மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Aug 29, 2015

Irudhayam5தமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ → இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது. தமிழில் மீது உள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன்.

சரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதை பற்றிய கட்டுரை இது.

முதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலது மேல் அறை உடல் முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ் அறைக்கு தள்ளிவிடுகிறது. வலது கீழ் அறை அந்த இரத்தத்தை நுரையீரலுக்குள் தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு அந்த இரத்தத்துடன் கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடது மேல் அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத் தள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவையே இதய வால்வுகள்.

சொல்லப்போனால் இருதயம் என்பது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகவும் சாதாரணமான ஒரு உறுப்பு. சிக்கல் இல்லாத தெளிவான ஒரு உறுப்பு. ஆனால் திடீரென உயிரை பறித்துவிடக்கூடிய மாரடைப்பு எனும் பிரச்சனையால் அது மிகவும் பயத்துடன் பார்க்கப்படுகிறது. இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இதயத்தின் தசைகளில் உள்ள செல்களுக்கென்று (Myocytes) தனியே ஒரு சில பண்புகள் உள்ளன.

பொதுவாக இதயத்தின் தசைகள், இதழ்கள்(Valves), இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் இடத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் போன்றவற்றில்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. இருதயத்தைச் சுற்றியுள்ள உறையிலும் (Pericardium) பிரச்சனைகள் உருவாகலாம்.

இருதயத்தில் ஏன் பிரச்சனைகள் உண்டாகின்றன?

Irudhayam7கரு உற்பத்தியிலேயே உண்டாகும் மாற்றங்களால், பிறவியில் இருதய குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

உடலில் இயங்கும் பத்து வித வாயுக்களின் இயக்கங்களில் (பிரானன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தனஞ்சயன், தேவ தத்தன்) மேல்நோக்கு வாயுவான உதானன் மற்றும் பரவு வாயுவான வியானன் ஆகியவற்றின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் நம்முடைய உணவு மற்றும் செயல்களே.

இருதய பாதுகாப்பு இயலாத காரியமா?

பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர, மற்றபடி இயல்பான நிலையில் இருக்கும் அனைவருக்கும் இருதய பாதுகாப்பு என்பது மிகவும் சாதாரணமான விசயம்தான். இப்படிப்பட்ட இயல்பான நிலையில் உள்ளவர்களுக்கு ‘மாரடைப்பு’ வருகிறது என்றால், அது நாமாக இழுத்து வைத்துக் கொள்வதுதான்.

அதுவும் சித்த மருத்துவத்தில் இருதயத்தைப் பாதுகாக்கக்கூடிய நல்ல மருந்துகளும், உடற்பயிற்சிகளும் உள்ளன.

பொதுவாக மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

  1. பதற்றமில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
  2. கொழுப்பு, எண்ணெய் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
  3. புகை பிடித்தல் கூடாது.

சரி, இனி சித்த மருத்துவத்திற்கு வருவோம்.

இருதயத்தை பாதிக்கும் வாயுக்களின் செயல்பாட்டை, நாம் உண்ணும் உணவுப் பொருட்களே தீர்மானிக்கின்றன. எளிதில் செரிக்காத பொருட்கள், மாவுப்பண்டங்கள், அதிக புளிப்புச் சுவையுள்ள பொருட்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும் தன் நிலையில் மாறிய வாயுக்களின் செயல்பாட்டை சரிசெய்ய, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அவசியம்.

பேதிக்கு கொடுத்தல் என்பது ஒரு நல்ல மருத்துவ வாழ்வியல் முறை. இதனால் அதிகரித்த வாயுக்களின் செயல்பாடுகள் சமநிலை அடையும்.

இதய நோயாளிகள் மட்டுமல்லாமல், நரம்பு மண்டலம் தொடர்புடைய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் இது நல்லது.

பிரணாயாமம்:

Irudhayam4பிரணாயாமம் என்பது ஓரு குறிப்பிட்ட முறையில் செய்யப்படும் மூச்சுப்பயிற்சி. இதைத் தொடர்ந்து செய்து வருவதால் இதயத்தின் இரத்தக் குழாய்கள் மற்றும் உடல் முழுவதும் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் விறைப்புத்தன்மை மாறும். இரத்தக் குழாய்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால்தான் இரத்த ஓட்டம் இயல்பாக இருக்கும். ஆனால் இரத்த குழாய்கள் விறைப்புத் தன்மை அடைவதால் (Atherosclerosis) இருதயத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பிரணாயாமம் தொடர்ந்து செய்து வருவதால் இந்த பாதிப்பிலிருந்து இதயத்தை பாதுகாக்கலாம். பிரணாயாமம் செய்முறைகளை வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன்.

உடற்பயிற்சிகள்:

இதய நோயாளிகள் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் கீழ்கண்ட யோக ஆசனங்களை செய்து வருவது நல்லது.

Irudhayam3சவாசனம்

தண்டாசனம்

வஜ்ராசனம்

சேது பந்த சர்வாங்காசனம்

புஜங்காசனம்

தனுராசனம்

இவைகளின் செய்முறைகளையும் வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன். (சுயமாக யோகாசனம் செய்ய முயற்சிக்கக் கூடாது. சித்த மருத்துவர் அல்லது B.N.Y.S படித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று செய்யவும்)

உள் மருந்துகள்:

ஏற்கனவே நான் கூறியதைப் போல, இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளை விட வித்தியாசமானவை. இந்த தசைகளை வலிமைப் படுத்தக்கூடிய தனித்தன்மை வாய்ந்த மருந்துகள் (cardiac Tonics) உள்ளன. அவைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையால் சாப்பிட்டு வருவதால் இதயத்தை வலிமையாக்கலாம்.

மருதம் பட்டை:

Irudhayam1இதை அறிமுகப்படுத்துவதால் உடனே, “மொட்டை மாடியில் இதை வளர்க்கிறேன் பார்…” என்று கிளம்பிவிடக் கூடாது, இது பெரிய மரம். Terminalia Arjuna என்பது இதன் தாவரவியல் பெயர். இதன் பட்டையை அடிப்படையாகக் கொண்ட சூரணங்கள், மாத்திரைகள், அரிஷ்டங்கள் நிறைய உள்ளன. இவை இதயத்தை வலிமைபடுத்தக் கூடியவை.

சிருங்கி பற்பம்:

கலைமானின் கொம்பிலிருந்து செய்யப்படும் ஒரு மருந்து. இது இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது இதயத்தை பாதுகாக்கும்.

பவள பற்பம்:

இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் பாதுகாக்கக்கூடிய மற்றொரு நல்ல மருந்து இது.

தசமூலா அரிஷ்டம்:

பத்து விதமான மூலிகைகளின் மருத்துவத் தன்மையை உடைய இம்மருந்து இதயத்திற்கும், பொதுவான உடல் நலனுக்கும் ஏற்ற நல்ல மருந்து.

கஸ்தூரி:

பலவீனமான இதயத்தின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்ற தன்மை இந்த மருந்திற்கு உண்டு. இதனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள் இதய நோய்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

மேற்கண்ட மருந்துகளை ஒரு சிறிய அறிமுகத்திற்காகத்தான் கூறினேனே தவிர, எந்தவித சுய பரிசோதனையும் செய்ய வேண்டாம்.

பல ஆண்டுகளாக மூச்சிறைப்பு உள்ள வட சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்துமாவிற்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். பல ஆண்டுகள் ஆகியும் குணமாகாத நிலையில் என்னிடம் வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூச்சிறைப்பிற்கான காரணம் இதய நோய் என கணித்தேன்(Cardiac Asthma).

முற்றிலுமாக மருந்துகளை மாற்றி, இதய நோய்க்கான மருந்து கொடுத்தேன். ஒரு வாரம்தான், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு “உங்கள் வீடு எங்கே இருக்கிறது?” எனக் கேட்டார். “ஏன் வீட்டை கேட்கிறீர்கள்… என்ன விசயம்?” என்றேன். “என்ன சார் இது! பல வருடமாக மருந்து சாப்பிட்டும் கேட்காத ஆஸ்துமா, ஒரு வார மருந்திலேயே பத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது… நான் வாரா வாரம் உங்களுக்கு மீன் கொண்டு வருகிறேன் (இலவசமாக) என்றார்.

மீனெல்லாம் வேண்டாம், சுண்ணாம்பு போடுவதை (வெற்றிலை) நிறுத்திக் கொள்ளுங்கள் அது போதும் என்றேன்.

எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால் பொதுவான இதய பாதுகாப்புப் பற்றிய கட்டுரைதான் இது. மற்றபடி இருதய நோயில் நோய் கணிப்பு மிகவும் முக்கியம்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்”

அதிகம் படித்தது