மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமூகங்களும் சண்டைகளும்

நீச்சல்காரன்

Jan 17, 2015

Members of the Dalit community shout slogans during a protest in Amritsarஉலகில் குழுவாக வாழ்ந்து பழகிய மனிதன் தன்னை ஏதேனும் ஒரு குழுவிற்குள் அடையாளப்படுத்த முனைவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தனக்கான ஒரு நட்பு சூழலை உருவாக்கிப் பாதுகாப்பாக இருக்கவும், மற்றொன்று குழுவாக வேட்டையாடி உண்ணவும் என்று வகுக்கலாம். காலப்போக்கில் பல காரணங்கள் இக்குழுவை உருவாக்கத் தேவைப்பட்டது. தொழில் பாதுகாப்பிற்குச் சாதிகளும், வழிபாட்டு முறைகளின் பாதுகாப்பிற்கு மதங்களும், வாழ்வியல் பாதுகாப்பிற்கு இனங்களும், அதிகாரங்களுக்கு நாடுகளும் என பல்வேறு குழுக்கள் உருவானாலும், ஒன்றுக்குள் ஒன்றாக முட்டிக்கொண்டு சண்டைகளும் சேர்ந்தே உருவானது. தெருச்சண்டையில் தொடங்கி உலகப்போர்வரை வரலாறுகள் நீண்டுள்ளன. சண்டைக்கார வீட்டில் குடியிருப்பவர் என்றால் குழாயில் தண்ணீர் விடமாட்டோம், குடிகாரரின் பிள்ளை என்றால் நமது பிள்ளையைச் சேரவிடமாட்டோம் என்று தொடங்கி ஒருவரின் மீதுள்ள வெறுப்பை வேறொருவரிடம் காட்டும் குணத்தின் நீட்சியே ஒரு குழுவின் மீதுள்ள கோபத்தை அதன் பலவீனமானவர்களிடம் காட்டுதலாகும்.

ஆயுதமில்லாத எதிரியைக்கூட பலவீனமானவராகக் கருதி இன்று போய் நாளை வாய் என்பது புராணக் கால மரபு. இருநாடுகளின் போரின் போது பலவீனமானவர்களான பெண்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கை கொண்டது நமது சங்க காலமரபு. அதன் காரணமாகவே போர்களின் போது அப்பாவி மக்களைப் பிணையாகப் பிடித்து வைக்காதீர்கள் என்றும், முட்கம்பிகளினுள் அடைக்காதீர்கள் என்றும் குரல் எழுப்புகிறோம். ஆனால் இன்று ஒரு குழுவாக மாறிவிட்டால் கட்டுக்கடங்காத சுதந்திரமும் ஆற்றலும் வந்துவிடுகிறது. குழுவாக நடக்கும் வன்முறைகள் சட்டரீதியாக கலவரம் என்ற அழைக்கப்பட்டு ஒருவிதப் பாதுகாப்பை வழங்குகிறது. அதனால் உணர்ச்சிப் பெருக்கால் எதிரணியின் சாயல் கொண்ட மக்களுடன் மோதி அமைதியடைந்து கொள்கிறோம்.

அமெரிக்க அரசு நடத்திய போருக்கு அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களைத் தண்டிப்பதோ, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டால் அதற்குப் பதிலாக அந்நாட்டினரை இங்கு தாக்குவதோ, கர்நாடக அரசியல் காவிரிப் பிரச்சனையை எடுக்கிறதென்றால் எதிர்வினையாக இங்குள்ள அம்மக்களை விரட்டுதலோ என்று ஒரு குழு மற்றொரு குழுவின் செயலுக்குச் சம்பந்தமில்லாதவர்களைக் காயப்படுத்துதல் தொடர்கிறது. ‘இங்க அடுச்சா அங்க வலிக்கும்’ என்ற விந்தையான கொள்கையாகயிருக்கலாம். அறியாமை என்றாலும் இதுவொருவகையில் இயலாமையின் வெளிப்பாடு ஆனால் நிச்சயமாகத் தீர்வாகாது. பிரச்சனை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும். பெற்றவர்களின் கடனுக்குப் பிள்ளைகளை விற்பதோ, அடிமையாக்குவதோ இதே வகைதான்.

மேலும் யோசித்தால் ஒரு சமூகத்தினர் முன்னொரு காலத்தில் படையெடுத்து வந்து நமது முன்னோர்களைத் தாக்கினார்கள் என்பதற்காக இன்றைக்கு அச்சமுகத்தை வெறுப்பதும், அன்று கட்டாய மதமாற்றம் செய்து கொடுமைசெய்தார்கள் என்பதற்காக இன்று அம்மதத்தை அதற்காகத் தூற்றுவதும், முன்காலத்தில் தீண்டாமையைக் கடைபிடித்த சமுகத்தின் இன்றைய வாரிசுகளை அதற்காக ஏளனம் செய்வதும் ஒப்பு நோக்கில் ஒரேவகைதான். அதே தவற்றை இன்று யார் செய்தாலும் தவறுதான் ஆனால் அப்படியில்லாத வாரிசுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே வாதம். ஒருவர் செய்த தவறுக்கு வெவ்வேறு காலகட்டத்திலோ பகுதியிலோ இருக்கும் மற்றொருவர் எப்படி பொறுப்பாவார்? உணர்ச்சிவசத்தால் ஒரேமதம், ஒரே ஊர் என இவர்களைத் தொடர்பு படுத்தலாம் அதே போல மற்றொருவர் செய்த குற்றத்திற்கு நாம் பலியாகத் தயாரா என்ற கேள்வியையும் சிந்திக்க வேண்டும்.

அதே நேரத்தில் பாவம் மட்டுமல்ல லாபமும் அவ்வகையே. ஒன்றும் செய்யாமல் வீணான பெருமைகளைப் பேசிப் பேசி சம்பந்தமில்லாதவர்கள் சலுகைகளைப் பெற்றும்விடுகிறார்கள். முன்பு சிறப்பாக பணியாற்றிய கட்சியின் இன்றைய நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இன்றும் ஆதரவு அளிப்பதும், சுதந்திரத்திற்குப் போராடிய தியாகிகளின் அடுத்த வாரிசுகளுக்கு இன்றும் கொடி பிடிப்பதும், உழைப்பில்லாமல் தந்தையின் தயவில் அதிகாரத்தைப் பெற்று நடத்தும் வாரிசு அரசியலும் இதே வகையறாதான். அவரவர் வினைப்பயனை அவருக்கே வழங்க வேண்டும்.  இதன் மூலம் காலங்காலமாகத் தொடரும் வன்மங்களும் விசமங்களும் வேரறுக்கப்படும். யாரும் அடுத்த பிரிவைத் தாக்கித் தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலை அகலும்,  சாதிப் பெருமைகள் வலுவிழக்கும், மதப் பூசல்களும் மடிந்துபோகும். இன்று, என்ன செய்தால் நற்பெயர் கிடைக்கும், எப்படி நம்மால் உதவமுடியும் என்று புதிய தலைமுறை சிந்திக்கத் தொடங்கும். உச்சத்திலிருந்தாலும், அச்சத்திலிருந்தாலும் இந்தக் குழுவில் ‘நீ என்ன செய்தாய்’ என்று ஒவ்வொரு தருணத்திலும் கேட்கவேண்டும். இவற்றை உடனே சமநிலைப் படுத்தமுடியாது என்றாலும் காலப்போக்கில் செய்யவேண்டும் என்பதே இன்றைய தேவை.


நீச்சல்காரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமூகங்களும் சண்டைகளும்”

அதிகம் படித்தது