அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் கோரிக்கை
சிறகு ஆசிரியர்Feb 22, 2014
பிப்ரவரி 20, 2014
அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் கோரிக்கை
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கம்.
முன்னாள் இந்திய பிரதமர் திரு.இராஜீவ்காந்தி அவர்களின் கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனைப் பெற்ற திருவாளர்கள் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்த 24 மணிநேரத்திற்குள்ளாக அவர்கள் உட்பட ஏழு பேர்களை விடுதலை செய்ய தங்களின் அமைச்சரவை ஆவன செய்து அதனை சட்டமன்றத்தில் அறிவித்தது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. தாயுள்ளத்தோடும், கருணையோடும் தாங்களெடுத்த இம்முடிவு 23 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடிய அவர்களின் வாழ்வில் புது வெளிச்சத்தை ஏற்படுத்தி உலகமெங்கும் மனிதநேயம் வேண்டுபவர்களின் மனதிலும் பேருவப்பைத் தந்திருக்கிறது.
ஆயுள் கைதிகள் பலரின் சிறைவாசத்தைவிட அதிக ஆண்டுகள் இந்த எழுவர் தனிமைச் சிறையில் வாடியிருக்கிறார்கள். மாநில அரசிற்கு இவர்களை விடுவிக்கும் உரிமையுள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்யும் தங்களின் முடிவு சரியானதும், பாராட்டத்தக்கதுமாகும். உலகத் தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் சார்பில் இதற்காக நாங்கள் வாழ்த்துகளும், நன்றிகளும் கூற கடமைப்பட்டுள்ளோம். மத்திய அரசு தமிழக அரசின் மனிதாபிமானம் மிக்க இம்முடிவிற்கு இடைக்காலத் தடை கோரியிருப்பினும் தங்களின் மீதும் தங்களின் நிர்வாக ஆளுமையின் மீதும் பெரு நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் அந்த ஏழு பேருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
பிப்ரவரி – 24 இல் பிறந்தநாள் காணும் தங்களுக்கு பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகளையும் , இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனிதநேயம் சார்ந்த தங்களின் அத்துணை முடிவுகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று இவ்வேளையில் உறுதி கூறுகிறோம்.
நன்றி!
1. Dr. இராஜாராம் கந்தசாமி
தலைவர், ITS
2. Dr. காருண்யன் அருளானந்தம்
தலைவர், USTPAC
3. திரு. க. தில்லைக்குமரன்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
thillaikumaran@gmail.com
4. திரு. சாகுல் அமீது
தலைவர், இளந்தமிழரணி
சிறகு ஆசிரியர்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் கோரிக்கை”