கத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது. ஓய்வு கால தேவைக்காக சிறுகச்சிறுக சேமித்து காப்பீடு மற்றும் பிற வகையில் முதலீடு செய்யும் மக்கள் தங்கள் ஓய்வு காலத்தில் தாம் சேமித்த பணத்தின் மதிப்பு குறைந்து அடிப்படை தேவைக்கு செலவிடுவதே கடினம் என்ற நிலை அடைவர்.

நாட்டிற்கு  பொருளாதார ரீதியாக மாபெரும் வீழ்ச்சியையும், இன்றைய மற்றும் நாளைய சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கும் இந்த பற்றாக்குறை பிரச்சனை இன்றுவரை முக்கியப் பிரச்சனையாக எந்த ஒரு  பிரதான அரசியல் கட்சியும் எடுத்து ச் செல்லாதது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

பொதுமக்களாகிய நாம் பொருளாதார விழிப்புணர்வு பெற்று செயலாற்றினால் மட்டுமே வரக்கூடிய சேதத்தை தடுக்க முடியும்.

Dabei kommt es vor allem darauf an, dass das forschungsvorhaben gut durchdacht the ghost writer film locations house ist und auf logischen schlssen basiert

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாணயம் இல்லாத நாணயம் – பகுதி 2”

அதிகம் படித்தது