மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) மேலாளர் வினோத் குமார் அவர்களின் நேர்காணல்

சிறகு நிருபர்

Apr 4, 2015

bapasi8கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்:BAPASI என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம். இதில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறேன். இந்த நிறுவனத்தின் நோக்கம் வாசகர்களுக்கு நல்ல புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பதுதான். இதில் தொடர்ந்து 38 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடத்திக்கொண்டு வருகிறோம். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல விதமான புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது.

கேள்வி: BAPASI துவங்கியதன் அடிப்படை நோக்கம் என்ன?

பதில்: அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால் நம் வாசகர்கள் வாங்கி செல்வதற்கு ஏதுவாக இருக்கும், அந்த ஒரு காரணத்திற்காகத்தான் புத்தகக் கண்காட்சியைக் கொண்டுவருவது. இந்த மாதிரி புத்தகக் கண்காட்சி நடத்துவது மூலமாக எல்லாருக்கும் எல்லா புத்தகங்களும் கிடைப்பதற்கு வழிவகுப்பதோடு, புத்தகங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும் கொடுக்கிறோம், அது இல்லாமல் விளம்பரம் செய்வதினாலும் நிறைய மக்கள் வந்து வாங்கி செல்கிறார்கள்.

கேள்வி: BAPASI-யின் பணிகள் புத்தகக் கண்காட்சி நடத்துவது மட்டும் தானா அல்லது வேறு பணிகள் இருக்கிறதா?

பதில்: முக்கியமாக இதைத் துவங்கியது, புத்தகப் பதிப்பாளருக்கும், புத்தக விற்பனையாளருக்கும் சந்தைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த மாதிரி புத்தகக் கண்காட்சி நடப்பது மூலமாக அனைத்து ஊர்களிலிருந்தும் வரும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகங்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்காகத்தான் இந்த நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

bapasi9கேள்வி: தமிழ் புத்தகக் கண்காட்சியில் மிக அதிக அளவில் ஆங்கிலப் பதிப்பகங்கள் இடம் பெறுகிறது அது எதற்காக?

பதில்: அனைத்துப் புத்தகப் பதிப்பாளர்களும், புத்தக விற்பனையாளர்களும் இங்கு வந்து பங்கு பெறவேண்டும் என்பது எங்களது ஆர்வம். தமிழ் பதிப்பாளர்கள் அதிகமாக பதிப்பகம் மூலமாக பங்குபெறாமல் விற்பனையாளர்களிடம் கொடுத்துவிடுவதால், அவர்களின் பதிப்பகங்கள் அதிகமாக பங்குபெறுவதில்லை. வினியோகஸ்தர்கள் எல்லோரும் வெளிநாடுகளிலிருந்து, கடந்த புத்தகக் கண்காட்சியில் ஜப்பானிலிருந்தெல்லாம் வந்து பங்கு பெற்றிருக்கிறார்கள். அந்த மாதிரி வருகிறபொழுது வெளியூரிலிருக்கும் புத்தகங்களும் சென்னைவாசிகளுக்கு கிடைக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காகத்தான் எல்லா பதிப்பகங்களும் கொண்டு வருகிறோம்.

கேள்வி: ஒரே கடையில் எல்லாவகையான புத்தகங்களும் அதாவது ஆங்கிலம், தமிழ் என்று எல்லாமே கலந்து இருக்கிறது. ஆங்கிலத்திற்கு தனியாகவும் தமிழுக்கு தனியாகவும் கடைகள் வைத்திருக்கிறீர்களா?

பதில்: அந்த மாதிரி செய்யும் பொழுது வாசகர்கள் பிரிக்கப்படுகிறார்கள். ஒரு வாசகர்கள் உள்ளே சென்று வாங்கும் பொழுது தமிழ்தான் வாங்கவேண்டும், ஆங்கிலம்தான் வாங்கவேண்டும் என்று செல்லவில்லை. அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் தமிழ் வடிவிலோ அல்லது ஆங்கிலம் வடிவிலோ அல்லது சிடி வடிவிலோ எந்த விதத்தில் கிடைத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள்.

கேள்வி: இத்தனை வருடம் புத்தகக் கண்காட்சி நடத்தியிருக்கிறீர்கள், இன்றைய இளைய தலைமுறைகளிடம் வாசிப்புத் திறன் வளர்ந்துள்ளதாக நினைக்கிறீர்களா?

பதில்: மிக அதிக அளவில் மாணவர்கள்தான் வந்து பங்குபெறுகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளாக மாணவர்கள் அதிகமாக வருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாகவே நுழைவுச்சீட்டு(Ticket) கொடுக்கின்றோம், தேவையான அளவிற்கு புத்தகங்கள் இங்கு கிடைக்கிறதால் 10ரூபாய் முதலில் இருந்து புத்தகங்கள் பதிப்பித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: இன்றைய காலகட்டசூழ்நிலையில் புத்தகங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?, இதற்கு ஏன் கழிவு கொடுக்கக்கூடாது?

பதில்: விலைவாசி எல்லாவிதத்திலும் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு புத்தகத்தை விற்பனை செய்யவேண்டும் என்றால் அவர்கள் காகிதத்தின் விலை, அச்சடித்ததற்கான விலை மற்றும் மற்ற அனைத்தையும் நிர்ணயித்துத்தான் ஒரு புத்தகத்திற்கு விலையை நிர்ணயிக்கிறார்கள். புத்தக விற்பனை என்று வரும் பொழுது 10 சதவிகிதம் சிறப்பு கழிவு என்றுதான் கொடுக்கின்றோம். அதற்குமேல் தனிப்பட்ட புத்தக வெளியீட்டாளரின் விருப்பம், அதில் நாங்கள் தலையிட முடியாது.

கேள்வி: தற்கால புத்தக விற்பனை தாங்கள் எதிர்பார்த்த அளவு இருக்கிறதா?

பதில்: கண்டிப்பாக இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளர் வாரியாக விசாரித்தால்தான் அதனுடைய விபரம் தெரியும். எங்களுக்கு ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது அதிக விற்பனை இருப்பதனால்தான், நாளுக்கு நாள் புத்தகக் கண்காட்சியின் வளர்ச்சியும் பெரிதாகிக்கொண்டே போகிறது. நீங்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பீர்கள் கடைகள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது குறைவதில்லை.

கேள்வி: சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறீர்களா? அவ்வாறு நடத்தினால் அதற்கு அங்கு வரவேற்பு எப்படி உள்ளது?

பதில்: நாங்கள் சென்னையைத் தவிர்த்து பிற இடங்கள் என்று பார்த்தீர்கள் என்றால் மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக நடத்தி வந்தோம். அதில் கோயம்புத்தூரில் அந்த அளவிற்கு பலனளிக்கவில்லை. ஆனால் மதுரையில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறோம். அது இல்லாமல் பல இடங்களில் ஆட்சியர் அனுமதியுடன் BAPASI-யும் ஈடுபாட்டோடு சேர்ந்து அனைத்து ஊர்களிலும் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: உங்களுடைய நிர்வாக அமைப்பைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடக்கும். இங்கிருக்கும் ஐநூறு உறுப்பினர்களில்; யார்வேண்டுமானாலும் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். யார் அதிகம் ஓட்டு வாங்குகிறார்களோ அவர்களில் தலைவர், செயலாளர், குழு உறுப்பினர்களாக எட்டு நபர்கள், அதைத் தவிர்த்து பொருளாளர் என்று இருபத்து நான்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த இருபத்துநான்கு நபர்கள் கொண்ட குழுதான் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. தற்பொழுது செயலாளராக புகழேந்தி SIXTHSENSE PUBLICATIONSம், மீனாட்சி சுந்தரம் மெய்யப்பன் பதிப்பகமும், பொருளாளராக ஒலிவாணன் EMERALD PUBLISHERS ம் பொறுப்பில் இருக்கிறார்கள்.

bapasi5கேள்வி: புத்தகக் கண்காட்சி தவிர உங்கள் நிர்வாகத்தின் பிற செயல்பாடுகள்?

பதில்: நாங்கள் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் எல்லாமே நடத்திக்கொண்டிருக்கிறோம். அதில் சிறந்த முறையில் கலந்துகொள்பவர்களுக்கு புத்தகங்களாக பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை பரிசு வழங்கி வருகிறோம். அது இல்லாமல் இந்த சங்கத்தில் வெளியீட்டாளரிடம் வேலை செய்கிறவர்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து வருகிறோம்.

கேள்வி: இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான நிகழ்வு நடத்துகிறீர்கள். இதற்கான நிதி, நன்கொடை ஏதும் வருகிறதா?

பதில்: நிதி, நன்கொடைகள் எல்லாம் நாங்கள் உறுப்பினர்களிடமிருந்து பெறுகிறோம். புத்தகங்கள் மீது ஈடுபாடு கொண்ட நல்ல உள்ளங்களும் இதற்கு நன்கொடை வழங்குகிறார்கள்.

கேள்வி: இதுவரை BAPASI செயல்பாட்டில் எதை சாதனையாகக் கருதுகிறீர்கள்?

பதில்: நாங்கள் வரவர வாசிப்பாளர்களை அதிகம் கொண்டுவந்துகொண்டிருக்கிறோம். எனவே இதனை நாங்கள் சாதனையாகக் கொள்கிறோம். ஏனென்றால் நான் இந்த அலுவலகத்தில் சேரும் பொழுது 175 கடைகள்தான் போட்டுக்கொண்டிருந்தோம், அது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்தது. அதற்கு அடுத்து சிறிது நாட்களிலேயே 500 கடைகளாக இருந்தது, தற்பொழுது கிட்டத்தட்ட 860 கடைகள் அமைத்துக்கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் வாசிப்பாளர்களும் ஒரு வருடத்திற்கு 10 லட்சத்திற்கு மேல் வருகிறார்கள்.

கேள்வி: புத்தகங்கள் எவ்வளவு விற்பனையாகிறது?

பதில்: தோராயமாக அனைத்து கடையிலும் விற்பனை நன்றாக இருப்பதனால்தான் எல்லோரும் பங்குபெறுகிறார்கள்.

கேள்வி: புதிதாக ஒரு புத்தக வெளியீட்டாளர் கடை துவங்குகிறார்கள். அவர்கள் உங்களோடு இணையவேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகள் ஏதேனும் உண்டா?

பதில்: தொடர்ந்து மூன்றாண்டுகாலம் அவர்கள் புத்தகத்துறையில் இருந்திருக்கவேண்டும். அவையல்லாமல் தொடர்ந்து 30 புத்தகங்களாவது குறைந்தபட்சம் பதிப்பித்திருக்கவேண்டும், அப்படி இல்லையென்றால் புத்தக விற்பனையாளராக வந்தார்கள் என்றால் தொடர்ந்து மூன்றாண்டுகாலம் பதிப்புத்துறையில் இருந்திருக்கவேண்டும். அந்த மூன்று வருடத்திற்குரிய வருமானவரி கோப்பு கொடுக்க வேண்டும். இந்த மாதிரி தகுதியுள்ளவர்கள்தான் BAPASI யில் இணையமுடியும்.

கேள்வி: இன்றைய தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: வாசிப்பது நல்ல பழக்கம், ஒரு புத்தகத்தை படித்தீர்கள் என்றால் அதன் மூலமாக மேலும் நல்ல குணங்கள் எல்லாம் வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. இன்றைய இளையதலைமுறையினர் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் என்று எந்த நேரமும் இருக்காமல் நேரம் கிடைக்கும் பொழுது இந்த மாதிரியான புத்தகங்கள் அல்லது மின் புத்தகங்கள் என்று புத்தகங்கள் படிக்க படிக்க நல்ல மரியாதையும் மதிப்பும் கூடும். பதிப்பகம் செய்பவர்கள், மின் புத்தகங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். இம்மாதிரியான மின்புத்தகங்களை மிக எளிதாக தரவிறக்கி படித்துக்கொள்ளலாம்.

சிறகு இதழுக்கு இன்முகத்துடன் நேர்காணல் அளித்தமைக்கு நன்றி.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) மேலாளர் வினோத் குமார் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது