மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆட்சியர் திரு. சகாயம் சிறப்பு நேர்காணல்

சிறகு சிறப்பு நிருபர்

May 17, 2012

சந்திப்பு இரா. ராம்குமார்- ச. பிரதீப் குமார்

சிறகு முதலாம் ஆண்டு இதழிற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் திரு சகாயம் அவர்கள் அளித்த சிறப்பு நேர்காணல்.

எழுத்து வடிவத்தில் வாசிக்க பக்கத்தின் கீழே செல்லுங்கள்.
பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

நாம் நேர்காணல் செய்யும் இவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். இவரைப் பற்றி ஒரு வாழ்த்து மடல்: ‘நேர்மையின் சிகரமாய்- உழவர் உழைப்புக்கு உன்னதம் சேர்க்கும் உத்தமனாய்- ஏழைகள் ஏற்றம் பெற நினைக்கும் எளிமை நாயகனாய் – ஊனமுற்றோரின் ஊன்றுகோலாய், இளைஞர்களின் இளமைத் துடிப்பாய், மக்கள் மனதில் நிறைந்த மகானாய், அரசின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றத் துடிக்கும் கடமை வீரனாய், மாற்றம் என்ற வார்த்தையின் மா மனிதனாய், திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்றும் ஒளிவிளக்காய், விடுதலை தியாகிகளின் வீரத் திருமகனாய், ஒதுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய், ஏழைகளின் ஏணியாய், தமிழ்த் தாயின் தமிழ் மகனாய், ஊழல் பெருச்சாளிகளின் சிம்ம சொப்பனமாய் மதுரையின் சகாயமாக வாழ உறுதியேற்போம்.” இப்படியொரு வாழ்த்து மடலை வெளியிட காரணமாய் இருந்தவர். இப்போது நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் நாம் யாரை நேர்காணல் செய்யப்போகிறோம் என்று. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள்.

சிறகு: உங்களது இளமைக் காலம், பள்ளிக் காலம், அரசுப் பணிக்கு வரத் தூண்டிய உந்துதல் இவை பற்றி?

திரு.சகாயம்: என்னுடயை ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை என்கிற குக்கிராமம். ஒரு எளிய விவசாயியின் மகனாகப் பிறந்தேன். ஆரம்பக் கல்வியை என்னுடைய கிராமத்திலேயே படித்தேன். நடுநிலைப் பள்ளிவரை ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று கல்வி கற்றேன். அந்தப் பள்ளி இறுதி வரை புதுக்கோட்டையில் படித்தேன். அதன் பிறகு புதுக்கோட்டை …… கல்லூரியில் இளங்கலை, சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை, அதன் பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தேன். சட்டக் கல்லூரியில் படித்த அதே காலகட்டத்தில் மத்திய அரசுப் பணிக்கான- சிவில் சர்விஸ் என்று சொல்லக் கூடிய குடிமைப் பணித் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (upsc) நடத்தியது. அந்தத் தேர்வை நான் எழுதினேன். அந்தத் தேர்வில் நான் வெற்றி பெற்று மத்திய அரசுப் பணியில்- உள்துறை அமைச்சகத்தில் நான்கு மாத காலம் டெல்லியில் பணியாற்றினேன். அதன் பிறகு தமிழகத்திற்கு வரவேண்டும் என்ற உந்துதலால் –தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி ஒன்று தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக நான் தமிழக அரசின் பணியில் சேர்ந்தேன்.

நான் படிக்கின்ற காலத்தில் உதாரணமாக நடுநிலைப் பள்ளி படிக்கின்ற போது பள்ளி தலைமை ஆசிரியரே, நான் மாவட்ட ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்கின்ற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்துவார். எனக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும். அதைப்போல என்னுடைய கிராமத்தில் இருந்து மிதிவண்டியில் என்னுடைய சகோதரர்களுடன் புதுக்கோட்டைக்கு செல்லுகிறபோது- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்துதான் செல்லவேண்டும். அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைப் பார்க்கிறபோது எனக்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்கிற உந்துதல் வந்தது. அதைப்போல கல்லூரி காலத்தில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் போன்ற உயர் அதிகாரிகளிடம் நான் பரிசுகள் பெற்றிருக்கிறேன். அப்பொழுதும் எனக்கு இந்த உந்துதல் உண்டு. எதிர்காலத்தில் ஒரு அரசு அலுவலராக- குறிப்பாக மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்ற உந்துதல் உண்டு. அடிநாதமாக இருந்தது- இதுபோன்ற பதவிகளுக்கு வந்தால் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நேர்மையாக நியாயமாக சேவை செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணம்தான். இதுதான் பின்னணி. என்னுடைய கிராமத்தைப் பொருத்தவரை உழைப்பையும் உண்மையையுமே நம்பி வாழக்கூடிய மனிதர்கள் ஏராளமாக வாழும் இடம். இன்றைக்கும், இளம் வயது காலம்- நீண்ட ஏரியில் தொடர்ந்து நீச்சலடிப்பது – கிணற்றில் மேலிருந்து தலைகீழாக குதிப்பது புளிய மரத்தில் ஏறி புளிகளை உலுக்கி விடுவது, மா மரத்தில் கல்லெறிந்து மாங்காய்களை வீழ்த்துவது இப்படி சிறுவனாக இருந்து செய்த செயல்கள் எல்லாம் இன்றைக்கும் பசுமையாக நினைவுக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடைய கிராமத்தையும் ஏன் கிராமத்து மனிதர்களையும் நினைத்துப் பார்த்தால் என் மனதுக்கு இனிமையாக இருக்கும். இதுதான் என்னுடைய கிராமத்துப் பின்னணி என்னுடைய இளமைக்காலம். இளமைக் காலம் நான் தமிழ் மீது தீராத காதல் கொண்டிருந்த காலம். அதைப்போல எந்தப்பதவிக்கு நான் சென்றாலும் நேர்மையாக நியாமாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சிய வெறி. இப்படியாக என்னுடைய இளமைக்கால பின்னணியை சொல்லலாம்.

சிறகு: ஊழல் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய சூழலில் – நேர்மைக்கு உதாரணமாக விளங்கும் தாங்கள் உந்து சக்தியாக எதைப் பார்க்கி றீர்கள்? ஒவ்வொரு முறை துவளும்போதும் எதனால் மீண்டு எழுகிறீர்கள்? இதைக் கடைப்பிடிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி என்ன?

திரு.சகாயம்: சமூகம் ஊழலாலும் லஞ்சத்தாலும் புரையோடி இருப்பது  என்பது வேதனையான, வருத்தமான உண்மை. எனவே இன்றைய காலகட்டத்தில் ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு அரசு ஊழியரோ அலுவலரோ நேர்மையாக நின்று பணியாற்றுவது என்பது மிகவும் இடர்ப்பாடானது. சில நேரங்களில் அது அபாயகரமானதாகவும் தோன்றுகிறது. இருந்தாலும்கூட எம்மைப் பொறுத்தவரையில் என்னுடைய பணிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்து ஒரு முழுமை யான நேர்மையை கடைப்பிடிப்பவனாக மட்டுமல்ல எனக்குக் கீழ் இருக்கக் கூடிய நிர்வாகத்திலும் அந்த முழு நேர்மையை எதிர்பார்த்துப் பணியாற்றுகிறேன். அதற்கான இடர்ப்பாடுகள், சோதனைகள், துன்பங்கள் எல்லாம் ஏராளம் என்றாலும்கூட நேர்மையில் நான் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறேன், இருக்கிறேன், இருப்பேன், அதற்கு அடிநாதமாக, காரணியாக என்ன இருக்கிறது என்று நான் எண்ணிப் பார்க்கிறபோது- நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய  கிராமிய சூழலும் என்னுடைய குடும்பச் சூழலுமே அதற்கான அரிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. அடிப்படையில் கிராமிய வாழ்க்கை என்பது உண்மையையும் உழைப்பையும் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை. அந்த மக்கள் சூது வாது பெரிய அளவுக்கு அறியாதவர்கள், சுயநலம் பெரிய அளவுக்குத் தேடாதவர்கள். எனவே இயல்பான, இயற்கையான ஒரு கிராமச் சூழல் நல்ல நேர்மையான மனிதர்களை உருவாக்குகிறது என்று நான் கருதுகிறேன். எனவே நேர்மையான கிராமச் சூழலின் தாக்கம் எனக்கு இருந்ததது.

அதைக்காட்டிலும், என்னுடைய குடும்பத்தில் என்னுடைய தந்தை உண்மையையும் உழைப்பையும் நம்பிய ஒரு எளிய விவசாயி. இதைத் தவிர அவருக்கு எதுவும் தெரியாது. எனவே எனது தந்தையின் உண்மையான உழைப்பின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அதைக் காட்டிலும் என்னுடைய தாய். என்னுடைய தாய் கற்றுக் கொடுத்ததெல்லாம் உண்மை, நேர்மை, ஏழைகளுக்குப் பரிவு காட்ட வேண்டும் என்பதுதான். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு செட்டியார் வீட்டு தோட்டத்து மாங்காயை என்னுடைய சக சிறுவர்களோடு  கல்லெறிந்து, அங்கே விழக்கூடிய மாங்காயை மற்ற சிறுவர்களோடு சேர்ந்து நான் எடுத்து வருகிறபோது வீட்டுக்கு வந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என் தாய். அது நம்முடையது அல்ல, அதைத் தூக்கி எறிந்து விட்டு வா என்று சொல்லுவார். அவர் சொல்லுகிறபோது, உனக்கானது எதுவோ அதைமட்டும்தான் நீ அனுபவிக்க வேண்டும் என்றும் என்னுடைய தாய் சொல்லுவார். இப்படி என் தாயின் ஒவ்வொரு வாழ்க்கை நிலையிலும் நான் கற்றுக் கொண்டேன். இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். எனவே என்னுடைய நேர்மைக்கு அடிநாதமாக இருப்பது – ஏழைகள் மீது பரிவு கொள்வதற்கு அடிநாதமாக இருப்பது என்னுடைய தாயிடமிருந்து கற்றுக் கொண்டது.

இந்தப் பின்னணியோடு வளருகின்ற நான் ஒரு அரசு அலுவலராக நிர்வாகத்தில் பயணிக்க முனைகிறபோது, இதே நேர்மைப் பண்பை என்னுடைய நிர்வாகத் தளங்களிலே அதைப் பரப்புவதற்கும் அதைக் கையாளுவதற்கும் நான் எத்தனித்தேன். என்னைப் பொறுத்தவரையில் நேர்மை என்பது தன்மானத்தை, துணிச்சலை, ஒழுங்குப்படுத்தக் கூடிய ஒரு கருவியாக நான் கருதுகிறேன். எந்தச் சூழலிலும் என்னுடைய தன்மானத்தை, எந்தச் சூழலிலும் என்னுடைய துணிச்சலை, எந்தச் சூழலிலும் ஏழைகளுக்கு நியாயம் வழங்கக்கூடிய நிலையை நான் இழக்க விரும்புவதில்லை. எனவே இத்தகையப் பண்பை நான் கொள்ள வேண்டும் என்றால் நான் முழு நேர்மையாக இருந்தாக வேண்டும். எனவே இதுவும் அந்த அடிநாதத்தில் ஒன்றாக அமைகிறது. அதற்கு மேலாக நான் ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது- ஆய்ந்து பார்க்கும்போது ஒரு அலுவலருக்கு நேர்மை தேவைப்படுகிறது. காரணம் நான் சென்னை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது அங்கே என்னுடைய அலுவலகத்தின் பின்னால் ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பேன்.

“ஊழல் என்பது ஏழைகளுக்கு, தேசத்திற்கு, பண்பாட்டிற்கு எதிரானது” என்று எழுதி இருப்பேன். நான் ஏழைகளை உளமாற நேசிக்கிறேன். இந்த தேசத்து, இந்த தமிழ்ச் சமூகத்து ஏழைகள் மேலே வரவேண்டும். பொருளாதாரத்தில், சமூகத்தில் அவர்கள் எழுந்து வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அவர்கள் எழுந்து வருவதற்கு இடையூறாக நான் ஊழலைக் கருதுகிறேன். அதைப்போல் தேச முன்னேற்றத்திற்கு ஊழல் பெரிய தடை என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் ஊழல் இருக்கிறபோது அதுவே மேம்பாட்டிற்கு இடையூறாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். உதாரணமாக ஒரு நெடுஞ்சாலையை நாம் போடுகிறோம் என்றால் அந்த நெடுஞ்சாலையில் ஊழல் புரிகிறார்கள் என்றால் – அந்த சாலை போடுவதற்காக ஒதுக்கப்படுகின்ற அந்தத் தொகையில் ஊழலுக்கு ஒரு பெரும் தொகை செல்லுகிறது என்றால், சாலையின்  தரம் கெடுகிறது. அப்போது அது போக்குவரத்தைப் பாதிக்கிறது. வணிக முயற்சிகளுக்கு- முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே இந்த அடிப்படையில் பார்க்கிறபோது இந்த சின்ன சேதியில் கூட முன்னேற்றத்திற்கு ஊழல் மூலத்தடையாக இருக்கும் என்றால், மிகப் பெரிய திட்டங்களிலே- இந்த தேச மக்களுக்கான முன்னேற்றத்திற்கு போடக்கூடிய பெரிய திட்டங்களிலே ஊழல் இருப்பது அந்த  முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் என்று நான் உளமாற எண்ணுகிறேன். எனவேதான் ஊழலுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டுடன் நான் இருக்கிறேன். பல இடர்ப்பாடுகளுக்கு, சிரமங்களுக்கு மத்தியில் இந்த நேர்மைத்தன்மையை, நேர்மைப்பண்பை தொடர்ந்து நான் உறுதியோடு கடைப்பிடித்து வருகிறேன். என்னுடைய பணிக் காலம் முழுதும் இப்படியாகத்தான் இருப்பேன்.

சிறகு: இன்றைக்கு ஊழல் பெருகிவிட்ட சூழ்நிலையில் ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக செயல்படுவது மிகவும் சிரமமானதாக இருக்கும். இவ்வளவு நாள் சமரசம் செய்துகொள்ளாமல் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். கண்டிப்பாக பணிமாற்றம் போன்ற சூழ்நிலை வரும். அதுபோக தனிப்பட்ட நெருக்கடிகள், துயரமான நேரங்களையும் நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். அப்படி நீங்கள் நேர்மையாக இருந்ததினால் உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்த, துயர சம்பவம் ஏதேனும் உண்டா?

திரு.சகாயம்: தொடங்கிய நிலையிலேயே சோதனைகளும் பிரச்சினைகளும் வரும் என்று எதிர்பார்த்துத்தான் பணியைத் தொடங்கினேன். என்னுடைய இருபது ஆண்டுகால பணிக் காலத்தில் பதினெட்டு மாறுதல்களை நான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மாறுதல் என்பது ஒரு அரசு அலுவலருக்கு, அரசு ஊழியருக்கு இயல்பான ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன். ஒரு அரசு ஊழியரை, அலுவலரை எந்தப் பணியில் அமர்த்தலாம் எந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்கிற அதிகாரம் அரசுக்கு உண்டு. எனவே இந்த மாறுதலை ஒரு அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட பொருளாகத்தான் நான் கருதுகிறேன். ஆனாலும்கூட ஒரு குடும்பச் சூழலில் இந்த மாறுதல் பாதிப்பை ஏற்படுத்தியது உண்டு. சில நேரங்களில் அதை எண்ணிப் பார்க்கிற போது அந்த பாதிப்பு இன்னும் என் மனதில் இருக்கிறது.

உதாரணமாக நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலம். அரசின் திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டுபோய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றினேன். ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு தனை நான் தொடர்ந்து எடுத்து வந்தேன். கிராம மக்கள் மேம்பாடு அடைவதற்காக பல அரசு திட்டங்களை அமல்படுத்தியது மட்டுமல்லாது என்னுடைய அறக்கட்டளையின் மூலமும் பல திட்டங்களை அமல்படுத்தினேன். முப்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில், இரவில் அங்கேயே தங்கி பள்ளிக்கூடங்களில் கிராம சபைகளில் தங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்று அடுத்த நாளில் அத்தனை மனுக்களுக்கும் தீர்வு செய்யும் ஒரு நிலையைக் கூட நான் உருவாக்கினேன். இப்படி பல்வேறு நிலைகளில் நான் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் வட இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மசூலி என்ற இடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையம் உள்ளது. அங்கே பயிற்சிக்காக செப்டம்பர் 2010 ல் நான் அனுப்பப்படுகிறேன். ஐம்பத்து நான்கு நாட்கள் பயிற்சி. வழக்கமாக எந்தப் பணியில் இருந்தாலும் இரண்டு மாத காலம் பயிற்சிக்கு அனுப்பப்படும்போது மாறுதல் செய்ய மாட்டார்கள். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்து நான் செல்லுகிற நிலையில் நான் மசூலிக்குச் சென்ற ஒருவார காலத்தில் மாறுதல் செய்யப்பட்டேன். நான் இருப்பதோ இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு இடம். எனக்கோ பதவி இடம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே ஒரு இக்கட்டான சூழல். புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் மாறுதல் செய்யப்பட்டு அவரும் வந்துவிட்டார். அவருக்கு நான் இருந்த இல்லத்தைக் கொடுக்கவேண்டிய ஒரு சூழல். இவர்கள் எங்கே செல்வார்கள். சென்னையிலோ எமக்கு வீடு இல்லை. பணியிடமும் போடப்படவில்லை. குழந்தைகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஒரு சூழல். நானோ பயிற்சியில் இருக்கிறேன். வந்து சேரவே நாற்பத்தைந்து நாட்கள் ஆகும். இப்படிப்பட்ட ஒரு நிலையை நான் சந்தித்தேன். உள்ளபடியே நான் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் கூட என்னுடைய நேர்மைக்கான பரிசாக அதை நான் எடுத்துக் கொண்டாலும் கூட அது என் குடும்பத்தை பாதித்த ஒரு நிகழ்வு என்பதை நான் மறக்க முடியாது.

அதேகாலகட்டத்தில் 45 நாட்கள் அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு நான் சென்னை திரும்புகிறேன். சென்னையில் இருந்து பயிற்சிக்கு நான் டெல்லி செல்லும்போது விமான நிலையத்தில் என்னுடைய அலுவலர்கள் எல்லாம் அரசு வாகனத்தில் வந்து மரியாதையோடு என்னை அனுப்பி வைத்த ஒரு சூழல். ஆனால் திரும்பி வருகிறபோது அதே விமான நிலையத்தில் என்னை வரவேற்பதற்கு எந்த அலுவலரும் வரவில்லை. காரணம் எனக்கு எந்தப் பதவியும் இல்லை. என்னை வரவேற்க நண்பர் ஒருவர்தான் வந்திருந்தார். இப்படி ஒரு இக்கட்டான சூழல் இருந்தாலும்கூட அதையும் என்னுடைய நேர்மைக்கான பரிசாகவே நான் கருதிக்கொண்டேன். இதைவிட ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் விமான நிலையத்தில் இருந்து நானும் எனது நண்பரும் வாகனத்தில் செல்கிறபோது- நேர்மையாக இருந்ததற்காக இப்படி எல்லாம் தண்டனை கொடுக்கிறார்களே என்று நண்பர் பேசிக்கொண்டு இருந்தார். நான் அமைதியாகவே கேட்டுக்கொண்டு வருகிறேன். நாங்கள் இருவரும் அண்ணா சாலையில் இருக்கும் சரவண பவன் உணவகத்திற்கு செல்கிறோம். மதியம் மூன்று மணி இருக்கும். அங்கே உணவருந்தி விட்டு நான் வெளியேவர எத்தனிக்கிறபோது அப்போது ஒரு நடுத்தர வயதுள்ள பெற்றோர்கள் தங்களுடைய இருபது வயதுள்ள மகனுடன் என்னை அணுகுகிறார்கள். என்னை யாரென்று கூட தெரியவில்லை. நீங்கள்தானே நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தீர்கள் என்று கூட கேட்கவில்லை. ஐயா வணக்கம் உங்களைப் பற்றி படித்திருக்கிறோம். நேர்மையாக நீங்கள் பணியாற்றுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி என்று பேசினார்கள். நான் சொன்னேன், அதுவெல்லாம் ஒன்றும் பெரிய செய்தியல்ல. மக்களுக்காக சேவை செய்வதற்கு எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே நேர்மையாக இருக்க வேண்டும் என்பது சட்டம். இதில் ஆச்சர்யப்படுவதற்கோ, பாராட்டுவதற்கோ ஒன்று மில்லை என்று நான் சொல்கிறேன். ஆனால் அவர் சொல்கிறார், இந்தக் காலத்தில் யாரய்யா நேர்மையாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு நேர்மையானவர்கள் எல்லாம் தெய்வங்களைப் போன்றவர்கள் என்ற வார்த்தையையும் சொல்கிறார். இந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்கூட அவர்கள் சொன்னதை சொல்கிறேன். இறுதியாக அவர்கள் தங்களுடைய மகனை – ஐயா காலில் விழுந்து கும்பிட்டுக் கொள். எதிர்காலம் உனக்கு சிறக்கும் என்று கூறுகிறார்கள். எனக்கு சங்கடமாக இருந்தது. நான் அதை விரும்பவில்லை. வேண்டாமென்று சொன்னாலும் அந்த இளைஞன் என் காலில் விழுகிறார். உனக்கு சிறந்த எதிர்காலம் அமையட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

பணிமாறுதலால் வேதனையான ஒரு சூழலில் இருந்து நான் வருகிறபோது அதை அப்படியே மறக்கக்கூடிய, மாற்றக்கூடிய ஒரு மகிழ்ச்சியான செய்தி. அவ்வளவு நேர்மையும் உன்னை வாழத்துவதற்கு, அவ்வளவு வேதனையிலும் உன்னை அங்கீகரிப்பதற்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை இந் நிகழ்வு காட்டுகிறது. எனவே எவ்வளவு வேதனையாக சோதனையாக இருந்தாலும் என்னுடைய நேர்மைப் பயணம் தொடர்ந்து இதே உறுதியோடு இந்த தமிழ் சமூகத்திற்காக இருக்கும் என்று நான் சொல்லிக் கொள்கிறேன்.

சிறகு: பணி மாறுதல் எல்லாம் தனி மனிதராக எங்கும் போவதற்கு எளிமையான காரியம். ஆனால் குடும்பம், பிள்ளைகள் இருக்கும் சூழலில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் பதினெட்டு முறை  மாறும்போது கல்வி பாதிக்கும். இது சவாலாகவே இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? எப்படி சமாளித்து இயல்பான வாழ்க்கைக்கு வந்தீர்கள்?

திரு.சகாயம்: அடிப்படையில் அரசுப் பணியில் என்னுடைய நேர்மையான பயணத்திற்கு, நேர்மையான வேள்விக்கு துணையாக இருப்பவர் என்னுடைய துணைவியார். அதைப்போல் என்னுடைய இரண்டு குழந்தைகளும். அப்பாவின் லட்சியத்தை, கொள்கையைப் புரிந்துகொண்டு ஆடம்பர வாழ்க்கையை, ஆடம்பர ஆசைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு எளிமையான வாழ்க்கைக்கு தங்களை பண்படுத்திக் கொண்டார்கள். ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் என்னுடைய நேர்மையான பயணத்திற்கு அவர்கள் துணையாக இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற பணிமாறுதல் நேரத்தில் இயல்பாகவே குடும்பச் சூழலில், குழந்தைகள் கல்வி கற்கக்கூடிய சூழலில் இந்தப் பணிமாறுதல் பாதிப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த நேரங்களில் சிரமங்கள் இருந்தாலும்கூட, பாதிப்பும் வேதனையும் இருந்தாலும்கூட அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு சமாளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

உதாரணமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நான் பணியாற்றிய அந்தக் காலத்தில் 2010 செப்டம்பரில் நான் மாறுதல் செய்யப்பட அந்த நிலையில் கல்வி ஆண்டின் இடையில் குறிப்பாக அரையாண்டு தேர்வு நடக்கும் சூழலில் நான் வேறு ஒரு இடம் போகவேண்டிய நிலை. பிள்ளைகளுக்கு கல்வி பாதிக்கக்கூடிய ஒரு சூழல். என்னுடைய குழந்தைகள் இன்னும் இரண்டு மூன்று மாதம்தானே, நாமக்கல்லி லேயே கல்வியை முடித்துவிட்டு நாம் சென்னைக்கு செல்லலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் கடினமான சூழல் எனக்குப் புரிகிறது. ஒரு புதிய பள்ளியில் புதிய சூழலில் கல்வி ஆண்டின் பாதியில் இருந்து தொடங்குவது என்பது சிரமம். எனவே அவர்களின் சிரமத்தை உணர்ந்து அந்த சிறிய நாமக்கல் நகரத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கத் தொடங்கினோம். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லம் என்பது ஒரு பெரிய மாளிகை. எல்லா வசதிகளும் உண்டு. வேலை ஆட்கள் நிரம்ப இருந்து உதவும் ஒரு சூழலில் இருந்துவிட்டு அதே நகரத்தில் ஒரு சிறிய வீட்டில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத சூழலில் எந்த வேலை ஆட்களும் இல்லாத ஒரு சூழலில் நான்கு, ஐந்து மாத காலம் இருப்பது என்பது கடினமானது. இருந்தாலும் வசதி குறைவான சூழலில் கூட என்னுடைய மனைவியுரும் குழந்தைகளும் அந்த சூழலில் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு எனக்கு உதவினார்கள். குறிப்பாகச் சொன்னால் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தில் இருந்து பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் இருக்கும். ஆனால் இங்கே வாகனமோ ஒட்டுனரோ இல்லாத சூழலில் பொதுப் பேருந்தில் செல்லக்கூடிய ஒரு சூழல். அரை கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் அவர்கள் பேருந்தைப் பிடிக்க வேண்டும். ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவராக பல பேர் மீது நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை  தண்டித்த சூழலில், பாதுகாப்பற்ற நிலை குழந்தைகளுக்கு உண்டு. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்கள் நடந்து சென்று பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வந்தார்கள்.

எனவே என்னுடைய நேர்மைக்கு அந்த நேர்மைக்காகக் கிடைக்கக் கூடிய பழிபாவங்களை என்னுடைய துணைவியாரும், குழந்தைகளும் ஏற்றுக்கொண்டு, என்னுடைய துயரத்தை அவர்களும் பகிர்ந்துகொண்டு என் நேர்மைப் பயணத்திற்குத் துணையாக இருக்கிறார்கள். என்னுடைய நன்றிக்குரிய நண்பர்களாக அவர்களைக் கருதுகிறேன்.

சிறகு: ஊழலின் ஊற்றுக் கண் என்று எதை நீங்கள் எண்ணுகிறீர்கள்? எத்தகைய நடவடிக்கையால் இதை நாம் களைய இயலும்? நல்ல சமூகம் உருவாக எந்தமாதிரி நடவடிக்கைகள் தங்கள் எண்ணத்தில் உதிக்கிறது?

திரு.சகாயம்: ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று போதி மர புத்தன் சொன்னதுபோல பேராசைதான் ஊழலுக்கு ஊற்றுக் கண் என்று நான் கருதுகிறேன். ஒரு மனிதன் எளிய வாழ்க்கையில் இருந்து ஆடம்பர வாழ்க்கைக்கு செல்லும்போது அவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் கூடுதலான வருமானத்தைப் பெற எத்தனிக்கிறான். இன்றைக்கு அரசு அமைப்புகள், அரசு ஊழியர்களுக்கோ, அலுவலர்களுக்கோ அளிக்கப்படும் ஊதியம்- இந்த தேசத்தைப் பொருத்தவரை- பல வேலைகள் கிளைத்திருக்கும் இந்த தேசத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமானதாகவே இருக்கிறது என்று நான் கருதுகிறேன். பிரச்சினை என்னவென்றால் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி ஆடம்பரத் தேவைகளுக்கு இந்த ஊழியர்கள் ஆசைப்படும்போதுதான் பிரச்சினையே வருகிறது. எனவே ஒரு எளிய வாழ்க்கையில் இருந்து  நுகர்வு கலாசாரத்திற்கு உட்பட்டு ஆடம்பர வாழ்க்கையையும் ஆடம்பர ஆசையையும் பெருக்கிக் கொள்கிற அந்த எண்ணம்தான் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. பொதுவாகவே நம்முடைய சமூக மதிப்பீடுகளில் பெரிய அளவிலான மாற்றத்தை நம்மால் காண முடிகிறது. ஒரு காலத்தில் நல்லவர்களும் நேர்மையானவர்களும் மதிக்கப்பட்ட சூழல் மாறி இன்றைக்கு ஒரு மனிதன் அவன் வசதி படைத்தவனாக இருந்துவிட்டால் பணக்காரனாக வந்துவிட்டாலே பெரிய அளவில் மதிப்பைப் பெறக்கூடியவனாக அவன் மாறி விடுகிறான். ஊரில் அவனுக்கு மதிப்பு  வந்துவிடுகிறது. உதாரணமாக சாராயம் காய்ச்சக் கூடியவன், சாராயம் காய்ச்சும் ஒரு தொழிலாளி பெரிய பணக்காரனாக வந்துவிட்டால் அந்த கிராமமோ, அந்த ஊரோ அவனை எண்ணி நகையாடுவதில்லை. அவனை ஒதுக்குவதில்லை. அவன் சமூக விரோத செயலைச் செய்து- மோசமான தொழிலை செய்து சம்பாதித்தவன் என்று யாரும் எண்ணுவதில்லை. ஆனால் அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருளுக்கு, சொத்துக்கு, பணத்திற்காக அவனை மதிக்கக் கூடிய சூழல்தான் இன்றைக்கு இருக்கிறது.

எனவே நம்முடைய சமூக மதிப்பீடுகளே இன்றைக்கு நேர்மைக்கு எதிரான நிலையிலே இருக்கிறது. எனவே நம்முடைய சிந்தனையை மாற்ற வேண்டும். இன்றைக்கு லஞ்சம் ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிரச்சினையாகவே மட்டும் நான் கருதவில்லை. நமது சமூகமே முழுக்க முழுக்க இன்றைக்குப் புரையோடிப்போயிருக்கிறது. யார் எளியவர்களாக இன்று இருக்கிறார்கள்? தலைவர்கள் அந்த எளிமையை மறந்திருக்கிறார்கள். ஏன் துறவிகள் கூட இன்று எளிய வாழ்க்கையை மறந்து விட்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே இன்றைய ஆடம்பர உலகம்தான் ஊழலுக்கு – சட்டத்திற்குப் புறம்பான சொத்து சேர்க்கும் நிலைக்குக் காரணம் என்று நான் கருதுகிறேன். இதை மாற்றுவதற்கு ஒரு அலுவலகத்தில் சட்டத்தை நான் கடுமையாக அமல்படுத்தினால் இந்த ஊழல் ஒழிந்துவிடும் என்றால் நிச்சயமாக முடியாது. எனவே மாற்றங்கள் சமூகத்தில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக நான் நம்புகிறேன்- இன்றைய சமூகம் புரையோடிப் போயிருக்கிறது. நாமெல்லாம் லஞ்ச லாவண்யத்தால்- நேர்மைக்குப் புறம்பான ஊழலால் புரையோடிப்போன சமூகத்தின் பிரதிபலிப்புகள். எனவே எதிர்கால சந்ததியினர், புதிய தமிழ்ச் சமூகத்தை, நேர்மையான சமூகத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைக்கு நம்முடைய கல்வி முறை – கல்விக்கூடங்களில் நேர்மையைப் பற்றி, நியாய உணர்வுகளைப் பற்றி எடுத்துச் சொல்லக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

ஊழல் எந்த அளவுக்கு தேசத்தை பாதிக்கிறது என்கிற கருத்துக் களையும் கட்டுரைகளையும் தாங்கிய பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் குழந்தைகள் மத்தியில் ஊழலுக்கு எதிரான மனநிலையை நேர்மையான பண்பாட்டை வளர்க்கக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோமானால் அதுவே ஊழலுக்கு எதிரான முதல் நிலையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதைப்போல் படித்த சிந்தனையாளர்கள், மேதாவிகள் இவர்களுக்கு மகத்தான பொறுப்பு இருக்கிறது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், கிராமப்புற விவசாயிகள் இவர்களுக்கு மத்தியில், இன்னும் பல்வேறு தளங்களில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும். ஊழல் இந்த தேசத்திற்கு எத்தகைய மோசமான கெடுதியை உருவாக்குகிறது, பொருளாதாரத்திற்கு, வளர்ச்சிக்கு எந்த அளவுக்குத் தடையாக இருக்கிறது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். உதாரணமாக ஒரு ஜல்லி மீன் நத்தையையை விழுங்குகிறது. விழுங்கக்கூடிய நத்தை கூட்டுக்குள் உள்வாங்கிக் கொண்டு அப்படியே ஜல்லி மீனுக்குள் சென்றுவிடுகிறது. உள்ளே சென்றதற்குப் பிறகு கொஞ்சமாக வெளியே வந்து ஜல்லி மீனையே அழிக்கத் தொடங்குகிறது. கொஞ்ச காலத்தில் அது ஜல்லி மீனையே அழித்து வெளியே வந்துவிடுகிறது. அதைப்போலத்தான் ஊழல். நம்முடைய தேசத்தை- முன்னேற்றத்தை அழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். இந்த சமூகத்தில் இப்படி நாம் ஏற்படுத்தக்கூடிய அந்த விழிப்புணர்வுதான் சட்டத்தை அமல்படுத்துவோர் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்கி ஊழலுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்துவார்கள். இத்தகைய சூழல் நேர்மையான சமூகத்தை உதவும் என்று நான் நம்புகிறேன்.

சிறகு: உங்களின் பல வருட அரசுப் பணிகளில்- பல பதவிகளில் இருந்தீர்கள். மாவட்ட ஆட்சியராக பல மாவட்டங்களில் பணியாற்றி இருப்பீர்கள். இத்தனை வருட அரசு அனுபவத்தில் ஊழலை  முற்றிலுமாக அரசு எந்திரங்களில் இருந்து ஒழிக்க எந்தமாதிரியான நிர்வாக சீர்திருத்தங்களை நாம் கையாள வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்கள்..

திரு.சகாயம்: ஊழலை ஒழிப்பதற்கு நம் நாட்டில் பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. அமல்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் ஊழல் முழுமை யாக ஒழியவில்லை. குறிப்பாக ஊழல் ஒழிப்புச் சட்டம் ஊழலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பது வருந்துவதற்குரிய உண்மை. ஊழலை ஒழிக்க- நிர்வாக சீர்திருத்தமாக எதைக் குறிப்பிடுகிறேன் என்றால் முக்கியமாக நான் குறிப்பிடுவது அரசு நிர்வாகத்தில்  வெளிப்படைத் தன்மை. ஒரு அரசு அலுவலர் என்ன உத்தரவு போடுகிறார், அதற்காக அவர் எந்த விதிகளைப் பின்பற்றுகிறார்? அவர் போட்டிருக்கும் உத்தரவு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? முரணாக இருக்கிறதா, எந்த அடிப்படையில் அவர் உத்தரவைப் பிறப்பிக்கிறார் இதுபோன்ற விவரங்கள் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். எந்தக் குடிமகன் கேட்டாலும் கொடுக்கலாம் என்ற நிலை இருக்குமேயானால் ஒரு அலுவலரின் உத்தரவு சரியானதா விதிகளை மீறியதா என்று கண்டறிய முடியும். நம் நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரிய அளவில் குடிமக்கள் இத்தகைய தகவல்களைப் பெறத் தொடங்கி இருக்கிறார்கள்.

எனவே நான் கருதுவது, இந்த வெளிப்படைத் தன்மை இருக்கிறது அல்லவா இதுதான் நிர்வாக சீர்திருத்தத்திற்கு தொடக்கமாக நான் கருதுகிறேன். ஆனால் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இன்னும் தீவிரமாக நம்முடைய மக்கள் பயன்படுத்தத் தொடங்க வில்லை என்று நான் கருதுகிறேன். எனவே இதுபோன்ற சட்டங்களை நம் மக்கள் இன்னும் அதிக அளவில் பயன்படுத்தி தகவல்களைப் பெறத் தொடங்குவார்களேயானால் ஊழல் செய்பவர்கள் நிச்சயம் அச்சம் அடைவார்கள். ஊழலின் வீச்சு குறையும் என்று நான் நம்புகிறேன். வெளிப்படைத் தன்மையோடு மட்டுமல்லாது –ஒரு உத்தரவு பிறப்பிக்க ஒரு கோப்பினை கையாளுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும். ஒருவர் உரிமம் அளிக்கிறார் என்றால் – ஒருவர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்கிறார் என்றால் அந்த உரிமத்தை அவர் எத்தனை நாட்களில் பெற முடியும், அலுவலர் எத்தனை நாட்களுக்குள் அந்த உரிமத்தை அளிக்க வேண்டும் என்கிற காலநிர்ணயம் இருந்தாலே நிச்சயமாக ஊழல் செய்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். பத்து நாட்களுக்குள் உரிமம் வழங்கவேண்டும், தகுதி இல்லை என்றால் நிராகரித்து விடவேண்டும் ஆனால் விதிகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நிலை இருந்தாலே தேக்க நிலையோ தாமதமோ இருக்காது. தாமதம்தான் பல நேரங்களில் ஊழலுக்கு ஊற்றுக் கண் என்பதை நம்மால் உணர முடிகிறது.

எனவே இந்த நிலையில் வெளிப்படையான நிர்வாகம்- கால நிர்ணயத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற சூழலும் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. வெளிப்படையான தன்மை, கால நிர்ணயத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் தாமதம் செய்யக் கூடாது என்கிற அந்த சூழல் இவைகள் எல்லாம் ஊழலின் வீச்சைக் குறைத்து விடும். அதுமட்டுமல்ல நேர்மையாக பணியாற்றும் அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு மிக அவசியம். குறிப்பாக அடிக்கடி பணிமாறுதலுக்கு உள்ளாகக் கூடிய நேர்மையான அதிகாரி பல தடவை பாதிக்கப்படுவார். ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றும். எனவே நேர்மையான அலுவலர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். குறிப்பாக ஒரு பணியில் ஒரு பதவியில் ஒரு நேர்மையான அலுவலர் – எந்த அலுவலராக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் – அந்த இடத்தில் இருந்து பணிமாறுதல் செய்ய முடியாது- ஏதாவது தவறு செய்தால் தவிர – பணி மாறுதல் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் நாம் உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்லாது நேர்மையாக பணியாற்றக்கூடியவர் களுக்கு பதவி உயர்வு- விருது வழங்குதல் போன்ற நிலை இருந்தால் பலபேர் உற்சாகம் – ஊக்கம் அடைவார்கள். அவர்களின் நேர்மையான நடவடிக்கை ஊழலின் வீச்சைக் குறைக்கும். இதுமட்டுமல்லாது இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் – ஊழல் ஒழிப்பு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். எந்த சூழலிலும் ஊழல் செய்பவர்கள் பணியில் தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யக்கூடிய நிலை இருந்தால் நிச்சயமாக ஊழல் செய்வதற்கு அஞ்சுவார். இதற்கான சீர்திருத்த விதிமுறைகள் – ஏற்கனவே இருப்பவைகளை கடுமையாகக் கடைப் பிடிப்பதும், புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் சரியான நிர்வாக சீர்திருத்தங்களாக நான் கருதுகிறேன்.

சிறகு: நாம் தொன்றுதொட்டு விவசாய தொடர்புகொண்டவர்கள். இப்போது இருக்கும் ஆபத்து, நகர வளர்ச்சிக்காக விளை நிலங்களை வீடு கட்டவும் மற்ற பணிகளுக்காகவும் கையகப்படுத்தப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இதைத் தவிர்க்கவோ தடுக்கவோ வழிகள் உண்டா? உங்கள் கருத்து என்ன?

திரு.சகாயம்: நம்முடைய நாடு கிராமங்களின் தேசம். அதனால் இந்த தேசத்தின் உயிர் கிராமங்களில் வாழ்கிறது என்று தேசத் தந்தை காந்தி சொன்னார். விவசாயிகளை இந்த தேசத்தின் முதுகெலும்பு என்று நாம் சொல்கிறோம். தமிழ் சமூகம் அடிப்படியில் வேளாண் சமூகம். நீண்ட நெடுங்காலமாக வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேளாண் தொழிலில் இருந்து பெரிய அளவுக்கு மக்கள் வெளியேறி- குறிப்பாக கிராமங்களில் இருந்து வெளியேறி நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று நகரமயமாகக் கூடிய சூழல். அதைப்போல தொழில் வளர்ச்சி இன்னொருபுறம். இவை எல்லாமே கட்டுமானப் பணிகளை அதிகரிக்கிறது. எனவே தொழிற்சாலை களுக்காக கட்டமைப்புகளை கட்டிடங்களை உருவாக்க நிலம் தேவைப்படுகிறது. அதைப்போல நகரத்திற்கு செல்பவர்கள் வசதி வாய்ப்பை உருவாக்கக் கூடிய ஒரு சூழல். ஊரகப் பகுதிகளிலும் வசதி வரக்கூடிய சூழல். தங்களுக்காக சொந்த வீடு கட்ட எத்தனிக்கிறார்கள். எனவே கூடுதலான இடம் தேவைப்படுகிறது. நம் தேசம் மக்கள் தொகையில் பெரிய எண்ணிக்கையில் இருக்கும் தேசம். எனவே முன்னேறுபவர்கள் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும்கூட கணிசமான எண்ணிக்கையில் அந்த இடத்தை வாங்கக் கூடிய சூழல் இருக்கும். இது போன்ற சூழ்நிலையில்  கட்டுமானங்களை முற்றிலுமாக நாம் தவிர்த்திட – நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் பலபேர் இதில் முதலீடு செய்கிறார்கள். முதலீடு செய்து அப்படியே நிலங்களை வைத்து விடுகிறார்கள். எனவே வேளாண்மை அங்கே செய்ய முடிவதில்லை. வீடுகளும் கட்டுவதில்லை. நீண்ட காலத்திற்கு அவர்கள் இதை சொத்தாக- வைப்பாக- முதலீடாகக் கருதும்போதுதான் பிரச்சினை வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். நம் தேசம் பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் தேசம். எனவே உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. எனவே அந்த அடிப்படையில் உணவு உற்பத்தி பாதிக்கப்படாத அளவிற்கு – இதுபோன்ற முதலீடுகளாக நிலங்களை வாங்கி வைப்பதைத் தடுக்கும் சட்டங்கள் அவசியம் என்று நான் கருதுகிறேன். இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நஞ்சை நிலங்களில் புதிதாக கட்டமைப்பை உருவாக்குவதற்கோ – தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கோ மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் தொடங்க வேண்டும். இது உணவு உற்பத்தியை எந்த சூழ்நிலையிலும் பாதித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசின் விதிமுறைகள் இருக்கிறது. இதுபோன்ற  சட்டங்களை கடுமையாக்கினால் – உணவு உற்பத்தி பாதிக்காத அளவுக்கு விதிமுறைகளை கொண்டுவரலாம் என்று நான் கருதுகிறேன்.

சிறகு: சுற்றுப்புறச் சூழல் குறித்து பொதுமக்களிடம் எந்த அளவுக்கு  அரசு விழிப்புணர்வு  ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுடைய நிர்வாகத்தில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கிறீர்கள்?

திரு.சகாயம்: சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு குறித்து தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. எம்மைப் பொருத்தவரை நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் ஏறக்குறைய பதினெட்டு லட்சம் மரங்கள் சாலைகளின் இரு மருங்கிலும்- எங்கெல்லாம் அரசின் காலி நிலங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மரங்களை நட்டு பராமரித்து பாதுகாத்து வந்தோம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்துப் பாதுகாத்தோம். அதுமட்டுமல்லாது கிராமங்கள் தோறும் எங்கெல்லாம் அரசு நிலங்கள் காலியாக இருக்கிறதோ அங்கெல்லாம் கிராமக் காடுகள் என்கிற அளவுக்கு மக்களின் பங்களிப்போடு –தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு ஏறத்தாழ பதினைந்து கிராமங்களில் உருவாக்கினோம். அதுமட்டுமின்றி ஒரு லட்சம் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட்டிருக்கிறோம். இப்படி மரம் நடும் முயற்சி – பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாது ஒரு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு அந்த விழிப்புணர்வு ஏற்பட்டது என்றால், ஒரு சில திருமணங்களின்போது அன்பளிப்பு அளிக்கும் சூழலில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக் கன்றுகளைக் கொடுக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. இது ஒரு உதாரணம்.

அதுமட்டுமின்றி நீராதாரங்களை பாதுகாக்கும் முயற்சியையும் நாம் செய்திருக்கிறோம். நீராதாரங்களை பாதுகாப்பது என்பது குளம், ஏரி, கண்மாய், குட்டை போன்றவைகளை வலுப்படுத்துதல் – கரைகளில் மரங்களை வளர்த்து குளங்களை ஆழப்படுத்தி உள்வாயில்களில் மரங்களை வைத்தோம். மரங்கள் இருக்கும்போது அங்கே பறவைகள் வரும். எனவே பல்லுயிரியும் என்று சொல்லக்கூடிய பாதுகாப்பை நாம் உருவாக்கினோம். அதைத்தான் நம் மதுரை மாவட்டத்திலும் செய்ய இருக்கிறோம். ஏற்கனவே இந்த முயற்சிகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். தமிழக அரசைப் பொறுத்தவரையில் லட்சக்கணக்கான மரங்களை நடுவதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. நம்மைப் பொருத்தவரை முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி இரண்டு லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டு இன்று பெரிய எண்ணிக்கையில் மரங்களை நட்டு வருகிறோம். பள்ளி வளாகங்கள், அரசுப் புறம்போக்கு எங்கெல்லாம் காலியாக இருக்கிறதோ அங்கெல்லாம். சாலையின் இரு மருங்கிலும், வணிக வளாகங்களில் எங்கு காலி இடம் இருக்கிறதோ அங்கெல்லாம், ஆலை வளாகங்கள் அங்கெல்லாம் ஆயிரக்கணக்கான மரங்களை இதுகாறும் நாம் நட்டிருக்கிறோம். அதைப்போல பல்லுயிர் பரவுதல் என்பதற்கு தமிழக அரசு இன்று பெரிய தொகையை ஒதுக்கி பல்லுயிரியும்  என்ற திட்டத்தையும் வைத்திருக்கிறது. அதாவது சின்ன சின்ன உயிரினங்கள், பறவைகள், உதாரணமாக சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் திட்டம்கூட இதில் இணைந்திருக்கிறது. அதை நாம் மிக விரைவில் செய்ய இருக்கிறோம். வட்ட, மாவட்ட அளவில் குழுக்களை ஏற்கனவே அமைத்திருக்கிறோம். அதன்படி மிகப்பெரிய அளவுக்கு இந்த பல உயிரினங்களை காப்பாற்றும் முயற்சியையும் நாம் செய்ய இருக்கிறோம். மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை வைகை என்பது மிக முக்கியமான ஒன்று. வைகையில் கழிவு நீர் கலக்கும் சூழல் இருக்கிறது. அந்த மாசைத் தடுப்பதற்காக பெரிய கருத்துருவை தமிழக அரசுக்கு அனுப்பி, வைகை மாசுபடுவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியை நாம் செய்திருக்கிறோம். ஏற்கனவே மதுரை  மாநகராட்சிக்கு உட்பட்ட வைகையில் கழிவு நீர் பல இடங்களில் கலக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் என்று கால நிர்ணயம் செய்து அறிவிப்பு செய்திருக்கிறேன். மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை எதிர்காலத்தில் லட்சக்கணக்கான மரங்களை தமிழக அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களைக் கொண்டு மரம் நட இருக்கிறோம். அதைப்போல ஏரிகளை, குளங்களைக் காப்பாற்ற ஆழப்படுத்தி கரைகளில் மரங்களை வளர்த்து நீராதாரத்தைப் பெருக்கும் சூழலை உருவாக்கப்போகிறோம். வெறும் பாசனத்திற்காக மட்டும் நீராதாரத்தைப் பாதுகாக்க அல்ல –நிலத்தடி நீரை பாதுகாக்கும் அம்சமாக கருதுகிறோம். ஏற்கனவே தமிழக அரசு மழை நீரை சேகரிக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கிறது. அதையும் மதுரை மாவட்டத்தில் அமல்படுத்த இருக்கிறோம். பிளாஸ்டிக் போன்ற பொருள்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு மறு சுழற்சி முறையில் பயன்படுத்த எத்தனிக்கிறோம். தமிழக அரசு திட்டத்தின் ஒரு அம்சமாக ஒரு பிளாஸ்டிக் சாலை போட இருக்கிறோம். மேலூர் பகுதியில் இந்த சாலை மிக விரைவில் போடப்பட இருக்கிறது. இதுபோன்ற திட்டங்களில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தனிப்பட்ட முறையில் ஒரு ஆட்சியாளராக நானும் என்னுடைய பங்களிப்பை செய்து வருகிறன். நிச்சயமாக ஒரு தாக்கத்தை இது ஏற்படுத்தும். குறிப்பாக மக்களிடம் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

சிறகு: தமிழ் மொழியை சுவாசி, மற்ற மொழிகளை நேசி என்பது உங்களின் அருமையான சொல்லாடல். தமிழ் வழிக் கல்வி பற்றி உங்கள் கருத்து, இதை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள், இதைப்பற்றி?

திரு.சகாயம்: தாய் மொழி வழியாகக் கல்வி பெறுவது என்பது மிக முக்கியமான ஒன்று. அதை உணர்வுபூர்வமாக மட்டுமே நாம் கருதிவிட முடியாது. மாறாக அதில் பல சிறப்புத் தன்மைகள் இருப்பதாக கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியின் தென் பகுதியில் வாழும் குருது இன மக்கள் தனி நாடு கேட்டுப் போராடுகிறார்கள். போராடும் மக்களின் தலைவராக அப்துல்லா ஒசாடன் விளங்குகிறார். போராட்டத்தின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனை வழங்கி- அவரிடம் கேட்கிறார்கள்- உன்னுடைய கடைசி ஆசை என்ன என்று. அப்துல்லா ஒசாடன் நீதிமன்றத்தில் சொன்ன வார்த்தை – அவருக்காகவோ அவரின் குடும்பத்திற்காகவோ வாழ்வளிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக அவரின் கோரிக்கையின் மிக முக்கியமான ஒன்று குருது இன மக்கள் வாழும் துருக்கி பகுதிகளில் உள்ள கல்விக் கூடங்களில் அவர்கள் தாய் மொழியில் அவர்களின் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது. அது என்னை ஈர்த்த நிகழ்வாக நான் கருதுகிறேன். எந்த சமூகமும் அந்த சமூகத்தின் தாய் மொழியில் கல்வி கற்கும்போது, உணர்வுபூர்வமானதாக மட்டும் அல்லாது சிந்தனை ஆற்றலை வளர்க்கும் ஒன்றாகத் திகழ்கிறது என்பதை கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் பல நேரங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த நிலை நம் தாய் தமிழகத்தில் தாய் மொழியில் கல்வி அளிக்க வேண்டும் கோரிக்கையும் பொருந்தும்.

இன்று அரசுப் பள்ளிகளில் நான் அதிகமாக ஆய்வு செய்கிறேன். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். காரணம், அவர்கள் ஏழைப் பிள்ளைகள். எனவே அவர்களை நான் நேசிக்கும் ஒரு அம்சமாக அரசுப் பள்ளிகளுக்கு சென்று அவர்களை உற்சாகப்படுத்துகிறேன், ஊக்கப்படுத்துகிறேன். அதுமட்டும் காரணமல்ல, அதற்கு மேலான ஒரு காரணம், அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான மாணவர்கள், தாய் மொழியான தமிழ் மொழியில் கல்வி பெறுகிறார்கள். நான் மிக ஆழமாக யோசிக்கிறேன். தமிழை அடுத்த தலைமுறைக்கு யார் கொண்டு செல்கிறார்கள் என்றால், அறிவு ஜீவிகள் இல்லை, எழுத்தாளர்கள் இல்லை, அரசியல் தலைவர்கள் இல்லை, கவிஞர்கள் இல்லை, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைப் பிள்ளைகள்தான் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்கள். எனவே இந்த ஏழைப பிள்ளைகளை உற்சாகப்படுத்த நான் அரசுப் பள்ளிகளுக்கு செல்கிறேன். எனவே தாய் மொழியில், தமிழ் மொழியில் கல்வி பெறுபவர்கள் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டில் இருக்கும் பல பேர், கல்வியாளர்கள் பல தளங்களில் அவர்கள் பணியாற்றினாலும் பெரும்பான்மையானவர்கள் தாய் மொழியில் கல்வி கற்றவர்கள் என்பதை மறுக்க முடியாது. இன்று நிர்வாகத்தில் பிரகாசிப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழ் வழியில்தான் படித்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்றால் தரம் குறைந்துவிடும் என்றார் யார் எண்ணினாலும் சரியானது இல்லை. அதே நேரத்தில் நான் விரும்புவது தமிழ் மொழியில் கல்வி கற்பது ஒரு நிலையில் இருந்தாலும் ஆங்கிலமோ, அல்லது நம் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு எந்த மொழி உதவுகிறதோ அதையும் நாம் கற்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அதனால்தான் பல நேரங்களில் தமிழக அரசு ஊக்குவிக்கிறவாறு தமிழ் மொழியில் கல்வி கற்கும் பிள்ளைகள் ஆங்கில மொழியில் ஆற்றல் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அடிப்படையில்தான், நீ என்ன மொழி வேண்டுமானாலும் வாசி, அனைத்து மொழிகளையும் வாசி, அன்னைத் தமிழை சுவாசி என்று நான் சொல்லி வருகிறேன். எனவே நிச்சயமாக தாய் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் நம்முடைய உற்சாகத்திற்கும் ஊக்கப்படுத்துதலுக்கும் உரியவர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில் நாம் தாய் மொழி கல்வியை உற்சாகப்படுத்துவோம். அதைப் பயிலுகின்ற ஏழை மாணவ செல்வங்களை –தமிழ் மொழியைக் காக்கும் மாணவர்களை நாம் ஊக்கப்படுத்துவோம்.

சிறகு: தமிழ் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு தனி மனிதராக- தமிழ் சமூகம் எந்த நிலையில் இருக்கிறது.? தமிழ் இளைஞர்கள் இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல எப்படி செயல்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு.சகாயம்: நம் தமிழ் சமூகம் நீண்ட பாரம்பரியத்திற்கு- பெருமை மிகுந்த தொன்மை மிகுந்த ஒரு சமூகம். இந்த தமிழ் சமூகத்தில் இன்று நம்முடைய இளைஞர்கள் எல்லா தளங்களிலும் சாதிக்கிறார்கள். இருந்தும் இந்த தமிழ் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் உணர்கிறேன். பல நேரங்களில் இவர்கள் பரிகாசத்திற்கு உட்படக்கூடிய ஒரு சமூகமாக இருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. நிச்சயம் நம் தமிழ் சமூகம் – உலகத்தின் எந்த சமூகத்திற்கும் இணையான – அவர்களைக் காட்டிலும் மேம்பட்ட சமூகமாக நம்மால் மேலெழுந்து வர முடியும். ஆனால் நம் சமூகத்தை தாக்கியிருக்கும், பீடித்திருக்கும் பிரச்சனைகளாக நான் கருதுவது, நம் தமிழ் சமூகம் கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிலேயே விழுந்து கிடக்கும் ஒரு நிலை. அதைப்போல சாதிகளாலும், அரசியல்களாலும் பிளவுண்டு நிற்கும் பரிதாபகரமான நிலை. எனவே நம் தமிழ் இளைஞர்கள் கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அதன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு எழுந்தார்கள் என்றால் – அரசியல், சாதிப் பிளவுகளிலிருந்து -–அந்த சகதியில் இருந்து அவர்கள் எழுந்தார்கள் என்றால் அவர்களின் சிந்தனையில் புதிய மாற்றம் வரும். அதுவே ஏற்றம் மிகுந்த தமிழ் சமுதாயம் உருவாவதற்கு அடித்தளம் அமைக்கும். நிச்சயம் நம் சமூகம் உலகத்தின் ஒப்பற்ற சமூகமாக ஒரு நாள் மிளிரும் என்பது உண்மை.

சிறகு: இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. இதைப்பற்றி உங்கள் கருத்து. ஊடகங்களுக்கு தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

திரு.சகாயம்: மக்களின் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு சக்தி ஊடகங்கள். எனவே சக்தி மிகுந்த ஊடகங்கள் மிக சரியாக, நேர்மையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். நம் நாட்டைப் பொருத்தவரை மக்கள் நாயகத்தின் முக்கிய அம்சமாக, தூணாக விளங்குவது ஊடகங்கள். ஊடகங்களைப் பொருத்தவரை- ஏற்கனவே நான் சொன்னதுபோல சமூக தளங்களில், மக்களின் எண்ண ஓட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே ஊடகங்கள் இன்று உண்மையாக, நேர்மையாக செயல்பட்டாலும் கூட இன்னும் கூடுதலாக உண்மையாக, நேர்மையாக செயல்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நம் எண்ணங்கள் என்ன, நம் பின்னணி என்ன? நம் எண்ணங்களில் இருந்து பின்னணியில் இருந்து திரித்துப் போடுவதை தவிர்த்திட வேண்டும். உண்மையை உண்மையாக மக்களிடத்தில் எடுத்து செல்வதுதான் ஊடகத்தின் நேர்மையான பணி என்று நான் கருதுகிறேன்.

சிறகு: இதுவரை உங்களுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் உங்களின் வழிகாட்டுதலையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டதற்கு- உங்களின் பணிச் சுமைகளுக்கு இடையிலும் எங்களுக்கு நேரம் தந்து நேர்காணல் அளித்த உங்களுக்கு பணிவான நன்றி.

திரு.சகாயம்: இந்த நேர்காணல் மூலம் நம் தமிழ் உறவுகளை நான் சென்றடைவதற்கு ஒரு அரிய வாய்ப்பு கொடுத்தமைக்கு உங்களுக்கு என் நன்றி.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

16 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஆட்சியர் திரு. சகாயம் சிறப்பு நேர்காணல்”
  1. veera says:

    என்னை பொருத்த வரயில் சகாயம் அய்யா ஒரு மகானாகவே தெரிகிரது. அவர் படு பாரட்டை நம் ஆட்சியர்கல் பட்டால் அதோகதிதான். கோழைகலைதான் நாம் வைத்திருக்கிரோம். இவர்தான் எனது ரோல் மாடல்………

  2. senthilnathan says:

    உறுதியாக உள்ளவர்.

  3. baskar says:

    நல்ல மனிதர்களுக்கு அடிக்கடி சொதனை வருவதுன்டு, ஆனால் அதுவெ நிரந்தரமில்லை…

  4. வே.தொல்காப்பியன் says:

    சகாயம் நேர்காணலை அளித்த ‘சிறகு’ இதழ் குழுவினருக்கு நன்றி.

    நேர்காணலைப் படித்ததும் வந்த சிந்தனைகள்:

    1. தெளிவும் உறுதியும் இருந்தால் இந்தப் புரையோடிப் போனச் சூழ்நிலையிலும் நேர்மையுடன் குடும்பம், பிள்ளைகளுடன் வாழமுடியும் என்று தெரிகிறது; பலருக்கு அது நம்பிக்கை ஊட்டும்.

    2. சகாயம் தன் நேர்மை உறுதிக்கு யாரையும் எதையும் (எந்த இயக்கம், தலைவர், மதம், நூல்) காரணமாக மேற்கோள் காட்டவில்லை. தன் தாய், தந்தையர், வளர்ந்த சூழலையே தன் உறுதிக்கும் உற்சாகத்திற்கும் மூலமாகச் சொல்லியுள்ளார். இது நாமனைவரும் நன்கு சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். ‘இவர் தான் தலைவர்’, ‘இந்த இயக்கம் தான் நமக்கு வழிகாட்டி’ என்று வழிபாட்டு மனப்பான்மையில் உழன்று (ஒரு தலைவர், இயக்கத்தை விட்டு அடுத்த தலைவர், இயக்கத்திற்கு) கொண்டு இருக்கத் தேவையில்லை. நம்மில் கணிசமான விழுக்காட்டினர் சுயசிந்தனையும் வழிபாட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் பெற்றாக வேண்டும். தலைவர், இயக்கம், நூல் இவை நாம் விழிப்புணர்வு, உற்சாகம், உறுதி, தெளிவு பெற உதவலாம். ஆனால் அவை நம்மை அடிமைப் படுத்தி விட விட‌க் கூடாது. அவற்றை நாம் கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது.

    3. ஊழலை ஒழிக்க அதன் காரணங்களைச் (மக்கள் புரையோடிப் போயிருத்தல்,…) சரியாகச் சுட்டிக் காட்டி நடைமுறைப் படுத்தத் தக்க வழிமுறைகளையும் (தகவல் பெறும் உரிமையைப் பயன்படுத்துதல்,…) சொல்லியுள்ளார். செயல்பட வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.

    4. 20 ஆண்டுகளில் 18 முறை நேர்மைக்குப் பரிசாக (தண்டனையாக) மாற்றல் செய்யப்பட்டாலும் பீற்றிக் கொள்ளாமல் அவர் உறுதியுடன் இருப்பது நாம் சிறு சிறு இழப்புகளைத் தாங்கிக் கொள்ளாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. நாம் போரில் உயிரை விடவும் சிறையில் வாடவும் தீக்குளிக்கவும் செய்கிறோம். ஆனால் சிறுசிறு இழப்புகளைத் தாங்கிக் கொள்ளத் துணிவதில்லை. கணிசமான (பல துறையில் உள்ளவர்களும்) தொகையினர் சிறுசிறு இழப்புகளைக் தாங்கிக் கொள்ளத் துணிந்தால் தான் மாற்றம் சாத்தியம்; அப்படித் தொடர்ந்து இருப்பதில் தான் அம்மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் செம்மைப் படுத்திக் கொள்ளவும் முடியும். தியாகச் சிகரமாக ஓரிருவரும் எப்படியாவது (எந்த அயோக்கியத்தனம் செய்தாவது அல்லது செய்வதற்குத் துணை போகியாவது அல்லது அப்படி நடப்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்தாவது, அவற்றைத் தட்டிக் கேட்பவர்களிடமிருந்து விலகிக் கொண்டாவது) நாம் செல்வநிலையில் முன்னேறினால் போதும் என்று மிகப் பலரும் இருக்கும் வரை நம் நாடு, இனம் இப்படித்தான் இருக்கும்; அதாவது தியாகச் சிகரமான சிலருக்கு வழிபாடு செய்து கொண்டு நாம் வழக்கம் போல் மந்தையோடு மந்தையாகப் போய்க் கொண்டு இருப்போம்.

    5. சகாயம் பல தலைப்புகளை இந்தச் சிறிய நேர்காணலில் திறம்படச் சுற்றி வளைத்துக் கோர்த்துச் சொல்லியுள்ளார். கேட்கப் பட்ட கேள்விகளும் நல்ல தேர்வுகள். அதில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆடம்பரம். ‘செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே – அல்கா (தீராத) நல்குரவு (வறுமை) அவா (ஆசை) எனப்படுமே’ என்பது குமரகுருபரரின் வரிகள். வழிபாட்டு அடிமைத்தனம் போல் ஆடம்பர நுகர்வு அடிமைத் தனமும் நம்மைப் பிணைத்திருக்கும் விலங்கு என்று உணர்ந்தாக வேண்டும்; இளம் தலைமுறைக்கு உணர்த்தியாக வேண்டும். எதை எழுதினாலும் சொன்னாலும் என்னை முதலில் அதன் படி ஆய்வு செய்து கொள்ளப் பழகி வருகிறேன். அதன் படி, இலண்டனில் வாழ்ந்தாலும் அவ்வாழ்க்கைக்குள், நுகர்வு அடிமைத்தனம், போலிப் பெருமை அடிமைத்தனம் இவற்றை விழிப்புடன் இருந்து விலக்கி ‘விடுதலை’யாக வாழ்ந்து வருகிறேன். அதன் படி மனைவி, பிள்ளைகளுக்கும் வழிகாட்டி வருகிறேன். நாங்கள் வைத்திருக்கும் காரைப் (பழைய மாடல், சிறிய கார்…) பார்த்து என் 13 வயது மகனின் நண்பர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள் என்று சொன்னான். கார் வைத்திருப்பதே நாம் உலகில் பல பில்லியன் மக்களை விடச் செல்வந்தர்களாக இருப்பதைக் காட்டுகிறது; அதில் நாம் நிறைவு பெற வேண்டும்… என்று பல சொல்லி விளக்கினேன். இதைப் பெருமை அடித்துக் கொள்ளச் சொல்லவில்லை; இதில் நடைமுறை படுத்துகிற அளவுக்கு வேறு சிலவற்றில் செய்ய முடியவில்லை. என்றாலும் நுகர்வுப் போட்டியில் சிக்கிய ஒருவன் எப்படி அதில் தொடர்ந்து மேலும் மேலும் என்று போராட வேண்டியுள்ளதோ அதே போல் நுகர்வுப் போட்டியில் சிக்காமல் இருக்கவும் தொடர்ந்து (அகத்திலும் புறத்திலும்) போராட வேண்டும் என்ற தெளிவு நம்மை வழி நடத்துமாக!

  5. selvaraj, Vagarayampalayam says:

    மிக்க நன்ரி. அரசு பனியில் நேர்மையுடன் போராடும் திரு.சகாயம் பொதுத்துரையில் பனிபுரியும் அனைவருக்கும் விடிவெல்லி. தெரிந்தது தான். இவர் போன்ர அனைவரும் வால்வில் போராடத்தான் செய்கிரோம்.

  6. gandhi says:

    மிகவும் அருமை !

  7. Murali Kumar says:

    அட்புதமான நேர் காணல். நேர்மை என்றால் என்ன என்றறிய படிக்கவேண்டும்.

  8. raja says:

    அருமையான பேட்டி. நன்றி சிறகு.

  9. விவேக் says:

    மிக அருமையான நேர்காணல் – திரு. சகாயம் போன்ற கர்ம வீரர்கள் தழைக்க வாழ்த்துக்கள்.

  10. ஜோதிஜி திருப்பூர் says:

    தேவியர் இல்லத்தின நல்வாழ்த்துகள்.

    ஜோதிஜி திருப்பூர்

  11. V.P.Veluswamy MD says:

    We got our freedom with the leadership of Ghandhi. Now all our freedom is being is abused by officials and politicians without any regard to human decency. He is like a Gem. How do we protect Mr Sagayam and help him in his mission? We need to find a way. Veluswamy

  12. முத்துக்குமார் says:

    திரு சகாயம் அவர்களுக்கும் சிறகு இதழுக்கும் என் நன்றிகள்.

  13. முத்துக்குமார் says:

    சிறந்த நேர்காணல்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த ஒரு அதிகாரி. அவர் தன் படித்த நாட்களைப் பற்றி பேச காண்பதும் கேட்பதும் சிறப்பாக உள்ளது. அவருக்கான சோதனைகளை அவர் கடந்த விதம் அனைவருக்கும் ஒரு பாடம். கேள்விகளை செந்தமிழில் கேட்கும்போது நேர்காணல் செய்தவர்களுக்கு தடுமாற்றம் வருகிறது, அதை சரிசெய்தால் மிகச் சிறந்த நேர்காணல்களை சிறகு வரும்காலங்களில் உருவாக்கலாம்.

  14. தியாகு says:

    மிக அருமையான பதிவு , வாழ்வில் நேர்மை என்பது மிக முக்கிய ஒன்று
    திரு சாகாயம் அவர்களே அதற்கு எடுத்துக்காட்டு , அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  15. கிராமத்தான் says:

    இந்த நாட்டில் பொதுச்சேவையில் நேர்மையாக வாழ்வது சிரமம் என்பது மட்டுமல்ல; சக ஊழியர்களும் கையூட்டு வாங்காமல் மக்களுக்கு பணிபுரிய வைப்பதென்பது அதை விட மிக மிக சிரமமானதாகும். இதனை செய்ய ஒரு துணிவு வேண்டும். மீசையை மட்டும் முறுக்கி, ஊடகங்களுக்கு பணம் கொடுத்து பேட்டி கொடுத்து விட்டு மனசாட்சியை முடக்கி போட்டு திருப்தி கொண்டிருப்பவர்கள் மத்தியில் திரு.சகாயம் ஒரு காமராசர் – காந்தி தான். இவரின்
    வாழ்க்கை துறவறம் போன்றது தான்; அதாவது சூழ்நிலைகளுக்கு அடிமையாகாமல், கொள்கையில் உறுதியாக உள்ளவர். தாய்மொழியாம் தமிழ், இனம் மீது தீராத காதல் கொண்டவர். இவரது பணி சிறக்க இன்னும் பல ‘சிறகுகள்’ துணையாக இருக்க வேண்டும்.

    குறிப்பு: “பெருஞ்சுனை” என்பது தான் திரு. சகாயம் அவர்கள் பிறந்த கிராமத்தின் பெயர். பெருந்துறை என்று தவறாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.

    நன்றி!

அதிகம் படித்தது