மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இசைத் தமிழ் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் – வாழ்க்கைக்குறிப்பு

சிறகு நிருபர்

Aug 30, 2014

v.p.k.sundaram‘வீரணன் பரமசிவம் காமாட்சி சுந்தரம்’என்ற வீ.ப.கா.சுந்தரம் 5.9.1915-இல் தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ‘கோம்பை’என்னும் சிற்றூரில் பரமசிவம் – காமாட்சி இணையர்க்கு மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே தம் பெயரைத் தந்தை,தாய் இருவரின் பெயர்களுக்கான தலைப்பு எழுத்துகளுடன் குறித்தவர் வீ.ப.கா.சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையார் பரமசிவம் தேவாரப் பாடல்களைப் பாடுவதிலும் பயிற்றுவிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கியவர். இதன் காரணமாகச் சுந்தரனாரும் கருவிலே திருவுடையராக விளங்கி இசை ஆர்வமும்,இசையறிவும் இயல்பாகவே பெற்றிருந்தார். பசுமலைக் கணக்காயர் நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் தொல்காப்பியம் முதலான தமிழ் இலக்கண,இலக்கிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர்த் தம் ஆசிரியர் பாரதியாரின் அறிவுரைப்படி இசை கற்கத் தொடங்கினார். அந்நாளில் சிறந்த இசை விற்பன்னர்களில் ஒருவராகவும்,இராமநாதபுரம் அரசவைக் கலைஞராகவும் விளங்கிய சங்கரசிவம் என்பாரிடம் சில ஆண்டுகள் இசையையும்,தாள நுணுக்கங்களையும்,குழல்,முழவு முதலான இசைக்கருவிகளை இசைப்பதையும் கற்றுத் தேர்ந்தார். இயல்,இசை மட்டுமின்றி நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்;தார். தென் தமிழ் நாட்டில் அக்காலத்தில் பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகங்களையும்,பிற நாடகங்களையும் காண்பதில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார். இதன் பயனாகவே சுந்தரனார் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழிலும் ஆழந்த அறிவாற்றலைப் பெற முடிந்தது.

Picture6பசுமலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார் பின்னர்,மதுரை அமெரிக்கன் கல்லூரி,இறையியல் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘பழந்தமிழிலக்கியத்தில் இசையியல்’என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். தலைசிறந்த தமிழிசை ஆய்வாளர்களுள் ஒருவரும் மூத்த செவ்விசைக் கலைஞருமான மதுரை எஸ்.இராமநாதன் அவர்களை நெறியாளராகக் கொண்டு தமது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார். ஏறத்தாழ 50 ஆண்டு காலம் தொல்காப்பியம்,சங்க இலக்கியம்,காப்பிய நூல்கள்,தேவாரம்,பெரியபுராணம்,திவ்வியப் பிரபந்தம்,பஞ்சமரபு முதலான அனைத்துத் தமிழ் நூல்களையும் நுணுகி ஆய்ந்து ஈடு இணையற்ற இசைத் தமிழறிஞராக உயர்ந்தார். அதன் பயனாகத் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியொருவராக உழைத்துத் ‘தமிழிசைக் கலைக் களஞ்சியம்’நான்கு தொகுதிகளையும் எழுதி வெளிக்கொணர்ந்தார். தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இயற்றமிழ்,இசைத்தமிழ் ஆய்வுப் பணியாற்றுவதிலேயே கழித்தார். தமிழ் நாடகம்,நாட்டியம் குறித்தும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவருடைய தமிழ்ப்பணியை,மொழியியல்,இயல்,இசை,நாடகம்,சமயம் என ஐந்து துறைகளில் செம்மையாகச் செய்துள்ளார். வீ.ப.கா.சுந்தரம் அக்காலத்தில் வெளிவந்த ‘விவிலியம்’(பைபிள்) தமிழ் மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்தியதுடன் கிறித்துவ தேவாலயங்களில் வழிபாட்டுத் தமிழையும் வளப்படுத்தினார். மேலும்,அங்குப் பாடுவதற்கு ஏற்ப அருந்தமிழ்ப் பாடல்கள் பல இயற்றி,இசையமைத்துப் பலருக்கும் பயிற்றுவித்தார். அப்பாடல்கள் இன்றளவும் பல தேவாலங்களில் பாடப்பட்டு வருகின்றன.

Picture5கிறித்துவத்தைத் தழுவியவராயினும்,வீ.ப.கா.சுந்தரம்,காரைக்காலம்மையார்,ஞானசம்பந்தர்,அப்பர் ஆகியோரிடம் ஆழந்த பக்தி கொண்டிருந்தார். தமது இல்லத்திற்கும் ‘ஞானசம்பந்தர் குடில்’என்றே பெயரிட்டிருந்தார். மதுரையை அடுத்த பசுமலையில் இருந்த அவருடைய இல்லத்தின் வாயிலில் ஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாரகர் ஆகிய நால்வரின் படமும் காணப்படும்.

Picture7மிடற்றொலியியல்,குரல்,துத்தம் முதலிய ஏழிசைப் பெயர்க்காரணம்,பண்ணுப்பகுப்பு இயல்,முல்லைப்பண்,ஆபிரகாம் பண்டிதர்,பாசுகரதாஸ்,மதுரை மாரியப்ப சுவாமிகள்,தேவநேயப் பாவாணர் ஆகியோரின் தமிழிசைப் பணி உள்பட 23 தலைப்புகளில் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கட்டுரைக்கான தகவல்கள் ‘இசையறிஞர் அரிமளம் பத்மநாபன்’ நூலிலிருந்து திரட்டப்பட்டிருக்கின்றன.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இசைத் தமிழ் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் – வாழ்க்கைக்குறிப்பு”

அதிகம் படித்தது