எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?
சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.DSep 12, 2015
‘ஆஸ்துமா’ என்ற பெயர்தான் அனைவருக்கும் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இதற்கு சித்த மருத்துவத்தில் ‘இரைப்பு நோய்’ என்று பெயர்.
பொதுவாக இந்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். உங்கள் உறவினரோ நண்பரோ அல்லது நீங்களோ கூட அப்படிப்பட்டவராக இருக்கலாம். சிலர் இப்படி பல மருந்துகள் எடுத்துப் பார்த்து சலித்துப்போய் “இப்போதெல்லாம் நான் ஆஸ்துமாவுக்கு மருந்து எதுவும் எடுப்பதில்லை. மூச்சிரைப்பு வந்தால் Inhaler அடித்துக் கொள்கிறேன்” என்பதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு இந்நோய் முற்றிலும் குணமாவதில்லை.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
- சரியான மருத்துவமுறையை தேர்வு செய்யாதது. முழுமையான மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் நிவாரணம் மட்டும் எடுத்துக் கொள்வது.
- சரியான நோய் கணிப்பு செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது.
- போதுமான கால அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ளாதது.
இதை விரிவாக பார்ப்பதற்கு முன் இரைப்பு நோய் பற்றி சுருக்கமாக பார்ப்போமா.
நுரையீரல்- மூச்சு விடுவதற்கு காரணமான இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்சனை தான் இரைப்பு. ஒரு மரத்தின் வேர் போன்ற அமைப்பில் உள்ளதுதான் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்கள். ஒரு ஆணிவேர் எப்படி பிரிந்து பல பகுதிகளாக சென்று, அவை மீண்டும் பல பிரிவுகளாக, மீண்டும் பல பிரிவுகளாக செல்கிறதோ, அதைப்போலவே மூச்சுக்குழாயும் பிரிந்து பிரிந்து கடைசியில் மிகச்சிறிய மூச்சுக் குழாய்களாக பிரிகின்றன. இந்த மூச்சுக் காற்றின் பாதையில் ஏற்படும் தடையினால் இரைப்பு ஏற்படுகிறது. அந்த தடைகள் ஏன் ஏற்படுகின்றன?
நுரையீரல் என்பது உடலுக்குள்ளே இருக்கின்ற ஒரு உறுப்பாக தோன்றினாலும் கிட்டத்தட்ட அது உடலுக்கு வெளியே இருக்கின்ற தோல் போல புறச்சூழ்நிலையுடன் நேரடியாக தொடர்புடையது. எனவே புறச்சூழ்நிலையில் உள்ள மாசுக்கள் நுரையீரலின் உள்ளே மூச்சுக் காற்றின் வழியாகச் சென்று மூச்சுக் குழாயின் மென் தசைகளில் ஒரு வித வீக்கம்( Inflammation) உண்டாக்குகின்றன. எனவே மூச்சுக்குழாய் சுருங்குகிறது. இதனால் மூச்சை உள்ளே இழுக்கவும், வெளியே விடவும் முடியாமல் போகிறது, மாசுக்கள் இப்படி பாதிப்பை ஏற்படுத்துவதைப் போலவே குளிர் காற்றும் மூச்சுக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலே கூறிய காரணங்கள் புறச்சூழ்நிலையில் வருபவை.
அதேபோல நாம் உண்ணும் உணவினாலும் இரைப்பு வரலாம். சிலருக்கு எளிதில் சீரணிக்காத உணவுகள், கிழங்குகள் போன்றவற்றை உண்பதால் இரைப்பு வரும். புறச்சூழ்நிலையோ அல்லது உணவோ அவை உடலில் கபம் மற்றும் வாதத்தின் செயல்பாடுகளை இயல்பு நிலையிலிருந்து மாற்றி இரைப்பு நோயை உண்டாக்குகின்றன.
இரைப்பு நோயின் வகைகள்:
வாத இரைப்பு
கப இரைப்பு
கப வாத இரைப்பு
முக்குற்ற இரைப்பு
மேல்நோக்கு இரைப்பு
என ஐந்து வகைகளாக இரைப்பு நோய் உள்ளது. இவை அனைத்திலும் குறிகுணம் ஒன்றாக இருப்பது போல தோன்றினாலும் இவை உண்டாகும் காரணங்களும் இவற்றின் மருத்துவமும் முற்றிலும் மாறுபடும்.
வாத இரைப்பு:
ஆஸ்துமா என்றாலே மழை, குளிர், சளி போன்றவைகள்தான் உண்டாகிறது என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த வகை இரைப்பு வெய்யிலில் அதிகம் அலைவதால் வரும். எளிதில் சீரணமாகாத உணவை உண்பதால் வரும் கிழங்குகள் போன்றவற்றை உண்பதால் தூண்டப்படும் இந்த செயல்களால் வாதம் தூண்டப்பட்டு உருவாகின்ற இரைப்பு இது.
கப இரைப்பு:
இதுதான் மழைக்காலம், குளிர்ந்த காற்று போன்ற குளிர்ச்சியான சூழ்நிலையில் உண்டாவது. இதில் கபம் தூண்டப்பட்டு இந்நோயை உண்டாக்குகிறது.
கப வாத இரைப்பு:
இதில் கபமும் வாதமும் தூண்டப்பட்டு இரைப்பு உண்டாகும். இந்த நோயாளிகளுக்கு மலக்கட்டு உண்டாகும். வயிறு உப்பி போகும். இவர்களுக்கு இரைப்பு வரும்போது மயக்கம் வரலாம்.
முக்குற்ற இரைப்பு:
முக்குற்றம் என்றால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் தூண்டப்பட்டு உண்டாவது.
உடலில் 10 வகையான வாயுக்களின் இயக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவாசத்தோடு தொடர்புடைய சில வாயுக்களின் இயக்கம் தடைபடுவதால் இந்த இரைப்பு உண்டாகிறது,
மேல்நோக்கு இரைப்பு:
மேல் கூறிய முக்குற்றங்களின் செயல்பாடுகளையும் தாண்டி உறுப்பை சார்ந்தது இந்த இரைப்பு.
சரி மீண்டும் கட்டுரையின் மையப் பொருளுக்கு வருவோம்.
ஆஸ்துமா குணமாகாமல் இருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சரியான மருத்துவ முறையை தேர்வு செய்யாதது.
பலவிதமான மருத்துவமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவ முறை சிறப்பானதாக இருக்கும். சில நோய்களுக்கு சில மருத்துவ முறைகளில் தீர்வு இல்லாமல்கூட இருக்கும். உதாரணமாக சிறுநீரகக் கல்லை எடுத்துக் கொண்டால் அதற்கு அலோபதி மருத்துவ முறையில் உள் மருந்துகள் கிடையாது. வெளியிலிருந்து கதிர்வீச்சு மூலமாகவே கற்களை உடைக்க முடியும் அல்லது அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். ஆனால் சித்த மருத்துவத்தில் உள் மருந்துகள் மூலமாகவே கற்களை கரைக்க முடியும். இப்படி ஒரு சில நோய்களுக்கு ஒரு சில மருத்துவமுறையே சிறந்தது.
ஆஸ்துமாவை பொருத்தவரையில் சித்த மருத்துவமே முழுமையான குணத்தைத் தரமுடியும்.
மூச்சுக்குழாயில் ஏற்படும் சளிச்சுரப்பை நிறுத்துவதற்கு ஒரு மருந்து, மூச்சுக்குழாய் அழற்சியை நிறுத்த ஒரு மருந்து, சளியை கரைக்க ஒரு மருந்து மூச்சுக் குழாயை விரிவடையச் செய்ய ஒரு மருந்து என கொடுப்பது சிகிச்சை அல்ல அது வெறும் நிவாரணம்தான். இதனால் அந்த நேரத்திற்கு மூச்சிரைப்பு மாறும் ஆனால் முழுமையான விடுதலை கிடைக்காது. மீண்டும் மீண்டும் இந்தக் கதை தொடரும்.
காரணம்:2
சரியான நோய் கணிப்பு இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது,
ஆஸ்துமா என்றாலே அது ‘மூச்சு வாங்குவது’ என்ற ஒற்றை புள்ளியில் அனைவருக்கும் ஒரே மாதிரியாக சிகிச்சை செய்வது அனைவரையும் குணப்படுத்தாது.
நான் மேலே குறிப்பிட்டதைப் போல நோய் வருவதற்கான அடிப்படைக் காரணம் (வாதமா, கபமா) என்பதை கவனித்து, அதிகரித்த குற்றத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்.
நோயாளியின் நாடி நிலையை அறிந்து கபம் காரணமானால் ‘நசியம்’ எனும் சிகிச்சையும், வாதம் அதிகமானால் ‘பேதிக்கும்(Purgation) மருந்து கொடுத்து அதனுடன் மருத்துவம் செய்ய வேண்டும். இந்த கணிப்பில் ஏற்படும் தவறுதான் வாழ்நாள் முழுவதும் ஆஸ்துமா தொடர்வதற்குக் காரணம்.
காரணம் 3:
போதுமான கால அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ளாதது.
பொதுவாக ஆஸ்துமா வந்தவுடன் ஒரு மருத்துவரைப் பார்ப்பர். அவர் ஒரு வாரத்திற்கோ இரண்டு வாரங்களுக்கோ மருந்து கொடுப்பார். அதை சாப்பிட்டதும் இரைப்பு நீங்கிவிடும். எனவே அதோடு சிகிச்சையை முடித்துக் கொள்வர். பிறகு சில வாரங்களோ மாதங்களோ கழித்து மீண்டும இரைப்பு வரும்போது மீண்டும் இதே கதை தொடரும்.
சித்த மருத்துவத்தில் ஆஸ்துமாவை பொறுத்த வரையில் மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நோயாளியின் நோய் கணிப்பை பொறுத்து மாறுபடும். சித்த மருத்துவத்தில் குறிகுணங்களுக்கு மட்டும் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. நுரையீரல் தசைகளையும், மூச்சுக் குழாய்களையும் வலிமைப்படுத்துவதற்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஒரு வருடம் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதிலிருந்தே இந்த நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், மண்டூரம் போன்ற உலோகங்களும் பவளம், முத்து, முத்துச்சிற்பி போன்ற மருந்துச் சரக்குகளும் சேர்த்த மருந்துகள் நுரையீரலை வலிமைப்படுத்த கொடுக்கப்படுகின்றன. ஒரு வருடம் முறையான, முழுமையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் இந்நோயினால் அவதிப்பட வேண்டிய தேவையில்லை. முழுமையான விடுதலை அடையலாம்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கான மூச்சுப்பயிற்சி:
பிரணாயாமம்:
ஒரு குறிப்பிட்ட முறையில் செய்யும் இந்த மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் வலிமை பெறும். வாத இரைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக பிரணாயாமம் செய்ய வேண்டும். கப வாத இரைப்பு உள்ளவர்கள் பிரணாயாமம் செய்து வந்தால் மயக்கம் வருவதை தவிர்க்கலாம்.
யோகாசனங்கள்:
இரைப்பு நோயாளிகளுக்கு புஜங்காசனம் மிகவும் நல்லது. மேலும் விபரீதகரணி முத்ரா, மச்சாசனம், வில் ஆசனம், ஒட்டக ஆசனம், அர்த்த சிரசாசனம், சவாசனம் போன்றவைகளும் நல்லது.
இரைப்பு நோயாளிகள் இரவில் படுக்கப் போகும் முன் இந்த ஆசனங்களை செய்வது நல்லது.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?”