மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

தேமொழி

Jul 25, 2015

indhiyaavin2இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்றவாரம் (ஜூலை 15, 2015) கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து உலகை அதிரவைக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றவில்லை, புதுமையான கருத்துகள் எதையும் இந்தியர்கள் உருவாக்கவில்லை என்றக் கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தியாவின் இளைய தலைமுறையினர் மேலைநாட்டினர் போலவே அறிவும் திறனும் இருந்தும், உலகிற்குப் பயன்தரும் ஆக்கப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை என்றும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பொழுது அவர் கூறினார்.

இக்கருத்து இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் கருத்தாகும். இதன் அடிப்படையில் உலகநாடுகளின் மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தோடு நம் இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சென்ற வாரம் (ஜூலை 17, 2015) உலகப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் மையமான ‘செண்டர் ஃபார் வேர்ல்ட் யுனிவர்சிட்டி ரேங்க்கிங்ஸ்’ (Center for World University Rankings – http://cwur.org/) நிறுவனமும் உலகின் 59 நாடுகளில் இருந்து 1,000 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி, 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையையும் வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலகப் பல்கலைக்கழகங்களின் தரத்தை இந்த ஆய்வு மையம் ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இவர்களது தளத்தில் 2012, 2013, 2014, 2015 ஆகிய நான்கு ஆண்டுகளுக்கான தரவுகள் கிடைக்கின்றன. இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரிய வருகிறது.

குறிப்பாக, முதல் ஐந்து இடங்களில் இருக்கும் கீழ்காணும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முதல் “ஐந்து” இடங்களிலேயே இருந்து வருகின்றன. அதிலும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஒவ்வொருமுறையும் முதலிடத்தையே பிடித்து வருகிறது. மற்ற பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முன்னும் பின்னும் நகர்ந்தாலும் முதல் ஐந்து இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட், எம்.ஐ.டி., கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகங்கள் மட்டுமே.

தர வரிசைப்படி 2015 ஆண்டின் உலகில் சிறந்த முதல் ஐந்து பல்கலைக் கழகங்கள்:

1. ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி

2. ஸ்டான்ஃபோர்ட் யுனிவெர்சிட்டி

3. எம்.ஐ.டி.

4. யுனிவெர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ்

5. யுனிவெர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்ஃபோர்ட்

முதல் “பத்து” இடங்களைப் பிடிக்கும் பல்கலைக் கழகங்களில் கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் ஆகிய இரு இங்கிலாந்து பல்கலைக் கழகங்கள் தவிர்த்துப் பிற இடங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கின்றன.

1. கல்வியின் தரம், 2. பட்டம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு, 3. ஆசிரியர்களின் தரம், 4. அவர்களின் ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கை, 5. அவற்றின் தரம், 6. ஆசிரியர்களின் புதுமையான சிந்தனைக் கருத்துகளின் வெளிப்பாடு, 7. அவற்றின் தாக்கம், 8. மொத்தமாக கல்விநிறுவனத்தின் சிறப்பு என்ற காரணிகளை (Quality of Education, Alumni Employment, Quality of Faculty, Publications, Influence, Citations, Broad Impact, Patents) அளக்கத் தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, பிறகு பல்கலைக்கழகங்கள் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில், முதல் 1,000 கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப் படுத்தப்படுகின்றன. இவர்களின் ஆய்வு முறை மிக விளக்கமாக இவர்கள் தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளது (http://cwur.org/methodology/).

உலக நாடுகளில் 59 நாடுகளில் இந்த முதல் 1,000 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. அவற்றில் அமெரிக்காவின் 229 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்று அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது, தொடர்ந்து சீனா (83), ஜப்பான் (74) அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. இந்தியப் பல்கலைக்கழகங்கள் 16 மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் தரவரிசையில் இந்தியா ‘பதினான்காவது’ இடத்தைப் பிடித்துள்ளது. கீழ்காணும் படம் உலக அளவில் இத்தகவலை ஒப்பிட்டுக் காட்டும்.

indhiyaavin7

இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த சிறந்த பல்கலைக் கழகமாக இந்தியத்தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிப்பது ஐ. ஐ.டி. டெல்லி. ஆனால் அதுவே உலகத் தரத்துடன் ஒப்பிடும்பொழுது மிகவும் பின்தங்கி 341 ஆவது இடத்தில்தான் இருக்கிறது. அத்துடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது, 328 ஆவது இடத்திலிருந்து இதன் நிலை சரிந்துள்ளது.

தர வரிசைப்படி 2015 ஆண்டின் உலகில் சிறந்த இந்தியப் பல்கலைக் கழகங்கள்:

1. ஐ.ஐ.டி. டெல்லி

2. யுனிவெர்சிட்டி ஆஃப் டெல்லி

3. இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்

4. பஞ்சாப் யுனிவெர்சிட்டி

5. ஐ.ஐ.டி. மெட்ராஸ்

6. ஐ.ஐ.டி. பாம்பே

7. டாட்டா இன்ஸ்டிடியுட் ஆஃப் ஃபன்டமெண்டல் ரிசர்ச்

8. ஐ.ஐ.டி. காரக்பூர்

9. ஐ.ஐ.டி. ரூர்க்கி

10. பனாரஸ் ஹிண்டு யுனிவெர்சிட்டி

11. ஐ.ஐ.டி. கான்பூர்

12. ஜவஹர்லால் நேரு சென்டர் பாஃர் அட்வான்ஸ்ட் சயின்டிஃபிக் ரிசெர்ச்

13. ஆல் இண்டியா இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்

14. யுனிவெர்சிட்டி ஆஃப் கல்கத்தா

15. ஜட்வபூர் யுனிவெர்சிட்டி

16. யுனிவெர்சிட்டி ஆஃப் ஹைதராபாத்

2015
இந்தியத்
தரவரிசை

கல்வி நிறுவனம்

2015 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு
உலகத்
தரவரிசை
இந்தியத்
தரவரிசை
உலகத்
தரவரிசை
இந்தியத்
தரவரிசை
1 ஐ.ஐ.டி. டெல்லி 341 1 328 1
2 யுனிவெர்சிட்டி ஆஃப் டெல்லி 379 2 436 2
3 இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ் 448 3 501 3
4 பஞ்சாப் யுனிவெர்சிட்டி 491 4 543 5
5 ஐ.ஐ.டி. மெட்ராஸ் 534 5 576 8
6 ஐ.ஐ.டி. பாம்பே 596 6 535 4
7 டாட்டா இன்ஸ்டிடியுட் ஆஃப் ஃபன்டமெண்டல் ரிசர்ச் 601 7 592 9
8 ஐ.ஐ.டி. காரக்பூர் 614 8 574 7
9 ஐ.ஐ.டி.ரூர்க்கி 638 9 611 10
10 பனாரஸ் ஹிண்டு யுனிவெர்சிட்டி 679 10 667 11
11 ஐ.ஐ.டி. கான்பூர் 714 11 569 6
12 ஜவஹர்லால் நேரு சென்டர் பாஃர் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசெர்ச் 777 12 777 12
13 ஆல் இண்டியா இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் 851 13 868 13
14 யுனிவெர்சிட்டி ஆஃப் கல்கத்தா 891 14
15 ஜட்வபூர் யுனிவெர்சிட்டி 923 15 904 14
16 யுனிவெர்சிட்டி ஆஃப் ஹைதராபாத் 925 16 911 15

மேல்காணும் அட்டவணை தரவரிசையில் இடம் பெற்ற 16 இந்தியப் பல்கலைக்கழகங்களையும், அவற்றின் உலகத் தரவரிசையையும், இந்தியாவில் தரவரிசையையும் காண்பிக்கிறது. அத்துடன் இந்த 2015 ஆண்டின் முடிவுகள், சென்ற ஆண்டின் முடிவுகளுடனும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் மொத்தம் 15 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றன. இந்த ஆண்டு ‘யுனிவெர்சிட்டி ஆஃப் கல்கத்தா’ தரவரிசையில் இடம் (இந்தியாவில் 14 வது இடம்) பிடித்துள்ளது. யுனிவெர்சிட்டி ஆஃப் கல்கத்தாவின் உலகத் தரவரிசை 891 வது இடம்.

indhiyaavin9இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை யாவுமே அரசின் பல்கலைக்கழகங்கள், அத்துடன் அவற்றில் பெரும்பான்மையானவை தொழில் நுட்பக்கல்வி, அறிவியல், பொறியியல், மருத்துவம் எனத் தொழிற்கல்வி நிறுவனங்களாகவும் இருக்கின்றன. அவற்றிலும் பெரும்பான்மை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள். ஐ.ஐ.டி. மெட்ராஸ் தவிர வேறு கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

BRICS என்று வளரும் நாடுகளின் பிரிவில் ஒப்பிடும் பொழுது அவற்றில் முதல் ஐந்து இடங்களில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் எவையுமே இல்லை. பசித்தவர் பழங்கணக்கு பார்ப்பது போல, ஒரு காலத்தில் இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகம் உலகச்சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனமாக இருந்த சூழ்நிலையை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஜப்பான் போன்ற அளவில் சிறிய நாடுகளில் இருந்ததும் அதிக அளவில் சிறந்தப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம் பிடிக்கின்றன. இந்தியா போல அதிக மக்கட்தொகை உள்ள சீனா நாட்டிலிருந்தும் அதிக அளவில் சிறந்தப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம் பிடிக்கின்றன.

யுனிவெர்சிட்டி ஆஃப் டெல்லி, பஞ்சாப் யுனிவெர்சிட்டி, பனாரஸ் ஹிண்டு யுனிவெர்சிட்டி, யுனிவெர்சிட்டி ஆஃப் கல்கத்தா, ஜட்வபூர் யுனிவெர்சிட்டி, யுனிவெர்சிட்டி ஆஃப் ஹைதராபாத் ஆகிய இந்தியப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் உலகில் சிறந்த கல்விநிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறும் பொழுது, தமிழகத்தில் இருந்து (ஐ.ஐ.டி. மெட்ராஸ் தவிர்த்து) ஒரு கல்வி நிறுவனமும் இடம் பெறாததும், குறிப்பாகப் பழமை வாய்ந்த ‘யுனிவெர்சிட்டி ஆஃப் மெட்ராஸ்’ இடம் பெறும் நிலையில் இல்லை என்பதும், தமிழகத்தின் கல்வியின் தரம் பற்றிக் கவலையை உருவாக்குகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் அதிக ஆய்வு அறிக்கைகள் எழுதும் சூழ்நிலை இல்லையா, அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு தேவையான அளவு நிதி ஒதுக்குவதில்லையா, என்பது போன்ற கேள்விகளும் எழும்பாமல் இல்லை. தமிழகக் கல்விக்கூடங்களில் படித்தவர்களுக்கு அயலகங்களிலோ, உள்நாட்டிலோ சரியான வேலை வாய்ப்பு இல்லையா, நடுவண் அரசும், தமிழக அரசும் இவற்றை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பது நலம் பயக்கும்.

யுனிவெர்சிட்டி ஆஃப் கல்கத்தா இந்த ஆண்டு உலகத் தரவரிசையில் இடம் பிடித்தது போல தமிழக மற்றும் இந்தியக் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் தரத்தை உயர்த்தி சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறுவதுடன் முதன்மை இடங்களுக்கும் முன்னேற வேண்டியத் தேவை இருக்கிறது. அதைப்பற்றி ஆட்சியாளர்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களும் அக்கறை செலுத்த வேண்டியத் தேவையும் இருக்கிறது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?”

அதிகம் படித்தது