மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவைத் தடுக்கும் மதங்கள்!

ஆச்சாரி

Jun 7, 2014

Pooranachnadran.kஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம். ஏதோ காரணத்திற்காகக் கல்கத்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒரு நிகழ்ச்சி. வங்காள மொழி நமக்கு என்ன புரிகிறது? மதம் சார்ந்ததா, இலக்கியம் சார்ந்ததா என்று நினைவில்லை. அதற்கு பூரி சங்கராச்சாரியார் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெண்கள் சிலர் வேதப்பாடல்களைப் பாடினார்கள். வந்ததே கோபம் சங்கராச்சாரியாருக்கு! பெண்கள் எப்படி வேதத்தைப் பயிலலாம், பாடலாம் என்று மிகக் காட்டமாக உரையாற்றத் தொடங்கிவிட்டார். பெண்கள் வேதத்தைப் பயின்றதால் தான் நாடே அழிவு நிலையை எய்திவிட்டது என்றும் சொல்லிவிட்டார்.

arivai 1கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலில் ஒரு நிகழ்ச்சி. ஆழ்வார்க்கடியான் என்று ஒரு வைணவன். (வைணவர்கள், முஸ்லிம்களைப் போலவே “மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்று பெயர்பெற்றவர்கள்.) அவன் திருவானைக்கா சிவன் கோயில் மதிலோரம் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு செங்கல் துண்டு அவன் தலையில் விழுந்து அடிபடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு காக்கை அதை மதில்மேலிருந்து தள்ளியிருக்கிறது. உடனே அவன், “ஓ ஸ்ரீவைஷ்ணவக் காக்கையே, சிவன் கோயில் மதிலை இடித்துத் தள்ளுகிறாயா? செய்” என்று அதைப் பாராட்டுகிறான். மதம் மனிதனை வாழ்விக்க வந்தது, மனிதனுக்கு வழிகாட்ட வந்தது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் வரலாற்றில் மத அடிப்படையிலான போர்கள் மட்டுமல்ல, தடைகளும், ஒடுக்குதல்களும் ஏராளம், ஏராளம். மதங்கள் அறிவை முக்கியமாகத் தடைசெய்யும் சக்திகளாக உள்ளன. இதற்குப் பிரமாதமான உதாரணங்கள் தேவையில்லை. நம் இந்தியாவிலேயே, முன் கூறிய உதாரணப்படி, வேதங்கள் பிராமணர்கள் மட்டுமே படிப்பதற்குரியவை, பெண்களும், பிற சாதியினரும் அவற்றைப் படிக்கலாகாது என்ற தடை இருந்தது. (இன்னும் இருக்கிறது!)

பழங்காலத்தில் கிறித்துவ மதத்தில் மதக்கொள்கைகளை மீறியவர்களாகக் கருதப்பட்டவர்களை மதவிசாரணைக்கு (இன்க்விசிஷன்) உட்படுத்தி அவர்களை கம்பத்தில் கட்டி உயிரோடு எரித்தார்கள். (Burning at stake). அதை நினைவூட்டும் விதமாக 1986இல் டெஹ்ரானிலிருந்து வெளியிடப்பட்ட ஃபத்வா (பார்த்த இடத்தில் தலையை வெட்டும் ஆணை), உலகத்தையே அதிர்ச்சியுறச் செய்தது. சல்மான் ருஷ்தீ எழுதிய சாத்தானின் செய்யுள்கள் என்ற நாவலுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அது. இருபதாம் நூற்றாண்டிலும் காட்டுமிரண்டித்தனமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றும் நம் நாட்டிலும், “இந்தத் திரைப்படத்தைத் தடை செய்”, “இந்த நூலைத் தடைசெய்” என்று மதவாதிகள் மத்திய, மாநில அரசாங்கங்களை அவ்வப்போது எதிர்த்துப் போராடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மத அடிப்படைவாதிகள் என்றைக்குத் தான், எங்கேதான் இல்லை?

இவ்வாறு தடைசெய்பவர்களும், தடைசெய்ய வேண்டுபவர்களும், மற்றவர்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். அல்லது தங்கள் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்றோ, மற்றவர்கள் தங்களை எதுவும் செய்யக்கூடாது என்றோ பயப்படுகிறார்கள்.

arivai 7கிறித்துவ அடிப்படைவாதத்தின் வரலாறு கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எபீசஸ் கவுன்சில் என்ற அமைப்பு, மூடநம்பிக்கைக்குரிய நூல்கள் என்று கருதியதையும், புனித பவுலின் வரலாற்றையும் (Acta Pauli) தடைசெய்தது. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் போப் ஆண்டவர், முதன்முதலாகத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலை வெளியிட்டார். கி.பி.1450இல் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு, அதிகாரபூர்வமற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் மதநூல்களும் பெருகிய காரணத்தால், திருச்சபையின் தடைசெய்யும் பணியும் அதிகமாகியது. கி.பி.1559இல் போப் நான்காம் பவுல், Index Liborum prohibitorum (தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல்) என்பதை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் போன்று அந்தந்த நாடுகளும் தங்கள் தடைப்பட்டியல்களை வெளியிட்டன. பதினாறாம் நூற்றாண்டு முதலாக சீர்திருத்தக் கிறித்துவம் பரவத் தொடங்கிய நிலையில், அவர்கள் கத்தோலிக்க நூல்களைத் தடைசெய்தார்கள்.

பழங்காலத்திலிருந்தே மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பிணைந்தவை. அந்தந்த அரசாங்கம் கடைப்பிடித்த மதத்தில் நம்பிக்கையற்றவன், நாட்டிற்கும் சதிகாரன், எதிரி என்று கருதப்பட்டான். தமிழ்நாட்டில் கூட, மதச் சண்டைகளின் எதிரொலிகளைப் பார்க்கிறோம். சமணர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் அறிவுசார் மதம் சார்ந்தவர்கள். பக்தி விசுவாசம் போன்றவை அவர்களுக்குக் கிடையாது. பக்தி சார்ந்த சைவம், வைணவ மதங்கள் இந்த மதங்களை எதிர்த்து அவற்றை வேரறுத்ததையும் காண்கிறோம். வைணவர்கள் தங்கள் நிறுவனங்களில் சைவநூல்களை அனுமதித்ததில்லை. சைவர்கள் தங்கள் மடங்களில் வைணவ நூல்களை வைத்ததில்லை. இருவருமே புறச்சமய (சமண, பௌத்த) நூல்களைத் தங்கள் நூல்களில் சேர்த்ததில்லை. இப்படியே மதப்போரில் தமிழ் நூல்கள் பெரும்பாலானவை ஒழிந்தன.

தமிழ்நாட்டில் ஏறத்தாழப் பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பு வழங்கிய பலவேறு மதங்களின் கொள்கைகளின் பெரும்பகுதியை நீலகேசி என்ற சமணநூல் (குறிப்பாக வாமனர் எழுதிய அதன் உரை) கொண்டுதான் அறிந்து கொள்ள முடிகிறது. உலகாயதம் உட்படப் பலவேறு மதங்களின் கொள்கைகளை அது குறிப்பிட்டு அதற்கு எதிர்வாதங்களை நீலகேசி என்ற பெண்துறவியின் வாயிலாக முன்வைக்கிறது. அது குறிப்பிடும் அநேக நூல்கள் அழிந்து போனவை, இனி கண்டுபிடித்து அச்சிட இயலாதவை.

பதினெட்டாம் நூற்றாண்டளவில், ஐரோப்பாவில் தொடர்புச் சாதனங்கள் பெருகிய நிலையில் வெளியில் புலப்படா (அண்டர்கிரவுண்ட்) நூல்களின் பதிப்புகளும் பெருகின. அவற்றில்தான் நவீனக் கருத்துகளும் வெளியிடப்பட்டன. எனவே, (அந்தக் காலத்தில்) “அண்டர்கிரவுண்ட் நூல்களை படிக்காதவர்கள்-அரசாங்கத்தின் ஒப்புதல்பெற்ற நூல்களை மட்டுமே படித்தவர்கள்-அறிவில் ஒரு நூற்றாண்டு பின்தங்கியவர்கள்” என்று நூலாசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

திருச்சபை 1559இல் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல், நான்கு நூற்றாண்டுகள் கழித்து 1966இல் நீக்கப்பட்டது. அதற்குள் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக, கத்தோலிக்கத் திருச்சபைக்கு அத்தடையை நிலைநிறுத்தும் வலிமையும் வசதியும் இல்லை, அந்த நூல்களில் பலவும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் ஆயின. ஆனால் அப்பட்டியல் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்தது என்பதில் ஐயமில்லை. கத்தோலிக்கத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களில், கார்ல் மார்க்ஸின் நூல்கள் மட்டுமல்ல, பெந்த்தாம், பெர்க்சன், காம்டி, டீஃபோ, டே கார்ட்டே, டிடரோ, ஃப்ளாபேர், கிப்பன், ஹாப்ஸ், ஹ்யூம், காண்ட், ஜான் லாக், மொண்டேய்ன், மில், மாண்டெஸ்க்யூ, பாஸ்கல், ரூஸோ, சேண்ட், ஸ்பினோசா, ஸ்டெந்தால், வால்டேர், ஜோலா போன்ற அறிஞர்களின் நூல்களும் அடக்கம். (இவர்களில் பெரும் பாலோர் தத்துவ அறிஞர்கள், பலர் அரசியல் அறிஞர்கள், இலக்கியவாதிகள்).

arivai 3அமெரிக்காவில்கூட, அந்தந்த மாநிலங்கள் தங்கள் தங்கள் தடைக் கொள்கைகளைப் பின்பற்றித்தான் வந்திருக்கின்றன. பொதுவாக அமெரிக்க அரசியலமைப்பு மத அடிப்படையில் நூல்களைத் தடைசெய்வது கூடாது என்று சொல்கிறது. மிகவும் புகழ்பெற்ற ரௌலிங் எழுதிய ஹேரி பாட்டர் நூல்கள்கூட இன்றும் சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ரோல்டு டால் எழுதிய தி விட்சஸ் போன்ற நூல்களும். இவற்றைத் தடைசெய்யக் காரணம், இவை மதத்திற்குப் புறம்பான சூனியக்காரர்கள், மந்திரவாதிகள், அவர்களின் செயல்முறைகள் பற்றிப் பேசுகின்றன.

நம் நாட்டிலும் தஸ்லிமா நஸ்ரின் தலையை வாங்கவேண்டுமென்ற வேண்டுகோள் முஸ்லிம்களால் எழுப்பப்பட்டது. இவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டதுபோல, வங்காள தேசத்தில், அது சுதந்திரம் பெற்ற பிறகு, ஆயிரக்கணக்கான இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டதையும், இந்துக் குடும்பங்கள் பாதுகாப்பற்று அழிவுக்குள்ளானதையும் அவர் தமது லஜ்ஜா என்ற நாவலில் சுட்டிக்காட்டியிருந்தார். நாடு கடத்தப்பட்ட அவர் ஸ்வீடனுக்குச் சென்றார். இப்போது மேற்குவங்க மாநிலம் அவரை அனுமதிக்காததால் தில்லிக்குள் வாழ்கிறார் என்று நினைக்கிறேன். இதேபோல ஈரானியப் பெண் நாவலாசிரியர் ஷார்னுஷ் பார்சிபூர் பலமுறை சிறையிடப்பட்டார், மிரட்டப்பட்டார், கடைசியில் நாட்டைவிட்டே வெளியேறினார்.

1979இல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி தோன்றியபிறகு, ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகைக்காரர்கள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 1990 களில், எகிப்திய நாவலாசிரியர் ஃபராக் ஃபவுதா, அல்ஜீரிய நாவலாசியரும் பத்திரிகையாளருமான தாஹர் ஜௌத் ஆகியோர் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். 1994இல் எகிப்திய எழுத்தாளர் நக்வீப் மகபூஸ் (நோபல் பரிசு பெற்றவர்) கத்தியால் குத்தப்பட்டு மிகமோசமாக பாதிக்கப்பட்டார். எகிப்திய நாவலாசிரியர் அலா ஹமீத் மதத்திற்கு எதிரானவர் என்று சிறையிடப்பட் டார். எகிப்தின் நவால் எல் சாத்வி, மொராக்கோவின் ஃபாதிமா மெர்னீசி போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண்களை ஒடுக்கும் இஸ்லாமியக் கொள்கைகளைக் கேள்விகேட்டதால் அரசாங்கத்தின் கோபத்திற்கும் அடிப்படைவாதிகளின் கோபத்திற்கும் ஆளானார்கள்.

2005இல் ஈரானில் மட்டுமல்ல, லெபனான், பாகிஸ்தான், எகிப்து, இந்தியாவின் சில மாநிலங்கள் போன்றவற்றில் டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் போன்ற பெருவிற்பனை நூல்களும் தடைசெய்யப்பட்டன. 2007-2008இல் புல்மன் எழுதிய அதீதகற்பனை முக்கதை (ஃபேண்டஸி டிரைலஜி) கிளாஸ் காம்பஸ், சடில் நைஃப், ஆம்பர் ஸ்பைகிளாஸ் ஆகியவையும் தடை செய்யப்பட்டன. இத்தனைக்கும் இவை அனைத்தும் இலக்கியப் பரிசுகள் பெற்றவை.

arivai 4இங்கு உதாரணமாகச் சொல்லப்பட்டவை யாவும், பற்பல நூற்றாண்டுகளாக, உலக முழுவதும் மதங்களால் நிகழ்ந்துவரும் அறிவுத்தடையை எடுத்துக் காட்டுவதற்குத்தான், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை என்ற அளவில் மட்டுமே. காலங்காலமாகத் தடைசெய்யப்பட்டுக் கிடைக்காமல் போனவற்றில் தத்துவ நூல்கள், அரசியல் நூல்கள், நாவல்கள் போன்ற எத்தனையோ. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்கள் கூடத் தடைக்குள்ளாயின என்பது வியப்புதான்.

arivai 5தடை செய்யப்பட்டவற்றில் அறிவியல் நூல்களும் அடக்கம் என்பது வேடிக்கையானது. உதாரணமாக, கெப்லர் போன்றவர்களின் வானியல் நூல்கள் தடைக்குள்ளாயின. கியோர்தானோ புரூனோ என்ற வானியல் அறிஞர் உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார். கலீலியோ கலீலி (தொலைநோக்கியைக் கண்டுபிடித்த இத்தாலிய விஞ்ஞானி) உலகம் உருண்டை என்று கூறியதால் அவர் நூல்கள் தடைசெய்யப்பட்டன. அவர் போப்பாண்டவரிடம் தாம் எழுதியவை அனைத்தும் தவறு என்று மன்னிப்புக் கேட்குமாறு ஆணையிடப்பட்டது. (இத்தனைக்கும் போப்பாண்டவர், அவருடைய இளமை நண்பர். அதனால்தான் இவ்வளவு குறைந்த தண்டனை!) கலீலியோ தாம் எழுதிய அறிவியல் கருத்துகள் அத்தனையும் தவறானவை, மதத்திற்கு மாறானவை என்று மன்னிப்புக் கேட்டபிறகு, உடனே தமது கூண்டுக்கு அருகிலிருந்த நண்பரிடம் இரகசியமான குரலில், “ஆனால் அவைதான் உண்மை!” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே எல்லா மதங்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

மதவரலாற்றாசிரியர் டேவிட் கிறிஸ்தியன் மரே என்பவர், “ஒரு கையடக்க எண்ணிக்கையிலானவர்கள், மிகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை எதிர்த்து அவர்களை தண்டனைக்குள்ளாக்கியதைத்தான் மதத்தின் வரலாறு காட்டுகிறது” என்று சொல்கிறார். (நம் நாட்டுத் திரைப்படத் தணிக்கைக்கும் முற்றிலும் பொருந்தும் கூற்று இது. இது பற்றித் தனியே எழுதவேண்டும்.) இவ்விதம் நோக்கும்போது எவ்வளவு எவ்வளவு அறிவுச் செல்வங்கள் சிலரால் தடைசெய்யப்பட்டு உலகிற்குக் கிடைக்காமல் போயிருக்கின்றன என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது.

லெவி என்ற அறிஞர் குறிப்பிடுவதுபோல, “காலம் இந்த நீதிபதிகளின் நீதியைக் கேலி செய்கிறது, மக்களின் நுண்ணுணர்வை மாற்றுகிறது.” ஏரிக்கரையின் சிறிய அரிப்பிலிருந்து சிறிய தாரையாக வெளிவரத் தொடங்கிய நீர் பின்னர் பெரிய ஆறாகவே மாறிவிடுவதைப்போல, சொற்களும் சிந்தனைகளும் தணிக்கைகளையும் மீறி உலகெங்கும் பரவுகின்றன.

arivai 6ருஷ்தீயின் நூலின் தடையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது மொராக்கோ பெண் எழுத்தாளர் நாடியா தாஜி கூறினார்: “புத்தகத்தை யாரும் கொல்ல முடியாது. அது தன்னிச்சையாக வாழ்கிறது, மறைகிறது.” நூல்களிலிருந்து குரல்கள் தப்பித்து அபாய வழிகளிலும் செல்கின்றன. மோதல்கள், மாறுதல்கள், மீறல்கள், கலகங்கள் கருத்துகளில் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. கருத்துகள் காலத்தால் மாறுதல்களுக்குட்படலாம், அவை அழிவதில்லை.

Youll be asked to read a variety of texts chapters of scientific textbooks, sets of mathematical http://www.writemyessay4me.org/ problems, stories, plays, poems, novels, essays, and all sorts of articles

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவைத் தடுக்கும் மதங்கள்!”

அதிகம் படித்தது