மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல்

ஆச்சாரி

Jul 1, 2011

தமிழக  மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் 1983 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்து ஊனமுற்று இருக்கின்றனர். நமது மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இப்பிரச்சினையை தீர்ப்பதில் உண்மையான அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.

மீனவ சமுதாயத்தினர், இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதல்களில் இருந்து தங்களை காப்பாற்றும் படி மாறி மாறி வரும் அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தின் போதும் சில நாட்களுக்கு பாதிக்கப்பட்ட மீனவர்களின் ஊர்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டங்களை அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எளிதாக நீர்த்துபோக செய்து விடுகின்றனர்

மீனவர் ஒற்றுமை

தமிழகத்தில் எட்டு இலட்சத்து என்பத்தி நான்காயிரம் (8.84 இலட்சம்) மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே நாளில் தம் குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்தால் தமிழகமே செயலற்று நின்று விடும். ஆனால் நம் மீனவர்கள் சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஊர்களில் சிறிய அளவிலான போராட்டங்களையே நடத்தி வருகின்றனர். மீனவ சமுதாயத்தினர் கட்சி, மதம், சாதி, சங்கங்கள் என்று நூற்று கணக்கான பிரிவுகளாக பிரிந்துகிடக்கின்றனர். மாநிலம் முழுவதும் 591 கடலோர கிராமங்களிலும் வாழும்  மீனவர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மிக அவசியம். மீனவர்கள் ஒற்றுமையாக போராடினால் மற்ற மக்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிப்பார்கள். மீனவர்கள் ஒற்றுமை இல்லாமல் போராடுவதாலே வெறும் வாயை மெல்லும் அரசியல் கட்சிகள் கூட மீனவர்  பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

தமிழக அரசு

தமிழக அரசு இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செயல்படுவதைவிட பிரச்சினையின் சூட்டை தனிப்பதிலே காலம் காலமாக கவனம் செலுத்தி வருகிறது. மீனவர்களின் போராட்டத்தை திசை திருப்புவதில் செலுத்திய கவனத்தை, கொல்லப்பட்ட மீனவர்களின் சடலத்தை அன்றே தகனம் செய்யவைப்பதில் செலுத்திய தீவிரத்தை மத்திய அரசிடம் காட்டி இருந்தால் இப்பிரட்சினை என்றோ தீர்வை நோக்கி நகர்ந்திருக்கும். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு இப்பிரட்சினையின் தீர்விற்கு பாடுபடுமா என்று மீனவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசு மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி  மத்திய அரசை நிர்பந்தப்படுத்த வேண்டும். வழக்கமாக மத்திய அரசு கொடுக்கும் வாக்குறுதிகளால் திருப்தி அடைந்துவிடக்கூடாது. மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், மீனவர்களை தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதிலும் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்காணித்து கண்டிக்கும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். மேலும் இவ்வழக்கின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாவிடில் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கு மத்திய அரசை நிர்பந்த்தப்படுத்த வேண்டும். மீனவர் பிரச்சினைகள் தொடர்பான இந்தியா இலங்கை பேச்சு வார்த்தைகளில் தமிழக அரசையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தவேண்டும்.

இழப்பை பதிவு செய்யும் ஆவணங்கள்

தமிழக அரசு இப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களை சேகரிக்கப்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம். இன்று ஒவ்வொரு ஊடகமும், மீனக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் படுகொலை செய்யப்பட மீனவர்களின் எண்ணிக்கையை மாற்றி மாற்றி கூறுகின்றன. தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்ட ஆவணகளில் காவல் துறை ஒரு எண்ணிக்கையும் மீன்வளத்துறை வேறொரு எண்ணிக்கையும் கொடுத்துள்ளது.  இக்குழப்பங்களை தீர்க்கும் வண்ணம் தமிழக அரசு அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து சரியான தகவல்கள் கிடைக்கும்படி செய்யவேண்டும். இதுவரை படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், தாக்கப்பட்டவர்களின் விவரங்கள், காயங்களின் விவரம், படகு எண்கள், சம்பவ நேரங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை பற்றிய அடையாளங்கள், காயமடைந்தவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை விவரமாக ஆவணப்படுத்துவது அவசியம். இது போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஆவணங்களின் பங்கு மிக அதிகம்.
நம் மீனவர்களை தாக்கியவர்கள் தண்டிக்கப்படும் வரை தமிழக அரசு இப்பிரச்சினையில் தீவிரத்தை குறைத்து கொள்ளகூடாது.

மத்திய அரசு

மத்திய அரசு இலங்கையிடம் தொடர்ந்து வலியுறித்தியும் இப்பிரட்சினை தீர்க்கப்படாமல் இருப்பதை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டியிருக்கிறது.

  • இலங்கையிடம் இந்தியா மென்மையாக நடந்துகொள்கிறதா?
  • இந்தியாவின் கோரிக்கையை இலங்கை உதாசீனப்படுத்துகிறதா?
  • இந்தியாவின் ஆதரவுடன் தான் தாக்குதல்கள் நடக்கின்றனவா?

இலங்கையிடம் இந்தியா மென்மையாக நடந்துகொள்கிறதா?

சர்வதேச புவி அரசியல் காரணங்களுக்காக இந்தியா இலங்கையிடம் மென்மையாக நடந்து கொள்கிறது என்ற கருத்து  பரவலாக பேசப்படுகிறது. அண்டை நாடுகளிடம் மென்மையாக நடந்து நட்பு நாடுகளாக வைத்து கொள்வது அனைத்து நாடுகளுக்கும் மிக அவசியமே. அண்டை நாடுகள் நட்பு நாடுகளாக இல்லாததால் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நாம் சந்தித்து வரும் பிரச்சினைகள், உயிர் மற்றும் பொருள் சேதங்களை கணக்கில் கொள்ளும்போது இலங்கையிடம் நட்பு பேணுவது நமக்கு மிக முக்கியமாகிறது. ஆனால் நட்பிற்கு நாம் கொடுக்கும் விலை தமிழர்களின் உயிர்களாக இருக்க முடியாது.  தற்போதைய சூழ்நிலைகளில் நமக்கு இலங்கையின் நட்பு தேவையாக இருப்பதை விட இலங்கைக்கு நமது நட்பு பல மடங்கு தேவையாக இருக்கிறது

தொலைநோக்கு பார்வையுடன் நட்பு நாடுகளை தேர்ந்தெடுக்காமல் விடுதலைப்புலிகளை வெல்வதற்கு உதவி என்ற ஒற்றை நோக்கத்துடனேயே இலங்கை நட்பு நாடுகளை தேர்ந்தெடுத்து வருகிறது. இலங்கை 2007 மார்ச் 12ல் சீனாவின் துறைமுகத்தை ஹம்பண்டோடாவில் நிறுவதற்கு இலங்கை கையொப்பமிட்ட போதே  இந்தியா, அமெரிக்கா, பல மேலை நாடுகளிலிருந்து இலங்கை விலகிப் போகத்தொடங்கிவிட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இலங்கை பெற்ற உதவி 7.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதே ஆண்டில் இலங்கை சீனாவிடம் இருந்து பெற்ற உதவி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதிலிருந்தே இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் தூரத்தையும் சீனாவிற்கும் இலங்கைக்கும்  இருக்கும் நெருக்கத்தையும் அறிந்துகொள்ளலாம். 2007 ஆம் ஆண்டில் தொடங்கி விடுதலைபுலிகளுக்கு  எதிரான போருக்காக சீனா இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரானுடனும், ரஷ்யாவுடனும் இலங்கை நெருங்கி நட்பு பாராட்டுகிறது. 2009 அக்டோபரில் நடந்த இலங்கை ஈரான் இராணுவ அதிகாரிகளின் சந்திப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிற்கு ஈரான் எப்படியெல்லாம் உதவியிருக்கிறது என்று வெளிப்படையாக இலங்கை பாராட்டி இருப்பதிலிருந்தே இலங்கை ஈரான் நட்பின் ஆழத்தை  அறிந்துகொள்ள முடியும். 2008 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எண்ணையை ஈரான் வட்டியில்லா கடனாக இலங்கைக்கு கொடுத்துதவியது. இது இலங்கை தன் அந்நிய செலவாணி இருப்பை பெருமளவில் ஆயுதம் வாங்குவதற்கு உபயோகப் படுத்த உதவியது.

இலங்கை ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதாலே, தற்போது மேற்குலக நாடுகள் ராஜபக்சேயின் போர்க்குற்ற விசாரணையில் ஆர்வம காட்டுகின்றன. இந்நிலையில் இலங்கையின் ராஜபக்சே  அரசிற்கு இந்தியாவின் ஆதரவு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. இந்நேரத்தில் இந்தியா நம் மீனவ பிரச்சினைகளுக்கான தீர்வை எளிதாக இலங்கையை ஒப்புக் கொள்ள வைக்கமுடியும். அதே நேரத்தில் எந்த காரணத்திற்காகவும் ராஜபக்சேவை போர்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்ற இந்தியா துணை போய் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த அறிய சந்தர்ப்பத்தை மத்திய அரசு சரியாகப் பயன்படுத்தி கொள்ளவேண்டுமே ஒழிய, இலங்கையிடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கக்கூடாது.

இந்தியாவின் கோரிக்கையை இலங்கை உதாசீனப்படுத்துகிறதா?
மத்திய அரசு கூறுவதைப் போன்று தீவிரமாக இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது என்றால், இலங்கை இந்தியாவின் கோரிக்கையை இன்முகத்துடன் அலட்சியப் படுத்தி வருவதாகிறது. இந்நிலையில் இலங்கை ஏதோ திட்டத்துடனே மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறதோ என்று ஆராய வேண்டியிருக்கிறது.

இலங்கையிடம் மீனவர் படுகொலைகளைப் பற்றி பேசினாலே அவர்கள் நேரடியாக பதில் கூறாமல் நம் மீனவர்கள் எல்லை தாண்டுவதையே திரும்ப திரும்ப குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கங்களில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்களில் இதை கண்கூடாக காண முடிகிறது.

இலங்கை கடற்படை சார்பாக டைரக்டர் ஜெனரல் லக்ஸ்மன் ஹுளுகள்ளே –
“நமது நாடு முப்பது ஆண்டுகால போரிலிருந்து வெளிவந்திருக்கும் இந்நேரத்தில் நமது பாதுகாப்பில் கவனமுடன் இருக்க வேண்டும். நமது பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர்த்த வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் மீனவர்கள் மூலம் ஆயுதம், படகுகளை பெற்றுவந்தனர். ஆதலால் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும் – நாம் யாரையும் குற்றம் சாட்டவில்லை, ஆனால் இலங்கையின் பாதுகாப்பே நமது கடற்படையின் முக்கிய கவனம். ஆகையால் கடற்படை, கடலோர காவல் படைகளுக்கு கண்டிப்பான விதிமுறைகள், வழிமுறைகள் கொடுத்திருக்கிறோம்.”

இலங்கை கடலோர காவல்படை முன்னாள் டைரக்டர் ஜெனரல் தயா தர்மபிரியா –
“இந்திய மீனவர்களை கைது செய்வது எங்கள் நோக்கமல்ல. அவர்களை எச்சரித்து, நமது பகுதிக்கு வெளியே திருப்பி அனுப்புவது போன்ற செயல்களால் நமது எல்லையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அதற்கான முயற்சிகளை செய்துவருகிறோம். அவர்களை கைது பண்ணும பொது அதிக வேலைப்பழுவாகிறது – அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாகிறது, அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டியதாகிறது, பின்னர் கடைசியில் இந்திய எல்லைக்குள் கொண்டு சென்று விட வேண்டியதாகிறது. ஆகையால் நாங்கள் இதை விரும்புவதில்லை. நமது கடலோர எல்லையை காப்பதே எங்களது கடமை, இந்திய மீனவர்களை கைது செய்யும் கூடுதல் சுமையை நாங்கள் விரும்புவதில்லை. தவிர்க்க முடியாத சில அவசிய நேரங்களில் மட்டுமே கைது நடவடிக்கையில் ஈடுபடுவோம்.”

இலங்கை மீன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே –
“சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் மூலம் எவ்வளவு பெரிய இந்திய படகுகள் நமது எல்லைக்குள் ஊடுருவி நமது நீர்வளங்களை அள்ளுகின்றன, மேலும் பவள வளங்களை நாசம் செய்கின்றன என்று இந்திய அரசிடம் காண்பித்தோம். இந்த படங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மதியம் இரண்டு மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை எடுக்கப்பட்டவைகள். இந்த அத்தாட்சிகளை பார்த்த உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நமக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்துகொண்டு, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைய எந்த உரிமையும் அற்றவர்கள் என்பதை ஒப்புகொண்டார். வரும் ஜூலை 28ல் டாக்டர் டமிதா விதாணா தலைமையில் இந்தியாவிற்கு பயணிக்கும் நமது அமைச்சக அதிகாரிகள் குழு இப்பிரட்சினையில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.”

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா –
“நமது மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துன்புறுத்தல் மற்றும் கைது சம்பவங்கள் யாவுமே, இலங்கை கடல் எல்லைக்குள் நடந்தவைகளே. இதனால்  தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றாலும், நாம் இலங்கையின் பக்கத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும், பெரும்பாலான இலங்கை மீனவர்கள் நீண்ட தடைக்கு பின்னர் தற்போது தான் மீன்பிடிக்க தொடங்கி இருக்கின்றனர்.”

இவற்றை எல்லாம் பார்க்கும்போது இலங்கை தனது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் வருவதை பல காரணங்களுக்காக எப்படியேனும் தடுத்தாக வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறது. பிரச்சினையின் அடிப்படை இவ்வாறாக இருக்கையில் நம் மீனவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தனுப்புவது, இழுவை படகுகளை மட்டும் தவிர்த்து கொள்வது போன்ற பரிந்துரைகள் தீர்வை கொடுக்க இயலாது. எல்லை தாண்டுவதைத் தான் இலங்கை தலையாய பிரச்சினையாக பார்க்கிறது என்றால் இப்பிரச்சினைக்கான தீர்வு எல்லையை சார்ந்ததாகவே இருந்தாக வேண்டும்.

இரு அரசாங்கங்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டால் எல்லை பிரச்சினையில் சுமுகமான தீர்வை எளிதாக எட்டிவிடலாம். இரு நாட்டு துறை சார்ந்த வல்லுனர்களையும், மீனவர்களையும் வைத்து குழு அமைத்தால் கீழ்கண்ட பரிசீலனைகளைப் போன்று பல எளிமையான தீர்வுகளை கண்டறிய முடியும்.

திறந்த கடல்
இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லையை முழுவதுமாக நீக்கிவிடுவது மிக எளிதான தீர்வாகும். இதன் மூலம் இரு நாட்டு மீனவர்களும் இரு நாடுகளின் கடல் பக்கங்களில் தடையின்றி மீன் பிடிக்க முடியும். இது நம் மீனவர்களுக்கு மிக மகிழ்ச்சியான தீர்வாக இருக்கும். இலங்கையின் கடல் வழி பாதுகாப்பிற்கு இந்தியா உத்திரவாதத்துடன் கூடிய உதவிகளை அளிப்பதன் மூலம் இலங்கையை இத்தீர்வை ஏற்றுகொள்ள வைப்பதற்கு முயற்சிகள் செய்யலாம்.

பொது மீன்பிடிக் கொள்கைகள்
திறந்த கடல் தீர்வில் கட்டுபாடுகள் ஏதும் விதிக்கப்படாவிட்டால் மீன்வளங்கள் விரைவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் பொது மீன்பிடி கொள்கைகள் போன்று இரு நாடுகளுக்குள்ளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐரோப்பாவில் செயல்படும் பொது மீன்பிடி கொள்கைகளின் மூலம் மீன் பிடிப்பதை முறைப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீன் வளம் பாதுகாப்பு, சந்தைப் படுத்துதல்,  நிதி உதவிகள், விற்பனை முறைகள், குறைந்த பட்ச விற்பனை விலைகள் போன்றவற்றையும் ஒழுங்கு படுத்துகின்றனர். இந்தியா இலங்கைகிடையே குறைந்த பட்ச அளவில் மீன் பிடிப்பதை மட்டும் ஒழுங்கு படுத்தி, மீனவர்களின் எண்ணிக்கை, படகு, மீன்பிடிக்கும் முறை, மீன்வகைகள் ஆகியவற்றை பொறுத்து அதிக பட்ச மீன் பிடிக்கும் வரம்புகளை நிர்ணயித்து கொள்ளலாம்.

இது போன்ற ஒப்பந்தங்களை அதிகாரிகள் முடிவு செய்து மீனவர்களிடம் தெரிவிக்க கூடாது, மாறாக மீனவர்கள் முடிவு செய்து அதிகாரிகள் கையொப்பம் இடுவதாக இருக்கவேண்டும்.

எல்லைகளை நீக்குவது போன்ற தீர்வுகளுக்கு இலங்கை இணங்கிவராமல் போனால் எல்லைகளை மாற்றியமைத்தாக வேண்டியது அவசியம். கடந்த கால அரசாங்கத்தின் தவறான செயலால் விட்டு கொடுக்கப்பட்ட கட்சத்தீவை உடனடியாக மீட்டாக வேண்டும். கட்சத்தீவை விட்டு கொடுப்பதற்கான 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் இன்னும் சட்டப்படி அமுலுக்கு வரவில்லை. அந்த ஒப்பந்தத்தின் கீழ்கண்ட எட்டாவது விதிப்படி நமது பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால் தான் ஒப்பந்தத்தை செயல் படுத்த முடியும்.

“This agreement shall be subject to ratification. It shall enter into force on the date of exchange of the instruments of the ratification which will take place as soon as possible.”

அனால் இன்றுவரை இதற்கான ஒப்புதல் பாராளுமன்றத்தில் பெறப்படவில்லை. எனவே எளிதாக 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கட்சத்தீவை மீண்டும் நமது பகுதியாக அறிவித்து விடலாம். கட்சத்தீவை மீட்டு  இந்திய எல்லையை நீட்டி விட்டாலே நமது மீனவர்கள் எல்லை தாண்டி போவதற்கான அவசியம் பெருமளவில் குறைந்துவிடும்.

இந்தியாவின் ஆதரவுடன் தான் தாக்குதல்கள் நடக்கின்றனவா?
ஈழப்படுகொலைகளை இந்திய ஆதரவுடன் இலங்கை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருவது போன்று நம் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களும் இந்தியாவின் ஆதரவுடனே நடக்கின்றன என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்க மீனவர்கள் தடையாய் இருப்பார்கள் என்று மீனவர்களை அவர்களது பாரம்பரிய தொழில்களிருந்து விரட்டுவதற்கான நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியே நம் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் என்று பலர் நம்புகின்றனர்.

ஆந்திராவின்  975 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் 348 கிலோமீட்டர்களை மூன்று தனியார் துறைமுகங்களுக்கு  தாரைவார்த்து விட்டனர். நமது பெரிய சென்னை துறைமுகமே 10.6 கிலோமீட்டரில் தான் அமைந்திருக்கிறது என்றால், ஆந்திராவில் நடந்திருப்பது எவ்வளவு பெரிய அபகரிப்பு என்று தெரிந்துகொள்ளலாம். இதைபோன்று தமிழக கடற்கரைப் பகுதிகளையும் தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்றால் மீனவர்களை மாற்று தொழில் நோக்கி நகர்த்த வேண்டியிருக்கிறது.

தற்போது நம் நாட்டில் ஊழல்களைப் பார்க்கும்போது கடற்கரைப் பகுதிகளை தனியாருக்கு தாரைவார்க்க அரசியால்வாதிகள் மற்றும் அதிகாரிகளே நம் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை முழுவதுமாக ஒதுக்கி புறந்தள்ளிவிட முடியவில்லை.

நம் மீனவர் பிரச்சினைக்கான தீர்வு இந்திய இலங்கை அரசிடம் இருப்பதைப் போன்று தோன்றலாம். ஆனால் இது போன்ற மக்கள் பிரச்சினைகளில் அரசாங்கங்கள் தீர்வை எழுதி நடைமுறைபடுத்தும் கருவிகளே. எப்பொழுதுமே தீர்வுகளை முன்வைத்து அரசாங்கத்தை முடிவெடுக்க வைப்பது பொது மக்களே. இப்பிரச்சினையின் தீர்வையும் நம் தமிழக மக்களால் தான் உருவாக்க முடியும். மக்கள் தமது பலத்தையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டால் இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு நம் மீனவர்களின் வாழ்வில் அமைதி திரும்பும். Variations on http://www.domyhomework.guru/ essays, such as position papers, mock grant applications and so on are also used


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல்”
  1. இர.இலாபம்சிவசாமி says:

    பாரபட்சமற்ற ஆரோக்கியமான ஆழமான அலசல்.

  2. siraku rasikan says:

    ராசா சொல்வது மிகச்சரி…

  3. ராசா says:

    1983 இருந்து நம் மீனவன் தாக்கப்படுகின்றான் / படுகொலை செய்யப்படுகின்றான் என்றால் என்ன ஒரு —- இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும். நம் விரோத பாகிஸ்தான் கூட நம்மீனவன் எல்லை தாண்டும் போது கைது தான் செய்யுது . அப்படியானால் இந்தியாவின் முதல் எதிரி இவந்தான் !
    வீழ்த்துங்கள் இவனை! வாழட்டும் நம் மீனவன்

அதிகம் படித்தது