சடங்கியலும் பயன்பாட்டு உறவுகளும் – அரவான் களபலி
ஆச்சாரிNov 15, 2013
மனிதன் இயற்கையை சார்ந்து வாழத்தொடங்கியதிலிருந்தே அவற்றின் அதீத சக்திகளுக்காக வழிபடவும் செய்தான். வழிபாட்டின் களனாக சடங்குகளை மேற்கொண்டான். சடங்குகள் என்பவை ஒரு குழு (அ) இனத்துடைய அடையாளத்தைக் காட்டுகிறது. தீ, காற்று, மழை போன்றவை தெய்வங்களாகவும், விலங்குகளை குலக்குறிகளாகவும் கொண்டிருந்ததோடு அவற்றுக்கான நேர்த்திக்கடன்கள், பலியிடுதல் குல விருத்திக்காகவும், பின்வரும் சந்ததிகளுக்காகவும் செய்யப்பட்டன. இனவிருத்திக்கு முக்கிய காரணம் பெண் என்பதை உணர்ந்தான். அதனால் ‘தாய் தெய்வ‘ வழிபாடு உருவானது. சடங்குகள் என்பவை வெறுமனே பொழுதுபோக்கிற்குரியது மட்டுமல்ல அவை கூட்டு நிகழ்த்துதலை அந்த இனத்தின் அடையாளத்தை பல தலைமுறையாக நிறுத்திக் கொள்ள உதவுகிறது.
சடங்கு என்பது நிகழ்த்தப்படுவது. அழகியல் வெளிப்பாட்டுடன் ஓர் அதீத புலப்பாட்டினை வெளிப்படுத்துவது இதில் பரஸ்பர உறவுடைய இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று சடங்கென்பது ஒன்றைச் செய்து இன்னொன்றைப் பெறுவதற்காக நிகழ்த்தப்படுவதாகும். சடங்கென்பது ஏதோ திடீரென்று புதிதாகக் கண்டுபிடித்துச் செய்யப்படுவதல்ல மக்களிடம் காலங்காலமாக நிலைபெற்று அனைவராலும் அறியப்பட்ட வரையிலேயே அது நிகழ்த்தப்படுகிறது. அது நிகழ்த்தப்படுவதற்கான காலம், இடம், விளைவு, பலன் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. சடங்கென்பது ‘ஒன்றைச் செய்து மற்றொன்றை அடைவது என்றும் ஏற்பாடாக இருப்பதால் இதில் ‘நிகழ்த்தப்படுதல்’ அடிப்படையாக அமைகிறது.
(பக்தவக்சல பாரதி:2002:176-177)
சடங்குகளை வலிமைக்கானதாக நிகழ்த்தப்படுதலில் “பலியிடுதல்” என்பது முக்கிய கூறாகிறது. இவை மூன்றாகப் பிரிக்கலாம்.
- மனித பலி
- விலங்கு பலி
- தாவர பலி
இவற்றின் தன்மையால் ஏதாவது ஒன்று எல்லாச் சடங்குகளிலும் இடம்பெற்றுவிடுகிறது. பலியிடுதல் தொடர்பான பதிவுகள் பற்றி வரலாற்றுத் தரவுகள் காணலாம்.
- கல்வெட்டுகள்
- இலக்கியங்கள்
கல்வெட்டுகள்:
கல்வெட்டுகள் அக்காலத்திய குறிப்புகளைக் காட்டுவதைப் போல உருவமும், குறிப்புகளில் அதிகமாகப் பதிவாகியிருப்பது நடுகற்கள் எனலாம். நடுகல் வழிபாடு சங்க இலக்கியத்திலிருந்தே கிடைக்கின்றன. அவற்றின் நீட்சியாக தருமபுரி மாவட்டத்தில் இன்றளவும் நடுகல் வழிபாடு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடுகற்களில் உருவங்கள், பலியிடுதல் தொடர்பான பொறிப்பதைக் கொண்டு அக்காலத்திய நிகழ்வைக் கூறமுடிகிறது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்பழங்காலத்து குத்துக்கல் (தலையற்றது) செங்கம் அருகில் கண்டறியப்பட்டதன் மூலம் தலையறுத்துத் தரும் வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்திருக்கிறது. தன் குளம் தழைக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பலியிடும் வழக்கம் அரசுருவாக்கத்திற்குப் பின் அரசனின் வெற்றிக்கானதாக மாறியிருக்கிறது.
மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்
பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திரன் மன்னற் குற்றத்தை யொழிக்கெனப்
பலிகொண்ட புரிந்தோர் வலிக்குவரம் பாகெனச்
- (சிலம்பு 576-80)
சூர்த்துக் கடைசி வந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி யுண்ணு முருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கன் முரசொடு வான்பலியூட்டு
இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
- (84-89)
அக்காலத்துப் பூதத்திற்கு பலிகொடுப்பதாகவும், அரசனுக்கு உற்றதை ஒழிக்க வேண்டுமென முறையீட்டு தம்மைத் தாமே பலியிட்ட செய்தியை அறியமுடிகிறது. இவ்வாறு பலிகொடுத்ததற்காக நிலம் அழிக்கப்பட்டதையும், பல்லவர்கால நடுகல் குறிக்கிறது.
(கம்பவர்ம பல்லவனின் திருவாமூர் நடுகல்)
“ஸ்ரீ கம்ப பருமற்கு யாண்டு இருபதாவது
பட்டை பொத்தணுக்கு ஒக்கொண்ட நாகன்
ஒக்கதிந்தன் பட்டைபொத்தன் மேதவன்
புரிந்தாதென்று பிடாரிக்கு நவக் கண்டங்குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகைமேல்
வைத்தானுக்கு திருவான்முர் ஊரார் வைத்த
பரிசாவது எமூர்ப் பறைகொட்டக் கல்
மெடு செய்தாராவிக்குக் குடுப்பாரானார்
பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்
குடுத்தார்கள் இது கன்றேன்றார் கர்கையிடக்
குமரி இடை எழுநூற்றுக் காதமும் செய்தான்
செய்த பாவித்துப் படுவார் அன்றென்றார்
அன்றாள் கோவுக்கு காற்ப் பொன் றண்டப் படுவார்
(நால்வர் : 1980: 133)
பிடாரிக்காக (கொற்றவை) தலையறுத்து வீரனுக்கு கொடுக்கப்பட்ட நிலம், இடத்தின் அளவு என கூறுகிறது. இவை போர் நிமித்தமாக அரசனுக்காக நிகழ்த்தப்பட்ட உயிர்பலிகள் எனினும், போர்த் தெய்வமேனும் கொற்றவையே இப்பலிக்குரியவளாக பார்க்கப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. மனித உயிர்பலி குறித்துச் சொற்களாவன, சுவிப்பலி, ஆத்மபலி, நரபலி, தலைபலி, சிடிதலை (கன்னடம்) மிடிதலெ, கண்டதலெ (ஆந்திரம்) சாவாரப்பலி, தூங்குதலை கொடுத்தல், நவகண்டம் எனப் பல சொற்கள் காணப்படுகிறது. ‘களபலி’ என்ற சொல் கல்வெட்டுகளில் இல்லை என்றே கூறலாம்.
களபலி என்பதற்கு “யுத்தகளத்தில் போர்த்தொடங்கும் முன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி” – என்று பொருள்.
-களப்பலியூட்டு சருக்கம் (பாரதம்)
பாரதப் பரவல் என்பது பல்லவர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. வடமொழிப் பாரதக்கதையைத் தழுவித் தமிழுக்குக் தந்தவர் வில்லிபுத்தூரர். எனினும் வாய்மொழியாக இக்கதைகள் வழக்கில் இருந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் “நல்லாப்பிள்ளை பாரதம்” எல்லோராலும் உள்வாங்கப்பட்டது. தெருக்கூத்து வடதமிழகப்பகுதிகளில் செல்வாக்கோடு, இருப்பதற்குக் காரணம் பாரதக்கதை. அவை சடங்கோடு கூத்தாக நிகழ்த்தப்படுவதுதான். அரவான் களபலி நிகழ்த்து பிரதி சார்ந்தும், நிகழ்த்துதலிலும் எத்தகைய தனித்தன்மையை பெற்றிருக்கிறது என்பதை காணலாம்.
அரவான் களபலி:
பிரதிகள் வழி:
அரவான் களபலி பற்றி பாத்திரம் வில்லிபுத்தூராரின் பிரதிப்படி அருச்சுனன் உலூபியின் மகனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். பாரத யுத்தத்திற்காக கண்ணனின் ஆலோசனைப்படி பாண்டவர்களுக்காகப் பலியானதாகக் கதை. இவை பாரத வெண்பா, வில்லிபுத்தூரர் பாரதம், நல்லாப்பிள்ளை பாரதத்திலும் படைக்கப்பட்டிருக்கின்றன.
“அவ்வரம் அவற்கு நல்கி, அத்தினத்து அவ் விரைவில்
தெவ்வரை தெளித்து தங்கன் சென்ம தேயத்தில் சென்றார்.
மெய்வகோளி முன்னர்மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய் வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ!
- (சீனிவான்:7127)
காளிக்கு முன்னர் தன்னுடைய உறுப்புகள் அனைத்தும் அவனே கொய்து கொடுத்ததாக பதிவு செய்திருக்கிறார். இதே பொருண்மை 16 (அ) 17 ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருப்பது ‘அரவான் களபலி’ என்னும் இசை நாட்டிய நாடகம் செவ்வியல் தன்மை கலந்திருப்பதால் கதைமாந்தர்களின் முக்கியத்துவம் மாறுகின்றது.
(உ.ம்) அதோ வாருமம்மா தாயே! என் மனதில் கோரிய படிக்கு வைகுண்டத்திற்குப் போகும்படிக்கு எண்ணெய் சம்மாரம் பண்ணுமம்மா தாயே – சபை விடுத்தல் – 110
“ இப்படி உரைக்க அம்மன் இருதயத்தினில் புகுந்து
கைப்பிடியாக பாலன் கழுத்தையும் அறுத்து அம்மன்
அப்பணிச் சடையன் அரனாருடன் வாழும் காளிக்கு
ஒப்பியே பலிகொடுத்து உக்கிரமாய் விளங்கினாளே!”
இங்கு அரவான் களபலி என்பதே வேறொரு தன்மைக்கு மாற்றி தெய்வமே எடுத்துக் கொள்வதாக மாற்றியிருக்கிறார். இதற்கு ஆசிரியரின் பின்புலம் காரணமாயிருக்கலாம். அம்மனுக்கும் அரவானுக்கும் தர்க்கம் இருக்கிறது.
- வியாசர் பாரதத்தில் சகுனியின் ஐந்து சகோதரர்களை கொன்றவனுமாகவும் அலம்புஷன் என்பவனுடன் போர் செய்து கொல்லப்பட்டார் எனவும் செய்திகள் கிடைக்கின்றன. களப்பலியாக அரவானையிட்ட செய்தி ஏதும் கூறப்பெறவில்லை.
- பாரத வெண்பா 43-453 உள்ள பகுதியில் அரவான் களபலி செய்தி உள்ளது.
சேலம் பகுதியைச் சேர்ந்த அம்மாப்பேட்டை கணேசன் வாத்தியார் பாணியில் நிகழ்த்தப்பெற்றதையொட்டி எழுதியுள்ள பனுவலில் அரவான் தன்னை பலிகொடுப்பதாக வரும் பகுதியில்
மகாதேவி முன்வைத்த வாளெடுத்து நின்றேன்
என்பிசை துதிக்குங் காளி – உந்தன்
இணையடி சரணமஞ் செய்தேன் இன்பகுணசாலி
செவிநாசிதனைக் கொஞ்சம் – கொய்தேன்
பூரண பாலமதை விட்டு நலஞ் செய்தேன்.
மார்க்கண்ட புஜங்கலிருந்தேன் – வெகு
மங்களமாகவே வைத்துக் கொக்கரித்தேன்
மங்களமாகவே வைத்துக் கொக்கரித்தேன்
கூருக்கூராய் செய்து கொப்பறையாய் விட்டேன்
கொக்கரித்து உந்தன்யும் தெண்டளிட்டேனம்மா-
(நாகக் கன்னி – அரவான்) (அருங்கூத்து:169)
நாம் கண்ட பாரதமரபில் தென்னிந்தியப் பகுதிகளைச் சார்ந்த பாரதமரபில் குறிப்பாகத் தமிழக சார் பாரதப்புனைவுகளில் அரவான் களபலி, கதாபாத்திரத்தின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணமாக என்னயிருக்க முடியும்? வடமொழி பாரதத்தில் இக்களபலியின் வாடைகூட வீசவில்லையே ஏன்? போன்ற கேள்விகள் இதைப் புரிந்து கொள்ள உதவும்.
நிகழ்த்துதல் வழி:
தமிழகத்தின் வடபகுதிகளான திருவண்ணாமலை, செய்யாறு, திண்டிவனம் போன்றபகுதிகளில் இது களபலி நிகழ்த்தப்படுவது ஒரே தன்மையாக இருக்கிறது. திண்டிவனம் பகுதியில் ஒரு சில குழுவினரே நிகழ்த்துகின்றனர். ஆனால் சடங்காக நிகழ்த்தப்படும் தன்மை காஞ்சிபுரம், செய்யாறு ஒட்டியே இருக்கிறது. அரவான் களபலி கூத்து முடியும் தருவாயில் மண்ணால் செய்யப்பட அரவானின் (சுமார் 10 அடி) உயரச்சிலை தலைப்போருத்தப்பட்டிருக்கும். பம்பை உடுக்கையுடன் கண்திறத்தல், கோழிப்பலியிடுதல், அரவானின் அங்கச் சிதைவாக அந்தச் சிலையின் பாகங்களை, முகத்தைக் கத்தியால் கீறுகின்றனர். பானையில் சோற்றையும், இரத்தக்கலவையும் கலந்து கோயிலைச் சுற்றி வீசுகிறார்கள். பூசாரி தெய்வமேறிய நிலையில் இந்நிகழ்வு முடிகிறது.
அடுத்ததாக பாரதக்கதையின் இறுதிநாளான படுகளத்தன்று அரவானின் அங்கஇசைவாக அந்த சிலையின் பாகங்களை, முகத்தை கத்தியால் கீறுகின்றனர். பானையில் சோற்றையும், இரத்தக் கலவையும் கலந்து கோயிலை சுற்றி வீசுகிறார்கள் பூசாரி தெய்வமேவிய நிலையில் இந்நிகழ்வு முடிகிறது. அடுத்ததாக பாரதக்கதையின் இறுதிநாளான படுகளத்தன்று அரவானின் தலை எடுத்து கோயிலின் மீது வைத்துவிடுவர். இந்நிகழ்வு விடியற்காலை 4.00 மணிக்கு நடைபெறும். சில இடங்களில் மாரடிப்பாடலும் நிகழும்.
தஞ்சாவூர் பகுதிகளான மெலட்டூர், கரம்பை, ,ஏர்வாடி முதலான கிராமங்கள் அரவான் களபலி நாடகம் மேடை நிகழ்வாக மாறுகிறது. இங்கு மேடையே படுகளம் சார்ந்த வெளியாகக் காட்சி கொள்கிறது. இங்கும் அரவான் களபலி சடங்கு நிகழ்த்தப்படுகிறது. துரியோதனின் வீழ்ச்சி படுகளமாகக் காட்சிப்படுத்தும் பொழுது துரியோதனின் சிலை செந்நீர் கலையமாக உடைப்பதுபோல, அரவான் கழுத்தில் வடிவமைக்கப்படுகிறது.
இச்சடங்கிற்கு முக்கியத்துவம் தரும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் வழிபாடும் முக்கியமானது. இங்கு 18 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்கு நடத்தப்படுகிறது.
1.விலைபொருட்களை சூறைகொள்ளல் (பயிறுக்கு வளம்சேர்த்தல்)
2.நவதானிய விதை விதைத்தல்.
3.இரத்தச்சோறு உண்ணல்.
திருநங்கைகள் புராணத்தில் வரும் கிருஷ்ணன் வடிவமாக தன்னை மாற்றிக்கொண்டு தாலிக்கட்டிக் கொள்ளுதல், தாலி அறுத்தல், மாரடித்தல் போன்ற சடங்குகளை மேற்கொள்கின்றனர். மற்ற பகுதிகளில் அரவான் வழிபாட்டோடு இவர்கள் தொடர்பு கொள்ளாமல் இருத்தலுக்கு முக்கிய காரணம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமையே.
இவ்வாறு நிகழ்த்துதல் வழி அரவான் களபலி என்பது வளமையான சடங்கார்ந்த நிகழ்வாக நடைபெறுகிறது.
மனித உயிர்பலிக்கான தொடர்ச்சியை இச்சடங்கு கொண்டிருப்பது என்பதோடு அரவான் தொன்மம் நாட்டார் மரபிற்கு உரியது என்பதும் இம்மண்ணோடு எல்லாப்பகுதிக்குமானதாக அமைகிறது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மிக அருமை தோழர் ..வாழ்த்துக்கல்…. .அன்புடன் மல்லையா..
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக ஜவகர்லால் நேருவுக்குப் பதில் வல்லபாய் படேல் தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்படுபவர்கள், அம்பேத்கரையோ, அபுல் கலாம் ஆசாத்தையோ, ஆர் கே. சண்முகம் அவர்களையோ தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்று சொல்ல முன் வருவார்களா ??
இதையே நான் பலரிடம் கேட்டு வருகிறேன். — நெல்லைக் குமரன்
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக ஜவகர்லால் நேருவுக்குப் பதில் வல்லபாய் படேல் தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்படுபவர்கள், அம்பேத்கரையோ, அபுல் கலாம் ஆசாத்தையோ, ஆர் கே. சண்முகம் அவர்களையோ தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்று சொல்ல முன் வருவார்களா ??
இதையே நான் பலரிடம் கேட்டு வருகிறேன்.
- நெல்லைக் குமரன்.