சுனாமி நினைவு – கோர தாண்டவம்
காசி விசுவநாதன்Dec 1, 2011
ராகம் : முராரி
தாளம் : தப்பு
ருத்ர தாண்டவம் ஆடுதல் கேட்டோம் அன்று புராணத்திலே
கோர தாண்டவம் ஆடிவிட்டாய் இன்று கரை ஓரத்திலே.
வீறு கொண்டு “அலை”ந்தாய் நித்தம் – இன்று
கூறு கெட்டு போனாயோ !?
அலைகடல் மடியில் தவழ்ந்து, சிரித்து மகிழ்ந்து வாழ்ந்தோமே..!
கூடி வாழ்ந்த மக்கள் கூட்டத்தில், இடியாய் வந்து வீழ்ந்தாயே…!
ஆழி நடுவே நடுக்கங்கண்டு – ஊழி அதிர நீ வந்தாய்..!
மீளாத் துயிலில் எம்மக்கள் அலையில் கலைந்து மடிந்தாரே…..
மீளாத் துயரில் எமை ஆழ்த்தி நொடியில் சென்றாய் பின் நோக்கி….
எல்லாம் முடிந்தது நொடிப்பொழுதில் ! – பொய்யாய்
பழங்கதையாய் போனதே இப்பொழுது.!!!
ஐயகோ..!! என்றே அழுதான் கம்பன், அது போல் இன்று அழுகின்றோம்,
கண்ணே மணியே முத்தே என்று, கட்டி அணைத்து உச்சி முகர்ந்து
உமிழ் நீர் கலந்து வாழ்ந்தது எல்லாம்….
அலை கடல் மிதந்து கரை ஒதுங்கி மண்ணில் புதைந்து போனதம்மா….!!!!!
உறவை இழந்து உறவைத்தேடி, நடைப்பிணமாய் நாங்கள் அலைகின்றோம்..
விண்ணில் பறந்து வட்டமடித்து, பிணம் தின்ன கழுகுகள் சுற்றுதடி…
மாண்டு போன மக்களை அல்ல ( நடை ) பிணமாய் திரியும் எங்களைத்தேடி !!!!!
மேலே அரற்றிய யாவும் நம்மிடையே நிகழ்ந்ததுதான். தொலைக்காட்சியின் கோர இரைச்சலில் இவையெல்லாம் கேட்காமல் முடங்கியது. அது போல் இன்று மீண்டும் ஆழிப்பேரலை வந்து கூடங்குளம் தனை தழுவிக்கொண்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண நமக்கு உயிர் இருக்காது. துடைத்தெறியப்படுவோம். இப்போதும் நாம் கேட்பது தப்புத்தாளங்களும் முராரி ராகங்களும் தான்.
காசி விசுவநாதன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
wonderful article great idid not know u were so talented. hats off try more all the best