என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?
சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.DAug 8, 2015
சிறகு இணைய இதழைப் படித்து நிறைய பேர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறீர்கள். மூன்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சித்தமருத்துவம் படிக்க வைக்க விரும்புவதாகக் கூறினர். அதில் ஒருவரின் மகன் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கிறானாம்.
சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகத்தை முதலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ‘இலக்கோடு’ எழுத ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் சரியான முறையில் சென்றுகொண்டிருப்பதை இது காட்டுகிறது.
ஆனால் இதில் நிறைய பேர் மருத்துவம் எழுதும்படி கேட்டுக்கொண்டீர்கள். சித்த மருத்துவத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர நோய்களுக்கான மருத்துவம் எழுதுவதல்ல. ஆனாலும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இடையிடையே மருத்துவமும் எழுதுவேன்.
இனி இந்தக் கட்டுரைப் பற்றி.
எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், எந்தெந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று – எந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது எனக் கூறுவது.
இரண்டு – இந்த நோய்களுக்கு பெரும்பாலானவர்கள் ஆரம்பத்திலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி நோய் முற்றிய நிலையில் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போமே என்று வருகின்றனர்.
இவ்வாறு நோய் முற்றிய நிலையில் வருவதை விட ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் இந்த நோய்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைய முடியும்.
இனி நோய்களைப் பார்ப்போம்.
தோல் நோய்கள் :
மிக அதிக எண்ணிக்கையில் நோய்கள் ஏற்படும் மிகவும் சிக்கலான உறுப்பு தோல். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்படுபவை தோல்நோய்கள். ஆனால் முறையாக சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் தோல் நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.
ஆஸ்துமா :
வாழ்நாள் முழுவதும் சிலருக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் இரைப்பு நோய் எனப்படும் ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது.
ஒவ்வாமை ( Allergy) :
புற சூழ்நிலைகளாலும் உணவுகளாலும் ஏற்படும் அனைத்துவிதமான ஒவ்வாமைகளுக்கும் சித்த மருத்துவமே சிறந்தது.
தலைவலிகள் :
பல்வேறு காரணங்களால் பலவிதமான தலைவலிகள் உண்டாகின்றன. உள்மருந்துகளோடு ‘நசியம்’ , ‘ பற்று’, ‘ சிர தாரை’ , ‘புகை’ போன்ற புற சிகிச்சை முறைகளையும் கொடுப்பதால் இப்படிப்பட்ட தீராத தலைவலிகளிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.
பீனிசம் (sinusitis) :
‘சைனஸ்’ என பரவலாக அழைக்கப்படும் சைனஸைட்டிஸ் எனும் மூக்கடைப்பு நோய்க்கு சித்த மருத்துவத்தில் ‘பீனிசம்’ என்று பெயர். இந்நோய்க்கும் சித்த மருத்துவமே சிறந்தது.
நரம்பு சம்பந்தமான நோய்கள் :
நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி, நரம்பு வலிகள் முதற்கொண்டு பக்கவாதம் வரை எல்லா நரம்பு நோய்களுக்கும் சித்த மருத்துவம் சிறந்தது.
தைராய்டு நோய்கள் :
நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் சித்த மழுத்துவமே சிறந்தது. உள் மருந்துகளுடன் சில யோகாசனங்களையும் செய்வதால் தைராய்டு பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.
கழுத்து, இடுப்பு வலிகள்:
கழுத்து முதல் முதுகு வரை நீண்டிருக்கும் முதுகுத்தண்டில் ஏற்படும் அழுத்தம், தேய்மானம் மற்றும் வீக்கத்தில் ஏற்படும் வலிகளுக்கு உள் மருந்துகளுடன் ‘ஒற்றடம்’ , தொக்கணம்’ , ‘நவரக்கிழி’, ‘பற்று’ போன்ற சில புற சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
மூட்டு வலிகள்:
சித்த மருத்துவம் மூட்டு வலிகளை பத்து விதமாக வகைப்படுத்தி அதற்கான சிகிச்சை முறைகளையும் வெவ்வேறாக கூறியுள்ளது. இனி இதிலும் உள்மருந்துகளுடன் ‘ பற்று’ , ‘ஒற்றடம்’, போன்ற புறசிகிச்சை முறைகளும் நல்ல பலனைத் தருகின்றன. ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் வயதாவதால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும் தடுக்கலாம்.
சித்த மருத்துவத்தினால் மூட்டு அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம்.
இதய நோய்கள்:
ஒரு சித்த மருத்துவரை உங்களுடைய குடும்ப மருத்துவராக வைத்துக்கொண்டால் உங்களுக்கு இதய நோய்களே வராது என என்னால் உறுதியாக கூறமுடியும். அந்த அளவிற்கு இதயத்தை வலிமைப்படுத்தக்கூடியதும், பாதுகாக்கக்கூடியதுமான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
குடல் புண்கள் (peptic ulcer):
சிலருக்கு தீராமல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் ‘அல்சர்’ என பொதுவாக அழைக்கப்படும் குடல் புண்களுக்கு நிரந்தர தீர்வைத் தர முடியும்.
நீரிழிவு நோய் :
சர்க்கரை நோய் எனப்படும் இந்நோயை சித்த மருத்துவத்தில் ‘மதுமேகம்’ என அழைக்கிறோம். இந்நோய் பற்றி சுருக்கமாக கூறிவிட முடியாது. பேசுவதற்கு அத்தனை விசயங்கள் உள்ளன.
நீங்கள் நோயின் ஆரம்ப நிலையில் இருந்தாலும் சரி அல்லது ‘இன்சுலின்’ ஊசி போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அதோடு கண்டிப்பாக சித்த மருத்துவமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோயினால் வரக்கூடிய மற்ற பாதிப்புகளான கண் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, இரத்த குழாய் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவைகளை நிச்சயம் வராமல் தடுக்க முடியும். நீரிழிவுக்கு மருத்துவம் என்பது வெறுமனே இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல.
இரத்தக் கொதிப்பு:
இந்நோய் வருவதற்கான காரணத்தை சித்த மருத்துவம் மட்டுமே விளக்குகிறது.
முழுமையான நிவாரணமும் உள்ளது.
சிறுநீரக நோய்கள் :
சிறுநீரக செயலிழப்பு (kidney failure)-க்கு சித்த மருத்துவமே சிறந்தது. சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் டயலைசிஸ் செய்வதை தவிர்க்கலாம். “டயலைசிஸ்தான் செய்யவேண்டும் வேறு வழியில்லை” என்று மருத்துவர்கள் கூறிய நிறைய நோயாளிகளை மருந்துகளினால் சரி செய்திருக்கிறேன்.
சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவையே இல்லாதது. மருந்தின் மூலமாகவே கற்களை கரைக்க முடியும்.
பித்தப்பை கற்கள் :
பித்தப்பையில் உள்ள கற்களை கரைப்பதற்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்தின் மூலமாகவே கரைக்கலாம்.
மூலம் (piles) :
இந்நோயும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தக் கூடிய நோய்களில் ஒன்று. மருந்தின் மூலமாக மிக எளிதாக முற்றிலும் குணமாக்கலாம்.
கல்லீரல் நோய்கள் :
கல்லீரலும் ஒரு சிக்கலான உறுப்பு. மஞ்சள் காமாலை நோய்க்கு சித்த மருத்துவமே சிறந்தது. மேலும் கல்லீரலில் வருகின்ற பல்வேறு நோய்களுக்கும் சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது. இன்றைக்கு நிறைய அலோபதி மருத்துவர்களே கல்லீரல் நோய்களுக்கு சித்த மருந்துகளை பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர்.
பெண்களுக்கான நோய்கள் :
- கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்
- மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள்
- தைராய்டு பிரச்சினைகள்
- முடி உதிரல்
- முகப்பரு
- கால் பாத பித்த வெடிப்பு
- இரத்தக் குறைவு
- குழந்தை பேறின்மை
- உடல் பருமன்
- மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் கோபம் போன்ற மன பிரச்சினைகள்
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என உறுதியாக கூற முடியும்.
இன்று நிறைய அலோபதி மகளிர் மருத்துவர்களே (gynaecologists) இந்த பிரச்சினைகளுக்கு சித்த மருந்துகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர்.
- மூளை வளர்ச்சி குறைவு
- சிறு வயதில் ஏற்படும் ஆஸ்துமா
- சிறு வயதில் ஏற்படும் சர்க்கரை நோய்
(Juvenile diabetes)
- உடல் வளர்ச்சி குறைவு
- சரியாக சாப்பிடாமல் இருப்பது
- நினைவாற்றல் குறைவு (மறதி)
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது. தடுப்பு ஊசி போடுவது போல நோய்எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சில மருந்துகளை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.
“என்ன ஆச்சு.. குழந்தை அழுது…. …… வாட்டர் கொடு. உனக்கும் அதான் கொடுத்தேன்” என்பது ஒரு சித்தா மருந்து என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும?
உடல் பருமன் (Obesity):
குறிப்பாக இன்று இந்தப் பிரச்சனை நகரத்தில் வசிக்கும் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. உடலைக் குறைக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு செலவு செய்வது முதல் அறுவை சிகிச்சை வரை என்னென்னவோ செய்கிறார்கள். இதற்கு சித்த மருத்துவத்தில் பக்க விளைவை தராத நல்ல மருந்துகள் இதற்கு உள்ளன.
தலைமுடி பிரச்சினைகள் :
இளநரை, முடி உதிரல் போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.
வலிப்பு நோய்கள் :
காக்கை வலிப்பு என பொதுவாக அழைக்கப்படும் வலிப்பு நோய்களை சித்த மருத்துவத்தில் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஒரு நாளைக்கே பலமுறை வலிப்பு வந்து கொண்டிருந்த நோயாளியே குணமடைந்திருக்கிறார்.
- விந்தணு குறைபாடு
- ஆண்மைக்குறைவு
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வைத் தர முடியும்.
இவை தவிர சித்த மருத்துவ முறைகளை கடைபிடிப்பதன் மூலமாக ஆநேக நோய்களை வராமலே தடுக்க முடியும். அப்படிப்பட்ட நோய்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?”