மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னாட்டுப் போர்க்களங்கள் – பகுதி 4 – அகல் உலகத் தொடர்பு

ஆச்சாரி

Mar 15, 2012


போர் என்பது இடைக்காலப் புராண மரபில் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால்வகைப் படைகளின் போர் மட்டுமே. இது முற்றிலும் நில மீது நடைபெற்ற போர் என்பது தெளிவு. இது கடந்து இடைக்காலக் கனவுகள் கூடச் செல்லவில்லை. கடலறியாத, வாகனக் கனவு காணாத சில நாகரிக இனங்களின் சின்னமாகவே இம்மரபு இயன்றது. ஆனால் உலகின் புராண காலத் தொடக்கத்திலும், தமிழர், கிரேக்கர் வரலாற்று வான விளிம்பிலும் நாம் நிலப் போர், கடற் போர், வாகனப் போர் என்ற இக்கால மூவரங்கப் போர்களின் சின்னங்களையும் காண்கிறோம். நில உலக நாகரிகங்கள் பலவற்றுக்கு முற்பட, கடலகத்தே பரவி, வானகமளாவி வளர எண்ணிய சில பல பழமை சான்ற நாகரிகங்கள் இருந்தன என்பதை இது குறித்துக் காட்டுகிறது.

நாலாயிர, ஐயாயிர ஆண்டுகட்கு முன் வானகப் போரும், வானகச் செலவும் கனவிலேனும் நிலவின என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். அதே சமயம் தற்கால உலகில் மேலை நாடுகளிலேனும் இக் கனவுகள் காணப்பட்டது சென்ற இருநூறு ஆண்டுகளுக்குள்ளேயே என்பதும், அவற்றின் பயனாகவே நாம் நீராவிக் கப்பல்கள், விசையூர்திகள், வானூர்திகள், தந்தி, தொலைபேசிகள் பெற்றிருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கன. முற்காலக் கனவுகள் கனவுகளாகவே நின்று கனவு மரபும் அழிவுற்றதற்கு இடைக்காலப் பண்பே காரணம் என்னல் வேண்டும். அது அக் கனவுகளை மனித அருஞ் செயல் கனவுகள் என்ற நிலையிலிருந்து படிப்படியாக மாய மந்திரங்கள், தெய்விக அருஞ் செயல்கள், பேய்ச் செயல்கள், அரக்க பூதகச்செயல்கள் என்ற நிலைக்கு ஒதுக்கித் தள்ளிற்று. வருங்கால ஆர்வக் கனவுகளாய் வளராமல், சென்ற கால நினைவுகளாய், நாளடைவில் மனித வாழ்க்கையுடன் தொடர்பற்ற மூடக் கருத்துக்களாய் அவை தேய்வுற்றன.

தமிழர் முதல் வானகப் போர்

கனவு கடந்து நனவிலே இவை நிலவின என்பதோ, மீண்டும் நிலவக் கூடும் என்பதோ இடைக்காலம் நம்பாத ஒன்று. மீண்டும் நிலவக் கூடும் என்ற நம்பிக்கையே நம் காலத்தில் அவற்றை நனவாக்கிச் செயல் வெற்றிகளும் ஆக்கிற்று. ஆனால் முன் நிலவியிருக்க முடியாது என்ற இடைக்கால அவநம்பிக்கையே இன்னும் நீடிக்கின்றது. இந்த அவநம்பிக்கை ஆராயாத, ஆராய்ச்சிப் பக்கமே நாடாத ஒரு முடிந்த முடிபாய் தற்காலத்தவரின் ஒரு புது மூட நம்பிக்கையாக இயங்குகின்றது. இம் முடிபு முற்றிலும் சரியல்ல என்பதைப் பழமை ஆராய்ச்சிகளின் போக்குக் காட்டி வருகிறது.

இடைக்கால கனவுகளுக்கு எட்டாத அளவில், பண்டைக் கிரேக்கர், உரோமர் இலக்கிய கலை வாழ்வு மேம்பட்டிருந்தது. இடைக்கால கனவுகளுக்கு எட்டாத தொலைவிலேயே தற்காலத்தவர் வியக்குமளவில், பினீஷியர், எகிப்தியர், அராபியர், தமிழர், மலாய் இனத்தவர் ஆகியோர் பரந்த கடலுலக வாழ்வும் வாணிகத் தொழில் வாழ்வும் பெற்றிருந்தனர். இக்கடலக நாகரிகங்கள் இடைக்கால உலகமறியாத அமெரிக்காக் கண்டத்திலும் சென்று பரவியதாகத் தெரிகிறது. தவிர, இன்றைய நகரங்கள் கூட முழுதும் பெற்றிரா அளவில் பண்டைய பெருநகரங்களில் வடிகால் அமைப்பு, குடிநீர்க் குழாய், குளிப்பறை ஆகிய வசதிகள் மிகுதியாய் இருந்தன. உண்மையில் இவ்வசதிகள் ஏற்பாடு செய்யப்பட பின்னரே நகரங்கள் அந்நாளில் திட்டமிட்டுக் கட்டப்பட்டன என்று காணும்போது இக்கால மக்கள் நாணமும் வியப்பும் ஒருங்கே கொள்ள வேண்டும். இந்நிலையில் பண்டை நாகரிகங்கள் பற்றி இக்கால பொதுமக்கள் மட்டுமின்றி, அறிஞர் பலரும் கொண்டுள்ள முடிவுகள் புரட்சிகரமாக மாறவேண்டியவை என்பது மிகையன்று.

பண்டைத் தமிழரிடையே வானகச் செலவும் வானகப் போரும் இருந்தனவோ இல்லையோ, அவை பற்றிய நினைவுகளும் ஒருவேளை அவைபற்றிய மரபழிந்துவிட்ட நனவு முயற்சிகளும் இருந்திருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு. இதனைத் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்திய பறக்கும் கோட்டைகள் அல்லது பறக்கும் நகரங்கள், தமிழர் கனவில் அல்லது நினைவில் எழுந்த முதல் வாகனப் போராக நம் கண்முன் காட்சியளிக்கின்றன. ஒரு வாகனப் போருடன் தொடங்கும் தமிழர் வரலாறு அடுத்து ஒரு கடலகப் போரையும் தொடக்கத்திலேயே நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது.

முதற் கடற் போரும் கடற் பேரரசும்

வான விளிம்பு கடந்து, ஆனால் அவ் விளிம்பிலே மயங்கும் இலக்கிய மரபிலே, நாம் தமிழரின் இப்பெருங் கடலகப் போரின் தடத்தைக் காண்கிறோம். அது தடங்கெட்ட இன்றைய தமிழர் வாழ்வுடனே கூடத் தொடர்புடையது என்று கூறலாம். அதுபற்றிய இலக்கியக் குறிப்புகளும் மரபுரைகளும் பல. அதற்கு ஆக்கம் தரும் பிற்கால இடைக்கால வரலாற்றுச் செய்திகளும், கல்வெட்டுச் சான்றுகளும் கூட உண்டு. ஆயினும் இவற்றாலும் அத்தொல் பழங்காலச் சித்திரத்தின் முழு உருவத்தை நாம் தெளிவாகக் காணமுடியவில்லை. காணும் அளவிலும் ஆராய்ச்சியாளர் கருத்து வேறுபாடுகளும், அவர்களது ஆராயா நம்பிக்கை அவநம்பிக்கைகளும் அதன் உருவின் மீதே நிழலாடுகின்றன.

சங்க இலக்கியத்திலே பழங்காலப் பாண்டியருக்கும், அவர்கள் முன்னோர்களுக்கும் முற்பட்ட பாண்டியனாக நெடியோன் விளங்குகிறான். கடைச் சங்க காலத்திலே பாடல் சான்ற பெரும்புகழ் பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனே. அவன் முன்னோர்களாக மதுரைக் காஞ்சியாசிரியர் மாங்குடி மருதனார் பல்சாலை முதுகுடுமியையும் நெடியோனையும் சிறப்பிக்கின்றார். அதேசமயம் முதுகுடிமியைப் பாடிய நெட்டிமையார் முதுகுடுமியின் முன்னோனாக அவனைக் குறிக்கிறார். எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அது கடந்தும் மிகப் பழங்காலத்துப் பாண்டியனாகவே நெடியோன் கருதப்பட்டிருந்தான்.

நெடியோன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் அல்லன். ஏனெனில் கடைச் சங்க காலத்தில் மட்டுமே மதுரை பாண்டியர் தலைநகராயிருந்தது. உண்மையில் தலைநகரை முதல் முதல் கொற்கையிலிருந்து தற்கால மதுரைக்கு மாற்றியவன் முதுகுடுமியே. அவனுக்கு முற்பட்ட இடைச் சங்க காலத்தில் கடல்கொண்ட குமரியாற்றின் கடல் முகமான அலைவாய் (கவாடபுரம்) நகரும், தலைச்சங்க காலத்தில் அதற்கும் தெற்கில் கடல் கொண்ட பக்ரறுளி ஆற்றின் கரையிலிருந்த தென் மதுரையும் பாண்டியர் தலைநகரங்களாய் இருந்தன என்று அறிகிறோம். நெடியோன் தலைநகர் பக்றுளி ஆற்றின் கரையிலே இருந்ததென்று சங்கப் பாடல்கள் பகர்கின்றன.

பரதன் பரதகண்டம் ஆதி மனு

நெடியோனுக்கு நிலந்தருவிற் பாண்டியன் என்றும் பெயர் உண்டு. “நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்” என்ற மதுரைக் காஞ்சியடிகள் இதை நினைவூட்டுகின்றன. நிலந்தருவிற் பாண்டியன் காலத்திலேயே அவன் அவைக்களத்திலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இது அந் நூற்பாயிரம் தரும் தகவல் ஆகும். நெடியோன் பக்றுளியாறு கடல் கொள்ளுமுன் அவ்வாற்றின் கரையிலே இருந்து ஆண்ட முதற் சங்க காலத்துப் பாண்டியன் என்பதை இது வலியுறுத்துகிறது. அத்துடன்  கடல் கோளின்போது அவன் வாழந்ததனால், கடல் கோளுக்குப் பின் அவனே குமரியாற்றின் கடல் முகத்திலிருந்தே ஆட்சி தொடங்கியிருக்க வேண்டும்.

பக்றுளியாறு கடல் கோளால்  அழிந்தபின், இவன் வடதிசையில் தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்தி, இமயம், கங்கை ஆகியவற்றைக் கைக்கொண்டிருந்ததாகத் தமிழ் ஏடுகள் சாற்றுகின்றன.

“பக்றுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசையாண்ட தென்னவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுவது காணலாம். பழந்தமிழகப் பகுதிகள் கடலுள் அழிந்த அக்காலத்திலேயே இமயமும் சிந்து கங்கை வெளிகளும், கடலிலிருந்து புது நிலமாகத் தோன்றியிருந்தன. நெடியோன் கடல்கோளுக்குத் தப்பி வந்த துணையிலிகளையும், ஏலாரையும், துயருழந்தாரையும் அவ்விடங்களில் கொண்டு குடியேற்றியிருக்க வேண்டும். ஏனெனில் இமயம் வரை அவன் நாளில் ஒரே தமிழ் மொழி பேசப்பட்டதென்று கூறப்படுகிறது.

“தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா வெல்லைத்

தோன்று மொழிந்து தொழில் கேட்ப”

என்ற மாங்குடி மருதனார் கூற்று இதற்குச் சான்று.

புதுநிலமாகக் கங்கையும் இமயமும் உள்ளடக்கிய பரப்பைத் தமிழகத்துக்குத் தந்த காரணத்தாலேயே நெடியோன் நிலந்தருவிற் பாண்டியன் என்று பெயர் பெற்றான். இப் பெயருடன் அவன் இன்று ‘இந்தியா’ என்று அழைக்கப்படும் பகுதி முழுமைக்கும் ஒரே பேரரசன் ஆனான்.

வெள்ளையர் ஆட்சிக்கு முற்பட்ட, இமய முதல் குமரி வரை ஆண்ட முதற் பேரரசன் மட்டுமல்ல, ஒரே பேரரசன் நெடியோன் என்ற நிலந்தருவிற் பாண்டியனேயாவான். முன்னும் பின்னும் இல்லாத இவ்வரும் பெருஞ் செயல் இதிகாச புராணங்களில் தன் அருஞ் சுவட்டைப் பதிப்பிக்கத் தவறவில்லை. இந்தியா அல்லது பாரத கண்டம் முழுதும் ஒரு குடைக் கீழ் ஆண்டதாக இதிகாசங்களில் கூறப்படும் பரதன் இவனே என்று பண்டித சவரிராயன் போன்ற அறிஞர் கருதியுள்ளனர். பரதர் அல்லது கடலரசர் என்பதுப் பாண்டியருக்குப் பொதுவாகவும் இவன் மரபினருக்குச் சிறப்பாகவும் ஏற்பட்ட பெயரேயாகும். பரத கண்டம் என்று பெயரில் அது இன்னும் நிலைபெற்ற வழக்காகியுள்ளது.

மற்றும் மிகப் பழங்காலப் புராணங்களில் இவனே ‘ஆதிமனு’வாக குறிக்கப்படுகிறான். இந்திய புராணங்களில் காணப்படும் ‘ஆதிமனு’ வரலாறு மட்டுமின்றி, விவிலிய நூலில் கூறப்படும் ‘நோவா’ வரலாறும், அதுபோன்ற பிற இனங்களின் ஊழி வெள்ளக் கதைகளும் இவன் பழம்பெரும் புகழ் மரபில் வந்தவையே என்று பல உலகப் பழமை ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர்.

பண்டைச் சாவக வெற்றி

இமயம் வரை நிலப்பேரரசனாக ஆண்டதுடன் இப் பாண்டியன் பேரவா நிறைவு பெறவில்லை. அவன் மறவன் மட்டுமல்ல, கடல் மறவன் அல்லது பரதவன். தமிழ்ப் பரதவரின் கடலாட்சிக் கொடியாகிய மீன் கொடியை அவன் கடல் கடந்த நாடுகளுக்கும் கொண்டு சென்றான். முந்நீர் விழாவின் நெடியோன் என்ற இவன் முழுச் சிறப்புப் பெயரும் தமிழ் மரபிலேயும் தமிழ்ப் புராண மரபிலேயும், ‘சயமாகீர்த்தி’ என்ற பெயரும் இக்கடற் பெரும் போர் வெற்றியைக் குறித்த வழக்குகளேயாகும்.

“முழங்கு முந்நீர் முழுவதும் வளை இப்

பரந்து பட்ட வியன் ஞாலம்

தாளில் தந்து தம்புகழ் நிறீஇ

ஒருதாம் ஆகிய உரவோர்” (புறம் 18)

-என்று தலையாலங்கானத்து நெடுஞ்செழியனைப் பாடிய குடபுலவியனாரும்,

“செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கீர்த்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப்பக்றுளி மணல்”  (புறம் 9)

என்று முதுகுடிமியைப் பாடிய நெட்டிமையாரும்,

“வானியைந்த இருமுந்நீர்ப்

பேஎ நிலைஇய இரும்பௌவத்துக்

கொடும்புணரி விலங்குபோழ…

ஊர்கொண்ட உயர் கொற்றவை”   (மதுரைக் காஞ்சி 75-7, 87-8)

-என்று மாங்குடி மருதனாரும் தம் காலத்திலும் பழங்காலப் புகழ்ச் செய்திகளாக இவற்றை விரித்துரைத்துள்ளார்.

‘உயர் நெல்லின் ஊர்’ என்ற மதுரைக் காஞ்சியுரை நெல்லின் பெயருடைய ஓர் ஊரைக் குறிக்கிறது. கடலில் கலம் செலுத்திச் சென்று கொண்ட ஊராதலால், அது கடல் கடந்த ஒரு நாட்டின் ஊர் என்பதும் தெளிவு. இத்தகைய ஊர் நெடியோன் வெற்றிச் சின்னங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூரேயாகும். சாலி என்பது நெல்லின் மறு பெயர். அத்தீவின் பழம் பெயர்களாகிய சாவகம், பொன்னாடு, ஜவநாடு, யவநாடு ஆகியவற்றில் யவநாடு என்பதன் பொருளும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையதே. ஏனெனில் ‘யவ’ என்பது வாற்கோதுமையின் மறு பெயர் ஆகும்.

சாலியூர் இன்றளவும் ‘சாரி’ என்றே வழங்குகிறது. சோழர் 12 ஆம் நூற்றாண்டில் கடாரத்தில் அடைந்த வெற்றிகளிலும் சாலியூர் வெற்றி குறிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கடாரம் என்பது சீர்விசயம் என்ற கடற் பேரரசாய், மலாயாவையும் பல தீவுகளையும் உட்கொண்டிருந்தது. அதன் தலைநகரான சீர் விசய நகர் சுமத்ராத் தீவிலுள்ள இன்றைய ‘பாலம்பாங்’ நகரமேயாகும். சாலியூர் இந்தச் சீர்விசய நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. பாண்டியன் படையெடுப்பின்போது சாலியூரே தலைநகராய் இருந்ததென்றும் பாண்டியன் வெற்றி குறித்த புதிய பேரரசத் தலைநகரே சீர்விசய நகரென்றும் நாம் கொள்ள இடம் உண்டு. ஏனென்றால் சோழர் படையெடுப்பின்போது அங்கே ஆண்ட பேரரசன் சீர்மாற சீர்விசயோத்துங்கனே. அவன் குடிப் பெயரான ‘சீர்மாற’ என்பது ‘மாறன்’ அல்லது பாண்டியன் மரபை நினைவூட்டுகிறது. அவர்கள் கொடியும் மரபுப் பெயருக்கிசைய மீனக் கொடியாகவே இருந்தது.

தொடரும் …

முந்தைய பகுதிகளை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

The rapidly changing uk postgraduate training environment has brought with it increasing direct assessment of trainees in the workplace how to write a successful college essay

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுப் போர்க்களங்கள் – பகுதி 4 – அகல் உலகத் தொடர்பு”

அதிகம் படித்தது