மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு…

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Sep 26, 2015

moottu vali1ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

இது ஒரு புகழ்பெற்ற உவமைக் கதை. மூட்டுவலிகளும் இந்த ஒட்டகம் போலத்தான். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாக்கி விடலாம். அல்லது அதனுடன் போராட வேண்டியிருக்கும்.

உண்மையில் மூட்டுவலிகளைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மூட்டுவலிகளைப் பற்றி முழுமையாக புரியவைப்பதும் சற்று சிரமம்தான்.

moottuvali 4ஏனென்றால் நோய்க்கான காரணங்கள், நோயினால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்புகள் என்பவை பலவகைப்படுகின்றன. ஆனால் எல்லாவிதமான மூட்டுவலிகளிலும் நோயாளிகள் ஒருசேர சொல்லும். ஒரே விளக்கம் “மூட்டு வலிக்கிறது” என்பதுதான்.

மேலும் இன்னொன்றையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது “வலி மாத்திரை”(pain killer) போட்டால் வலி குறைந்துவிடுகிறது என்பதுதான். ஆனால் மூட்டுவலிகள் பல்வேறு காரணங்களால் வருகின்றன.

இவற்றை முழுமையாக இங்கே விளக்க முடியாது. ஆகவே முடிந்தவரை மிக சுருக்கமாக விளக்குகிறேன்.

ஒவ்வொரு விதமான மூட்டுவலியையும் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.

ஆனால் இந்த அளவுக்கு புரிதல் பரவினால்கூட போதும். அதுவே பெரிய விடயம் என நான் நினைக்கிறேன்.

மூட்டு வலிகளுக்கான காரணங்கள்:

 • பொதுவாக வயதாவதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானம். (Degenerative Arthritis)
 • மூட்டுகளில் உள்ள இணைப்புத் திசுக்கைளில் ஏற்படும் வீக்கம்.
 • மூட்டுகளில் ஏற்படும் கிருமி தொற்று (InfectiveArthritis).
 • நரம்புகள் பாதிக்கப்படுவதால் வரும் மூட்டுவலிகள் (NeuropathicArthritis)
 • உடலின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மூட்டுவலிகள்(MetabolicArthritis)
 • இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாகும் மூட்டுவலிகள்.
 • வேறு சில நோய்களால் ஏற்படும் மூட்டுவலிகள்.

எத்தனை விதமான காரணங்களால் மூட்டுவலிகள் ஏற்படுகின்றன என்பதை புறிய வைப்பதற்காக மிக மிக சுருக்கமான வகைப்பாட்டினை மேலே குறிப்பிட்டுள்ளேன்.

அதாவது மூட்டுவலி என்பது மூட்டில் மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல. பல்வேறு உடல் காரணங்களால் மூட்டில் வலி தெரிகிறது.

இந்த உடல் மாற்றங்களுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?

moottuvali6அதாவது மூட்டில் எலும்பின் அடர்த்தி குறைந்து போவதற்கான (Osteoporosis) அடிப்படை காரணம் என்ன?

மூட்டில் உள்ள இணைப்புத் திசுக்கள் வீங்குவதற்கு அடிப்படை காரணம் என்ன?

moottuvali2சில உப்புகள் மூட்டுகளில் வந்து தங்கி வீக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படை காரணம் என்ன?

இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு அடிப்படை காரணம் என்ன?

நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் என்ன?

இந்த அடிப்படை காரணத்தை தெரிந்து கொள்வதற்கு உடலின் மூன்று அடிப்படை இயக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

உடலின் மூன்று அடிப்படை இயக்கங்கள்:

 1. வாதம்
 2. பித்தம்
 3. கபம்

வாதம் என்பதுதான் எல்லா உணர்வுகளுக்கும் காரணம்.

மூட்டுகளில் வீக்கம் (Inflammation), குத்துவது (Stabbing pain), வலி (pain), குடைதல் (Prickling), செயலிழப்பு(Paralysis), நடுக்கம் (Tremors), மரத்துப்போதல் (Numbness) ஆகிய எல்லா உணர்வுகளுக்கும் வாதத்தின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே காரணம். அதாவது மூட்டுகளில் ஏற்படும் வாதத்தின் பிரச்சனைகள் என்ற பொருள்படும் விதத்தில் “கீல்வாயு” என மூட்டுவலிகளை அழைக்கிறது சித்த மருத்துவம்.

moottuvali 7மேலும் ஒரு மனிதனின் வாழ்நாளை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொண்டால், முதல் மூன்றில் ஒரு பங்கு காலத்தில் கபத்தின் ஆதிக்கமும், நடு மூன்றில் ஒரு பங்கு காலத்தில் பித்தத்தின் ஆதிக்கமும், கடைசி மூன்றில் ஒரு பங்கு காலத்தில் வாதத்தின் ஆதிக்கமும் இருக்கும். எனவே இயல்பாகவே வாதத்தின் இருப்பிடமாகிய மூட்டு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வயதான காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கீல் என்றால் மூட்டுகள்

வாயு என்றால் வாதம்

எனவேதான் இந்த வாதத்தில் ஏற்படும் பாதிப்பின் அடிப்படையில் சித்த மருத்துவம் மூட்டுவலிகளை வகைப்படுத்தியுள்ளது.

மூட்டுவலிகளின் வகைகள்:

 1. வளிக் கீல்வாயு
 2. பித்த கீல்வாயு
 3. ஐயக் கீல்வாயு
 4. வளித்தீக் கீல்வாயு
 5. வளி ஐயக் கீல்வாயு
 6. தீ வளிக் கீல்வாயு
 7. தீ ஐயக் கீல்வாயு
 8. ஐ வளிக் கீல்வாயு
 9. ஐ தீக் கீல்வாயு
 10. முக்குற்ற கீல்வாயு

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மூட்டுவலிகள். இவைகளின் குறிகுணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடும். அதேபோல இவற்றின் சிகிச்சை முறைகளும் ஒன்றுக்கொன்று மாறுபடும்.

moottuvali 3சிகிச்சை முறைகள்:

 1. வாதத்தை சரிசெய்ய பேதிக்கு கொடுப்பது அவசியம். பேதிக்கு கொடுத்தே மருத்துவம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். யாருக்கு என்ன விதமான பேதி மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை அவரவருடைய நாடியைத் தெரிந்து கொடுக்க வேண்டும். மேலும் உடலின் வலிமை, நோயின் தீவிரம் ஆகியவற்றையும் தெரிந்து பேதிக்கு கொடுக்க வேண்டும். இவையெல்லாம் செய்யாமல் மருத்துவம் செய்வதால்தான் மூட்டுவலிகள் குணமாகாமல் ஒரு தொடர்கதையாக பலருக்கு உள்ளன.
 2. உள் மருந்துகள்.
 3. புற சிகிச்சை

-     தொக்கணம் (Therapeuticmassage)

-     ஒற்றடம் (fomentation)

-     பற்று

போன்ற புறசிகிச்சை முறைகளும் மூட்டுகளில் அவசியம்.

இதிலும் வாதநோயாளிக்கு என்ன மாதிரியான புறசிகிச்சையைத் தேர்வு செய்யவேண்டும். பித்த நோயாளிக்கு என்ன புற சிகிச்சை, கப நோயாளிக்கு என்ன புறசிகிச்சை என்பதை அவர்களுடைய நாடிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

உண்மையில் மூட்டு வலிகளை குணமாக்குவது ஒரு கலையே.

சிகிச்சை முறை சரி, மூட்டுவலிகளில் அதைவிட முக்கியமாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது ஒன்று உள்ளது.

அதாவது ஒட்டகத்தை கூடாரத்தின் உள்ளே வரவிடாமல் தடுப்பது எப்படி?

வாதத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கான உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்வியல் மருத்துவ முறைகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த மருத்துவரை பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கென்று ஏற்கனவே ஒரு குடும்ப மருத்துவர் இருந்தாலும் சரி, ஒரு சித்த மருத்துவரை உங்கள் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்வது எப்போதுமே நல்லது. ஏனென்றால் நமது தட்பவெப்பம், பருவநிலைகள், உணவு ஆகியவற்றின் அடிப்படையில் நோய்கள் வராமல் தடுப்பதற்கான சரியான அறிவுரைகள் சித்த மருத்துவர்களிடையே உள்ளன. (சித்த மருத்துவர்கள் என்ற பெயரில் இருக்கும் போலி மருத்துவர்களை அடையாளம் காணுங்கள்)

எல்லா நோய்களையும் வரும்முன் காப்பதுதான் சரி. அதிலும் மூட்டுவலிகளை ஆரம்பத்திலேயே தீவிர சிகிச்சை எடுத்து சரிசெய்து கொள்வதே புத்திசாலித்தனம்.

Dr.Jerome -FI

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293

இணையதள முகவரி:www.doctorjerome.com

மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு…”

அதிகம் படித்தது