ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-4
ஆச்சாரிMar 29, 2014
சித்தமருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது.
இனிப்பு – மண்ணும் நீரும்
துவர்ப்பு – மண்ணும் காற்றும்
கசப்பு – காற்றும் ஆகாயமும்
புளிப்பு – மண்ணும் தீயும்
உப்பு – நீரும் தீயும்
காரம் – காற்றும் தீயும்
என்ற வகையில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே இனிப்பு சாப்பிடும் பொழுது கபம், கசப்புடன் வாதமும், தீயுடன் பித்தமும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. கலோரி என்ற ஒரு உணவின் சத்து அளவு இன்றைக்கு வெகுவாகப் பேசப்படுகிறது. இந்த அளவுடன் கூட சித்த மருத்துவம் ஒவ்வொரு உணவுப் பொருளில் உள்ள நிறமூட்டி (Colour), மணமூட்டி (Flavour), சுவையூட்டி(Smell or taste) இவைகளைக் கொண்டே உணவின் உபயோகத்தையும் கலோரியையும் நிர்ணயிக்கிறது.
இந்த வகையில் சிறுதானியங்கள்(Minor Millets) என்று சொல்லப்படும் வகைகளை நாம் ஒதுக்கியே வைத்து இருந்தோம். அவை ஏழைகளின் உணவு, சமைக்கும் முறை கடினமானது. இதை சாப்பிடுவது மேல்தட்டு மக்களுக்கு உகந்தது இல்லை என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் இன்றைய மாசு நிறைந்த சூழலில் இந்த வகை சிறுதானிய உணவுகள்தான் நம்மை காப்பாற்றும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டுவிட்டோம்.
சிறுதானியங்கள் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பு – Pearl millet
வரகு – Kodo Millet
தினை – Fox millet
ராகி – Finger Millet
சோளம் – Jovar Millet
சாமை – Little Milliet
குதிரைவாலி – Banyard Millet
இவற்றின் குணங்களாக சித்தமருத்துவம் கூறுவது.
ராகி – வயிற்று உபாதை (Abdominal Pain), வாதபித்தத்தை சரிசெய்யும்.
கம்பு – உடலின் உள் கொதிப்பை அகற்றி வலுவைக் கொடுக்கும்.
தினை- புரதமும், சுண்ணாம்பும் பெருமளவில் உள்ள தானியம். கபம், குளிர் காய்ச்சலைப் போக்கக் கூடியது, எலும்பு தேய்மானத்தை குறைக்கும், எலும்புமுறிவு (Fracture) குணமாவதை துரிதப்படுத்தும்.
சாமை – ஆயுர்வேதத்தில் சாமை ராசதான்யம் என்று சொல்லப்படுகிறது. வாதம், காய்ச்சல்(Fever) சமனப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
சோளம் – சோறாகவும், உப்புமா, பொங்கல் போன்றவை செய்ய உகந்தது. உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு சிறந்த தானியம்.
வரகு – சர்க்கரைவியாதி (diabetic) உள்ளவர்களின் நண்பன் இந்த வரகாகும். கபத்தையும் கட்டுப்படுத்தும் அதிக அளவில் நார்ச்சத்து (fibre) நிறைந்த பொருள் இது.
குதிரைவாலி – அடிப்படையில் சாமையைப் போன்ற தானியம் இது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாமையின் குணங்கள்தான் இந்த தானியத்திற்கும். இவை அனைத்தும் வறண்ட தண்ணீர் குறைவான பிரதேசங்களில் எளிதில் பயிடக்கூடிய தானியவகைகள் ஆகும்.
வரும் இதழ்களில் இவற்றில் செய்யப்படும் உணவுமுறைகளைக் காணலாம்.
- தொடரும்
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-4”