கவிதைச் சோலை(ஒற்றுமை கண்டு உவக்கும் தாய்!, அஸ்தமிக்கும் மனித உறவுகள்!)
தொகுப்புJul 16, 2016
ஒற்றுமை கண்டு உவக்கும் தாய்!
-இல.பிரகாசம்
என் பிள்ளைகள் மூவர்
மூவரும் ஒன்றாய் இருப்பதைக்
கண்டு மாற்றான் ஒருவன் செய்யும்
சதியினை ஊனும் சதையும் எலும்புமாய்
இணைந்து வலிமையுடைய ஒற்றுமையால்
முறியடித்து வெற்றி பெறுவதில் வல்லவர்கள்!
என் பிள்ளைகள் மூவரும்
மாற்றுக் கருத்துடையராய் இருப்பினும்
உடம்பில் ஓடும் இரத்தத்திசு போல
என்றும் இணைந்தே இருப்பர்!
அவ்வரிய முத்துக்களை பெற்றெடுக்க
முன்பு நான் கொண்ட வலியெல்லாம்
நொடியில் மறைந்து போகிறது!
என் உள்ளம் உவக்கிறது!
இவர்களை இம்மடியில் சுமப்பதற்கு
நான் என்ன பேறு பெற்றேன்!
அஸ்தமிக்கும் மனித உறவுகள்!
-ராஜ் குணநாயகம்
விவாகரத்தில் வந்து முடிந்த
ஐரோப்பிய யூனியன்
பிரித்தானிய
தேனிலவு!
உலகுக்கு கற்றுத்தரும் பாடம்………………………………….!
எங்கோ ஒரு புள்ளியில்
இனித்த உறவும் கசக்கிறது
முரண்படும், தடம் மாறும் தேவைகள்
ஓர் எருது கீழ் திசையும்
மற்றைய எருது மேல் திசையும்
போகும் எண்ணம் வந்துவிட்டால்
பயண திட்டப்படி
இரட்டை எருது பூட்டிய வண்டி
வட திசை போய்ச்சேராது!
சனநாயகவாதிகள்
பழமைவாதிகள்
வலது, இடதுசாரிகள்
முதலாளித்துவவாதிகள்
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்
முதலாளித்து பெருந்தேசியவாதத்தின்
அடிவருடிகள் இன்று!
ஏழைகள் வயிற்றில் தீ மூட்டி
தொழிலாளர் முதுகில் ஏறி சவாரி செய்யும்
அரசியல் பித்தலாட்டங்கள்
ஊடக தர்மம் என்ற பெயரில்
பொய்யை மெய்யாயும்
மெய்யை பொய்யாயும்
கூறும் ஊடக அதர்மங்கள்
தேசமெங்கும் விதைக்கப்படும்
நச்சு விதைகள்!
மனித மாண்புகள் அடமானம் வைக்கப்பட்டு
அரியணையேறும்
பதவி ஆசைகளும், சுயலாபங்களும்!
முடிவுகள்
விளைவுகள்
கற்றுத்தரும் கசப்பான பாடங்கள்
இனிவரும் காலம்…………………………………!
தனிமனித சுயலாபங்கள்
மதம்
இனம்
மொழி
நிறம்
பிரதேசம்
தேசம்
எனும் முகமூடிகளை அணிந்துகொண்டு
அதனுள் ஒளிந்துகொண்டு
சமுதாய கூட்டு நலன்களாய்
மனித மாண்புகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு
புதுயிர்க்கப்படும் சுயலாபங்கள்!
அன்று சரியாய் தெரிந்த
சிந்தனைகள்
தத்துவங்கள்
கொள்கைகள்
விதிகள்
சித்தாந்தங்கள்
விழுமியங்கள்
இன்று பிழையாய் தெரிகிறது
அன்று பிழையாய் தெரிந்தது
இன்று சரியாய் தெரிகிறது
நாளையும்
இனியும்
இதுவே தொடரும்……………………………..!
பழைய கதவுகள் பல மூடப்படலாம்
புதிய கதவுகள் சில திறக்கப்படலாம்
காலமே பதில் சொல்லும்!
இயற்கையோடும்
தனக்குள்தானும்
தேவைகளின் முரண்களின் பால்
தோற்றுக்கொண்டிருக்கும்
கலியுக நவீனகால மனிதம்!
தவறான பல புரிதல்களோடும்
முடிவுகளோடும்
விடை தெரியாத பல வினாக்களோடும்
கால சுழற்சியில்
அங்குமிங்கும்
தட்டுத்தடுமாறி
நிலைமாறி
திசைமாறி
அஸ்த்தமித்துக்கொண்டிருக்கும் மனித உறவுகள்…………..!
-ஈழன்-
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை(ஒற்றுமை கண்டு உவக்கும் தாய்!, அஸ்தமிக்கும் மனித உறவுகள்!)”