மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வலி (சிறுகதை)

ஹரிஷ்

Feb 28, 2015

vali1உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ட்ரஸ்ஸிங் டேபிளுக்கும் பீரோவுக்கும் இடைப்பட்ட சந்தில் சின்னு அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அங்கு தான் இருக்க வேண்டும். எப்போதும் அவனுக்கு அழும் இடம் அது தான்.

உள்ளே சென்று பார்த்தேன். நினைத்த மாதிரியே அந்த இடுக்கில் அமர்ந்திருந்தான்.பாவமாக இருந்தது. தலைவலி மண்டை உடைந்து விடும் போல் இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தேன். அப்படியும் நேரம் பார்த்தேன். சின்னுவைக் கிளப்ப இன்னும் நேரமிருந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் இப்படியே உட்கார்ந்திருக்கலாம்.

அப்போது அது மெல்ல எட்டிப் பார்த்தது. அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் வரும் போதெல்லாம் பூதாகாரமாக வந்து சில நிமிடங்களுக்குத் தாண்டவமாடி விட்டுப் போகும் அந்த அடிவயிற்றின் கத்திக்குத்து வலி. அடுத்த தாக்குதலுக்குத் தயாரானேன். வந்தே விட்டது.

அடுத்த ஐந்து நிமிடங்கள் நரகம். அரை மணிக்கொரு முறை அனுபவிக்கும் நரகம். டாக்டர்களுக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் போக்குக் காட்டி கெக்கலிக்கும் நரகம். என்னோடு வாழப் பழகிக்கொள் என்று என்னை உச்சந்தலையைப் பிடித்து உலுக்கும் நரகம்.

ஐந்து நிமிடங்களுக்குப் பின் மெல்ல இறுக மூடியிருந்த கண்களைத் திறந்தேன். பெட்ஷீட்டை இறுக்கிக் கொண்டிருந்த விரல்களை விடுவித்து கையை ஊன்றி பெருமூச்சு விட்டு எழுந்தேன். இந்தப் பெருமூச்சு, வலியை அட்லீஸ்ட் அரை மணி நேரமாவது உடம்புக்குள் எங்காவது மறைத்து வைக்கும் வழி.

“நன்னாத் தான் ஆச்சு போ. லோகத்துல எந்த பொம்மனாட்டியும் காணாத கஷ்டத்தையா நீ கண்டுட்டே? மாசா மாசம் வர்றது தானே? அதுக்கென்னத்துக்கு இத்தனை மாய்மாலம்?” தன் மொத்த வலியையும் அம்மாவிடம் சொன்ன போது ஒரே வாக்கியத்தில் துடைத்துத் தள்ளி விட அம்மாவால் முடிந்தது. அது மாதிரி இந்த வலியையும் துடைத்து தள்ளி விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”

மெல்ல சின்னுவை நெருங்கினேன். அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து தலையைத் தடவினேன். தட்டி விடவில்லை. சமாதானப்படுத்தி விடலாம். சட்டென்று அவனை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். இருக்கும் கொஞ்ச நேரத்தில் அவனை சீக்கிரம் சமாதானப்படுத்த இது தான் வழி. குழந்தைகளைத் தான் எவ்வளவு சுலபமாய்ச் சமாதானம் செய்து விட முடிகிறது. அதுவும் அன்பைக் காட்டி.

ஒரு வழியாய்ச் சிரிக்க வைத்து சண்டை மறக்க வைத்து குளிப்பாட்டி யூனிபார்ம் மாட்டி சாப்பிட வைத்து மீண்டும் சிரித்துக் கைகாட்டி பஸ் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்து சோபாவில் விழுந்தேன்.

வலி அதுபாட்டுக்கு அதன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. ஈப்போது இல்லை. நேற்று ஹோட்டலில் இருக்கும் போதே ஆரம்பித்து விட்டது. இரவு தூங்க முடியாத படிக்கு செய்து கொண்டிருந்தது. பிரபா நேற்று இடுப்பை வளைத்த போது ஆயாசமும் சலிப்பும் தான் வந்தது. வெடுக்கென்று தட்டி விட்டேன் கையை. அப்படிச் செய்தால் தான் மற்றொரு முறை தொந்தரவிருக்காது. இல்லையென்றால் மீண்டும் முயற்சிப்பான்.

கல்யாணம் ஆன போதிருந்தே பிரபாவுக்கு என் மாதாந்திர பிரச்னைகளைப் பற்றி எந்தக் கவலையும் இருந்ததில்லை. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நான் வலியால் துடிக்கிறேன் எப்போதெல்லாம் அவதிப்படுகிறேன், அது மாதிரி பொழுதுகளில் நான் அழுகிறேன் என்பதெல்லாம் பிரபாவின் கவனத்தை எட்டியதுமில்லை.

அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை என்றாலும் வேண்டாம் என்று மறுக்கும் போது அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற சின்ன எதிர்பார்ப்பு கூட நிறைவேறாமல் போக்கும் போது அயற்சி மட்டுமே மனமெங்கும் நிரம்பி வழியும்.

அந்த சந்தர்ப்பங்களில் தவிர்க்கவே இயலாமல் ரகுவின் ஞாபகங்கள் வந்து தொலைக்கும். இது போன்ற வலி மிகுந்த நாட்களில் அவன் தோளில் சாய்ந்து கொண்டிருந்ததும் தலையை இதை விட மென்மையாக வருடிவிட முடியுமா என்று எண்ணும்படி அவன் செய்ததும் அன்பு என்பது வலியை மறக்கச் செய்யும் வலிமை படைத்தது என்று புரிந்து சந்தோஷித்ததும் அலையலையாய் மோதும். ஒரு வார்த்தை பேச மாட்டான். தன் சின்னச் சின்ன அன்பான தொடுதல்களிலேயே வலியின் வீரியத்தைக் குறைப்பான். மனசைக் கயிறு போட்டு அந்த நினைவுகளில் இருந்து இழுக்க முயற்சி செய்து மீண்டும் மீண்டும் அதிலேயே வீழ்வேன்.

அது மாதிரியான மென் உணர்வுகளுக்கெல்லாம் பிரபாவிடம் இடமே இருந்ததில்லை. நேற்றும் அப்படித் தான். தூக்கமே இல்லையென்றாலும் வெறுமனே படுத்து பேன் சுற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் போலிருந்தது. அதனால் தான் கையைத் தட்டி விட்டேன். இரவு எதுவும் பேசாமல் இருந்தவன் காலையில் முகத்தைக் காட்டினான்.

எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து தினமும் சாப்பிடும் டிபனைக் குறை கூறி சுருக்கெனக் குத்தும் வார்த்தைகள் சிலவற்றை வீசி விட்டு அதற்கு பதில் கூறும் முன் கிளம்பி விட்டான். கோபம் ஏதோ சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்த சின்னு மீது திரும்பி அவன் அடி வாங்கியதில் முடிந்தது.

ஷிப்ட் இரண்டு மணிக்குத் தான். அப்போது போனால் போதும். தூங்கவெல்லாம் முடியாது. இரவு விட்டு வைத்த வேலைகள் எல்லாம் கிடந்தன. உடம்பு கெஞ்சியது. ஆனது ஆகட்டும் என்று அரை மணி படுத்து விட்டேன்.

என்னென்னவோ கச்சாமுச்சாவென்று கனவுகள். சின்னுவும் ரகுவும் கேரம் போர்டு விளையாடுகிறார்கள். பிரபா கிச்சனில் எனக்காக தோசை வார்க்கிறான். திடீரென்று கனவீலும் அந்த வலி. ரகு தலையை வருடுகிறான். தயங்குகிறேன். பிரபா சிரிக்கிறான். கண்களைத் திறக்க முடியாமல் அழுத்தியது. சிரமப்பட்டு விழித்தேன்.

மணி ஆகி இருந்தது. எழுந்து குளித்து சிங்காரித்துக் கொண்டேன். வேலைக்கு உயிர் கிடையாது. நமக்கு உடம்புக்கு என்ன என்பதெல்லாம் அதற்குத் தெரியாது. அது கேட்பதைக் கொடுத்து விட வேண்டும். என் வேலைக்கு இவ்வளவு மேக்கப் தேவை. வேறு வழியில்லை. எவ்வளவு மேக்கப் போட்டும் எனக்கு மட்டும் முகம் வாடியிருப்பது போல் தோன்றியது. வாடல் வெளியே இல்லை என்பதும் புரிந்தது.

லீவ் போட்டு விடலாமா என்ற எண்ணம் ஒரு கண மின்னலாக மனதில் ஓடியது. லீவ் பேலன்ஸ் தொடர்பான பிரபாவின் கேள்விகளும் விவாதங்களும் கணக்கிடல்களும் அதனோடே சேர்ந்து வந்து லீவ் போடும் எண்ணத்தை அடியில் போட்டு அழுத்தி விட்டு புறப்பட வைத்தது.

ஹோட்டல் போய் சேர்ந்து மீண்டும் ஒரு முறை டச்சப். இடத்துக்கு வந்து சேர்ந்தேன். சுஷ்மா ஏற்கனவே வந்து விட்டிருந்தாள். அவளைப் பார்த்து தலையசைத்து விட்டு வேலையைப் பார்க்கத் துவங்கினேன். யார் வந்தாலும் கழற்றி வைத்திருக்கும் புன்னகையை எடுத்து மாட்டிக் கொண்டு வருபவர்களுக்கெல்லாம் அதைக் காட்டி காட்டி புன்னகையின் மேல் ஒரு மாதிரியான ஒவ்வாமை கூட வந்து விட்டிருந்தது. அவளுக்கும் அது போல் தான். இன்னும் சொல்லப் போனால் எங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது சிரிக்காமல் புன்னகைக்காமல் பேசிக் கொள்வதே இயல்பாகிப் போயிருந்தது.

ரிசப்ஷன் என்றாலே யார் வந்தாலும் வரவேற்க இருப்பது தானே. ரிசப்ஷனில் நிற்கும் பெண்கள் எல்லாருமே அழைப்பிற்கு உடன் இணங்குபவர்கள் என்று இந்தக் காலத்திலும் நினைத்துக் கொண்டு பேசும் நிறையப் பேர்களைப் பார்த்துப் பழகி விட்டிருந்தது. அதனால் அது மாதிரியான பேர்களைப் பார்த்து கோபப்படுவதும் வருத்தப்படுவதும் கூடக் குறைந்து விட்டது. ஒரு மாதிரி பிளாஸ்டிக்தனம் அந்த இடத்தில் போய் நின்றாலே ஒட்டிக் கொண்டு விடத் துவங்கியிருந்தது.

இன்றும் அது போல் ஓரிரண்டு கேஸ்கள். தவிரவும் சிடுசிடுத்த சில கஸ்டமர்களை முகம் கோணாமல் பேசி சமாளிக்க வேண்டியிருந்தது இன்று மிகுந்த சலிப்பாக இருந்தது. நேரம் கூடக் கூட உடம்பு கொஞ்சம் ஓய்வு கொடேன் என்று கெஞ்ச ஆரம்பித்தது. நான் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிந்ததும் அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

இரண்டு மூன்று முறை ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வந்தது மேலும் சக்கை போல் ஆக்கி விட்டது. அடி வயிற்றின் வலி விரல் நகக் கண் முதற்கொண்டு பரவி வெடிக்கிறாற் போலிருந்தது. பத்து மணியை நேரம் தொடுவதற்குக் காத்திருந்தது ஒரு யுகம் போல் இருந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

ரெண்டாவது ஷிப்டில் இது ஒரு தொல்லை. நான் வருவதற்குள் பெரும்பாலும் சின்னு தூங்கி விட்டிருப்பான். தூங்கும் குழந்தையை கொஞ்ச நேரம் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது அந்த நாளை முடிப்பதற்கான வேலைகளின் தொடக்கமாக இருக்கும்.

சாப்பாடு இறங்கவில்லை. வேலை ஏதோ செய்தேன் என்று பேர் பண்ணினேன். இந்த மூன்று நான்கு நாட்களில் ஒரு நாளாவது ஞாயிறு வந்தால் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும். இது திங்கட்கிழமையன்று துவங்கினால் வாரம் முழுவதும் நரகம் தான். படுக்கப் போகும் முன் டைனிங் டேபிள் சேரில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்தேன். எதற்கென்றே தெரியாமல் கோபமும் சுய கழிவிரக்கமும் பொத்துக் கொண்டு வந்தது.

நிரம்பி வழிந்த ரெப்ரிஜரேட்டர், சுவற்றில் மாட்டியிருக்கும் துடைக்கப்படாமல் அழுக்குப் படிந்த குருவிப் படம், தரையில் கிடந்த சின்னுவின் டாய் ட்ரெயின் , ஷெல்பில் எடுத்து வைக்கப் படாமல் வாசற்கதவருகே கழற்றிப் போடப்பட்டிருந்த பிரபாவின் ஷூ என்று சகட்டு மேனிக்குக் கோபம் வந்தது.

சராசரி மனிதர்களுக்கு இருப்பதிலேயே கொடுமையான விஷயம் கோபம் வரும் போது அதைக் காட்டுவதற்கு ஆட்களோ சந்தர்ப்பங்களோ எதிரில் இல்லாமல் போவது தான். கஷ்டப்பட்டு அந்தக் கோபத்தைக் கடந்தேன்.

உடல் கெஞ்சியது. இதற்கு மேல் என்னை வதைக்காதே என்று மன்றாடியது. இந்த மாதத்திற்கான கெடு எப்போது தான் முடியுமோ என்று மருக வைத்தது. கரும்பு மெஷினில் வெளியேற்றப்பட்ட சக்கை போல் கட்டிலில் போய் விழுந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து தோளில் கை. நேற்று இடுப்பு. இன்று தோளில். கோபம் தலைக்கேறியது. நேற்று கையைத் தட்டி விட்ட பிறகாவது புரிந்து கொண்டிருக்க வேண்டாமா? இன்றும் வேறு வழியில்லாமல் அதையே செய்தேன். சற்று வேகமாகச் செய்தேன். காதருகே அவன் மூச்சுக் காற்று. கோபமாக இருக்கிறான் என்று தெரிந்தது.

மிக அடக்கமான, ஆனால் அழுத்தமான ஊசி குத்துகிறாற் போன்ற குரலில் “ என்னடி? ரொம்ப சீன் போடற? டூ யு வாண்ட் மீ டு பெக்? கெஞ்சணுமா உன்ன?” என்று கிசுகிசுத்தான்.,

அந்த நிமிடம், அந்தக் கணம், அந்த நொடி, அந்த இடத்தில் இல்லாமல் போய் விட மாட்டோமா, கரைந்து காற்றாகி விட மாட்டோமா என்றிருந்தது. உடம்பெல்லாம் கூசியது. யாரோ ஆயிரம் கண் கொண்டு என்னை உடையின்றிப் பார்ப்பது போன்ற உறுத்தல். துளிர்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனுக்கு முகம் காட்டாமல் “ பீரியட்ஸ்” என்றேன்.

அதற்குப் பிறகு அவன் பேசவில்லை. அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டான் என்று தெரிந்தது. இதை முதல்லயே சொல்லித் தொலைக்கறதுக்கு என்ன என்று அவன் கேட்டு இன்னொரு சண்டை துவங்காதது ஆகப் பெரிய ஆறுதலாய் இருந்தது.

வெகு நேரம் புரண்டு கொண்டிருந்தேன். அரைத் தூக்க நிலையில் மீண்டும் கனவு. கனவில் ரகு. மெல்லத் தலையை வருடினான். அற்புதம். அவன் தோளில் சாய வேண்டுமே?

ச்சீய்… இதென்ன அபத்தம்? வழக்கம் போல் அந்த நினைவைத் தள்ள முயற்சித்தேன்.

எதற்குத் தள்ள வேண்டும்? நினைத்த அடுத்த நொடி ரகு மீண்டும் என் பக்கத்தில் இருந்தான். தலையை வருடியபடி. நான் என் தலையை நன்றாக அவன் தோளில் சாய்த்து இருத்திக் கொண்டேன். அருகில் கேட்டுக் கொண்டிருந்த குறட்டை சப்தம் மறையத் துவங்கியது.

வலி எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ரகுவின் வாசனை இதமாக இருந்தது. புன்னகைத்தேன். மெல்லத் தூக்கம் என் மேல் கவியத் துவங்கியது.


ஹரிஷ்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வலி (சிறுகதை)”

அதிகம் படித்தது