மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 6 – சிறுகதையின் கூறுகள்-கருப்பொருள் (தீம்)

ஆச்சாரி

Nov 1, 2012

ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ட இரண்டு துணுக்குகள்:

*****

“அப்பா, அடுத்தவீட்டு மாமா ஒவ்வொருநாள் காலையிலும் வேலைக்குப் புறப்படும்போது மாமிக்கு முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறார். நீங்கள் ஏன் அப்படிச் செய்வதில்லை?”

“சின்னக்குட்டி, அந்த மாமியை எனக்குத் தெரியாதே”.

*****

“மகளே, உன் கணவர் எப்போதும் இரவில் தாமதமாகக் கண்டநேரத்தில் வீட்டுக்கு வருகிறாரே, உன் அம்மா இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?”

“சொன்னாளே அப்பா. இந்த ஆண்கள் எத்தனை காலம் ஆனாலும் மாறுவதேயில்லை என்றாள்”.

*****

மேற்கண்ட இரு துணுக்குகளையும் யோசித்துப் பார்க்கும்போது ஒரு முக்கியமான வேறுபாடு தென்படலாம். முதல் துணுக்கு, ஓர் எதிர்பார்ப்பின் கவிழ்ப்பில் நிகழ்கிறது. முதல் துணுக்கில் வரும் மனிதன் தன் மனைவிக்கு ஏன் முத்தமளித்துவிட்டுப் போகவில்லை என்ற விளக்கத்தை நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவனோ அடுத்த வீட்டான் மனைவிக்கு ஏன் முத்தம் தரவில்லை என்பதைச் சொல்கிறான். இரண்டாவது துணுக்கும் ஓர் எதிர்பார்ப்பின் தலைகீழாக்கலில் எழுவதுதான். ஆனால் வாழ்க்கையின் ஓர் உண்மை அதில் வெளிப்படுகிறது. ஆண்கள் வயதாக வயதாகப் பழமை மனப்பான்மைக்கு மாறுகிறார்கள் என்ற விஷயத்தை அது சொல்லவருவதாக நினைக்க இடமிருக்கிறது. அல்லது, தந்தைமார்கள் தாங்கள் இளமையில் எதைச் செய்தார்களோ அதை அடுத்த தலைமுறை இளைஞர்கள் செய்யும்போது குறைகாண்கிறார்கள் என்றும் சொல்லலாம். இப்படி வெவ்வேறு வார்த்தை களில் சொல்லக்கூடிய இந்தக் கருத்து இருக்கிறதே, இதுதான் இரண்டாவது துணுக்கின் கரு.

ஒரு கதையின் மையச்சிந்தனை அல்லது நம்பிக்கையை கதைக்கரு(ப்பொருள்) என்கிறோம். கதையில் வெளிப்படுத்தப்படும் அல்லது குறிப்பாக உணர்த்தப்படும் வாழ்க்கை பற்றிய பொதுமைப்படுத்தல் அது. கதாசிரியர் முன்வைக்க முயலுகின்ற கதையின் அர்த்தம் அதுதான். ஒரு கதையின் கதைக்கருவைக் கண்டுபிடிப்பதற்கு, கதையின் மையநோக்கம் என்ன என்று கேட்கவேண்டும். அது ஆதரிக்கின்ற வாழ்க்கை நோக்கம் என்ன? அல்லது அது வெளிப்படுத்தும் வாழ்க்கைபற்றிய பார்வை என்ன?

ஒரு குறித்த தலைப்பு பற்றிய எழுத்தாளரின் சிந்தனையாகவோ அல்லது பொதுவாக மனித இயல்பு பற்றிய பார்வையாகவோ கதைக்கரு இருக்கலாம். சிறுகதையின் தலைப்பு பெரும்பாலும் கதாசிரியரின் சிந்தனையைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. தலைப்பே அல்லாமல், அவர் வேறுவிதமான கருவிகளையும்-குறியீடு, மேற்சுட்டு (அல்யூஷன்), உவமை, உருவகம், உயர்வுநவிற்சி, குறிப்புமுரண் (ஐரனி) போன்ற பலவற்றையும் கதைக்கருவை உணர்த்தக் கையாளலாம்.

‘நமக்குத் தோற்றமளிக்கும் விதமாகவே விஷயங்கள் எப்போதும் இருப்பதில்லை’, ‘காதலுக்குக் கண்ணில்லை’,  ‘உன்னால் முடியும் தம்பி’. ‘தன் கையே தனக்குதவி’, ‘மாற்றத் தைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள்’, ‘தோற்றத்தை வைத்து எவரையும் எடைபோடாதே’ போன்றவை கதையில் வழக்கமாகக் கையாளப்படும் கருப்பொருள்களில் சில. இவை ஸ்டாக் அல்லது மாறாக் கருப்பொருள்கள்.

எல்லாக் கதைகளுக்கும் கரு இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு திகில் கதையின் நோக்கம் வெறுமனே வாசகர்களுக்கு அச்சுறுத்தல் தருவதாகவே இருக்கலாம். ஒரு சாகசக் கதையின் நோக்கம் பலவித வீரச்செயல்களுக்கிடையில் வாசகரை அழைத்துச் செல்வதாகவே இருக்கக்கூடும். ஒரு குற்றக் கதையின் நோக்கம், ஒரு மர்ம முடிச்சினை வாசகர்களை அவிழ்க்க வைப்பது-அல்லது கடைசிப் பாரா வரை அவிழ்க்கமுடியாமல் செய்வது என்பதாகவே இருக்கலாம். சில கதைகள், வெறுமனே ஒரு சஸ்பென்ஸை அளித்து, கதையின் இறுதியில் அதை வெளிப்படுத்தி வாசகரை வியப்படையவோ, சிரிக்கவோ வைக்கலாம். வாழ்க்கையை நுணுக்கமாகப் பதிவு செய்ய ஓர் ஆசிரியர் முயற்சிசெய்து, ஏதோ ஓர் உண்மையைச் சொல்ல வேண்டுமென்று நினைக்கும்போதுதான் கருப்பொருள் என்பது தோன்றுகிறது. வாழ்க்கையைப் பற்றிய ஓர் எந்திரத்தனமான கருத்தை விளக்குவதற்காகவே கதை எழுதும்போதும் அது தலைகாட்டுகிறது. வாழ்க்கைவிளக்கக் கதைகளில்தான் கதைக்கரு உண்டு. தப்பிப்புக்கதைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் அது கதையை மாட்டிவைப்பதற்கான ஓர் ஆணியாகவே பயன்படுகிறது.

பல கதைகளில், கதாபாத்திரத்திற்குக் கிடைக்கும் வாழ்க்கை பற்றிய வெளிச்சமே கதைக்கரு ஆகிறது. குறித்த நபர்களைக் குறித்த சூழலில் கதை சித்திரித்துக் காட்டும்போது எல்லா மனிதர்களின் பொது இயல்பு பற்றிய ஒரு பார்வைக்கோ, மனிதர்களுக்கிடையிலான உறவுநிலை பற்றிய ஒரு கருத்துக்கோ, அவர்களுக்கும் பிரபஞ்சத்திற்குமான தொடர்பு பற்றிய ஒரு பொதுமைப்படுத்தலுக்கோ நாம் வரஇயலும்.

கதைக்கருவையும் கதைப்பின்னல் போன்றே சுருக்கமாகவோ பெரியதாகவோ கூறலாம் என்றாலும் பெரும்பாலும் சிறுகதைகளின் கருப்பொருளைக் கூற ஒரு வாக்கியம் போதுமானது. பெரிய கதைகளின் கருப்பொருளைக்கூட ஒரு வாக்கியத்தில் சுருக்கிக் கூறலாம். சிலசமயங்களில் ஒரு பாரா அளவிலும் சொல்லலாம்; மிக அபூர்வமாக ஒரு கட்டுரையும் தேவைப்படலாம். ஒரு வளமான கதை, பல சிக்கலான உள்நோக்குகளையும் அளிக்கவல்லது. அதன் மையநோக்கினை நாம் தேர்ந்தெடுத்து ஒரு வாக்கிய அளவில் வெளிப்படுத்தவேண்டும். அது கதையின் கூறுகள் அனைத்தையும் தழுவியதாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், கதைக்கு ஒருமையை அளிப்பது அதன் கதைக்கருதான். சில சமயங்களில் அதற்கு ஒரு வாக்கியக்கூற்று போதாது என்று உணர்கிறோம். தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் கதையின் கருப்பொருளை “வயது வேறுபாடு இன்றி, உடலின்பம் சார்ந்ததே வாழ்க்கை” என்று கூடப் பார்க்கமுடியும். ஆனால் அதில் ஒரு போதாமை உணர்வு ஏற்படுகிறது. கதையின் ஆழத்தை அது வெளிப்படுத்துமாறு அமையவில்லை என்று நினைக்கிறோம்.

ஆனால் ஓர் ஒற்றைவரி அருவக்கூற்றினைப் பெறுவதுதான் சிறுகதையின் பயன் என்று ஒருபோதும் கருதலாகாது. அப்படியானால் அந்தக் கூற்றை மட்டுமே சொல்லிவிட்டுப் போய்விடலாமே-கதை என்ற ஒன்றே தேவையில்லையே? கதையின் நோக்கம், புத்திக்குத் தீனி அளிப்பதல்ல-உணர்ச்சிகளுக்கு, அனுபவத்திற்கு, கற்பனைக்கு, புலன்களுக்கு விருந்தளிப்பதுதான்.

சிலசமயங்களில் கதையின் கருப்பொருள், ஆசிரியராலோ, கதாபாத்திரங்களில் ஒருவராலோ கதையின் போக்கிலே நேரடியாகவே சொல்லப்பட்டுவிடுகிறது. பலசமயங்களில்  கதையின் உட்குறிப்பாக அது இருக்கிறது. கதாசிரியர்கள், கதைக்கு ஆசிரியர்கள்தான். அவர்கள் தத்துவஞானிகளோ, கட்டுரையாளர்களோ அல்ல. அவர்களுடைய வேலை வாழ்க்கையை வெளிப்படுத்துவதே அன்றி அதைப்பற்றி விளக்கம் உரைப்பதோ. கதையின் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுவதோ அல்ல. கதையின் கருப்பொருளைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினால் அன்றி, அது நன்றாக வெளிப்படும் என்ற நம்பிக்கை சில ஆசிரியர்களுக்கு வருவதில்லை. இதனால் ஜெயகாந்தன் போன்றவர்கள் தங்கள் கதைப் பொருள்களைத் தாங்களே வெளிப்படுத்துவதையும் காண்கிறோம். ஆனால் அவ்விதம் வெளிப்படுத்துவது, நகைச்சுவைத் துணுக்குகளைச் சிலர் விளக்கமுற்பட்டு அதைப் பாழாக்கு வது போல ஆகிவிடுகிறது. எனவே பல ஆசிரியர்கள் கருப்பொருளை உட்குறிப்பாக விட்டுவிடுவதே வழக்கமாக இருக்கிறது.

பழங்கால நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள் போன்றவை ஒரு கருப்பொருளை அல்லது நீதியை மனத்தில் வைத்துக்கொண்டு அதை விளக்குவதற்காக எழுதப்பட்டவை. சிறுகதைகள் அவ்வாறல்ல. சிறுகதைகள், மனித வாழ்க்கையின் ஒரு பகுதியை உயிரூட்டிக்காட்டுவதற்காக எழுதப்படுபவை. தேடலுடனும், முரண்பாடின்றியும் அவ்விதம் செய்யும்போது கருப்பொருள் தானாகவே எழுகிறது.

வாசகர்கள் சிலர்-குறிப்பாக மாணவர்கள்-தாங்கள் வாசிக்கும் எல்லாவற்றிலும் ஒரு நீதியைத் தேடுவது வழக்கமாக இருக்கிறது. கருப்பொருள் என்றால் நீதி, அறம் உணர்த்தல் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். சிலசமயங்களில் சிறுகதைகள் நீதி போதனை செய்வதாகவும் அமையக்கூடும். ஆனால் நல்ல சிறுகதைகள் அளிக்கின்ற வெளிச்சத்திற்கு நீதி என்ற வார்த்தை மிகவும் குறுகியதாகும். எனவே நீதி, பாடம் என்ற சொற்கள் சிறுகதை பற்றிய விவாதத்தில் விரும்பப்படுவதில்லை. சிறுகதை ஓர் இலக்கியம், கலை என்ற முறையில் அதன் முதல்நோக்கம் மகிழ்ச்சி அளித்தல்தான். எல்லாக் கதைகளையும் பிழிந்து நீதியை வருவிப்பது நமது நோக்கமல்ல. ஒவ்வொரு கதையிலும் நீதிபோதனையை எதிர்பார்க்கும் நபர், அதனை மிகவும் எளிமைப்படுத்தவும், மரபாக்கிவிடவும்தான் வாய்ப்பிருக்கிறது. “பிராணிகளிடம் அன்பாக இருங்கள்”, “யோசித்து எந்தக் காரியத்திலும் இறங்கவும்”, “குற்றம் இழைப்பது, அதன் தண்டனையை உள்ளடக்கியிருக்கிறது” என்பதுபோல. கதாசிரியர்களின் நோக்கம் இம்மாதிரி தினசரி நடத்தைக்கான ஒழுக்கவிதிகளை வகுத்துரைப்பது அல்ல, மாறாக வாழ்க்கையை இன்னும் வெளிச்சமிட்டுக் காட்டுவது. ஆகவே கருப்பொருளைத் தேடும்போது இந்தக் கதை என்ன போதிக்கிறது என்று கேட்கலாகாது; மாறாக, அது எதனை வெளிப் படுத்துகிறது என்று கேட்பது நல்லது.

சிலசமயங்களில் காலங்காலமாக வரும் நம்பிக்கைகள் வணிகக்கதைகளில் போற்றப் பட்டு மக்கள் மனத்தில் ஆழமாக விதைக்கவும் படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, தாய்மையின் புனிதத் தன்மை அல்லது தெய்விகத் தன்மை. இது போன்ற இன்னும் சில: உண்மைக் காதல் வெல்லும்; உண்மையான உழைப்பு தன் பயனைக் கொடுக்கும்; வயதுமுதிர்ச்சி ஞானத்தை அளிக்கும்; எல்லா மனிதர்களுக்கும் இதயம் உண்டு-போன்றவை. தாய்மை புனிதமானது, அன்பே உருவானது என்றால், மருமகள்கள் ஏன் கொலைசெய்யப் படுகிறார்கள், சித்திரவதைப் படுத்தப்படுகிறார்கள்? ஆகவே குறைந்த பட்சம் தாய்மை தன் மகன்மேல் மட்டுமே அன்புசெலுத்தக்கூடியது, பிறரைத் துன்புறுத்தவும் வதைக்கவும் கூடியது என்பதையாவது ஒப்புக்கொள்ளவேண்டும்.

எம்.வி. வெங்கட்ராம் எழுதிய ‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்ற கதையில் தன் தாயாரின் சித்திரவதையைத் தாங்கமுடியாமல் இரயிலுக்கிடையில் தலையைவிட்டுத் தற் கொலை செய்யும் மகனைக் காண்கிறோம். அப்படியானால் திரைப்படங்களிலோ வணிகக் கதைகளிலோ “அம்மா, நீதான் தெய்வம்” என்பது போலப் பேசும் பேச்சுகள் அர்த்த மற்றதாகிவிடுகின்றன. வாழ்க்கையை விளக்கும் கதாசிரியர்கள் இதுமாதிரி ஒற்றைக் கூற்று களை உடைக்க முனைவார்களே அன்றி ஏற்றுக்கொள்வது கடினம்.

ஆனால் ஒன்று, வணிகக் கதையோ, வாழ்க்கை விளக்கக் கதையோ எதுவாயினும் அது முன்வைக்கும் கருப்பொருளை வாசகர்கள் ஏற்றாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. சிந்தனையின்றிப் புறக்கணிக்கக்கூடாது என்றாலும், ஒரு சில கதைகளின் கருப்பொருள்கள் ஆராய்ந்து பார்க்கும்போது ஏற்கமுடியாததாகவும் இருக்கலாம். ஒரு முதிர்ந்த, தீவிரமான கலைஞரின் தர்க்கரீதியான நோக்கு அது என்றால் நமக்குப் பயனளிக்காமல் இருக்க இயலாது. இந்த உலகம் பிறருக்கு எவ்விதத்தில் காட்சியளிக்கிறது என்று தெரிந்து கொள்வது நமக்குப் பயனுள்ள விஷயம்தானே? நாமே ஒப்புக்கொள்ளாத ஒரு நோக்கு என்றாலும், மனித அனுபவம் பற்றிய நமது அறிவை நாம் வளப்படுத்திக்கொள்ள முடியும் அல்லவா?

நேர்மையான கலைஞர்கள், சிந்தனை மிக்க பார்வையாளர்கள், நாம் ஒப்புக்கொள்வதற்குத் தயங்குகின்ற முழுமை நோக்கு ஒன்றை முன்வைத்தாலும், ஆங்காங்குப் பகுதியளவில் நாம் ஒப்புக்கொள்ளத்தக்க பல கருத்துகளைக் கூறியே செல்வார்கள். எனவே நல்ல வாசகர்கள், அதன் ஒட்டுமொத்தக் கருப்பொருளோடு உடன்படாவிட்டாலும் அதற்காகக் கதையைப் புறக்கணிப்பதில்லை. போதிய ஆழ்ந்த உற்றுநோக்கு, சிந்தனை, ஆகியவற்றின் விளைவாக உருவாகிய எந்தக் கதையையும் நாம் இரசிக்கமுடியும். அதேசமயம், நாம் விரும்புகின்ற ஒரு கருப்பொருளை முன்வைக்கின்ற, ஆனால் ஆழமற்ற, போதிய சிந்தனை யற்ற, கலைரீதியாக வெற்றி பெறாத கதையை நாம் ஆதரிக்க முடியாது.

ஒரு கதையின் கருப்பொருளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது சற்றே கடினமான பணிதான். சில சமயங்களில் கதை என்ன சொல்ல வருகிறது என்பதை நம்மால் ஆழ்ந்து உணர முடிந்தாலும் அந்த உணர்வை வார்த்தையில் வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். நாம் திறனுள்ள வாசகர்கள் என்றால் அப்படி வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் பல சமயங்களில், கருப்பொருள் என்ன என்பதை ஆராய்ந்து வெளிக்கொணர முயல்வது முன்னர் நாம் கவனம் செலுத்தாத பல விஷயங் களில் கவனம் செலுத்த வைக்கக்கூடும். அதனால் ஆழ்ந்த புரிதலுக்கு அது இட்டுச்செல்லும். மேலும், கருப்பொருளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது, நாம் கதையைப் புரிந்து கொண்டோமா என்பதற்கான சோதனை. சிலபேர் தனித்தனிச் சம்பவங்களைப் புரிந்து கொண்டாலும் அவை ஒன்றுசேர்ந்து ஒட்டுமொத்தமாக என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதில் தெளிவின்றி இருக்கலாம்.

கதையின் கருப்பொருளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கெனத் தனி வழிமுறை எதுவும் இல்லை. சிலசமயங்களில் முக்கியக் கதாபாத்திரம் எவ்விதம் கதைப்போக்கின்போது மாறியிருக்கிறார் என்பதை வைத்தோ, அல்லது கதை முடிவில் அவர் என்ன கற்றுக்கொண் டார் என்பதை வைத்தோ கருப்பொருளைத் தெளியலாம். சிலசமயங்களில் மையச் சிக்கலின் இயல்பை ஆராய்வது சிறந்த அணுகுமுறையாக இருக்கும். சில சமயங்களில் தலைப்பு முக்கியமான குறிப்பை அளிக்கக்கூடும். இருப்பினும் பின்வரும் சில விஷயங்களை எப்போதும் மனத்திலிருத்துவது நல்லது.

1. கதைக் கருப்பொருளை ஒரு கூற்றாக வெளிப்படுத்த முடிய வேண்டும். அண்ணன் தங்கை பாசம் என்றோ, நாட்டுப் பற்று என்றோ, தாய்மையின் மேன்மை என்றோ கூறுவது போதாது. எழுவாயும் பயனிலையும் கொண்டமைந்த வாக்கியமாக அது உருப்பெற வேண்டும். எழுவாயைப் பற்றிய ஒரு செயல்கூற்றாக அது அமையவேண்டும். உதாரணமாக, “பலசமயங்களில் தாய்மைக்குப் பரிசுகளைவிட கஷ்டங்களே அதிகமாகக் கிடைக்கின்றன” என்பது கருப்பொருள் கூற்று. அதுபோலவே, “நாட்டுப்பற்று பலசமயங்களில் உயிர்த் தியாகத்தையும் நிகழச் செய்கிறது” என்பதும் ஒரு கருப்பொருள் கூற்றுதான்.

2. கதைக்கரு, வாழ்க்கை பற்றிய ஒரு பொதுமைப்படுத்தலாக வெளிப்படவேண்டும். அதனைச் சொல்லும்போது கதாபாத்திரத்தின் பெயரையோ கதை நடந்த இடத்தையோ குறிப்பிடலாகாது. மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீழ்ச்சியடைந்தார்கள். அந்த நிகழ்ச்சியைப் பற்றிய கதை என்றால் மருது சகோதரர்கள், சிவகங்கை என்ற பெயரெல்லாம் கதைக்கருவில் இடம்பெறத் தேவையில்லை. “சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் சில சமயங்களில் அதற்காக உயிர்த்தியாகமும் செய்ய நேரிடுகிறது” என்று பொதுமைப்படுத்த வேண்டும்.

3. பொதுமைப்படுத்தும்போது தேவையான அளவைவிட அதைப் பெரிதுபடுத்தக்கூடாது. எல்லா, எப்போதும், ஒவ்வொரு, போன்ற சொற்களை மிக எச்சரிக்கையாகவே பயன்படுத்த வேண்டும். சிலசமயங்களில், சிலர், இருக்கக்கூடும் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே துல்லியமான விளைவைத் தரும். உதாணமாக ‘மறுபடியும்’ கதையின் கருப்பொருளைச் சொல்லும்போது, “சிலபேர், தங்கள் சொந்தக் குறையை உணரமுடியாமல், சிலசமயங்களில் பிறர்மீது குறைகாண்கிறார்கள்” என்று சொல்வதே சரியாக அமையும்.

4. கருப்பொருள் என்பது கதையின் மையமான, ஒருங்கிணைக்கும் கருத்து. எனவே கதையின் எல்லா விஷயங்களையும், எல்லாப்பகுதிகளையும் அது கணக்கில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு சில பகுதிகளை விட்டுவிடக்கூடாது. மிக முக்கியமாக, கதையின் எந்தக் கூறும் கருப்பொருளுக்கு முரணாக, அதை மறுப்பதாக அமைந்துவிடக்கூடாது. அடுத்து, நாமாக யூகிக்கக்கூடிய விஷயங்களைக் கருப்பொருளாகக் கூறக்கூடாது. கருப்பொருளாக முன்வைப்பதைக் கதையின் கூறுகள் யாவும் வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ ஆதரிப்பதாக இருக்கவேண்டும்.

5. கருப்பொருளை இப்படித்தான் கூறவேண்டும், வெளிப்படுத்தவேண்டும் என்று எந்தச் சட்டமும் கிடையாது. அது வாழ்க்கை பற்றிய ஒரு நோக்கினை முன்வைக்கிறது. மேற்கூறிய நிபந்தனைகள் யாவும் பூர்த்தியாகும் பட்சத்தில், அந்த வாழ்க்கை நோக்கினைப் பலவிதங்களில் நாம் வெளிப்படுத்தமுடியும்.

6. கருப்பொருளை நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கின்ற பொன்மொழிகள், பழமொழிகள் போன்றவற்றிற்குக் குறுக்கிவிடக்கூடாது. “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்”, “முயற்சி திருவினை ஆக்கும்” போன்ற தொடர்கள் இப்படிப்பட்டவை. இம்மாதிரிக் கூற்றுகளும் சிலசமயங்களில் கதைக்கருப்பொருளாக அமையலாம், ஆனால் இப்படிக் கூறுவது சோம்பேறியின் குறுக்குவழி. முயற்சியைச் செலவிடாமல் கதையின் சாரம்சத்ததை எளிதாக்கிவிடுவதாகும் இது. புதிய அனுபவங்களையெல்லாம் இம்மாதிரி பழைய ஃபார்முலாக்களில் அடைக்கும் வாசகர்கள், புதியபார்வைக்கான வாய்ப்பினை இழந்துவிடுகிறார்கள். உலகத்தைப் பற்றிய அவர்களது அறிவையும் விழிப்பையும் கதை வளப்படுத்துவதற்கு உடன்பட்டுச் செல்லாமல், தேய்ந்து போன வார்த்தைகளில் சரணடைந்துவிடுகிறார்கள்.

பொதுவாக ஆசிரியர்கள் எவ்விதமான கருப்பொருள்களைக் கையாள்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவற்றிலிருந்து ஒரு முடிவுக்கு வருவது அவரைப்பற்றி மதிப்பிடு வதற்கு உதவியாக இருக்கும். உதாரணமாக, கு.ப. ராஜகோபாலன் ஆண்-பெண் உறவு பற்றியே மிகுதியாக எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். லா.ச.ரா. குடும்ப விஷயங் களைத் தாண்டிக் கதைகள் எழுதியதில்லை என்பார்கள். புதுமைப்பித்தன் பலவகையான கருப்பொருள்களைக் கையாண்டிருக்கிறார். மௌனி காதல் கதைகளையே எழுதியவர் என்பார்கள். ஜெயந்தனும் ஆண்-பெண் உணர்ச்சிகளைப் பற்றியே மிகுதியாகக் கதைகள் படைத்தவர். ஜெயகாந்தன் தமது கதைகளின் கருப்பொருள்களைத் தானே சொல்லிவிடுவது வழக்கம் அல்லது அவற்றையே கதைத் தலைப்பாக வைத்துவிடுவது வழக்கம்.

இரவீந்திரநாத தாகூர் மிகச் சிறந்த, மறக்கமுடியாத கதைகளைப் படைத்தவர். அவர் படைத்த கதைகளில் காபூலிவாலா என்ற கதை பற்றிப் பார்ப்போமே. (காபூலிவாலா என்றால் காபூலில் இருந்துவந்த பட்டாணியன். அந்தக் காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியில் காபூலும் இந்தியாதான்.) அவன் ஆண்டுக்கு ஒருமுறை காபூலிலிருந்து வரும்போது கொண்டுவரும் பொருள்களைக் கல்கத்தாவில் விற்பனைசெய்து போவான். அப்போது ஒரு சிறியபெண்ணை -மினியைக்-காண்கிறான். அந்தக் குழந்தையிடம் மனத்தைப் பறிகொடுத்த அவன் அவ்வப் போது தின்பதற்கு அவளுக்கு ஏதாவது தந்துவிட்டுச் செல்வான், அந்தச் சிறுபெண்ணும் அவனிடம் பாசத்தோடு ஒட்டிக்கொண்டாள்.

திடீரென ஏற்பட்ட ஒரு கலவரத்தில் கைதுசெய்யப்பட்ட அவன் திரும்பிவந்து மினியைப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுக் கைதாகிச் சிறைக்குச் செல்கிறான். பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் மினி பெரியவளாகியதோடு, சிறுவயதுத்தோழனான அவனை மறந்தும் விட்டாள். அவன் மனத்தில் அவள் சிறுகுழந்தையாகவே இருப்பதாக எண்ணம். சிறையிலிருந்து திரும்பிய அவன் அவளைப் பார்க்கத் தின்பண்டங்களுடன் ஓடோடி வருகிறான். அவளுக்கு மறுநாள் திருமணம். மணப்பெண்ணான அவளைப் பார்க்க முடியாது என்கிறார் தகப்பனார். கண்ணைத் துடைத்துக் கொண்டு திரும்புகிறான். காபூலில் வீட்டில் விட்டுவந்த தனது சிறு பெண்ணும் இப்போது இப்படித்தான் பெரியவளாகியிருப்பாள் என்று நினைத்து ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்துக்கொள்கிறான் (அது அவனுடைய குட்டிப்பெண் கிறுக்கிய காகிதம்). அதைக் கண்ட தகப்பனார் அவனை உள்ளே சென்று மினியைப் பார்க்க அனுமதிக்கிறார். ஒரு தந்தையின் பாசத்தை மிக அருமையாகச் சித்திரித்த கதை இது. இதன் கருப் பொருளைக் கூறமுயன்று பாருங்கள்.

கருப்பொருளைப் பற்றி இதுவரை அருவமாக விவாதித்துவந்த நாம், இப்போது ஒரு சிறிய கதையினைக் காணலாம். இதுவும் அசோகமித்திரன் எழுதிய கதைதான். பெயர் ‘ரிக்ஷா’.

ரிக்ஷா

“அப்பா, அப்பா! ரிஷ்கா! ரிஷ்கா!” என்று ரவி உள்ளே என்னிடம் ஓடிவந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்ஷா ஒன்று போய்க் கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.

“ரிஷ்கா இல்லை, ரிக்ஷா”

ரவி அருகே வந்தான்.

“எங்கே சொல்லு, ரிக்ஷா”

“ரிஷ்கா”

“ரிஷ்கா இல்லை, ரிக்ஷா”

“ரிஷ்கா”

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

“ரிக்-ஷா”

“ரிஷ்கா”

“ரிக்க்ஷா”

“ரிஷ்கா”

“அப்படியில்லை, இதோ பார், ரிக்”

“ரிக்”

“ஷா”

“ஷா’

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

“ஊஹ¨ம், மறுபடியும் சொல்லு, ரிக்”

“ரிக்”

“ரிக்”

“ஷா”

“ஷா”

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

சிறிதுநேரம் மௌனம் நிலவியது.

“பார் ரவி, என்னைப் பார்த்துச் சொல்லு, ரீ”

“ரீ”

“இக்”

“இக்”

“ஷா”

“ஷா”

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

உலகம் க்ஷணகாலம் அசைவற்று இருந்தது.

“ரவி”

“அப்பா”

“சரியாச் சொல்லு, ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக்”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ரிக்ஷா, ரிக்ஷா”

“ரிஷ்கா, ரிஷ்கா”

“ரிக்ஷா, ரிக்ஷா”

“ரிஷ்கா, ரிஷ்கா”

காய்கறி வாங்கப் போன மனைவி திரும்பிவந்தாள். வந்த பிறகுதான் அவள் குடையை மறந்து விட்டு வந்தது தெரிந்தது.

“ஐயோ, அவ்வளவு தூரம் மறுபடியும் போகவேண்டுமே” என்றாள்.

“ரிக்ஷாவில் போய்விட்டு வந்துவிடேன்” என்றேன்.

மனைவி என்னை ஏதோ மாதிரிப் பார்த்தாள்.

“என்ன?” என்றேன்.

“இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“ரிக்ஷாவில் போய்விட்டு வா என்றேன்”.

“ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி விழுந்தது” என்றாள்.

நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று பாருங்கள்.

1. இந்தக் கதைக்குக் கருப்பொருள்(கள்) என்ன?

2. அது/அவை வெளிப்படையாகவே தெரிகிறதா, உள்ளார்ந்திருக்கிறதா?

3. வாழ்க்கையின் பொதுவான எண்ணங்களை அது வலுப்படுத்துகிறதா? அல்லது புதிய வெளிச்சம் எதையேனும் தருகிறதா? அல்லது ஏற்கெனவே உள்ள கருத்துகளைப் புதுமைப் படுத்துகிறதா? ஆழப்படுத்துகிறதா?

—–

 

Pdf, which must be signed by your thesis advisor, your honors academic advisor, the department chair for the thesis advisors department, and the associate dean of the college overseeing that academic http://essayprofs.com/ discipline

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 6 – சிறுகதையின் கூறுகள்-கருப்பொருள் (தீம்)”

அதிகம் படித்தது