பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

Android, Apple செயலிகள் மூலம் செல்வம் ஈட்டுங்கள்

சௌமியன் தர்மலிங்கம்

Jan 16, 2016

செல்வம் ஈட்டுவதற்கு ஏராளமான வழிகள் இவ்வுலகில் ஏற்கனவே உள்ளன, புதிதாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. Smart Phones எனப்படும் அலைபேசிகள் அதிகமாக மக்கள் கைகளில் வலம்வர துவங்கிய பிறகு உலகெங்கும் ஏராளமான மாற்றங்கள் பல்வேறு தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வணிகத்தின் சில முக்கிய அங்கங்களை இத்தகைய அலைபேசிகள் புரட்டிப்போட்டுள்ளன. எதிர்காலத்தில் இடைத்தரகர்களே இல்லாத நிலை இவற்றின் மூலம் வரக்கூடும். உற்பத்தியாளர் அவரிடமிருந்து நுகர்வோர், என்று நேரடியான தொடர்புகளை இத்தகைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தி ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் வழக்கங்களை ஒரே நாளில் மாற்றுகின்றன.

இத்தகைய அலைபேசிகளுக்கு என்று செயலிகள் எனப்படும் சிறிய மென்பொருட்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களால் தினம் தினம் ஏற்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இவை நமது தினசரி வாழ்வை எளிமைப்படுத்தும் வகையில் எண்ணற்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. மிக முக்கியமான தகவல்களை கையடக்கக் கருவியில் இவை தருகின்றன. உதாரணமாக,பெருநகரங்களில் ஓடும் தொடர்வண்டிகளின் நேரத்தை குறிப்பிட்ட ஒருவர் செயலிகளைக் கொண்டு அறிந்து தனது பயணத்திட்டத்தை நேரத்தை வீணாக்காத அளவில் அமைத்துக்கொள்ள முடியும். இதுபோல வங்கிகளின் தகவல்கள், அரசுத் தகவல்கள், நாட்காட்டிகள், சமையல்குறிப்புகள், மொழி அகராதிகள், விளையாட்டுக்கள், பயன்படு தகவல்கள் போன்ற ஏராளமானவற்றை செயலிகள் மூலமாக நாம் நுகர முடியும்.

முன்பு ஒருவர் குறிப்பிட்ட சொல்லுக்கு பொருள் தேடவேண்டும் என்றால் நூலகத்திற்கு சென்று அகராதியில் தேடவேண்டிய நிலை மாறி, இன்று அலைபேசியில் அகராதிகளை செயலிகள் மூலமாகவே பயன்படுத்த முடியும். திடீர் பயணங்களுக்கான விமானம், தொடர்வண்டி, பேருந்து போன்றவற்றின் புறப்படும் நேரங்களை வினாடிகளில் அறிய முடியும்.

சமையல் அறியாதவருக்கு உதவும் வகையில் சமையல் குறிப்புகள், நம்மை அழகுபடுத்திக்கொள்ள அழகுக் குறிப்புகள், சித்த மருத்துவக்குறிப்புகள், வீட்டு உபயோகக் குறிப்புகள் போன்றவை தினம் தினம் பயன்படுத்தக்கூடிய அளவில் செயலிகளில் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஏராளமான புத்தகங்கள் செயலிகள் வடிவில் நாம் விரும்பும் நேரத்தில் படிக்கக்கூடிய முறையில் செயலிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கல்வி சார்ந்த ஏராளமான செயலிகள் கூகுள் செயலிகள் தளத்தில் கிடைக்கிறது. Apple நிறுவனத்தின் தளத்திலும் அவர்களின் அலைபேசியில் இயங்கக்கூடிய செயலிகள் வெளியிடப்படுகின்றன.

android apple2

இத்தகைய செயலிகள் மூலம் எவ்வாறு பணம் ஈட்டுவது என்பதைப் பார்ப்போம். செயலிகள் இருவகைப்படும், ஒன்று இலவச செயலிகள், மற்றொன்று பணம் கொடுத்து பெற வேண்டிய செயலிகள். நாம் இலவச செயலிகள் மூலமே பணம் ஈட்டுவதற்கு வழிமுறைகள் உள்ளன. உலகில் அனைவருக்குமே ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் நிறைய ஆர்வமும், அறிவும் அமையப்பெற்றிருக்கும்.

உதாரணமாக சிறப்பாக கோலம் போடத்தெரிந்த பெண்மணி ஒருவர் தமக்குத் தெரிந்த கோலங்களையும், அவற்றை கற்பதற்கான வழிமுறைகளையும், கோலங்கள் பற்றிய குறிப்புகளையும் ஒரு செயலியில் தொகுத்து வெளியிடுவாரேயானால் அதனை தரவிறக்கி பயன்படுத்த ஏராளமான பயனாளிகள் உலகில் இருக்கின்றனர். சரி, இதன் மூலமாக பணம் எவ்வாறு ஈட்டுவது என்ற கேள்வி எழும்.

இவ்வாறு வெளியிடப்படும் செயலிகளை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம். அவ்வாறு மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் விளம்பரங்களை கொடுப்பதற்கென்றே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இத்தகைய நிறுவனங்கள் செயலிகளை உருவாக்குவோருக்கு செயலிகளின் பயன்பாட்டுக்குத்தக்க விளம்பர வருவாயை அளிக்கின்றனர். ஒரு லட்சம் பேர் ஒரு செயலியை பயன்படுத்தினால் விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தொகையை செயலியை உருவாக்கியவரின் வங்கிக் கணக்கில் செலுத்துகின்றன.

செயலிகள் பயன்படுத்துவோர் மிகுந்தால் அதற்கேற்ப வருவாய் அதிகரிக்கும். இன்றைய சூழ்நிலையில் சமையல், சோதிடம், ஆன்மீகம், பல்வேறு வகை குறிப்புகள், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் வல்லுனராக இருப்பவர்கள் தமது நிபுணத்துவத்தை பிறர் பயன்படுத்தும் வகையில் செயலிகளாக வெளிப்படுத்தினால் அவர்களுக்கு ஊதியம் கொட்டுவது உறுதி.

அலைபேசிகள் கைகளில் எந்நேரமும் தவழும் கருவிகளாக இருப்பது நமக்கு நன்மை. மேலும் அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய செயலிகளையும், தினசரி ஒருமுறையேனும் பயன்படுத்தப்படக்கூடிய செயலிகளையும் உருவாக்கினால் வருவாய் மிக அதிகமாக இருக்கும்.

மாறிவரும் உலகில் தொழில்நுட்பங்கள் பல புரட்சிகளை செய்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றங்களை நாம் உணர்ந்து அவற்றை அறிந்துகொண்டு நமது நன்மைக்கேற்ப பயன்படுத்துவதும்,அதன் மூலம் வருவாய் பெறுவதும் நமது கரங்களிலேயே உள்ளது. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டு தகுந்த தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று நமது அறிவை உலகறியச்செய்வோம், நன்மை பெறுவோம்.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “Android, Apple செயலிகள் மூலம் செல்வம் ஈட்டுங்கள்”

அதிகம் படித்தது