மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சான் ஓசேவில் ஒரு தமிழ்த் திருவிழா – தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!

க.தில்லைக்குமரன்

Apr 25, 2015

tamil thiruvizhaவிழாக்கோலம் பூண்டு கொண்டு இருக்கிறது வளைகுடாப் பகுதி. சமையலறையில் தயாராகும் உணவுப் பண்டங்களின் மிகுமணத்தில் பந்தியிலே இருப்பவன் வயிற்றை கிள்ளுமே பசி, அப்படியொரு விருந்திற்கு உலகத் தமிழர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். வாராது வந்த மாமணியாய் இம் முறை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா நம் வீடு தேடி வந்திருக்கிறது.

சான் ஓசேவில் 2015 – ஜூலை 3, 4 தேதிகளில் நடக்க இருக்கும் இவ் விழாவில், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சுவையில் இனிய நிகழ்ச்சிகள் அத்துறை வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. தமிழ்த்திரை பிரபலங்களின் உற்சாகமான பங்களிப்புடன் நடக்கும் இந்த விழா நம் மக்களை கிட்டத்தட்ட 80 மணி நேரங்களுக்கு உவகையூட்டக் கூடிய மாபெரும் கலைவிழா. சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தலைமை ஏற்று நடத்தும் இந்த விழாவில் இம்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு திட்டக் குழுக்களில் முனைப்பாக ஈடுபடுவதுடன், விழா முன்னேற்பாடுகளில் சாக்ரமெண்டோ தமிழ் மன்ற உறுப்பினர்களும் ஆர்வமாக பங்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு அறக்கட்டளை (TNF – Tamilnadu Foundation) மற்றும் அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA – American Tamil medical Association) போன்ற முக்கியமான அமைப்புகளும் தொண்டுக்குத் தோள் கொடுத்து வருகின்றன.

இந்த விழாவின் கருப்பொருள் ‘தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!’ இதன் படி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. பிரபல பாடகி சௌம்யா வரதன், மற்றும் பட்டிமன்ற/கவியரங்கக் கவிஞர் சுமதிஸ்ரீ, கவிமாமணி அப்துல் காதர் ஆகியோர் இசைத் தமிழையும் இயற்றமிழையும் கொண்டாடுகிறார்கள். விஜய் டீவி புகழ் “சூப்பர் சிங்கர்” திறமையாளர்கள் செல்வன் திவாகர், செல்வி பூஜா மற்றும் செல்வி பிரகதி ஆகியோர்களுடன் இசை மழையில் நம்மை நனைக்க வருகிறார்கள் திரையிசைப் பாடகர்கள் ஹரிசரண் மற்றும் ரோஷினி. பாடகர் ஹரிசரணுடைய Bennette and Band குழுவில் தானும் பாடுவதுடன், , தமிழ்நாட்டின் ஆதி இசையாகிய பறை இசையை இசைத்து, தமது புத்தர் கலைக்குழுவினருடன் அனைத்துலக தமிழர்களையும் இணைத்து புதுமையான நடன நிகழ்ச்சி வழங்குகிறார் “கும்கி” திரையிசைப்புகழ் மகிழினி மணிமாறன். முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பர்ட், பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட்   உள்ளிட்ட மற்ற அறிஞர்களும் சிறப்புரை வழங்க, நடிகை ஏமி ஜாக்சன் தமிழ்த்திரை விரும்பிகளுக்கு உற்சாகமூட்ட விழாவில் கலந்து கொள்கிறார். உலகத் தமிழர்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்க ”நவீனத் திருமணம்” நிகழ்ச்சியை சன் டிவி புகழ் ”கல்யாண மாலை” குழு இந்த விழாவில் நடத்துகிறது. இந்த வருட சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவலான “அஞ்ஞாடி” நாவலை எழுதிய ஆசிரியர் திரு.பூமணி அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது.

tamil thiruvizha2இவ்விழா சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடைபெறுவதால், சுயதொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி (Entrepreneurship Forum)இரு துணை அரங்குகளில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களோடு மிகவும் புதுமையாகவும், பெரிய அளவிலும் ஒழுங்கு செய்யப்படுகிறது. தொழில் முனைவோரின் சிறந்த புதிய/சுய திட்டங்களை (Best startup ideas)ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் போட்டி நடைபெற உள்ளது. புதுத்தொழில் திட்டங்களின் முதலீட்டாளர்களை (Venture capitalists) நடுவர்களாகக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திட்டங்களுக்குப் பரிசு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முனைவில் விருப்பம் உள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய அரிய நிகழ்ச்சியிது. அது மட்டுமல்ல, சுயதொழில் முனைவில் யோசனை/ திட்ட முன்வரைவு உள்ளோர் அதை எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை, சந்தை ஆராய்ச்சி (Market research), நிதி, திட்டமிடல், சட்டம் எனப் பல பரிமாணங்களில் விளக்கும் வகுப்புகளும் நடக்க உள்ளன.மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர், வெற்றிகரமான தொழில் முனைவர்கள் மற்றும் தொழில் தொடங்குவது பற்றி விவரிக்க இந்திய அரசு உயரதிகாரிகள் எனப் பல்முனை நோக்கிலும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன.உயர்நிலை, நடுநிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டால் வாழ்க்கையை அவர்கள் விரும்பிய பாதையில் செலுத்தப் பேருதவியாய் இருக்கும்.

அமெரிக்கத் தமிழ் முன்னோடிகளைக் (Tamil American Pioneer) கண்டறிந்து அவர்களுக்குப் பேரவையின் தமிழ் முன்னோடி விருதும் (TAP Award) அளிக்கப்பட்டு சிறப்பு செய்யப்படவுள்ளது. அமெரிக்கத் தமிழ் மருத்துவ அமைப்பு (ATMA) பேரவையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கான தொடர்கல்வி நிகழ்ச்சிகள் (CME – Coninuing medical education seminars) ஏற்பாடு செய்யப்படுகின்றன. இத்துடன் தமிழ் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்க குறும்படப் போட்டியும், இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும் Youth Meet போன்ற நிகழ்ச்சிகளும், அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் தமிழ்த்தேனீ போன்ற ஆர்வத்தைத்தூண்டும் கவிதை, நிழற்படப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன.

நாடகத் தமிழுக்கச் சிறப்பு சேர்க்க வரலாற்று நாடகம் அரங்கேறுகிறது. வரலாற்றுப் புதினங்களுக்குப் பெருஞ்சிறப்பு பெற்ற எழுத்தாளர் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” நாவலை மிகப் பெரிய வெற்றிப்படைப்பாக அமைத்து வழங்கிய, அபிராமி கலை மன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், மற்றும் வேணு சுப்பிரமணியன் ஆகியோர், இம்முறை அவரின் மற்றுமொரு படைப்பாகிய ”சிவகாமியின் சபதம்” நாவலை அரங்கேற்ற இருக்கிறார்கள். வளைகுடாப் பகுதி தமிழ் நாடக ஆர்வலர்களைக் கொண்டு அரங்கேறும் இந்த நாடகம், விழாவின் முக்கியமான ஒரு நிகழ்வு.

பேரவையின் தமிழ் விழாவைக் குறித்து அறிய சுட்டவும் www.fetna2015.org அல்லது www.fetna.org. மேலும் விவரங்களுக்கு coordinator@fetna.org அல்லது secretary@bayareatamilmanram.org ஆகிய மின்னஞ்சல்களுக்கு எழுதுங்கள். நடைபெறுவது நம் வீட்டு விழா. வாருங்கள். வடம் பிடியுங்கள். சேர்ந்து நாம் தமிழ்த் தேர் இழுப்போம்.

              ’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சான் ஓசேவில் ஒரு தமிழ்த் திருவிழா – தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!”

அதிகம் படித்தது