மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நகரத்தார் தரும சாசனத்தின் வழி அறியலாகும் நகரத்தார் வரலாறு

முனைவர் மு.பழனியப்பன்

Nov 12, 2016

siragu-nagarathaar2

நகரத்தார்கள் வரலாறு, பெருமை, புகழ், சிறப்பு போன்றவற்றைக் காலந்தோறும் இலக்கியங்கள் பதிவு செய்துவந்துள்ளன. இவை தவிர கல்வெட்டுகள், பட்டயங்கள் போன்றனவும் நகரத்தார் பெருமைகளை வரலாறுகளைக் காட்டுகின்றன. அவற்றைத் தொகுத்து நகரத்தார் வரலாற்றினைத் தகுந்த முறையில் கட்டமைக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நகரத்தார் அறப்பட்டயம் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ள நகரத்தார் பெருமைகளை, வரலாறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

நகரத்தார் அறப்பட்டயங்கள் என்ற நூல் கோவிலூர் ஆதீனத்தால் தற்போது வெளியிடப்பெற்றுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள வ.சுப. மாணிக்கம் அவர்களின் பதிப்புரை குறிக்கத்தக்கது. பல செய்திகளை, ஆய்வுக்கண்களை இப்பதிப்புரை திறந்து வைக்கின்றது.

siragu-nagarathaar6

கி.பி. 1600 முதல் அதாவது பதினாறாம் நூற்றாண்டு முதல் 1800ஆம் ஆண்டு அதாவது பதினெட்டாம் நூற்றாண்டு வரை சில அறச் செயல்களைக் குறிப்பாக பழனி பாதயாத்திரை குறித்தான தகவல்களைப் பட்டயங்களாக நகரத்தார் எழுதிக் கொண்டுள்ளனர். இப்பட்டயங்களில் குறிப்பிட்டபடியே இன்றுவரை பழனி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. ஓலைச்சுவடிகளில் எழுதப்பெற்ற இத்தகவல்கள் அடங்கிய தொகுப்பு பல நிலையில் அச்சாக்கம் பெற்று மீளவும் கோவிலூர் ஆதீனத்தால் வெளியிடப்பெற்றுள்ளது.

இப்பட்டயங்களில் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நகரத்தார் பற்றிய வரலாறுகளை மட்டும் எடுத்துரைக்கும் நிலையில் இக்கட்டுரை அமைகிறது.

‘‘நகரச் சாசன அட்டவணை’’ என்ற தலைப்பிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள நகரத்தார் தர்ம சாசனம் என்ற சாசனத்தில் முதல் பகுதியில் உள்ள  பட்டயத்தில் இடம்பெற்றுள்ள நகரத்தார் பெருமைகள் பின்வருமாறு.

siragu-nagarathaar5

சோழ மண்டலமாகிய காவேரிப் பூம்பட்டிணத்தில் பிறந்தவர்கள்

சோழ நாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்ற இடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் நகரத்தார்கள்.

உயுரு வன வணிகர்

‘உயுரு’ என்பது விலாமிச்சை என்ற செடியைக் குறிக்கும். இச்செடியின் வேர் மணமுள்ளதாக இருக்கும். தற்போது வாசனைக்காகப்  பயன்படுத்தும் வெட்டிவேர் வேறு, இதுவேறு. விலாமிச்சை என்ற செடிகள் அடர்ந்த வனத்தில் இருந்த வணிகர்கள் நகரத்தார்கள் என்று அறியமுடிகிறது.

Asian Civilization Museum

மகாமகுட வணிகர்

தலையில் மகுடம் சூடிக்கொள்ளும் உரிமை நகரத்தார்களுக்கு இருந்ததால் இவர்கள் மகுட வைசியர்கள் என்று அழைக்கப்பெற்றனர்.

நாகலோகத்தில் றெற்றின வணிகர்

ஒரு காலத்தில் நாகலோகத்தில் இருந்த வணிகர்கள் நகரத்தார்கள் ஆவர். அதனை இத்தொடர் குறிப்பிடுகிறது. இத்தொடரில் உள்ள ‘‘றெற்றின’’ என்பதைத் ‘‘தெற்றின’’ என்று பொருள் கொண்டால் நாகலோகத்தில் சற்று இடறுதல் ஏற்பட்டு குடிபெயர்ந்த வணிகர்கள் நகரத்தார்கள் ஆவர் என்ற வரலாறு தெரியவரும்.
தங்கமேருறை கண்டவர்கள்

தங்க மயமான மேரு மலையை மதிப்பிட்டவர்கள் நகரத்தார்கள்.

மதயானையை நிறை கண்டவர்கள்

மதம் பிடித்த யானையின் எடையைக் கண்டறிந்தவர்கள் நகரத்தார்கள் என்று இத்தொடருக்குப் பொருள் சொல்ல இயலும்.

இந்த இரண்டு பெருமைகளுக்கும் மற்றொரு சான்று உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துக்குட்டிப்புலவர் என்பவர் பெரிய கருப்பண்ண சாமியைப் போற்றி ஒரு பாடல் பாடியுள்ளார். இம்முத்துக்குட்டிப் புலவர் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகியைப் போற்றி ஒரு பள்ளு இலக்கியம் பாடியுள்ளார். இவர் பவுசை என்ற ஊரில் உள்ள கருப்பண்ணசாமியை ஒரு பாடலில் போற்றுகிறார். அதில் இடம்பெறும் நகரத்தார் பெருமைகள் பின்வருமாறு.

‘‘வீறாக மதயானை நிறைகண்ட வணிசேகர்
மேருவை உரைத்து அறிந்தோர்
மிக்க தெய்வங்கள் குருதாய் தந்தை அல்லாமல்
வேந்தரைக் கும்பிடதோர்
மாறாகப் புகழ்பெற்ற எழுநகர் மரபுள்ள
வணிகர் நகரப் பிரதாபர்’’

என்ற அடிகளில் நகரத்தார் பெருமைகளை முத்துக்குட்டிப்புலவர் குறிப்பிடுகின்றார். இப்பாடலடிகளிலும் மதயானையை அளந்து சொன்ன பெருமையும், மேரு மலையின் தரத்தினை அளந்து சொன்ன பெருமையும் இடம்பெற்றுள்ளது.

முக்கியமாக வேந்தரைத் தொழாதவர்கள் நகரத்தார்கள் என்பதும். அவர்கள் பெற்றோர் மீதும், குருநாதர் மீதும் பற்றுடையவர்கள் என்பதும் இப்பாடல்வழி தெரியவருகிறது.

siragu-nagarathaar3

காவேரியைப் பஞ்சால் அடைத்தவர்கள்

காவிரி ஆற்றின் பெருக்கத்தைப் பஞ்சு கொண்டு அடைத்துத் தன்னைக் காப்பாற்றிய பெருமை மிக்கவர்கள் நகரத்தார்கள். இதன் காரணமாக பஞ்சு வணிகத் தொடர்பும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் நகரத்தாரிடம் இருந்தது என்பதை அறியமுடிகிறது.

ஔவை தன்தமிழுக்குப் பொற்பாடகம் கொடுத்தவர்கள்

நகரத்தார்களின் தமிழ் மீதான பற்று இத்தொடரில் வெளிப்படுகிறது. ஔவையாரின் தமிழுக்கு பொன்குடம் கொடுத்தவர்கள் நகரத்தார்கள் என்பது இத்தொடரின் பொருள்.

‘மடிச்சீலை பெருக’ வென்று வாழ்த்தி வரம் பெற்றவர்கள்

மடிச் சீலை என்ற தொடர் மடியில் வைத்திருக்கும் பணப்பை என்று பொருள்படும். பணப்பை பெருகவேண்டும் என்று வரம் பெற்றவர்கள் நகரத்தார்கள் என்பது இதனால் பெறப்படும் கருத்தாகும். சீலை என்ற வழக்கு இன்னும் நகரத்தார் தம் பேச்சுவழக்கில் உள்ளது.

கம்பனார் கோவிலைக் கனகத்தால் மேய்ந்தவர்கள்

கம்பனார் என்ற சொல் கச்சி ஏகம்பனே என்ற பட்டினத்தார் பாடலடியை அடியொற்றிப் பார்க்கும் நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலைக் குறிப்பதாகும். இக்கோவிலுக்குப் பொன்னால் ஓடு வேய்ந்தவர்கள் நகரத்தார்கள் என்பது குறிக்கத்தக்கது. தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்தில் சில காலம் வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள் என்பது இக்குறிப்பின்வழி வெளிப்படுகிறது.

மேலும் பல பெருமைகள் நகரத்தார்களுக்கு உண்டு. நகரத்தார்கள் பவளத்தால் கல்யாண வாசலுக்குக் கால் நாட்டும் உரிமை பெற்றவர்கள். இவர்கள் தண்ணீர் கயிறுக்குத் தங்கக்கயிறு போட்டவர்கள். அதாவது தண்ணீர் பற்றாக்குறை உள்ள இராமநாதபுரப்பகுதிகளுக்கு வந்தபோது தண்ணீரின் இன்றியமையாமை கருதி தங்கக்கயிறு போட்டுத் தண்ணீர் இழுத்தவர்கள் நகரத்தார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

சோழ மண்டலத்தில் வேந்தர்களுக்கு முடி சூட்டும் உரிமை பெற்றவர்கள் நகரத்தார்கள். இவர்களின் கொடி- சிங்கக்கொடி. சிங்காதனத்தில் இவர்கள் அமர உரிமை உண்டு. சீரக மாலை இவர்கள் அணிந்து கொள்ளும் மாலையாகும். வெள்ளை யானை இவர்களின் வாகனம். பாண்டிய மன்னன் தன் நாட்டிற்கு இவர்களை அழைத்தபோது பொன்னால் செய்யப்பட்ட தேர் ஏறி வந்தவர்கள் இவர்கள்.

o    கல்வாச நாடாகிய இளசைநகர் (இளையாற்றங்குடி) தன்னில் பூவசியறாக வந்தவர்கள். (இளையாற்றங்குடியில் முதன்முதலில் குடியேறியவர்கள்)

o    குலசேகரபுரத்தைச் சார்ந்தவர்கள்.

o    தேனாறு உடையவர்கள்

o    பாண்டி நாட்டு ஆச்சாரியர் பதம் போற்றுபவர்கள்.

o    திருப்புனல்வாசல் தேசிகனைப் பணிபவர்கள்

o    கல்வாச நாடு, 2. நேமமனாடு, 3. கேரள சிங்கவளநாடு, 4.பிரமமூர் நாட்டில் வீரபாண்டியபுரம் பெருந்திருவான கேரள சிங்க வளநாடு 5. வீரபாண்டிபுரம், 6. மருதாந்தபுரம் 7. சீர் குளத்தூர், 8. பிரம்பூர் நாட்டில் சூடாமணிபுரம், 9 கானாடு  ஆகிய ஒன்பது நாடுகளில் தற்போது வாழ்பவர்கள்.

o    ஏழு கோவில்கள் உடையவர்கள். (ஒன்பது கோயில்கள் என்பது பின்னால் தோன்றியது. முதலில் ஏழு கோயில்கள் மட்டுமே நகரத்தார்களுக்கு உரியது)

o    இருபத்தியிரண்டு கோத்திரம் உடையவர்கள்

1.    ஒக்கூருடையான்.
2.    பேருமாரூருடையான்.
3.    கிங்கினிக் கூருடையான்.
4.    பட்டணசாமி கழனிவாசல் உடையான்
5.    திருவேட்பூருடையான்
6.    திருவப்பூருடையான்.
7.    இன்னலமுடையான்.
8.    ஏழகப் பெருந்திருஉடையான்
9.    குளத்தூருடையான்
10.    பெருகுளத்தூருடையான்
11.    மண்ணூருடையான்
12.    உறையூர் உடையான்
13.    மணலூர் உடையான்
14.    குளத்தூருடையான்.
15.    கண்ணூருடையான்
16.    அருமிபாக்கூருடையான்
17.    கரும்பூருடையான்
18.    புகலிடம் கொடுத்த பட்டணமுடையோர்
முதலான கோத்திரங்கள் நகரத்தாருக்கு உரியன. (இருபத்தியிரண்டு என்ற குறிப்பில் கிடைப்பன பதினெட்டு மட்டுமே) இச்செய்திகள் அனைத்தையும் இப்பட்டயம் குறிப்பிடுகிறது.

இப்பட்டயம் பழனி பாதயாத்திரை பற்றிய குறிப்புகளைத் தருகிறது என்றாலும் அதில் குறிக்கத்தக்க அளவில் நகரத்தார் குலப் பெருமையை எடுத்துரைத்துள்ளது. இப்பகுதிகள் நகரத்தார் வரலாறாகக் கொள்ளத்தக்கன. இவற்றில் உள்ள செய்திகளைச் சான்றுகள்தேடி நிறுவவேண்டுவது அவசியமாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகரத்தார் தரும சாசனத்தின் வழி அறியலாகும் நகரத்தார் வரலாறு”

அதிகம் படித்தது