கவிதைத் தொகுப்பு
குமரகுரு அன்புMar 26, 2022
கடற்கரையின் மணற்துகள்களில்
எழுதப்பட்ட அத்தனைப் பெயர்களையும்
விழுங்கிய கடலுக்கு…
அதன் பெயர் கடலென்றேத்
தெரியாது?
*****
வானும்
கடலும்
கூடும் இடத்திலிருந்து
தெரிகிறதே ஒரு கண்
அதன் விழிதான்
சூரியன்!
*****
தூரத்திலொரு படகு
நகர்கிறது…
துள்ளுகிறது…
அலை மேல் துடிக்கிறது…
பாவம்!!
*****
இன்று சிப்பிப் பொறுக்கும் சிறார்
நாளை துப்பட்டாவில் முகம் மூடி
இதே கரையால் அமர்ந்திருப்பார்…
பின்னொரு நாள்,
இதயத்தைப் பிய்த்திந்த
கடலுக்குள் தூக்கியுமெறிவார்…
*****
வெயில் படுத்துக் கிடக்கும்
கரையின் மீது
ஒரு நாய் ஓடி கொண்டேயிருந்தது…
ஓரிடம் விட்டு மறு இடம்
மறு இடம் விட்டு இன்னொன்றென…
வாலைப் பின்னங்கால்களுக்குள்
சுருட்டி கொண்டு நாவைத் தொங்கவிட்டபடி
ஓடி கொண்டேயிருக்கும் அந்த நாயைப் பார்த்தபடி
நகர்ந்தே கொண்டிருக்கிறதொரு நண்டு
சுடப்படும் சோளத்திலிருந்து தெறிக்கிறது தீப்பொறி
இப்போது கடல் என்ன செய்யும்?
நாவை நீட்டி சீழ் வடியும் கரையை நக்கி கொண்டிருக்கும் இக்கடலால்
என்னதான் செய்ய முடியும்?
குமரகுரு அன்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு”