இந்தியாவின் தேவை மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி
ஆச்சாரிNov 1, 2013
கடந்த சில மாதங்களாக இந்தியப் பத்திரிகைகள் புதிதாக ஒரு விளையாட்டைத் தொடக்கி இருக்கின்றன. அது ராகுல் காந்தி – மோடி குத்துச் சண்டையை நாள் முழுவதும் ஒளிபரப்புவது. இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு இதில் யாராவது ஒருவர் பிரதமராக வந்தால் இந்தியா அடுத்த நாளே வல்லரசாகி விடும் என்றும் இன்னொருவர் வந்தால் இந்தியா அப்படியே முழுகிக் கடலுக்குள் போய் விடும் என்றும் தோன்றும். பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஊடகங்கள் ஏன் இந்த வேலையை செய்கின்றன?.
இந்த ஊடகங்களின் அவரசத்தின் பிண்ணனியில் ஒரு காரணம் இருக்கிறது. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவின் இயல்பு நிலைக்கேற்ப இந்தியாவின் அரசியல் இன்று மாநில அளவில் நடைபெற ஆரம்பித்து இருக்கிறது.
இந்த நிலை ஒன்றும் திடீரென வந்து விடவில்லை. கடந்த அறுபது வருடங்களாக மத்தியில் ஆண்ட கட்சிகள் மாநில மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் அவர்களைப் புழுக்களைப் போல நடத்தியதன் விளைவு இன்று மாநில மக்களின் தேவைகளுக்காக போராடும் மாநிலக் கட்சிகள் தோன்றி நிலைபெற்று விட்டன.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களை கொலை செய்யவில்லை என்றால் இன்று தமிழகத்தில் தி.மு.க கட்சியும் அ.தி.மு.க கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டு இருக்காது. இன்றும் ஈழப் போராட்டத்தில் தமிழகத்தின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் இருந்ததும் , சொந்த நாட்டின் மீனவர்களை பக்கத்து நாட்டு ராணுவம் கொல்லும் போது அந்த நாட்டுக்கு வக்காலத்து வாங்குவதும் இந்தியாவின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் தான்.
இந்தியாவின் வளங்களைப் கூறு போட்டுக் கொள்ளையடிக்கும் இந்தியப் பெருமுதலாளிகளும், சில பத்திரிக்கையாளர்களும் அடிக்கடி காணும் கனவு, இந்தியாவில் அமெரிக்காவில் இருப்பது போன்ற இரு கட்சி முறை இருக்க வேண்டும் என்பது. இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது இல்லை மற்றும் நாட்டில் ஊழல் பெருகுவதற்கு மாநிலக் கட்சிகளே காரணம் என்பது போன்ற மிகப் பெரும் பொய்கள் இவர்களால் அடிக்கடி சொல்லப்படுகின்றன.
இது உண்மையா என ஆராயலாம். ஊழலை எடுத்துக் கொண்டால் உலக வரலாற்றிலேயே அதிகமான ஊழல் செய்த கட்சி என்ற பெயரை எடுத்திருப்பது காங்கிரஸ் கட்சி தான். அடுத்த பெரிய கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியோ கர்நாடகாவில் ஊழலில் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களுடன் ஒப்பிட்டால் மாநிலக் கட்சிகள் செய்யும் ஊழல் ஒன்றுமே இல்லை. இப்படி மாநிலக் கட்சிகள் ஊழல் செய்யும் போது தவறு செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தது இல்லை.
மாறாக அவர்கள் செய்த ஊழல்களைப் பயன்படுத்தி மிரட்டி அவர்கள் சார்ந்த மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சார்பான சட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது. அதனால் இந்த இரு கட்சிகளில் ஒன்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழியும் என்பது கட்டுக் கதை.
இரு கட்சி ஆட்சி முறை நன்றாக நடக்கிறது என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டாகக் காட்டும் அமெரிக்க நாட்டில் உள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் மொத்த அரசாங்கத்தையும் இரண்டு வார காலமாக முடக்கி இருந்தது, இவர்கள் கூற்று எந்த அளவுக்கு கேலிக்குரியது என்பதைக் காட்டுக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் என்பது இந்த இரண்டு கட்சிகளுக்கும் அடிமை என்பதும், இந்த இரண்டு கட்சிகளும் பெரு நிறுவனங்களுக்கு அடிமை என்பதும் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் தெரியும்.
அதே நேரம் ஜனநாயகம் மிக நன்றாக நடைபெறும் ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும், இன்னும் பல நாடுகளிலும் பல கட்சிகள் கூட்டணி வைத்து தான் எப்போதும் அரசமைக்கின்றன என்பதையும், இந்த நாடுகளின் ஜனநாயகம் இரு கட்சி ஆட்சி நடக்கும் அமெரிக்காவை விட மிக நன்றாக நடக்கிறது என்பதையும் பத்திரிக்கையாளர்கள் பலர் மிக வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இனி வரும் காலங்களில் இந்தியாவின் தேசிய அரசு என்பது மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சியாக அமைவது தான் இயல்பானதாக இருக்கும். இன்று உண்மையில் இந்தியாவில் தேசியக் கட்சி என்பதே கிடையாது. எந்தக் கூட்டணியும் இல்லாமல் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் நின்றால் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் தலா நூறு தொகுதிகள் கூட பிடிக்க முடியாது. எந்த அடிப்படையில் இந்தக் கட்சிகளை நாம் தேசியக் கட்சிகள் என அழைக்க முடியும் ?
இந்திய மக்கள் இந்த நிலையை உணர வேண்டும். தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பது நிலையான ஆட்சியைத் தரும் போன்ற வாதங்களின் போலித்தன்மையை உணர்ந்து மாநிலக் கட்சிகளின் நிலையைப் பலப்படுத்துவது, மாநிலக் கட்சிகளுக்கு இடையே ஒரு பொதுவான புரிந்துணர்வை ஏற்படுத்துவது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் நிரந்தரமான அரசியல் நிலைத்தன்மை ஏற்படுவதற்கு இது ஒன்று தான் வழி.
2014 மாநிலக் கட்சிகளின் ஆண்டாக அமையட்டும். தேசிய இனங்களின் உரிமைக்குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் தேவை மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி”